அமானுஷ்யன் (18)

லலிதா திகைப்புடன் கேட்டாள், "என்ன ஆயிற்று?"

அப்போதுதான் ஆனந்த் தான் எழுந்து நின்றிருப்பதை உணர்ந்தான். அவன் மனதை ஏதோ அழுத்தியது. அவன் இதயம் படுவேகமாக அடித்துக் கொண்டிருந்தது. "ஒன்றுமில்லை…" என்று சொல்லி விட்டு மீண்டும் உட்கார்ந்தான்.

வந்த கணம் முதல் அமைதியே வடிவாக இருந்த அவன் இப்படி திடீரென்று மாறியதைப் பார்த்த லலிதா அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்று சந்தேகப்பட்டாள். "நான் டாக்டரைக் கூப்பிடட்டுமா?"

அவன் அவசரமாகச் சொன்னான், "வேண்டாம்… வேண்டாம்"

ஆனாலும் அவள் விரைந்து சென்று ஒரு தம்ளர் தண்ணீர் கொண்டு வந்து தந்தாள். "நன்றி…" என்று சொல்லி அதை வாங்கி மடமடவென்று குடித்த அவன் மீண்டும் பழைய நிலைக்கு வர சிறிது நேரமாயிற்று.

அவள் அவனைக் கவலையோடு பார்த்தது அவன் மனதை நெகிழ்த்தியது. சாதாரணமாகத் தன் தனிப்பட்ட விஷயங்களை யாரிடமும் பேசிப் பழக்கம் இல்லாத அவன் இந்த அபூர்வ சந்தர்ப்பத்தில் அவளிடம் மனம் விட்டுத் தன் காணாமல் போன தம்பியைப் பற்றி சொன்னான். மூன்று வயதில் காணாமல் போன அவனுக்கு முதுகின் மேற்பகுதியில் நாகமச்சம் இருந்ததையும், அவன் காணாமல் போனதில் இருந்து தன் தாய் ஒரு நடைப்பிணமாய் இருப்பதையும் சொன்னான். அவள் இருக்கும் விரதங்களயும் சொன்னான்.

அவள் கண்களில் நீர் கோர்த்தது. ஒரு தாயான அவளுக்கு இன்னொரு தாயின் வேதனையைப் புரிந்து கொள்ள முடிபுரிந்தது. "நீங்கள் அது உங்கள் காணாமல் போன தம்பிதான் என்று நினைக்கிறீர்களா?"

"உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் முதுகில் மேற்பகுதியில் நாக மச்சம் இருக்கும் மனிதர்கள் எத்தனை பேர் இருக்க முடியும்?"

"எத்தனையோ வருடங்கள் கழித்து தம்பியைப் பற்றிக் கேள்விப்படுகிறீர்கள். சந்தோஷப்படுவதற்குப் பதிலாக நீங்கள் பயப்படுவது போலத் தெரிகிறதே ஏன்?"

அவன் வாடிய முகத்துடன் சொன்னான், "உங்கள் கணவரைக் கொன்றவர்கள் அவனையும் கொன்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சிபிஐயின் அடிஷனல் டைரக்டரையே கொன்றவர்கள் அவனைப் போன்ற ஒரு சாதாரண மனிதனை விட்டு வைப்பார்கள் என்று தோன்றவில்லை"

"அவர் அவனை ஏதோ தெய்வப் பிறவி என்பது போல சொன்னார். அந்த நாக மச்சம் குண்டலினி சக்தியைக் காட்டுவதாகக் கூட சொன்னார். அவர் அவன் மீது வைத்துள்ள நம்பிக்கையைப் பார்த்தால் அவனை அவ்வளவு சீக்கிரம் கொல்ல முடியும் என்று தோன்றவில்லை. ஒரு தாயார் வருடக் கணக்கில் செய்த பிரார்த்தனை வீண் போகாது. பயப்படாதீர்கள். உங்கள் தாயைப் பார்க்காமல் அவன் சாக மாட்டான்"

அவள் குரலில் தெரிந்த உறுதி அவனை ஆச்சரியப்படுத்தியது. பல நேரங்களில் அதிகமாகத் தெரிந்திருப்பதே ஒருவனை அவநம்பிக்கை கொள்ள வைக்கிறது. குறைவாகத் தெரிந்திருப்பவர்கள் நம்பிக்கையுடனேயே இருப்பது போல் தோன்றியது.

"அப்படி அவன் உயிருடன் இருந்தாலும் அவன் ஆபத்தில்தான் இருக்கிறான். அதிகார வர்க்கம், போலீஸ் எல்லாம் எதிரே நிற்பதாகத் தோன்றுகிறது" என்றவன் தான் மூன்று வருடங்களுக்கு முன் ஒரு சாதுவை சந்தித்ததையும், அவர் அந்த மச்சத்தைக் குறிப்பிட்டு அவனை ஆபத்துகள் சூழ்ந்திருப்பதாகச் சொன்னதைச் சொன்னான்.

அவள் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டு விட்டு சொன்னாள், "கடவுள் கூட இருந்தால் யார் எதிராக நின்று வெற்றி பெற முடியும்?"

அவனுக்கு அந்த வார்த்தைகள் மெய் சிலிர்க்க வைத்தன. கணவரைப் பறி கொடுத்து தானே துக்கத்தில் இருந்த போதும் அந்த பெண்மணி நல்ல வார்த்தைகள் சொல்லி அவனை தைரியப்படுத்துவது அவளின் உயர்ந்த மனதைக் காட்டுகிறது என்று நினைத்துக் கொண்டான்.

"அவர் அவனை எங்கே முதல் முதலில் பார்த்திருப்பார் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?"

லலிதா சற்று யோசித்து விட்டு சொன்னாள், "சரியாகத் தெரியவில்லை…."

அவன் மெள்ள எழுந்தான். "ஏதாவது சின்ன தகவல் நினைவுக்கு வந்தால் கூட எனக்குச் சொல்வீர்களா?" தன் விசிட்டிங் கார்டை நீட்டினான்.

அவள் அதை வாங்கிக் கொண்டே சொன்னாள், "கண்டிப்பாக சொல்கிறேன்"

வாசல் வரை சென்றவன் திரும்பி நின்று கேட்டான், "நீங்கள் அவன் குரலைக் கேட்டிருக்கிறீர்கள் அல்லவா? அவன் குரல் எப்படி இருக்கும்?"

அவளுக்கு மனம் நெகிழ்ந்தது. யோசித்து விட்டுச் சொன்னாள். "கம்பீரமான, அமைதியான குரல்…."

********* 

"ஹலோ" சிபிஐ மனிதனின் குரல் களைத்துப் போயிருந்தது. அவன் அன்று முழுவதும் உறங்கியிருக்கவில்லை. அமானுஷ்யன் அவனை உறங்க விடவில்லை.

ஆனால் அவன் களைப்பை மறுபக்கம் உணர்ந்ததாகத் தெரியவில்லை. "என்ன நிலவரம்?"

"அவன் இப்போது டெல்லியில் இருக்கலாம் என்று நினைக்கிறேன்…."

"எதனால் அப்படி நினைக்கிறீர்கள்?"

"அப்படித்தான் உள்ளுணர்வு சொல்கிறது. அவன் பழி வாங்க முயற்சிக்கலாம் என்று தோன்றுகிறது. எதற்கும் நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள். பாதுகாப்பை இன்னும் அதிகப்படுத்துங்கள். பொது இடங்களுக்கு தனியாகப் போகாதீர்கள். அந்தத் தாடிக்காரனையும் மறைந்தே இருக்கச் சொல்லுங்கள்…"

மறுபக்கம் சிறிது நேரம் மௌனமாக இருந்தது. பின் பேசிய போது குரலில் நடுக்கம் தெரிந்தது. "அவன் என்னை நெருங்க முடியாது…."

அந்த வார்த்தைகளின் அர்த்தத்துக்குப் பதில் குரலின் நடுக்கத்தின் அர்த்தத்தை எடுத்துக் கொண்டான் சிபிஐ மனிதன். உயிர் என்று வரும் போது பெரிய மனிதன் சிறிய மனிதன் என்ற வித்தியாசம் இல்லை. எல்லாம் ஒன்றுதான்.

தன்னை பயமுறுத்தியதால் மறுபக்கம் கோபம் வந்து கேட்டது. "நீங்கள் அவன் விஷயத்தில் என்னதான் செய்தீர்கள்? நம் ஆளும் (தாடிக்காரன்) என்னை ஃபோனில் நச்சரித்துக் கொண்டே இருக்கிறான்."

"பிரச்சினை இந்த அளவு முற்றியதற்கே அவன்தான் காரணம். எந்த தகவலும் எந்த நேரமும் வரலாம், அதெல்லாம் முக்கியமானவை என்ற நிலைமை இருக்கையில் செல் போனை ஆ·ப் செய்து விட்டு யாராவது தூங்குவார்களா? அப்போது ஆன தாமதத்தால்தான் இத்தனை விவகாரமும்…"

"அவன் சொல்கிறான் இமயமலையில் அவனை சுட்டுத் தள்ளுவதில் உங்கள் ஆட்கள் கோட்டை விட்டதால்தான் இத்தனை பிரச்னையும் என்று. இப்படி ஒருவரை ஒருவர் குறை சொல்வதில் அர்த்தமில்லை…."

சிபிஐ மனிதன் பெருமூச்சு விட்டான். "அவன் டெல்லிக்கு வந்திருப்பான் என்ற சந்தேகம் வந்தவுடனேயே டெல்லியில் இருக்கும் எல்லா லாட்ஜ்களுக்கும் ஆட்களை ஃஅவன் போட்டோவுடன் அனுப்பி வைத்தேன். அவன் எந்த லாட்ஜிலும் வந்து தங்கவில்லை…."

"அவனுக்குத் தெரிந்தவர்கள் யாராவது டெல்லியில் இருக்கிறார்களா?"

"அதுவும் இருக்கிற மாதிரி தெரியவில்லை….."

"சரி இனி என்ன செய்யலாம்? ஏதோ யோசித்து செய்ய வேண்டும் என்றீர்களே, யோசித்தீர்களா?"

‘இரண்டு நாளில் யோசித்துச் சொல்கிறேன்’ என்றவனிடம் ஒரு நாள் கூட முடிவதற்கு முன் இப்படி கேட்கும் அவர் மீது சிபிஐ மனிதனுக்குக் கோபம் வந்தாலும் அவன் அதைக் காண்பித்துக் கொள்ளவில்லை. அமானுஷ்யனை வெளியே சுதந்திரமாக வைத்திருப்பது சம்பந்தப்பட்ட எல்லாருக்குமே பேராபத்து என்பது நன்றாகவே தெரியுமாதலால் அவன் சொன்ன அளவு காலம் எடுத்துக் கொள்ளாமல் வேகமாகவே யோசித்து வைத்திருந்தான்.

"அவன் நம்மைத் தேடி வருவதற்குப் பதிலாக ஓடி ஒளிய வேண்டும். நாம் தேர்ந்தெடுத்த ஆட்ள்கள் மட்டும் அவனைத் தேடுவதற்கு பதிலாக போலீஸ் துறையே அவனைத் தேட வேண்டும். அதற்கு ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். நகரத்தில் ஒரு தீவிரவாதி வெடிகுண்டு வைத்து விட்டதாகவும் அதை வெடிக்கும் முன் போலீஸ் கண்டு பிடித்து விட்டதாகவும் ஒரு கதையை உருவாக்குவோம். அவன் படத்தைக் கொடுத்து யாரையாவது படம் வரையச் சொல்லுங்கள். தீவிரவாதியைப் பார்த்த ஒருவன் சொல்லிய அடையாளங்களை வைத்து அந்தப் படத்தை வரைந்ததாகச் சொல்லி அதை பத்திரிகைகளுக்கும் டிவிக்கும் கொடுப்போம். அவனைப் பற்றி தகவல்கள் தருபவருக்கு நல்ல தொகை சன்மானம் தருவதாக அறிவிப்போம்…."

மறுபக்கம் அந்த திட்டத்தை வரவேற்றது. "சபாஷ்".

சிபிஐ மனிதன் சொன்னான். "இந்த வேலைக்கெல்லாம் பொருத்தமான ஆட்களை தேர்ந்தெடுத்து செய்யுங்கள். முடிந்த வரை நாம் நேரடியாக ஈடுபடாதவரை நமக்கு நல்லது"

(தொடரும்)

About The Author