அமானுஷ்யன் (20)

சஹானா அக்ஷயை அதிர்ச்சியுடன் பார்த்தாள். அவன் முகத்திலோ ஒரு அசாதாரணமான அமைதி தெரிந்தது.

"என்ன அக்ஷய் அநியாயமாய் இருக்கிறது. நீங்கள் அந்தப் பையன் சொன்ன நேரத்தில் இமயமலைச் சாரலில் இருந்தீர்கள். வருணைக் காப்பாற்றினீர்கள். உங்களை டில்லியில் ஏதோ வெடிகுண்டு வைத்து விட்டுப் போனீர்கள் என்று அந்தப் பையன் பொய் சொல்கிறான். நீங்களும் அமைதியாக இருக்கிறீர்கள்"

"சஹானா அவர்களுக்கு எதனாலோ என்னைப் பிடித்தாக வேண்டும் என்கிற அவசரம் தெரிகிறது. அதற்கு சட்டபூர்வமான வழிகள் எதுவும் அவர்களுக்கு தென்படவில்லை போல் இருக்கிறது. அதனால்தான் இந்த மாதிரியெல்லாம் சொல்லி விளம்பரப்படுத்துகிறார்கள். காசுக்காக யாராவது கண்டிப்பாக காட்டிக் கொடுப்பார்கள் என்று கணக்குப் போடுகிறார்கள்….." என்று அமைதியாக அவன் விளக்கினான்.

காரில் வரும் போதே அவன் முன்யோசனையுடன் நடந்து கொண்டு உருவத்தை மாற்றிக் கொண்டது இப்போது எவ்வளவு நல்லதாகப் போய் விட்டது என்று சஹானா நினைத்துக் கொண்டாள். பழைய உருவத்திலேயே வந்திருந்தால் பக்கத்து வீட்டுப் பஞ்சாபிக்காரரே இந்நேரம் பணத்திற்காக போன் செய்திருப்பார். ஆனால் இந்த அநீதி அவளை மனம் கொதிக்க வைத்தது.

"அக்ஷய் இப்போதே போலீசுக்கு போன் செய்து உண்மையைச் சொல்லட்டுமா? அந்த நேரம் நீங்கள் என் மகன் உயிரைக் காப்பாற்றினீர்கள் என்று சொல்கிறேன். அந்த டீக்கடைக்காரர்களும் சாட்சி….."

"அவர்களிடம் சொல்வது நான் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுப்பது போல சஹானா. அவர்களுக்கு என்னைக் கொல்வது சுலபமாகப் போய் விடும்"

அவன் வார்த்தைகளில் இருந்த சத்தியம் அவளை அந்த எண்ணத்தைக் கைவிட வைத்தது. அவனை எதற்காக யார் கொல்ல முயல்கிறார்கள்?

"உங்கள் எதிரி சக்தி வாய்ந்த ஆளாகத் தெரிகிறான், அக்ஷய்"

அக்ஷய் புன்னகைத்தான். "நான் சக்தியில்லாத ஆளாகவா தெரிகிறேன்?"

அவளுக்கு அப்படித் தெரியவில்லை. இந்த அளவு அமைதியாக இருக்க முடிந்த மனிதனை சக்தி குறைந்தவன் என்று எப்படிச் சொல்ல முடியும்? "அப்படி சொல்லவில்லை அக்ஷய். உங்கள் எதிரி நினைத்தவுடன் இப்படி எல்லாம் போலீசைச் சொல்ல வைக்கிற அளவு பலம் வாய்ந்தவனாக இருக்கிறான் என்று சொல்ல வந்தேன். ஆனால் இவ்வளவு ஆன பின்னும் உங்களால் எப்படி இவ்வளவு அமைதியாக இருக்க முடிகிறது?."

இளைய பிக்குவிடம் சொன்ன அதே பதிலை அக்ஷய் அவளிடமும் சொன்னான். "ஒரு மனிதனுக்கு ஒரு விதிதான் இருக்க முடியும் என்று நான் ஆழமாக நம்புகிறேன் சஹானா. அதனால் எதைப் பற்றி கவலைப்பட்டும் எதுவும் ஆகப்போவதில்லை…."

மரகதம் அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். வருணுக்கு நடப்பதெல்லாம் ஓரளவுதான் புரிந்தது. அக்ஷய் முகத்தில் இருந்த அமைதி அவனுக்கு நம்பிக்கை தருவதாக இருந்தது. இந்த அங்கிளை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்று அவனுக்குத் தோன்றியது. அவன் அக்ஷயின் மடியில் சென்று அமர்ந்து கொண்டான். "அங்கிள், நீங்கள் சூப்பர்மேனா?"

அக்ஷய் நாயகன் கமல் குரலில், "எனக்குத் தெரியலையேப்பா" என்று சிரித்துக் கொண்டே சொன்னான். பின் இருவரும் ஏதேதோ பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். டிவியில் சொன்ன செய்தி அவனை சிறிதும் பாதிக்கவில்லை என்பது போல் அக்ஷய் இருந்தான்.

சஹானா மாமியாரைப் பார்த்தாள். மரகதம் இன்னும் அவனை ஏதோ அதிசயப் பிறவி போல பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அன்றிரவு படுக்கச் செல்லும் வரையில் வருண் அக்ஷயுடன்தான் இருந்தான். அக்ஷய் அவனுக்குக் கதைகள் சொன்னான். காகிதத்தில் பொம்மைகள் செய்து தந்தான். அவனுடன் கேரம் போர்டு விளையாடினான். இப்படி ஒரு போதும் அவன் தன் தந்தையுடன் நெருக்கமாய் இருந்து சஹானா பார்த்ததில்லை.

தூங்கச் செல்லும் முன் அவள் அறைக்கு வந்தவன் சொன்னான், "நான் அங்கிள் கூடவே படுத்துக் கொள்ளட்டுமா?"

அவள் மெள்ள தலையாட்டினாள். அவன் சந்தோஷமாக ஓடினான். அவளுக்கு உடல்நிலை சரியில்லாத சமயங்களில் எத்தனையோ முறை பாட்டியுடன் போய்ப் படுத்துக் கொள் என்று வருணிடம் கெஞ்சி இருக்கிறாள். ஆனால் அவன் அடம் பிடித்து அவளுடனேயேதான் படுத்துக் கொள்வான். முழுதாக ஒரு நாள் கூடப் பழக்கமில்லாத ஒரு அன்னியனிடம் அவன் இந்த அளவு நெருங்கி விட்டது ஒரு விதத்தில் அவளை என்னவோ செய்தது. தன் குழந்தையை அவனிடம் வேகமாய் இழப்பது போல் ஒரு பிரமை வந்தது. மனம் ஒரு கணம் பதறியது. அதே சமயம் அந்த அன்னியன் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் தன் குழந்தையை என்றென்றைக்குமாய் இழந்திருப்போம் என்ற எண்ணம் வந்த போது மனம் சமாதானம் அடைந்தது.

சிறிது நேரம் கழித்து மகன் உறங்கி விட்டானா என்று அவள் பார்க்கச் சென்றாள். அவன் உறங்கி விட்டிருந்தான். ஆனால் அக்ஷய் எங்கோ வெளியே செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்தவுடன் சொன்னான். "சஹானா நான் வெளியே போக வேண்டும். எனக்கு வாசற்கதவின் சாவியைத் தர முடியுமா? நான் எப்போது வருவேன் என்று சொல்ல முடியாது. அனாவசியமாக உங்களைத் தூக்கத்திலிருந்து எழுப்ப வேண்டும்"

அவள் அவனையே கூர்ந்து பார்த்தாள். "அக்ஷய், அவர்கள் உங்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்"

"அவர்கள் தேடுவது வேறு மனிதனை. என்னை அல்ல" அவன் அமைதியாகச் சொன்னான். நிஜமாகவே வேறு மனிதனைப் பார்ப்பது போலத்தான் இருக்கிறது என்றாலும் அவள் அவனுக்காகப் பயந்தாள்.

அதைப் புரிந்து கொண்டது போலச் சொன்னான், "சஹானா. இது வரை எனக்கு நான் யார் என்று தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அந்த புத்த விஹாரத்தில் என்னைத் தேடி இரண்டு பேர்கள் வந்த போது நான் பலவீனமாக இருந்தாலும் அவர்களைச் சுலபமாக என் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அவர்களிடம் "உங்களை யார் அனுப்பினார்கள்?" என்று கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பேன். ஆனால் நான் அங்கிருந்து வந்த பிறகு எனக்கு உயிர் கொடுத்த அந்த நல்ல பிக்குகளுக்கு என்னால் எந்தத் தொந்தரவும் வந்து விடக்கூடாது என்ற எண்ணம்தான் என்னைத் தடுத்தது. இப்போது டிவியில் காண்பித்த அந்தப் பையன் மூலம் எனக்கு ஒரு நூலிழை கிடைத்திருக்கிறது. நான் என்னை முழுவதுமாக காத்துக் கொள்ள வேண்டுமென்றால் நான் யார், என்னை எதற்காக யார் கொல்லப் பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்…."

அவளுக்குப் புரிந்தது. தலையாட்டினாள். வாசற்கதவின் சாவியை எடுத்துக் கொண்டு வந்து நீட்டினாள்.

அவன் அதை வாங்கிக் கொண்டபடியே கேட்டான், "நன்றி சஹானா. எனக்கு அந்தப் பையன் இருக்கும் அந்தப் பகுதிக்கு எப்படிப் போவது என்று சொல்ல முடியுமா?"

"நீங்கள் இந்த நேரத்தில் சபர்பன் ரயிலில் போவதுதான் ஒரே வழி…." என்றவள் ரயில் நிலையம் எங்கே, ரயிலில் போய் எங்கே இறங்க வேண்டும், இறங்கி விட்டு எப்படிப் போக வேண்டும் என்றெல்லாம் அவனுக்கு வழியை சொல்லித் தந்தாள். அவன் கிளம்பும் போது சொன்னாள், "ஜாக்கிரதை…"

அவன் நன்றியுடன் தலையசைத்து விட்டுக் கிளம்பினான்.

வெளியே வந்தவன் தெருக்கோடியில் இருந்த ஒரு கடையில் சூயிங்கம் வாங்கி வாயில் போட்டுக் கொண்டான். பெருநகரத்து நவீன இளைஞனாக மாறினான். ரயில் நிலையம் சஹானா வீட்டிலிருந்து நடக்கும் தூரம்தான். செல்லும் போது அவன் கவனம் தன்னைச் சுற்றிலும் முழுமையாக இருந்தது. யாரும் அவன் மீது தனிப்பட்ட அக்கறை செலுத்தியதாகத் தெரியவில்லை.

ரயிலில் ஏறிய பின் அவன் அமர்ந்த இடத்திற்கு அருகில் இருந்த நபர் அவனை ஏற இறங்க பார்த்தார். அக்ஷயிற்கு அந்த ஆளைப் பார்த்தவுடன் விடாமல் பேசிக் கேள்வி கேட்டு உயிரை எடுக்கக் கூடிய ஆளாகத் தெரிந்தது. உட்கார்ந்தவுடன் கண்களை மூடியவன் இறங்கப் போகும் இடம் வரும் போதுதான் கண்களைத் திறந்தான்.

அந்தச் சிறுவன் இருக்கும் பகுதிக்கு வந்த போது மணி பதினொன்றாகி இருந்தது. அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் அதிகமிருக்கவில்லை. அந்த இடம் தனக்கு மிகவும் பழக்கமான இடம் என்பது போல் நடந்த அக்ஷயிற்கு சுண்ணாம்பு கண்டு பல காலமாகி இருந்த அந்தப் பழைய சிறிய வீட்டைக் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கவில்லை. அங்கிருந்த அத்தனை வீடுகளும் அப்படித்தான் இருந்தன என்றாலும், தன் வீட்டின் முன்புறம் நின்று கொண்டு அந்தச் சிறுவன் டிவியில் பேசிய போது வெளிப்புறச் சுவரில் ப்ரூஸ்லியின் ஸ்டிக்கர் ஒட்டி வைக்கப்பட்டிருந்ததை அவன் கவனித்திருந்ததால் வீட்டைக் கண்டுபிடிப்பது சுலபமாக இருந்தது.

சற்று தொலைவில் நின்று சூழ்நிலையைக் கவனித்தான். அந்த வீட்டில் விளக்கு அணைந்திருந்தது. இரண்டு பக்க வீடுகளிலும் கூட உறங்கியிருந்தார்கள். வலது புற மூன்றாவது வீட்டில் இருந்து டிவியின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. தெருக்கோடியில் இரண்டு இளைஞர்கள் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அக்ஷய் அமைதியாகச் சென்று அந்த சிறுவனின் வீட்டுக் கதவைத் தட்டினான்.

(தொடரும்)

About The Author

3 Comments

  1. sampath

    இன்டெரெஸ்டா போகுது. எனக்கு அமானுஷ்யன் கேரக்டர் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. அடுத்த வாரம் வரை காத்திருக்கிறது தான் கஷ்டமா தோணுது

  2. arockia

    கதை ரொம்ப சுவராசியமாஇ பொஇகொன்டு இருகிரது. வெர்ய் கோட் . வாழ்துக்கல்.

  3. sivananthini

    வணக்கம் கதை ரொம்ப சுவராசியமா போகிறது மீதி கதையை சீக்கிறம் சொல்லுங்க

Comments are closed.