அமானுஷ்யன்-81

மந்திரிக்கும் சிபிஐ மனிதனுக்கும் இடையே ஆன அந்த சந்திப்பு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மந்திரியின் வீட்டில் நடந்தது. மந்திரி என்றும் இது போன்ற சந்திப்புகளைத் தன் வீட்டில் அனுமதிப்பதில்லை என்றாலும் முதல் முறையாக விதி விலக்கை அனுமதிக்கக் காரணம் அமானுஷ்யனுடன் போனில் நடத்திய பேச்சு வார்த்தையே.

இது போன்ற பேச்சு வார்த்தைகளை அமானுஷ்யன் விவகாரத்தில் நடத்தியது பெரும்பாலும் சிபிஐ மனிதனே என்றாலும் ஆனந்திடம் பேசும் போது தன் குரல் தன்னை அடையாளம் காட்டி விடும் என்ற காரணத்தால் சிபிஐ மனிதன் வேறொரு ஆளை அதற்கு ஏற்பாடு செய்திருந்தான். ஆனந்திடம் என்ன எல்லாம் பேச வேண்டும் என்றும், அமானுஷ்யனை எங்கே எப்படி ஒப்படைக்க வேண்டும் என்றும் விவரங்களை அந்த ஆளிடம் கொடுத்து பேச சிபிஐ மனிதன் பேசச் சொல்லிக் கொடுத்திருந்தான். போலீஸ் துறையில் அமானுஷ்யனைப் பிடிப்பதற்காக நியமிக்கப்பட்டு இருந்த கும்பலில் அந்த ஆளும் ஒருவன்.

ஒரு ரகசிய இடத்தில் இருந்து ஆனந்திற்கு அந்த ஆள் போன் செய்த போது உடன் இருந்தது சிபிஐ மனிதன் மட்டுமே. ஆனந்திடம் இருந்து அமானுஷ்யன் கைக்கு போன் போகும் வரை எல்லாம் சரியாகவே இருந்தது. ஆனால் அமானுஷ்யன் பேச ஆரம்பித்த போது எல்லாம் தாறு மாறாகப் போக ஆரம்பித்து விட்டது. அம்மாவிடம் பேசினால் தான் நம்புவேன் என்று அவன் சொன்னதிலிருந்து டில்லியின் ‘அந்த’ குறிப்பிட்டிருந்த இடங்களை சொல்ல ஆரம்பித்த போது சிபிஐ மனிதனுடைய இதயத் துடிப்புகள் வேகமாகவும் சத்தமாகவும் நிகழ ஆரம்பித்தன.

எதையும் அவசியமில்லாமல் யாரும் தெரிந்து கொள்ளத் தேவை இல்லை என்ற கொள்கையுடைய சிபிஐ மனிதன் ஆனந்திடமும், அக்ஷயிடமும் பேசிய அந்த ஆளுக்குக் கூட பல தகவல்களைத் தெரிவித்திருக்கவில்லை. அக்ஷய் ஒரு பயங்கரவாதி, பழைய நினைவுகளை இழந்தவன், எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கிறான், ஆனந்தின் தம்பி போன்ற இன்றைய விவரங்களை மட்டுமே தந்து அக்ஷயைக் கண்டுபிடித்து, அவனைக் கொல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த எத்தனையோ போலீஸ்காரர்களில் அந்த ஆளும் ஒருவர்.

அக்ஷய் அந்த இடங்களைப் பற்றி சொன்ன போது கூட அந்த ஆள் முகத்தில் எகத்தாளமே தெரிந்தது. ஆனால் சிபிஐ மனிதன் உடனடியாக ஒரு தாளில் "திட்டத்தில் மாறுதல்-மேற்கொண்டு அது பற்றி பேச வேண்டாம்-திரும்பவும் கூப்பிடுவதாக சொல்லுங்கள்" என்று எழுதி பேசிக் கொண்டிருந்த ஆள் முன் வைத்து பேச்சை நிறுத்தி விட்டான். அந்த ஆளை அனுப்பி வைத்த பிறகு உடனடியாக மந்திரிக்கு போன் செய்தான்.

மந்திரி கேட்டார். "என்ன ஆயிற்று?"

"நேரில் சொல்கிறேன். உடனடியாக உங்களைப் பார்க்க வேண்டும்"

மந்திரிக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. "என்ன சொல்கிறீர்கள்? போனிலேயே சொல்லுங்கள். எனக்கு இன்றைக்கு இரவு 11 மணி வரைக்கும் தவிர்க்க முடியாத வேலைகள் இருக்கின்றன"

"எல்லாவற்றையும் கேன்சல் செய்யுங்கள்"

"முடியாது. எல்லாம் வெளிநாட்டில் இருந்து வந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்டது. போன மாதமே முடிவு செய்தது"

"அப்படியானால் அதெல்லாம் முடிந்த பிறகு பேசுவோம்"

"என்ன தான் பிரச்னை?"

"ஆனந்திடம் பேசப் போய் அமானுஷ்யனிடமே பேசி இருக்கிறோம். நேரில் சொல்கிறேன்"

இணைப்பு துண்டிக்கப்பட்டது. அன்று மந்திரி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி, பல முக்கியமான விஷயங்களை முடிவு செய்தாலும் மனம் எல்லாம் அமானுஷ்யன் விவகாரத்திலேயே இருந்தது. வீட்டிற்கே சிபிஐ மனிதனை வரவழைத்த அவர் அவனைப் பார்த்தவுடனேயே அடுக்கடுக்காக கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.

அமானுஷ்யனிடம் பேசி விட்டு இழந்த மன அமைதியையும், சிந்திக்கும் திறனையும் திரும்பப் பெற்றிருந்த சிபிஐ மனிதன் அமைதியாக அமானுஷ்யனிடம் பேசிய பேச்சின் விவரத்தைச் சொன்னான். மந்திரியின் முகம் வெளிறியது. சிறிது நேரம் பேச்சிழந்த அவர் பிறகு கேட்டார். "நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவனுக்கு எல்லாம் நினைவுக்கு வந்திருக்குமா?"

"எனக்கு அதை நம்ப முடியவில்லை. வந்திருந்தால் அவன் எப்போதோ உங்களைக் காட்டிக் கொடுத்திருப்பான்"

"அப்படியானால் அவனுக்கு அந்த இடங்களைப் பற்றி எல்லாம் எப்படி சொல்ல முடிந்தது?"

"அது தான் புரியவில்லை. ஒருவேளை சமீபத்தில் அவனுக்கு ஞாபகம் வந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது"

மந்திரிக்கு அந்த ஏ.சி. அறையிலும் வியர்த்தது.

அதைக் கவனித்த சிபிஐ மனிதன் அமைதியாகச் சொன்னான். "ஆனால் நாம் பயப்பட எதுவும் இல்லை. அவன் அம்மாவும் அந்தப் பையனும் நம் வசம் இருக்கிற வரை நமக்கு எதிராக அவன் எதுவும் செய்ய மாட்டான்."

மந்திரிக்கு ஓரளவு தைரியம் வந்தது. "சரி இனி என்ன செய்வது?"

"அவனை நம்மிடம் வரச் சொல்லி தூரத்தில் பார்த்தவுடனேயே முதல் வேலையாக அவனைத் தீர்த்துக் கட்டலாம் என்று நினைத்தேன். ஆனால் அவனிடம் நாம் பேச வேண்டியதும் நிறைய இருக்கிறது. நம் திட்டத்தை இந்த தடவை மிகவும் கச்சிதமாக நடந்து கொள்ள வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்று ஓரளவு யோசித்து விட்டேன். அதில் அவன் தப்பிக்க வழியே இல்லாதபடி செய்ய இனியும் சிறிது ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதை இனி நான் பார்த்துக் கொள்கிறேன். அவனை சந்திக்கும் முன் நாம் ஜெயினை சமாளிக்க வேண்டும்"

"அந்த ஆள் என்ன செய்தார்?"

"ஒன்றும் செய்யவில்லை. இனியும் ஒன்றும் செய்து விடக் கூடாது என்பதற்காக அவரை நம் வழியில் குறுக்கிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. அவரை ஆனந்த் நேற்று பார்த்துப் பேசி இருக்கிறான். நம் ஆள் ஒருவன் வேவு பார்த்து இந்த தகவலைத் தெரிவித்து விட்டான். ஆனந்த் கண்டிப்பாக அவன் அம்மா கடத்தல் சமாச்சாரத்தைச் சொல்லி இருப்பான். இனி நாம் அக்ஷயை நம்மிடம் ஒப்படைக்க என்னவெல்லாம் சொல்கிறோம் என்பதையும் அவன் அவரிடம் கண்டிப்பாக சொல்லாமல் இருக்க மாட்டான். ஜெயின் இனி சும்மா இருக்க மாட்டார். எனக்கு அவரை நன்றாகத் தெரியும். அவர் கண்டிப்பாக ஏதாவது செய்வார். நமக்கு அவர் இடைஞ்சலாக இருப்பார். அவரை அப்புறப்படுத்தா விட்டால் கண்டிப்பாக நமக்கு ஆபத்து."

"அவரைக் கொன்றால் அது இன்னும் பல கேள்விகளை எழுப்புமே?"

"கொல்ல வேண்டியதில்லை. அவரை உயிரோடு வைத்திருந்து நமக்கு இடைஞ்சல் செய்ய சக்தி இல்லாதவராக ஆக்கலாம். முதலில் நீங்கள் தாடிக்காரனிடம் ‘அந்த மருந்தை’ வாங்குங்கள்…."

மந்திரிக்கு ஆரம்பத்தில் ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் சிபிஐ மனிதன் அவருக்கு விளக்கியவுடன் அவர் முகம் மலர்ந்தது. "ஒரு கல்லில் இரண்டு மாங்காய்….."

*********

மகேந்திரன் தன் வீடு நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். நண்பனின் திருமணம் முடிந்து ஊர் திரும்பியவன் தன் வீடுள்ள நகர்ப்பகுதி வரை மின்சார ரயிலில் வந்து சேர்ந்த போது இரவு மணி ஒன்று. வீடு ஐந்து நிமிட நடை தூரத்தில் இருந்ததால் அவன் அந்த இரவு வேளையைப் பொருட்படுத்தாமல் ஆள் நடமாட்டமில்லாத அந்த தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தான். நடக்கையில் அப்பா காலையில் சொல்லி இருந்த தகவலையே மனம் அலசிக் கொண்டிருந்தது. "உன் நண்பன் ராகுல் உன்னைத் தேடி வந்திருந்தான்…."

அவனுக்கு ராகுல் என்ற பெயரில் எந்த நண்பனும் இப்போது கிடையாது. இரண்டாம் வகுப்பு படிக்கையில் தான் ஒரு ராகுல் அவன் நண்பனாக இருந்தான். அவன் அவன் அப்பாவுக்கு சண்டிகருக்கு மாற்றல் ஆகி விட்டதால்
அந்த வருடமே அங்கு சென்றும் விட்டான். அதன் பிறகு எந்த தகவலும் இது வரை அவனைப் பற்றி இல்லை. அவன் தற்போது தேடி வர வாய்ப்பே இல்லை. பின் வீட்டிற்கு வந்தது யார் என்று யோசித்தபடியே நடந்தவனை யாரோ ‘மகேந்திரன்" என்றழைத்தார்கள்.

திரும்பிப் பார்த்தான். அரையிருட்டில் இருந்து ஒருவன் வெளிச்சத்திற்கு வந்தான். அவனை இது வரை மகேந்திரன் பார்த்ததில்லை. "யார் நீங்கள்?"

"ராகுல்"

மகேந்திரன் கேட்டான். "நீங்கள் தான் நேற்று வீட்டுக்குப் போயிருந்தீர்களா?"

"ஆமாம்"

மகேந்திரன் அவனையே பார்த்துக் கொண்டு மூளையைக் கசக்கி யோசித்தான். ‘இல்லை. இவனை இதற்கு முன் நிச்சயமாக பார்த்ததில்லை.’

"எனக்கு நீங்கள் யார் என்று தெரியவில்லையே"

"தெரிந்து கொண்டால் போயிற்று" என்றவன் கண்ணிமைக்கும் நேரத்தில் தொலைவில் இருந்து அருகில் வந்து சேர்ந்தான். மகேந்திரனுக்கு காண்பது கனவா நனவா என்று தெரியவில்லை. அவன் நடந்தும் வரவில்லை, ஓடியும் வரவில்லை. ஆனால் காற்று வேகத்தில் வந்து அருகே நிற்கிறான்… பேயாக இருக்குமோ? அவன் இது வரை பேயை நம்பாதவன் என்றாலும் இப்போது அவனால் நம்பாமல் இருக்க முடியவில்லை. உடனடியாக அவன் கால்கள் நிலத்தைத் தொடுகின்றனவா என்று பார்த்தான். தொடுகிறது. அப்படியானால் இது பேயில்லையா, இல்லை பேயிற்கு கால்கள் நிலத்தைத் தொடாது என்பது பொய்யா?

மகேந்திரனுக்கு நாக்கு வரண்டது. கஷ்டப்பட்டு குரலைக் கண்டுபிடித்தான். "உங்களுக்கு…. என்ன…வேண்டும்?"

"சில உண்மைகள் தெரிய வேண்டும்?"

"என்ன… எந்த…. உண்மைகள்?"

"ஆச்சார்யாவைக் கொன்றது யார்?"

"எனக்குத் தெரியாது….. நீங்கள் யார்?"

"இப்போதைக்கு உன் நண்பன். ஆனால் உண்மையைச் சொல்லா விட்டால் எதிரியாகவும் மாறலாம்"

மகேந்திரன் ஒல்லியாக இருந்த இந்த ஆளை அடித்துத் தள்ளி விட்டு ஓடி வேகமாக வீட்டுக்கு ஓடிப்போகலாமா என்று நினைத்தான். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பல அடி தூரத்தில் இருந்து அருகே வந்தவனை சாதாரணமாக நினைப்பது முட்டாள்தனம் என்று அறிவு எச்சரித்தது. யாரும் அந்த வழியாக வருகிற மாதிரியும் தெரியவில்லை.

அழாத குறையாகச் சொன்னான். "சத்தியமாகச் சொல்கிறேன். அவரை யார் கொன்றார்கள் என்று எனக்குத் தெரியாது"

அக்ஷய் சலனமே இல்லாமல் அவனையே பார்த்தபடி நின்றான். பின் சொன்னான். "ஆபிசில் நீ எல்லாரையும் வேவு பார்க்கிறவன் என்கிறார்கள். நீ ஆச்சார்யாவிடமும் நெருக்கமாக இருந்தவன் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படி இருக்கையில் நீ சொல்வதை என்னால் நம்ப முடியவில்லையே"

மகேந்திரன் ஒன்றுமே சொல்லாமல் அவனைக் கூர்ந்து பார்த்தான்.

அக்ஷய் அவன் கழுத்தை மின்னல் வேகத்தில் தொட்டான். அடுத்த கணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒருவித கொடுமையான வலி அவன் கழுத்து, தலைப் பகுதிகளைத் தாக்கியது. அவனால் கழுத்தை சிறிதும் அசைக்க முடியவில்லை. பேசவும் முடியவில்லை…. அவன் பீதியுடன் அக்ஷயைப் பார்த்தான். அவன் கண்களில் உயிர்ப்பயம் தெரிந்தது.

ஓரிரு நிமிடங்கள் அந்த வலியின் கொடுமையை அவனை அனுபவிக்க விட்டு விட்டு மறுபடி அவன் கழுத்தைத் தொட்டு அவனைப் பழைய நிலைக்கு அக்ஷய் கொண்டு வந்தான்.

"இனியாவது நீ பேசுவாய் என்று நினைக்கிறேன்" அக்ஷய் அமைதியாகச் சொன்னான்.

(தொடரும்)

About The Author

1 Comment

  1. Jeni

    ரெம்ப நல்லா இருக்குது சார், சீக்கிரம் அடுத்த பகுதிய போடுங்க.

Comments are closed.