அமானுஷ்யன்-94

அந்தக் கட்டிடத்திற்கு அருகே இருந்த தெருவிளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அதற்கு சிறிது தூரம் தள்ளி அரையிருட்டில் ஒரு காரும் அதன் பின்னால் சிறிது தூரம் தள்ளி ஒரு போலீஸ் ஜீப்பும் நின்று கொண்டிருந்தது.

ஆனந்த் முணுமுணுத்தான். "அவர்கள் முன்பே வந்து தயாராக நிற்கிறார்கள்"

டாக்சி நின்றதும் இருவரும் இறங்கினார்கள். பணத்தைத் தந்தவுடன் டாக்சி திரும்பவும் வந்த வழியே திரும்பிப் போனது. இருவரும் அமைதியாகக் காத்திருந்தார்கள்.

போலீஸ் ஜீப்பில் மறைவாக உட்கார்ந்திருந்த ராஜாராம் ரெட்டி செல் போனில் பேசினார். "அந்த டாக்சியை வேறு எந்த வாகனமாவது தொடர்ந்து வரவில்லையே"

"இல்லை சார்"

"அந்த டாக்சி அதே வேகத்தில் போய்க் கொண்டு தானே இருக்கிறது. வேண்டுமென்றே மெதுவாகவோ சந்தேகப்படுகிற மாதிரியோ போய்க் கொண்டு இல்லை அல்லவா?"

"இல்லை சார்."

"சரி அது ஆக்ரா நெடுஞ்சாலைக்குப் போன பிறகு எனக்கு சொல்லுங்கள்"

சிறிது நேரத்தில் தகவல் வந்தது. "சார் அந்த டாக்சி போயாகி விட்டது"

ராஜாராம் ரெட்டி அமானுஷ்யனை ஆர்வத்துடன் பார்த்தார். அவர் அவனைப் பார்ப்பது இது தான் முதல் முறை. அலட்டிக் கொள்ளாமல் அவன் சோம்பல் முறித்துக் கொண்டு நின்றிருந்தான். உடன் நின்றிருந்த ஆனந்த் சிறிது பதட்டமாகவே இருந்ததை அவரால் உணர முடிந்தது. ஆனால் அமானுஷ்யன் சலனமே இல்லாமல் தன் வீட்டு முன்னால் நிற்பது போல் நின்றிருந்ததைப் பார்க்கையில் அவருக்குப் பொறாமையாகவும் கோபமாகவும் இருந்தது. என்ன மனிதனிவன்?

அவனிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் மட்டும் இல்லா விட்டால் அந்தக் கட்டிடத்தில் மறைந்திருக்கிற ஆட்களிடம் அவனை சுடச் சொல்லி உத்தரவு பிறப்பித்திருப்பார். அவன் உடல் துப்பாக்கி ரவைகளால் சல்லடையாகத் துளைக்கப்படுவதை கண்ணாரக் கண்டு ரசித்திருப்பார். ஆனால் சிறிது காலம் அவன் உயிருடன் இருப்பது அவருக்கு இப்போது அவசியமாக இருக்கிறது. அருகில் அமர்ந்திருந்த நபரிடம் சொன்னார். "பேசுங்கள்".

ஆனந்தின் செல்போன் இசைத்தது. ஆனந்த் பேசினான். "ஹலோ"

"ஆனந்த். நான் எக்ஸ் பேசுகிறேன். நாங்கள் உங்கள் தாயாரையும், வருணையும் அழைத்து வந்திருக்கிறோம். நீங்கள் அக்‌ஷயை சிறிது தள்ளி நின்று கொண்டிருக்கும் காருக்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் அவர்களை அனுப்பி வைக்கிறோம்…."

ஆனந்த் சொன்னான். "முதலில் அம்மாவையும், வருணையும் எங்கள் கண்ணில் படுகிற மாதிரி நிறுத்துங்கள். அவர்கள் என்னை நோக்கி வரட்டும். அக்‌ஷயும் அந்த காரை நோக்கி வருவான்…"

மிஸ்டர் எக்ஸ் ராஜாராம் ரெட்டியைப் பார்த்தார். ராஜாராம் ரெட்டி தலையசைத்தார். மிஸ்டர் எக்ஸ் போலீஸ் ஜீப்பில் இருந்து இறங்கி கார் அருகே சென்று சைகை செய்ய காரில் இருந்த ஒரு ஆள் சாரதாவையும், வருணையும் இறக்கி அவர்களை அரையிருட்டில் இருந்து கூட்டிக் கொண்டு போய் நன்றாகத் தெரியும்படியான வெளிச்சத்தில் நிற்க வைத்தான்.

மிஸ்டர் எக்ஸ் ஆனந்திடம் கேட்டார். "நீங்கள் ஏதாவது துப்பாக்கி கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து வரவில்லையே"

"இல்லை"

"சரி. எங்கள் ஆள் வந்து உங்கள் இருவரையும் பரிசோதிக்க வருவான். அனுமதியுங்கள்"

முகமூடி அணிந்த மனிதன் ஒருவன் வந்து ஆனந்த், அக்‌ஷய் இரண்டு பேரையும் முழுமையாகப் பரிசோதித்தான். பின் கையை உயர்த்தி ஒன்றுமில்லை என்று சைகை காண்பித்தான்.

திருப்தி அடைந்த மிஸ்டர் எக்ஸ் ஆனந்திடம் சொன்னார். "இப்போது அவர்கள் வருவார்கள். அக்‌ஷயை அனுப்புங்கள். உங்கள் தம்பியிடம் சொல்லுங்கள். ஏதாவது அவர் அசம்பாவிதம் செய்யும் நோக்கம் வைத்திருந்தால் அது உங்கள் தாயாருக்கும், வருணுக்கும் தான் ஆபத்து. அந்தக் கட்டிடத்தில் மறைவாக எங்கள் ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். உங்கள் தம்பி துப்பாக்கி ரவைகளுக்குப் பலியாகாமல் தப்பிக்கிற அளவு வேகமாக இயங்குகிற வித்தை தெரிந்தவராக இருக்கலாம். ஆனால் உங்கள் அம்மாவும், அந்தப் பையனும் அப்படி இல்லை என்பதை அவர் நினைவு வைத்துக் கொள்வது நல்லது…."

"அவன் கண்டிப்பாக உங்களிடம் வந்து சேர்வான். எந்த விதத்திலும் தேவை இல்லாததைச் செய்யும் எண்ணம் அவனுக்கு இல்லை. ஆனால் நீங்களும் அந்த மாதிரி எண்ணம் வைத்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்."

"சேச்சே. அப்படியெல்லாம் இல்லை."

"இந்த நேரத்தில் நான் என் அம்மாவையும், வருணையும் அழைத்துக் கொண்டு திரும்ப எப்படிப் போவேன். நாங்கள் போக என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்…"

மிஸ்டர் எக்ஸ் சொன்னார். "உங்கள் தம்பியை இங்கிருந்து அழைத்துப் போகும் வரை நாங்கள் உங்கள் போக்குவரத்திற்கு உதவ முடியாது. நீங்கள் சிறிது காத்திருந்து அல்லது நடந்து போய் தான் ஏதாவது டாக்சி பிடித்துக் கொண்டு போக வேண்டும்"

அக்‌ஷய் ஆனந்திடம் இருந்து செல் போனை வாங்கி பேசினான். "அப்படியானால் ஒரு நிபந்தனை…"

"என்ன?"

"நான் அங்கு வந்தாலும் கூட ஆனந்த் அவர்களை அழைத்துக் கொண்டு சிறிது தூரமாவது போகும் வரை உங்கள் பக்கம் வந்தாலும் கூட உங்கள் வண்டியில் ஏற மாட்டேன். அவர்கள் போன பிறகு நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். எனக்குக் கவலையில்லை"

மிஸ்டர் எக்ஸ் ரெட்டியைப் பார்த்தார். இந்த ஒரு இக்கட்டான நிலையிலும் கூட அவன் அவர்களிடம் நிபந்தனை விதிப்பதை ராஜாராம் ரெட்டி ரசிக்கவில்லை. ஆனால் அவர் இந்த நேரத்தில் அவன் என்ன செய்ய முடியும் என்று பரீட்சித்துப் பார்க்க விரும்பவில்லை. சரி என்று சொல்லச் சொல்லி தலை அசைத்தார்.

"சரி. ஆனால் நீங்கள் அவர்கள் போன பிறகு எதுவும் செய்ய மாட்டீர்கள் என்று என்ன உத்திரவாதம்"

"நான் அங்கு வந்த பிறகு நான் ஓடிவிடாதபடி என்னை இரண்டு பேர் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். போதுமா? இந்த இடத்தை விட்டு என்னைக் கொண்டு போகும் முன் அவர்கள் பாதுகாப்பாகப் போய் விட்டார்கள் என்பது எனக்கு உறுதியாக வேண்டும். அவ்வளவு தான்"

எக்ஸ் ரெட்டியைப் பார்க்க ரெட்டி தலையசைத்தார்.

"சரி. நீங்கள் வாருங்கள். அவர்களும் அங்கு வருவார்கள்"

அக்‌ஷய் கிளம்புவதற்கு முன் ஆனந்தைக் கட்டி அணைத்துக் கொண்டு சொன்னான். "ஆனந்த். ஜாக்கிரதை"

ஆனந்திற்குத் தொண்டையை அடைத்தது. தலையசைத்தான். அக்‌ஷய் காரை நோக்கிச் செல்ல சாரதாவும், வருணும் எதிரிலிருந்து வந்தார்கள். நெருங்கிய போது சாரதா மகனைக் கண்ணீருடன் பார்த்தாள்.

அக்‌ஷய் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னான். "அம்மா கவலையே படாதே. அவர்கள் ஏதோ என்னிடம் தெரிந்து கொள்ள வேண்டுமாம். அதைத் தெரிந்து கொண்ட பிறகு விட்டு விடுவார்கள். சீக்கிரமே வந்து விடுவேன்"

சாரதா மகன் உறுதியாக சொன்னதைக் கேட்டு ஓரளவு நிம்மதி அடைந்தாள்.

பைனாகுலர் வழியே அவன் உதட்டசைவைப் பார்த்தே ஒரு நபர் அவன் சொன்னதை அப்படியே ராஜாராம் ரெட்டியிடம் சொன்னான்.

அக்‌ஷய் வருணை தூக்கி அணைத்து முத்தம் கொடுத்தான். வருணுக்கு அக்‌ஷயைப் பார்த்ததில் எல்லை இல்லாத சந்தோஷம். அவன் அக்‌ஷயிடம் சொன்னான். "அங்கிள் கண்டிப்பாக சீக்கிரமே வந்து விட வேண்டும். சரியா?"

அக்‌ஷய் சொன்னான். "கண்டிப்பாக வருகிறேன்"

கார் அருகே நின்றிருந்த நபர் வேகமாகக் கை அசைத்து சீக்கிரம் வரும்படி சொன்னான். அக்‌ஷய் அவர்களிடம் சொன்னான். "சீக்கிரம் போங்கள்."

அவர்கள் ஆனந்தை அடைந்த போது அக்‌ஷய் காரை அடைந்தான். மறைவாக இருந்த இரண்டு பேர் அவனை உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொண்டார்கள். இன்னொருவன் அக்‌ஷயின் பின்னால் நின்று கொண்டு துப்பாக்கி நுனியால் அவன் முதுகை அழுத்தினான்.

ஆனந்த் தாயும் வருணும் வந்தவுடன் சொன்னான். "அம்மா நாம் வேகமாக இங்கிருந்து போக வேண்டும். வேகமாக நடங்கள். வருண் உனக்கு வேகமாக நடக்க முடியுமா?"

வருண் பெருமையாகச் சொன்னான். "வேகமாக ஓடவும் ஓடுவேன். ஓடட்டுமா"

ஆனந்திற்கு அவனைப் பிடித்து விட்டது. "வேண்டாம். வேகமாக நட போதும்" என்று புன்னகையுடன் சொன்னான்.

இருட்டில் வந்த வழியே அவர்களை ஆனந்த் அழைத்துச் சென்றான்.

மிஸ்டர் எக்ஸ் அக்‌ஷய் அருகில் வந்து சொன்னார். "இனி நாம் போகலாமா?" அக்‌ஷய் தலையசைத்தான்.

அமானுஷ்யனின் கைகள் மிகவும் ஆபத்தானவை என்பதால் ரெட்டி முதல் வேலையாக அவன் கைகளை கட்டிப்போடச் சொல்லி இருந்தார். "உங்கள் கையைக் கட்டிக் கூட்டிக் கொண்டு வர உத்தரவு." என்றவர் ஒரு ஆளைப் பார்த்துக் கண்ணசைக்க அந்த ஆள் ஒரு தடிமனான கயிறு கொண்டு வந்து அக்‌ஷயின் இரண்டு கைகளையும் பின்னுக்கு இழுத்து உறுதியாகக் கட்டி விட்டான். அக்‌ஷயிடம் எதிர்ப்பிருக்கும் என்று முன்னெச்சரிக்கையுடன் தான் மிஸ்டர் எக்ஸ் இருந்தார். எதிர்ப்பு இருக்கும் பட்சத்தில் அவனை அடக்க அவனைச் சுற்றிலும் பலர் தயாராக இருந்தனர். ஆனால் அக்‌ஷய் ஒரு எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாக இருந்தான். அவனை அவர்கள் அந்தக் காரில் உட்கார வைத்தார்கள்.

அதே நேரத்தில் போலீஸ் ஜீப்பில் இன்னும் மறைவாகவே அமர்ந்திருந்த ராஜாராம் ரெட்டி தன் செல் போன் மூலமாக ஆக்ரா நெடுஞ்சாலையில் பெரிய வேனில் ஐந்து பேர்களுடன் உட்கார்ந்திருந்த ஒருவனுக்குக் கட்டளை பிறப்பித்தார். "நீங்கள் தயாராக இருங்கள். நாங்கள் உங்களைக் கடந்த பிறகு நீங்கள் வரலாம். ஆனந்த், வருண் இருவரையும் விட்டு விட்டு அந்தக் கிழவியை மட்டும் குண்டுக்கட்டாய் தூக்கிக் கொண்டு நம் இடத்திற்கு வந்து விடுங்கள்"

"சரி சார்"

ராஜாராம் ரெட்டி திருப்தி அடைந்தார். எல்லாம் சரிவர தான் போய்க் கொண்டு இருக்கிறது. அந்த டிவிக்காரியின் மகனை இனியும் வைத்துக் கொண்டு இருப்பது ஆபத்தாக அவருக்குத் தோன்றியது. அமானுஷ்யனுக்கு உதவியதற்காக அவளை இந்தக் கடத்தல் மூலம் பயமுறுத்தியாகி விட்டது. இனி இதில் அனாவசியமாக அவள் மூக்கை நுழைக்க மாட்டாள். அப்படி செய்தால் என்ன ஆகும் என்று புரியவைத்தும் ஆகி விட்டது. இனியும் அந்த பையனை கடத்தி வைத்துக் கொண்டு தேவையில்லாமல் மீடியாக்காரர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டாம் என்பதால் தான் அந்த சிறுவனை விட்டு விடச் சொன்னார். இந்தக் கிழவி போதும் அக்‌ஷயின் வாயில் இருந்து எல்லா உண்மைகளையும் வரவழைப்பதற்கு! அவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

(தொடரும்)

About The Author

3 Comments

  1. janani

    திக் திக் பக் பக் …..அருமையாக உள்ளது. சூப்பர் சூப்பர்

  2. கே.எஸ்.செண்பகவள்ளி

    விறுவிறுப்பு கூடுகிறது! என்னாகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது!

  3. madhu

    What an excellent story writing.. I have read MEN 6 times and amanushyan 4 times. Ganesan Sir is really a great writer. Eagerly expecting for next monday.

Comments are closed.