அமானுஷ்யன்(45)

என்.கணேசனின் ‘பார்வைகள்’ சிறுகதைத் தொகுதியை மின்னூலாகப் பெற..


"யாரந்தப் பெண்?" அக்‌ஷய் கேட்டபோது ஆனந்த் விழித்தான். "எந்தப் பெண்?"

"உன் சூட்கேஸில் அம்மா போட்டோ தவிர இன்னொரு போட்டோவை ஒளித்து வைத்திருந்தாயே அந்தப் பெண்"

ஆனந்த் முகம் லேசாகச் சிவந்தது. என்ன சொல்வது என்று தடுமாறினான். அக்‌ஷய் சிரித்துக் கொண்டே சொன்னான். "ரொம்பவும் கஷ்டப்படாதே. எனக்கு புரிந்து விட்டது. அந்தப் பெண் பெயர் என்ன? என்ன செய்கிறாள்"

ஆனந்த் சொன்னான். "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை"

அக்‌ஷய் மீண்டும் சிரித்தான். "நான் ஒன்றும் சொல்லாமலேயே அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்கிறாயே. சரி சொல். அவள் பெயர் என்ன?"

"பெயர் நர்மதா. சென்னையில் ஒரு கல்லூரியில் லெக்சரராக வேலை செய்கிறாள். கல்லூரியில் ஒன்றாகச் சேர்ந்து படித்தோம். ஆனால் நீ நினைக்கிற மாதிரி ஒன்றும் இல்லை."

"கல்லூரியில் எத்தனையோ பேர் கூடப்படித்திருப்பார்கள். அப்படி இருக்கையில் ஒருத்தியின் போட்டோவை மட்டும் சூட்கேஸில் ஒளித்து வைத்திருக்கிறாய். கேட்டால் மழுப்புகிறாய்."

ஆனந்த் முகத்தில் சொல்ல முடியாத ஒரு சோகம் படர்ந்தது. "அவள் போட்டோ மட்டும்தான் என்னிடம் இருக்கிறது. அது என்னிடம் இருக்கிறதுகூட அவளுக்குத் தெரியாது. நான் அவளைப் பார்த்தே இரண்டு வருடம் ஆகி விட்டது. அதனால் இதைப் பெரியதாகச் சொல்ல ஒன்றுமில்லை"

"ஏன் அந்தப் பெண்ணிற்குக் கல்யாணம் ஆகி விட்டதா?"

"இல்லை"

"அந்தப் பெண் உன்னைக் காதலிக்கவில்லையோ"

ஆனந்த் கண்களில் லேசாக நீர் திரை போட்டது. "என்னை அவள் காதலித்தாள்"

"ஏன் இறந்த காலத்தில் சொல்கிறாய்"

"அவள் என்னிடம் அவள் காதலைச் சொன்ன போது நான் அவளைக் காதலிக்கவில்லை என்றும், நல்ல நண்பனாய்த்தான் பழகினேன் என்றும் அவளிடம் சொல்லி விட்டேன்"

"ஏன்?"

"அவள் நல்ல கலகலப்பான சந்தோஷமான பெண். அவளை நான் கல்யாணம் செய்து கொண்டால் அவளை அப்படியே கலகலப்பாய் சந்தோஷமாய் வைத்துக் கொள்ள முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை அக்‌ஷய். நம் வீட்டில் அந்த இரண்டும் இல்லாமல் போய் பல வருஷங்களாகிறது. ஒரு வேளை நீ காணாமல் போகாமல் இருந்தால் எல்லாம் மாறியிருக்குமோ என்னவோ? அதனால் அவளாவது யாராவது ஒரு நல்லவனைக் கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாய் இருக்கட்டுமே என்று தோன்றியது" சொல்கையில் ஆனந்த் குரல் கரகரத்தது.

அக்‌ஷய் கோபப்பட்டான். "நீ ஒரு முட்டாள்"

"உனக்குப் புரியாது அக்‌ஷய்" என்ற ஆனந்த் மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

அக்‌ஷயும் மேற்கொண்டு அதைப் பற்றி எதுவும் சொல்லப் போகவில்லை. அவன் மனம் இப்போதைய எதிரிகள் பற்றி சிந்திக்க ஆரம்பித்தது. திடீரென்று சொன்னான். "நான் உன் செல்போனில் அம்மாவிடம் பேசி இருக்கக் கூடாது ஆனந்த்"

"ஏனப்படி சொல்கிறாய்?"

"உன்னைப் பின் தொடர ஆட்களை ஏற்பாடு செய்தவர்கள் ஏன் உன் போனையும் டேப் செய்ய ஏற்பாடு செய்திருக்கக் கூடாது?"

"ஒரு சிபிஐ அதிகாரியின் போனை டேப் செய்ய வேண்டுமென்றால் அதற்கு சிபிஐ டைரக்டர் அனுமதி கண்டிப்பாக வேண்டும் அக்‌ஷய். இன்னும் அது போன்ற சில வழக்கங்கள் நடைமுறையில் இருக்கின்றன. மற்ற போன்களை டேப் செய்வதுபோல் என் போனை அவர்கள் டேப் செய்ய முடியாது. டெலிபோன் டிபார்ட்மெண்டில் அந்த அனுமதிக் கடிதம் கண்டிப்பாகக் கேட்பார்கள். கிடைத்தவுடன் "உங்கள் அனுமதியுடன் இதைச் செய்கிறோம்" என்ற தகவலையும் சிபிஐ டைரக்டருக்கு ஈ மெயிலில் தெரிவித்தும் விடுவார்கள். அதனால் அதற்கு பயப்படத் தேவையில்லை. ஆனால் மாற்று வழிகளில் நான் எந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டிருக்கிறேன் என்பதை எல்லாம் அவர்கள் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும். அப்படித் தெரிந்து கொண்டாலும் என் வீட்டுக்குப் போன் செய்து அம்மாவிடம் நான் பேசுவது ஒரு பெரிய விஷயமாக அவர்கள் நினைக்க மாட்டார்கள்"

**********

சிபிஐ மனிதன் ஆனந்த் அறைக்குச் சென்று அவனால் கண்டுபிடிக்கப்பட்டு சமாளித்து திரும்பி வந்த கதையை விரிவாகக் கேட்டான். "முட்டாள்கள்" என்று மனதிற்குள் அடைமொழி கொடுத்தாலும் வாய் விட்டு அவன் ஒன்றும் சொல்லவில்லை. கடைசியில் கேள்விகளைக் கேட்டான்.

"நீங்கள் போன போது அவன் யாரிடமாவது போனிலோ, கூட இருந்தோ பேசிய மாதிரி இருந்ததா?"

சிறிது யோசனைக்குப் பின் பதில் வந்தது. "ஏதோ பேசிக் கொண்டு இருந்தது போல் கேட்டது. ஆனால் சரியாகச் சொல்ல முடியவில்லை"

"அவன் கதவைத் திறந்து வெளியே வந்த போது அவன் கையில் செல்போன் இருந்ததா?"

"இல்லை சார்"

"அவன் அறையில் அவனுடன் வேறு ஒரு ஆள் இருந்திருக்கலாமோ?"

"இருந்தது போல் தெரியவில்லை சார்"

"சரி இனி நீங்கள் யாரும் அவனைக் கண்காணிக்க வேண்டாம். அவனைக் கண்காணிக்க வேறு ஆட்களை நான் ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் அங்கிருந்து போகலாம்"

ஆனந்தைக் கண்காணிக்க வேறு ஆட்களை ஏற்பாடு செய்து விட்டு போனை வைத்து விட்டபோது சிபிஐ மனிதன் மனதில் ஏதோ ஒரு நெருடல் இருந்தது. உண்மையாகச் சொல்லப் போனால் இந்த நெருடல் சஹானாவின் விலாசம் கிடைத்து அவளைக் கேள்வி கேட்கப் போன ஆள் நடந்ததைச் சொன்ன கணம் முதலாகவே இருந்து வருகிறது. எதுவுமே இயல்பானதாக அவனுக்குத் தோன்றவில்லை.

சஹானாவின் மாமியார் தன் தங்கை மகன் பற்றி சொன்னதெல்லாம் இந்தக் கால ரோமியோக்களின் காதலுக்குப் பொருந்துவதாகவே இருந்தது. ஆனாலும் எங்கேயோ இடித்தது. அப்படியே அவள் சொன்னது சரியாகவே இருந்தாலும் சஹானா அவள் மகனைக் காப்பாற்றிய அமானுஷ்யன் பற்றி முழு விவரங்களும் சொல்லி விடவில்லை என்ற எண்ணம் நீடித்தது.

அமானுஷ்யன் வெளியே எங்கேயோ சுதந்திரமாய் இருக்கிறான் என்ற உண்மையே மிக அபாயகரமானதாகத் தோன்றியது. மனம் ஏதேதோ சொல்லி பயமுறுத்த சிபிஐ மனிதன் உடனடியாக மந்திரிக்குப் போன் செய்தான்.

"ஹலோ. ஏதாவது தகவல் கிடைத்ததா?" என்று மந்திரி எடுத்தவுடன் கேட்டார்.

"பெரிதாக சொல்லிக் கொள்கிற மாதிரி எதுவும் இல்லை. உங்கள் போலீஸ் டிபார்ட்மென்டில் இருந்து ஏதாவது…"

"இல்லை. நீங்கள் சொன்னபடி கேசவதாஸ் செக்யூரிட்டியைக் கூட குறைத்து விட்டோம். ஆனால் அவன் அவரைப் பார்க்கவும் போகவில்லை."

"அவனுக்குப் பழையதெல்லாம் மறந்திருக்கலாம். ஆனால் மூளையே இல்லாமல் போய் விடவில்லை. நாம் அதை மறந்து விடக்கூடாது. அவன் நம் கையில் சிக்காமல் ஒளிந்து இருப்பது தலைக்கு மேல் தொங்கும் கத்தி போலத்தான். நாம் இனியும் அலட்சியமாய் இருக்கக் கூடாது"

"என்ன செய்யச் சொல்கிறீர்கள்?" மந்திரி குரலில் எரிச்சல் இருந்தது.

"அந்தத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதுதான் நல்லது என்று தோன்றுகிறது"

"அதைச் சொன்னால் அவர்கள் கேட்க மாட்டேன்கிறார்கள். அந்தத் தேதியை மாற்ற மாட்டேன் என்கிறார்கள். நான் அந்தக் குறுந்தாடிக்காரனிடம் வேண்டிய அளவு பேசிப்பார்த்து விட்டேன். அவனும் புரிந்துதான் இருக்கிறான். ஆனால் அவனுக்கு மேலே இருப்பவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டேன்கிறார்களாம். நான் சரியாகத் தூங்கி பல நாள் ஆகிவிட்டது."

அவரிடம் சிறிது நேரம் பேசி விட்டு போனை வைத்த சிபிஐ மனிதன் கடவுள் ஏராளமான ஆட்களுக்கு மூளையைத் தர மறந்து விட்டதோடு அத்தனை ஆட்களையும் தன்னிடமே அனுப்பி வைக்கிற வேலையையும் செய்கிறாரோ என்று சந்தேகித்தான்.

மனம் மீண்டும் அமானுஷ்யனையே சுற்றிச் சுற்றி வந்தது. ஆனந்த் அறையில் சந்தேகப்படும்படி நீண்ட நேரம் தங்கியதற்கும் அமானுஷ்யன் காரணமாய் இருக்கலாமோ?

உடனடியாகப் போனை எடுத்து முன்பு தன்னிடம் பேசிய ஆளிடம் சிபிஐ மனிதன் பேசினான். "ஹலோ இன்று காலையில் அந்த ஓட்டலில் புதிதாகத் தங்க யாராவது வந்தார்களா?"

"அதிகாலையில் ஒரு தெலுங்குக் குடும்பம் வந்தது சார். பிறகு ஒரு கிழவர் வந்தார். அடுத்ததாக ஒரு பிசினஸ்மேன் போல ஒரு ஆள் வந்தார்"

"அவர்கள் யாராவது ஓட்டலை விட்டு வெளியே போனார்களா?"

"இல்லை சார்"

"தெலுங்குக் குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தார்கள்"

"ஒரு தம்பதி மூன்று குழந்தைகள் சார்"

சிபிஐ மனிதன் உடனடியாகச் சொன்னான். "எதற்கும் அந்தக் கிழவரும், அந்த பிசினஸ்மேனும் எந்த அறையில் தங்கினார்கள் என்று பார். அவர்கள் தங்கள் அறையில் இருக்கிறார்களா என்றும் பார். அவர்களில் யாராவது ஒருவர் ஆனந்துடன் ஏதாவது பேசுகிறார்களா, தொடர்பு கொள்கிறார்களா என்று கவனித்து சொல். வேண்டுமானால் புதிய ஆள் ஒருவனை கூப்பிட்டுக் கொள். சீக்கிரம் போ"

(தொடரும்)

About The Author