அம்மன் அருள்

திரைக்குப் பின்னால் புவனேஸ்வரி அம்மனுக்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. முன்புறம் அம்மன் தரிசனத்துக்கு அலைமோதிய கூட்டம். அம்மாவோடு ஒட்டிக் கொண்டிருந்த கமலத்தின் நான்கு வயது மகள் செந்தாமரை பேசினாள். "ஏம்மா, வூட்லே அழுதே! இங்கேயும் அழப்பாக்குறே?" முந்தானையால் முகத்தை மூடி கண்களைத் துடைத்தபடி வலது கையால் மகளை அணைத்துக் கொண்டாள்.

திரை விலகும் நேரம். மற்றவர்கள் பார்வை தன் பக்கம் திரும்புவதைக் கவனித்தாள். உடனே மகளை வழக்கமாக உட்கார வைக்கும் திண்ணையில் உட்காரச் செய்தாள். பிறகு கூப்பிய கைகளுடன் திரைக்கு வந்தபோது கண்கள் கண்ணீரில் மிதந்தன. தாய் மகள் மனநிலையை அதே திண்ணையில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த வயதான தம்பதிகள் குழந்தையிடம் பேச ஆரம்பித்தார்கள். "ஏன்டா கண்ணு உங்கம்மா அழுவுறாங்க?"

"அப்பா, அம்மா, நானு ஆஸ்பத்தி போனோம். அப்போ இருந்து அம்மா அழுவுறா. அப்பா உம்முண்ணு இருக்கார். சாமி காப்பாத்துவாருண்ணு சொல்லி இங்கே வந்தும் அழுவுறா" கோர்வையான பதில் இருவருக்கும் நிலைமையை ஓரளவு புரியவைத்தது. குழந்தையைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் சொல்லி கமலம் வரவுக்காக காத்திருந்தார்கள். தீபாராதனை முடிந்து கூட்டம் குங்குமம் வாங்கிக் கொண்டு கரைந்தது. பூஜாரி வயோதிகத் தம்பதியிடம் பிரசாதம் கொடுத்து திரும்பவும் கமலம் அங்கு வரவும் சரியாக இருந்தது.

"உன் கணவனுக்கு என்னம்மா ஆச்சு?"

அடுத்த வினாடி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள் கமலம். செந்தாமரை மலங்க மலங்க விழித்தாள்.

"எங்களை உன் அப்பா அம்மா மாதிரி நெனச்சு உன் வேதனையைச் சொல்லம்மா"

"ஐயா, என் வூட்டுக்காரருக்கு நெஞ்சு வலின்னு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாரு. டெஸ்ட், மருந்து, மாத்தரைன்னு கையிலே இருந்த காசோடு நகை நட்டும் போச்சு. இப்ப ஆபரேசன் செய்யாட்டி உசிருக்கு ஆபத்துண்ணுட்டாங்க. அதுக்கு லட்சகணக்கில செலவு ஆகுமாம். பணத்துக்கு எங்கேய்யா போவோம்? இந்த ஆத்தா காப்பாத்தாட்டி நாங்களும் அவரோட.."  பேசி முடிக்குமுன் அழுதே விட்டாள். சென்றமாதம் மறைந்து போன பேத்தி ஜாடையில் இருந்த கமலத்தை தன் இடுங்கிய கண்களால் பெரியவர் உற்றுப் பார்த்தார். கணவனின் முகமாற்றத்தைக் கவனித்த அவர் மனைவி மௌனத்தைக் கலைத்தாள்.

"ஆத்தா கைவிட மாட்டாம்மா. தைரியமா இரு"

பெரியவர் சிரமப்பட்டு எழவும் ட்ரைவர் துரை ஓடிவந்து உதவி செதான்.

"சாரை ஏர்போர்ட்டில் விட்டுட்டு வர வழியிலே ட்ராபிக் ஜாம். கொஞ்சம் லேட்டாயிடுத்து"

"எல்லாமே நல்லதுக்குத்தான். முதல்லே இந்தம்மாவோட வீட்டுக்குப் போ"

கமலத்தின் தயக்கத்தைப் போக்கி காரில் ஏற வைத்தார். அவள் வழி சொல்ல வீடு வந்தார்கள். வாசலை அடைத்து நின்ற பெரிய காரைப் பார்த்த மாணிக்கம் வெளியே வந்தான். மனைவியும் மகளும் காரிலிருந்து இறங்குவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் போது உள்ளே வந்த கமலம் நாற்காலிகளை எடுத்துப் போட உட்கார்ந்தார்கள் பெரியவர்கள். அறிமுகத்திற்குப் பின் மாணிக்கம் பேசினான்.

"ஐயா நெஞ்சுவலி எனக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தது. மருந்து மாத்திரை சாப்பிட்டும் சரியாகவில்லை. இப்போ பைபாஸ் சர்ஜரி செய்யணுமாம். சீக்கிரமாக செய்யாட்டி ஆபத்துன்னு சொல்றாங்க. ரெண்டு லட்சமாகுமாம். காசெல்லாம் கரைஞ்சு போச்சு. இனி கடவுள் விட்ட வழிதான் எனக்கு"

பெரியவர் கண்களை மூடிக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு கமலத்தையும் குழந்தையையும் மாறிமாறிப் பார்த்த பின் பேசினார். "கவலையை இந்த நிமிஷத்தோட விட்டுடம்மா. நாளைக்கே ட்ரீட்மெண்ட்டுக்கு ஏற்பாடுகள் நடக்கும்"

பெரியவர் சொல்வதை கேட்க இருவரும் திகைத்து அவர் காலில் விழுந்து விசும்பினார்கள்.

"எந்திரிங்க. உங்க பொண்ணாலேதான் அம்பாள் ஒரு நல்ல காரியத்தை செய்ய வைத்தாள்"

விடை பெற்று கார் சென்று கொண்டிருக்கும் போது புருவத்தை உயர்த்திப் பார்த்த மனைவியிடம் விளக்கம் சொன்னார்.

"அல்பாயுசிலே மறைந்துபோன நமது பேத்தி ஐஸ்வரியா இந்தப் பெண்ணின் உருவில் வந்து உதவி கேட்டது போல இருந்தது. திருப்பதி உண்டியல்ல நாம வருஷா வருஷம் போடும் பணம் இந்த வருஷம் ஒரு உயிரைக் காப்பாத்தப் பயன்படட்டும்னு எனக்கு வெங்கடாஜலபதியே சொன்னது போல் இருந்தது. உனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லையே?"

"இந்த வருஷமும் உண்டியல்லே போட்டு தப்பிச்சுடாதே. ஒரு குடும்பத்தை நீயே காப்பாத்துன்னு கட்டளை போட்டுட்டார். ஆபரேஷன் நல்லபடியா முடிய வேண்டிக்குவோம்" என்றார் அந்த அம்மாள்.

***

About The Author

1 Comment

Comments are closed.