அல்வாக்கள் பலவிதம் (1)

1. கோதுமை அல்வா
 
தேவையான பொருட்கள்:

சம்பா கோதுமை (அ) கோதுமை ரவை – 1 கப்
நெய் – ¾ (அ) 1 கப்
சர்க்கரை – 3 கப், ஏலக்காய் – 8
முந்திரிப்பருப்பு – 10
கொதிக்கும் நீர் – 3 கப்
கேசரிப் பொடி – சிறிதளவு
பால் – 2 தேக்கரண்டி

செய்முறை:

கோதுமை என்றால் இரவே நீரில் ஊறப் போட்டு விடுங்கள்; ரவை என்றால் காலையில் ஆறு மணிக்குக் கழுவி ஊற வையுங்கள். ரவை இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊறினால் போதும். மிக்சியில் அரைத்து 2 1/2 அல்லது 3 கப் பால் எடுத்துக் கொள்ளுங்கள். வாணலியில் சர்க்கரையைப் போட்டு அது மூழ்கும் அளவிற்கு நீரை ஊற்றி நன்றாகக் கரைந்ததும் பால் இரண்டு தேக்கரண்டி ஊற்றினால் சர்க்கரையில் இருக்கும் அழுக்குகள் போய்விடும். பாகு கம்பிப்பதம் வரும்படி எடுக்க வேண்டும். கோதுமை மாவில் உள்ள தெளிவை வடித்து எடுத்து விட்டு, அதிலிருந்து இரண்டு கிளாஸ் பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கேசரிப்பொடியைக் கலந்து பாகில் விடுங்கள். அடுப்பை நிதானமாக எரிய வையுங்கள். கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா இறுகிக் கெட்டியாகும். அதில் மீண்டும் ஒரு கப் நீர் சேருங்கள். கிளறிக் கொண்டே இருங்கள். மூன்றாம்
முறையும் ஒரு கப் நீர் விட்டுக் கிளறுங்கள். இப்பொழுது சிறிது சிறிதாக நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அதிகம் வேண்டியதில்லை. தொடர்ந்து கிளறிக் கொண்டே இருங்கள். பிறகு ஏலப்பொடி தூவுங்கள். ஊற்றிய நெய் கிளறும் அல்வாவை
விட்டு வெளிவரும்பொழுது நெய் தடவிய தாம்பளத்தில் அதைக் கொட்டி, முந்திரியைச் சீவி அல்வா மீது கொட்டிச் சமப்படுத்திப் பின் துண்டுகள் போடலாம்.

இதோ ஹோட்டல் சுவையையே தோற்கடிக்கும் அல்வா தயார்!

2. கோதுமை மாவு அல்வா
 
தேவையான பொருட்கள்:

கோதுமைமாவு – 400 கிராம்
சர்க்கரை – 800 கிராம்
கொதிக்கும் நீர் – 2 கப்
பால் – 2 தேக்கரண்டி
ஏலக்காய் – 10
முந்திரி – 12
கேசரிப் பொடி – சிறிது

செய்முறை:

கோதுமை மாவைச் சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து உருட்டி, ஒரு வெள்ளைத் துணியில் மூட்டை கட்டி 3 அல்லது 4 கப் நீரில் முக்கி வையுங்கள். இரண்டு மணி நேரம் கழித்துத் துண்டிலுள்ள மாவை நீரிலிருந்து எடுக்காமல் அப்படியே பிசைந்தால் நீர் கோதுமைப் பாலாக மாறும். மாவு சவ்வு போல் ஆகும். பிறகு மூட்டையை வெளியே எடுங்கள். அரை மணி நேரம் கழித்துத் தெளிந்ததும் நீரை வடித்து விடுங்கள். சுமார் இரண்டரை கப் பால் இருக்கலாம். இப்பொழுது, சீனியை நீர் விட்டுக் கரைத்துப் பால் விட்டு அழுக்கை அகற்றுங்கள். பின் கம்பிப் பததுக்குப் பாகு வந்ததும், கோதுமைப் பாலுடன் கேசரிப் பொடியைச் சேர்த்துக் கலந்து 2 கப் கொதி நீரை ஊற்றிக் கிளறத் தொடங்குங்கள். சிறிது சிறிதாக நெய் ஊற்றிக் கிளறிக் கொண்டே இருங்கள். பின்பு ஏலப்பொடி தூவுங்கள். அல்வா இறுகி நெய் வெளியே வரும்பொழுது நெய் தடவிய தட்டில் கொட்டி, முந்திரித் துருவலால் அலங்கரித்துத் துண்டுகள் போடலாம். சூப்பராக வரும்! பயமில்லாமல் செய்யலாம்.

About The Author