இதம் தரும் (2)

அடுத்த நாளே மேல வீதி ராணி வாய்க்கால் சந்தில் வீடு பார்த்து வந்தாகிவிட்டது. வாசலில் இறங்கினால் பெரிய சாக்கடை. சகிக்க முடியாத நாற்றம். சுற்றிலும் கசகசவென வீடுகள். இந்தத் தெரு சாக்கடை நாற்றத்திற்கும் சங்கீதத்திற்கும் பேர் போனது. நீளமான வீடு. குறுக்கே குறுக்கே தட்டிகள் வைத்து மறைத்து வாடகைக்கு விட்டிருந்தார் ராயர். சமையல்காரர்கள், ஓட்டல் சர்வர்கள், ஒண்டிக்கட்டைகள், சவுண்டி பிராமணர்கள், புரோகிதர்கள் என ஏழெட்டு குடித்தனங்கள். வீட்டின் கடைசியில் தட்டுமுட்டுச் சாமான்கள் போட்டு வைத்திருந்த இடத்தை ஒழித்துவிட்டு ஒரு மாதிரி வீடாகப் பண்ணி இவனுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஏதோ ஒரு நாயக்க மன்னன் தானமாக அளித்த வீடு. புராதன சின்னம் மாதிரி இஷ்டத்திற்கு தூண்கள், இன்னதென்று விளங்கிக் கொள்ள முடியாத வகையில் சுவரில் அலங்காரங்கள். ஆங்காங்கே விரிசல்கள், மழைக்கோடுகள், சின்ன மொட்டை மாடி. அதிலிருந்து பார்த்தால் பெரிய கோயிலின் பிரம்மாண்டம் தெரியும். அது ஒன்றுதான் மகிழ்ச்சி தரும் விஷயம்.

ராயர் குடும்பம் ஒரு போர்ஷனில் குடியிருந்தது. புருஷன் மனைவி மட்டுமே. உடைந்த கன்னடத்தில் அடிக்கடி மனைவியோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பார். ராயர் மாமிக்கு சதா ஒரு வியாதிபடுத்திக் கொண்டிருக்கும்.

அரை மணிக்கொரு தடவை அவசர அவசரமாக கொல்லைப் பக்கம் ஓடி வந்து நின்றுகொண்டே மூத்திரம் பெய்துவிட்டுப் போவாள். அண்டை அசலைப் பற்றி கவலைப்படுகிறதாகத் தெரியவில்லை. பனை மட்டைகளில் நீர்த்தாரை விழுவது மாதிரி தடதடவென சப்தம் எரிச்சலூட்டும். பாதி சமையலை அப்படியே விட்டுவிட்டு கொல்லைக்கு ஓடிவரும் அவஸ்தை குறித்து பாவமாகவும் இருக்கும்.

பிரச்சனை என்னவென்றால் அந்த இடம் எங்கள் வீட்டு சமையலறைக்கு நேராக இருந்ததுதான். எந்நேரமும் மூத்திர வாடை. பலமுறை இதமாகவும் நாசூக்காகவும் சொல்லிப் பார்த்தாயிற்று. ஆக்ரோஷமாக சண்டை போடுவதாக நினைத்துக் கொண்டு பலவீனமான குரலில் பேசிப் பார்த்தாயிற்று. ராயர் அசைவதாக இல்லை. ராயர் மாமி சட்டை செய்யவே இல்லை. உக்கிரமாக ஒரு சண்டை போட்டு ஒரு மாத வாடகையைக் கொடுக்காமல் இருந்தால் வழிக்கு வருவார் என்று நாள் நட்சத்திரம் யோகம் பார்த்து ராயரை நடுக்கூடத்தில் வைத்து இவன் சத்தம் போட்டது வினையாய்ப் போயிற்று.

"ஏய்யா உமக்கு விவஸ்தை இருக்கா. பொம்மனாட்டிங்க மூத்திரம் பெய்யறதை ஜன்னல் வழியா எட்டிப் பார்க்கறதுதான் உன் வேலையா? வெக்கமா இல்லே" என்று பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டார். கோபத்தில் தாய்மொழி வராது. திட்டுவதற்கு தமிழ்தான் வசதி என்ற நினைப்பு. மற்ற போர்ஷன்காரர்கள் கூட்டமாக வந்து வேடிக்கை பார்க்க உடம்பே கூசிப் போயிற்று.
அடுத்த பத்து நாளில் வேறு வீடு. அதற்கடுத்த மாதங்களில் இன்னொரு வீடு. சில நேரம் நினைப்பு வரும். "பிரச்சனை வீடுகளிலில் இல்லையோ. தன்னிடமோ?"

வீடு தேடும் தேடலே வாழ்க்கையின் லட்சியம் என்பதாகப் போய்விடுமோவென்ற பயம் பிடித்துக் கொண்டது. இது கண்டடைய முடியாத பயணம் என்றும் புரிந்தது. இதிலேயே காலம் முடிந்து போய்விடுமோ?

ஒரு வருஷத்தில் ஏழு வீடுகள். இனி தாக்குபிடிக்க முடியாது என்ற நிலைமைக்கு வந்தபோதுதான் இந்த வீடு சிக்கியது. பார்த்த உடனே பிடித்துவிட்டது. நகரத்திலிருந்து சற்று தள்ளியிருந்தாலும் பரவாயில்லை என்று தோன்றியது. ஓட்டை சைக்கிளை சற்று சிரமப்பட்டு மிதித்துக் கொண்டு போனால் ஒரு அரைமணி கூடுதல் பயணம். கஷ்டப்பட்டாவது போகவே வேண்டும். அடுத்த தெருவில் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம். மூணு காய்கறிக் கடை ரெண்டு சின்ன மளிகைக்கடை, பால் பூத், தெரு முனையில் மூலை விநாயகர் கோயில் – நிம்மதி முக்கியம். இது கொட்டிக் கிடந்தது இங்கே.

அன்று விடுமுறை – ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டு குழந்தைகளோடு கொஞ்ச நேரம் விளையாடி அவர்கள் தூங்கிய பிறகு ஏதோ ஒரு பழைய புஸ்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தபோது புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு வந்தாள் இவள். நல்ல வாளிப்பான உடம்புதான். டிராவல் கம்பெனி மீசைக்காரன். அதை மறக்க முயன்றபோதே –
அதுக்குள்ளே தூங்கிட்டீங்களா. மணி எட்டுகூட ஆகலே என்றவாறே படுக்கையில் இணக்கமாக வந்து உட்கார்ந்தாள்.

"ஏங்க ரொம்ப நாளாச்சில்லே -" தலை கொள்ளாமல் மல்லிகைச் சரம்.

"எதுக்கு!"

"இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு. கிராமத்துக்கு கிராமம். டவுனுக்கு டவுன். அண்டை அசல் மனுஷங்களும் நல்ல மாதிரியா தெரியறாங்க. பாவம் உங்களுக்குத்தான் கஷ்டம். ரொம்ப தூரம் போகனும்."

வழக்கத்திற்கு மாறாக மேலே விழுந்து புரண்டாள், குழந்தைகள் விழித்துக் கொள்ளுமோ என்ற பயமின்றி. உடம்பு முகம், கைகால்கள் எங்கும் காமம் கொப்பளிக்க அந்த ஆவேசம் பரவசமாயிருந்தது.

என்னங்க என்று லேசாக முனகி குழறிக் கிடக்கும்போது தெருவில் திடீரென்று ஆரவாரம். ஜன்னல் வழியாக பளீரென்ற வெளிச்ச வரிசை. வேஷ்டியைத் திருத்திக் கட்டிக் கொண்டு எழுந்து பார்த்தபோது கல்யாண ஊர்வலம் மெதுவாக வந்து கொண்டிருந்தது. ஆண்கள் பெண்கள், குழந்தைகள், கிழவர்கள் என மகிழ்ச்சியான முகங்களுடன் மனதுக்கு பிடித்த காட்சியாய் நிறைந்தது.

நாதஸ்வர வித்வான் கரகரப்ரியாவில் தன் வித்தைகளை யெல்லாம் காட்டிக் கொண்டிருந்தார். மலர் அலங்காரக் காரில் மாப்பிளை முகங்கொள்ளாச் சிரிப்போடும் சினேகிதர்களோடு குனிந்து பேசிக் கொண்டும் அவ்வப்போது அளவற்ற கம்பீரத்தோடும் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இவள் தன்னை நாசூக்காகத் திருத்திக் கொண்டு இவனது தோள் வழியாக எட்டிப் பார்த்தாள். "மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலங்க. தெரு ஆரம்பத்தில் இருக்கும் மூலை விநாயகர் கோயிலிலிருந்து புறப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பக்கம் பெரிய கல்யாண மண்டபம் இருக்கும்போல…"

பெண்களின் சிரிப்பு – பட்டுப் புடவைகளின் சரசரப்பு – ஓயாத பேச்சு – பெரியவர்கள் புது வேஷ்டி சட்டை போட்டுக் கொண்டு பழங்கதைகளை சக கிழங்களோடு பகிர்ந்து கொண்டும் அவ்வப்போது ஏதோ ஹாஸ்யம் சொல்லி வெடிச் சிரிப்பு சிரித்துக் கொண்டும் கலவையாய் ஊர்வலம் நகர்ந்து கொண்டிருந்தது. அந்தப் பிரதேசமே ரம்மியமாய் இருந்தது.

வீட்டைக் கடக்கும்போது கரகரப்ரியா முடித்து சிம்மேந்திர மத்திம ஆலாபனையைப் பிடித்துக் கொண்டிருந்தார் நாதஸ்வர வித்வான். தோதாக தவில் வித்வான் இழைத்துக் கொண்டிருந்தார்.

வாழ்க்கை அழகானதுதான். ரம்மியமானதுதான். ரசிக்கத் தக்கதுதான். டிராவல் கம்பெனி முதலாளியும் அவன் மீசையும் மறந்து போனது. சமையலறைக்கு நேராக கொல்லையில் மூத்திரம் பெய்துவிட்டுப் போகும் ராயர் மாமியும் மறந்து போனாள்.
வெகுநாட்களாகவே பெயர் சொல்லிக் கூப்பிட்டு பழகியிராதவன் ஆசையாய் கூப்பிட்டான். கமலா, கமலம்பா, அடி கமலு…!

அன்று ஏகப்பட்ட வேலை. வீடு திரும்பி சாப்பிடக்கூடத் தோன்றாமல் படுத்துவிட்டான். "ஏங்க ஏதும் உடம்புக்கு முடியலையா" என்று கேட்டதுகூட லேசாகவே கேட்டது. அரைமணி தூங்கியிருப்பான். தெருவில் ஆரவாரம். அசதியை உதறிவிட்டு எழுந்தான்.
நீண்ட வரிசை விளக்குகள். கிளாரிநெட்டில் மேற்கத்திய துள்ளல் இசை. அப்புறம் சினிமாப் பாட்டு. சரவெடிகள் – சிரிப்பலைகள்… வீட்டைக் கடந்துபோன கல்யாண ஊர்வலத்தை சிறிது நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு உள்ளே வந்தபோது இவள் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள். சின்னவன் சற்றே முனகலோடு புரண்டு படுத்தான்.
வெகுநேரம் இசையும் ஆரவாரமும் தன்னைச் சூழ்ந்திருப்பதை உணர்ந்தான். உலகத்தின் மகிழ்ச்சியை உள்வாங்கிக் கொள்ள இயலாதவனாகி விட்டதாக உணர்ந்தபோது தூக்கம் போனது.

"ராசியான கல்யாண மண்டபம் போலிருக்கு. வாடகையும் குறைச்சலா இருக்கும் போல. போனவாரம் முழுக்க கல்யாணங்க."
காதுகளில் லேசாக இரைச்சல் கேட்க ஆரம்பித்தது. அது வரவர அதிகமாவதாகத் தோன்றியது. பிரமையோ!

காலையில் எழுந்திருக்கும்போதே கண்களில் எரிச்சல். லீவு போட்டால் முதலாளி குதறி விடுவான். நாலு வாளி தண்ணீரை குளிரக் குளிர தலையில் ஊற்றிக் கொண்டு இரண்டுவாய் அள்ளிப் போட்டுக் கொண்டு சைக்கிளை கர்புர்ரென்று மிதித்துக் கொண்டு விரைந்தான்.
(தொடரும்)

About The Author