இயற்கையையும், செயற்கையையும் இணைக்கும் முயற்சிதா‎ன் என்னுடைய ஓவியங்கள்” ஃபோட்டோ ஆர்ட் கலைஞர் ஷெபாலி”

இயற்கையையும், செயற்கையையும் என் கைகளால் ஒன்று சேர்க்கும் முயற்சிதான் இந்த "கலர்ஸ் ஆப் லைஃப்" – தன் ஓவியத்தைக் காண்பித்து புன்னகைக்கிறார் ஷெபாலி தாதாபாய்.

ஷெபாலி படித்தது எம்.பி.ஏ. அப்பா விமானத்தில் பணிபுரிந்ததால் உலகம் முழுதும் சுதந்திரமாக சுற்றித் திரிந்தவர். அப்போது கூடவே ஒட்டிக்கொண்டது ஃபோட்டோ எடுக்கும் பழக்கம். தன்னை நொடியில் மயக்கிவிடும் எந்த ஒரு விஷயத்தையும் கிளிக்க தவறுவதில்லை இவரது கேமரா. அப்படி வித்தியாசமாக கிளிக்கிய படங்களில் தனது கற்பனையால் கைவண்ணத்தையும் சேர்த்து வரைவதுதான் ஷபாலியின் ஸ்பெஷாலிட்டி. இவரது படைப்புகளைக் கண்காட்சி ஆக்கியிருக்குமிடமும் நம் மனதைக் கொள்ளையடிக்கிறது.

20 வருடமாக பெரிய நிறுவனமொன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் தனது ஃபோட்டோகிராபி மற்றும் ஓவியங்களுக்காக அதனை விட்டுவிட்டு ஒரு கையில் கேமராவும் மற்றொரு கையில் பெயின்ட் பிரஷ்ஷுமாக உலகம் சுற்ற ஆரம்பித்துவிட்டார். அப்படிச் சுற்றியபோது சுட்டுக்கொண்டு வந்த படங்களைத்தான் தனது படைப்புகளாக்கி இருக்கிறார். அவரது படங்களைப் போலவே அவரது பதில்களும் பளிச்சென்று இருந்தன.

பரபரப்பான இயந்திரத்தனமான சென்னை வாழ்க்கையில் இப்படியும் ஒரு இடமா என்று யோசிக்க வைக்குமளவுக்கு வெண்ணிலா கேப் இருக்கிறது. சுற்றிலும் மரம், செடி என இயற்கை எழில் ஒரு பக்கம். அதற்கு நடுவே துரித வகை, காபி வகைகளை சுவைத்துக்கொண்டே சுற்றி வைக்கப்பட்டிருக்கும் இவரது ஓவியத்தை நம் கண்கள் சுவைக்கும் வண்ணம் தனது படைப்பை விருந்தாக்கி இருக்கிறார்.

பெரிய நிறுவனங்கள் ஒரு ஓவியத்திற்கு ரூபாய் 30,000 வரை கொடுத்து இவரது ஓவியங்களை வாங்கிச் செல்கின்றனர். ஒரு பூவை வெவ்வேறு கோணத்தில் எடுத்து, அதில் சில இதழ்களை அதே போன்று தனியாக ஒரு பேப்பரில் வரைகிறார். பிறகு வரைந்த இதழ்களை பெயிண்ட் செய்து போட்டோவிலுள்ள படங்களோடு சேர்த்து இணைக்கிறார். பார்ப்பதற்கு வித்தியாசமின்றி அச்சு அசலாய் எடுத்த புகைப்படம் மாதிரியே இருக்கிறது.

அடர்ந்த காடு, மரத்தில் தலைகீழாய் தொங்கும் அணில், கொட்டும் அருவி, பனித்துளியை தாங்கி நிற்கும் பூக்களின் மென் இதழ்கள் – இப்படி இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை தடம் பதிக்கும் இவரது கேமரா, கலர்ஃபுல் பார்ட்டி லைட், தெருவோர கடைகள், ஷாப்பிங் மால்கள் என்று செயற்கை அழகையும் விட்டு வைக்கவில்லை.

இந்தத் துறைக்கு பெண்கள் ஏன் அதிகம் வருவதில்லை எ‎ன்று கேட்டோம்.

"இது ஏதோ நமக்கும் போட்டோகிராஃபிக்கும் பல கிலோமீட்டர்கள் தொலைவு உள்ளதுபோல் வேறு துறையாக எண்ணுவதே தவறு. நம் ஒவ்வொரு அசைவுகளை மீண்டும் பார்க்க, நினைவு கூற எடுக்கப்படும் நிகழ்வு. அது எப்படி வேறு துறையாகும்? இதில், இதனைக் காதலிப்பவர்கள் மட்டுமே ஜொலிக்க முடியும். ஒரு முறையாவது இதனை ருசித்துப் பார்த்து விட்டால் பிறகு விட மனமிருக்காது. அவ்வளவு விஷயங்கள் இந்த டிஜிட்டல் லென்ஸிற்குள் புதைந்து கிடைக்கின்றன. நான் செய்றது அழகுக்கு அழகுபடுத்துற வேலைதான். எதுவுமே கலர்புல்லா இருந்தாதான் பார்த்ததும் மனசில பச்சக்கினு ஒட்டிக்கும். சின்ன பட்டாம்பூச்சி மனசுக்குள்ள சிறகடிக்கிற மாதிரி இருக்கும். அதனை ரசிக்கும் போதே நம் வாழ்க்கையும் கலர்ஃபுல்லா மாறும். இதுதான் இந்த போட்டோ ‘ஆர்ட்’டோட ஸ்பெஷல்" என்று சொல்கிறார் ஷெபாலி.

‏இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியுள்ளது. இவரது ரசனையை, கலையை இவருடைய இரண்டு குடும்பமும் ஆதரித்து இவரது சவாலுக்குத் துணை நிற்கின்றன.

உலகம் சுற்றிய இந்த வாலிபிக்கு சென்னையின் அதிவேக மாற்றங்கள் மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். "சுமார் 10 வருடத்திற்கு முன்பு சென்னை கலா சாரம் சார்ந்த விஷயங்களை மட்டுமே சார்ந்திருந்தது. ஆனால் இன்று அதிவேக வளர்ச்சியில் கட்டிடங்களில் ஆரம்பித்து ரசனைகள் வரை எல்லாவற்றிலும் நிறைய மாற்றங்கள். உலக நாடுகளுடன் போட்டி போட்டு நிற்பதே நம் சென்னையின் முக்கிய பிளஸ்ஸாகி இருக்கிறது. போட்டோகிராஃபி மற்றும் பெயிண்டிங் இரண்டையும் முறைப்படி இதுவரை கற்றுக்கொள்ளவில்லை. அப்படி நான் கற்றுக்கொண்டு இதனை செய்திருந்தால் என்னால் ஒரு குறுகிய வட்டத்துக்குள் கற்றுக் கொண்ட பார்முலாவை வைத்துக்கொண்டுதான் செயல்பட்டிருக்க முடியும். இது ஏ + பி என்று சொல்லக்கூடிய விஷயமில்லை. பரந்து விரிந்த இந்தப் பிரபஞ்சத்தில் கற்பனைக் குதிரைக்கு கடிவாளம் போடாமல் ஓட விட வேண்டிய விஷயம். அதைத்தான் இது வரை செய்து வருகிறேன். இந்தக் காரணத்தினாலேயே நான் கற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் தஞ்சாவூர் பெயிண்டிங் மீது எனக்கு ஆதீத ஆர்வம். அதனால் அதனை மட்டும் முறைப்படி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது" என்று சொல்லும் ஷெபாலி அடுத்து ஜூட் விடப்போவது தஞ்சாவூருக்குத்தானாம்.

குழந்தைகளை குழந்தைகளாகப் படம் எடுக்க இவர் எடுத்த மற்றொரு முயற்சிதான் ‘பர்ப்பில் ஃபிராக்’ என்ற குழந்தைகளுக்கான ஸ்டுடியோ. "குழந்தைகளுடைய சுபாவங்கள் ஒவ்வொன்றும் நம்முடைய நினைவுப் பொக்கிஷங்கள். ஆனால் அதன் மதிப்பு தெரியாததாலோ என்னவோ நாம் அவர்களை போட்டோ எடுக்கும்போதெல்லாம் பெரியவர்கள் தோரணையிலேயே அவர்களை வழி நடத்துகிறோம். ஆனால் அவர்களாக இருக்க விட்டுவிட்டு அதனை நினைவுச் சின்னமாக சேகரித்துப் பாருங்கள். அதன் அர்த்தத்தை முழுமையாக உங்களால் உணர முடியும்" என்கிறார் பளிர் புன்னைகையை ஏந்தியபடியே.

"குழந்தைகளைப் படம் எடுப்பது மிகவும் கஷ்டம். அதற்கு மிகுந்த பொறுமை தேவை. நாம் அவர்களோடு இருக்கும் தருணங்களில் நாமும் குழந்தைகளாக மாறும் பக்குவம் பெரியவர்களாகிய நமக்கு வேண்டும். ஆனால் நாம் எப்போதும் குழந்தைகளை நம்மைப்போல்தான் நடக்கச் சொல்லி பழக்குகிறோம். குழந்தைகளோடு குழந்தைகளாக இருந்தால் மட்டும்தான் அவர்களது சேட்டைகளை வரலாறு ஆக்க முடியும். அதற்கு அவர்களிடம் பிரண்ட்ஷிப் எல்லாம் முதலிலேயே வைத்துக்கொண்டால்தான் பேபிக்கள் ச்சோ சுவீட்டாக, நாட்டியாக இருப்பார்கள். அந்தப் படங்கள்தான் நினைவுகளில் இருந்துகொண்டே இருக்கும்" என்கிறார் ஷெபாலி ஒரு குழந்தையாக.

இவர் சேட்டை செய்ய வைத்து குழந்தைகளைப் படமெடுக்க 2லிருந்து 3 மணி நேரம் ஆகுமாம். அப்படி எடுக்கும் போட்டோக்களை ஆன்லைன் கேலரியில் உலவ விடவும் செய்கிறார். கையில் 30 ஸ்டில்கள் கொடுக்கிறார். குறிப்பிட்ட சில ஸ்டில்களை 5 வெவ்வேறு வடிவங்களிலும், பிளாக் அன் ஒயிட் மற்றும் இவரது கற்பனைத் திறனில் ஒரு கலர்ஃபுல் பரிசாக நமக்காக, நம் குழந்தைக்காக செய்து கொடுக்கிறார். இவை அனைத்திற்கும் இவர் வசூலிக்கும் கட்டணம் ரூபாய் 3000.

புதிய கற்பனைகள், புதிய கனவுகளோடு இன்றைய பெண்கள் ஜெகத்தினில் ஜெயத்துடன் ஜொலிக்கிறார்கள் என்பதற்கு ஷெபாலியின் படைப்புகள் ஆதாரமாய் நிற்கின்றன. கண்களைக் கவர்ந்த அந்தப் படங்களை நினைவுகளில் சுமந்து கொண்டு வந்தோம்.

About The Author