இயற்கை உலகம் (18)

பாம்புகள் நகர்தல்:

பாம்புகள் பல்வேறு வழிகளில், முறைகளில் நகர்பவை. தன் உடலை வட்டமாக (loops) வளைத்துக் கொண்டு திடமான எந்தப் பொருளையாவது பற்றிய வண்ணம் முன்னோக்கிச் செல்வது சாதாரணமாகப் பாம்பு கடைபிடிக்கின்ற நகரும் முறையாகும். மற்றொரு வழி, ஒரு பாம்பு தன் தசைகளைச் சுருக்கியவாறு உடலை முன்னோக்கி நகர்த்திய வண்ணம் ஊர்ந்து செல்லுவதாகும்.

பாலை நிலத்தில் வாழும் சைட்விண்டர் (sidewinder) என்னும் பாம்பு ஒரு பக்கத்தில் தன் உடலை வட்டமாக வளைத்துக்கொண்டு தவழ்ந்து செல்லும்போது, மற்றொரு பக்கத்தில் இன்னும் ஒரு வளையத்தை அதே நேரத்தில் பக்கவாட்டில் உருவாக்கிக்கொண்டு செல்லும். இந்த சைட்விண்டர் வளையங்களை உருவாக்கிக்கொண்டு நகர்வது ஒரு சுருள்வில் (spring) போல் பாலைநில மணலில் காட்சியளிக்கும்; ஆனால் இம்முறையில் தான் பாலை நிலத்தில் எளிதாக அதனால் ஊர்ந்து செல்ல முடிகிறது. பெரும்பாலான பாம்புகள் தண்ணீரில் நெளிந்து நெளிந்து நன்கு நீந்தக்கூடியவை.

பாம்புகள் மற்றும் முதலைகள் ஊர்ந்து செல்லும் விலங்கினங்களாகும் (reptiles). ஆமை, கடலாமை, பல்லி போன்றவையும் இவ்வகை உயிரினத்தைச் சார்ந்தவையே. இவற்றின் உடலமைப்பு, நில-நீர் வாழ் உயிரினத்திற்கும் (amphibian) பாலூட்டிகளுக்கும் (mammals) இடைப்பட்ட நிலையில் அமைந்திருக்கும்.

பாம்புகள் தம் நஞ்சை பிறவற்றின் மீது செலுத்துதல்:

நச்சுப் பாம்பின் வாயில் உமிழ்நீர் சுரப்பிகள் (saliva glands) அமைந்துள்ளன; இவை உற்பத்தி செய்யும் உமிழ்நீர் நச்சுத் தன்மை கொண்டதாக இருப்பதோடு, அந்தப் பாம்பால் தீண்டப்படும்/கடிக்கப்படும் பிற உயிரினங்களின் உடலில் நஞ்சும் பரவுகிறது. சில பாம்புகளின் நஞ்சு ஒரு பெரிய யானையையே கொல்லக்கூடியதாகும். (சுமார் 412 வகைப் பாம்பு வகைகளில்) ஏறக்குறைய 200 வகைப் பாம்புகள் பிறருக்கு அபாயம் விளைவிக்கும் நச்சுத்தன்மை கொண்டவையாகும்.

இவற்றில் இரண்டு ஆப்பிரிக்கப் பாம்புகளான பூம்ஸ்லாங் (boom slang) மற்றும் பறவைப் பாம்பு (bird snakes) ஆகியவையும் அடங்கும். இவற்றின் கோரைப் பற்கள் (fangs) வாயின் பின்பகுதியில் அமைந்திருப்பதோடு, அவை பெருமளவு விரிந்தும் இருக்கும். இக்கோரைப் பற்களுக்குச் சற்று மேலே, ஒரு திறந்தவெளிப் பகுதி நஞ்சு உற்பத்தி செய்யும் சுரப்பியுடன் இணைந்திருக்கும். பின்பகுதியிலுள்ள இக்கோரைப் பற்களால் பாம்பு ஓர் உயிரைக் கடிக்கும்போது, நஞ்சு கீழிறங்கி வந்து கடிபட்ட இடத்திலுள்ள காயத்தின் வழியே உடலுள் செல்லும். நல்லபாம்பைப் (cobra) பொறுத்தவரை கோரைப் பற்கள் அதன் வாயின் முன்பகுதி மேல்தாடையில் பக்கத்திற்கு ஒன்றாக அமைந்திருக்கும். நல்லபாம்பு கடிக்கும்போது நச்சுச் சுரப்பியில் அமைந்துள்ள தசையானது, சுரப்பியை அமுக்குவதால், சுரப்பியிலுள்ள நஞ்சு கோரைப்பற்கள் வழியே பற்களின் முனைக்குச் செல்லும். அப்போது நஞ்சை, பொம்மைத் துப்பாக்கியிலிருந்து நீரைப் பீய்ச்சி அடிப்பதுபோல, நல்லபாம்பு கோரைப்பற்கள் வழியே பீய்ச்சி அடிக்கும்.

உலகின் பல பகுதிகளில் இராட்சதப் பாம்புகள் உள்ளன. மிகப் பெரிய இராட்சதப் பாம்பாகக் கருதப்படுவது அனகொண்டா (anaconda) பாம்பு வகையே; இது 9 மீட்டர் வரை நீளக்கூடியது.

About The Author