இரண்டாம் தாரம்

"இந்தப்பாருங்கப்பா. நல்லபையனாப் பாருங்க. இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டாலும் பரவாயில்லை. உங்களுக்கும் வயதாகிக் கொண்டே போகிறது. இதற்கு மேலும் உங்களுக்குக் கவலைத் தர எனக்கு இஷ்டமில்லை". வசந்தி மிகவும் பிடிவாதமாக இருந்தாள்.

"என்னடி சொல்ற? பாவம்டி உன் அப்பா! உனக்காக ஜாதகக்கட்டை தூக்கிக் கொண்டு ஆறு வருடமா அலையாஅலைந்தும் இதுவரை ஒரு ஜாதகமும் கூட பொருத்தமாய் அமையவில்லையேடி. நாம் வணங்கும் தெய்வம் தான் நமக்கு நல்ல வழி காட்டணும்" என்றாள் அம்மா.

ஒரு வாரம் கழித்து புரோக்கர் மூலம் கிடைத்த ஒரு வரனைப் போய் பார்த்து விபரம் சேகரிக்கச் சென்றார் வசந்தியின் அப்பா.

"சார். என் பெயர் வசந்த். நான் ஒருஅனாதை. அலுவலகத்தில் நல்லதொரு பணி. கைநிறைய சம்பளம். ஜாதகம் எதுவும் இல்லை. மேற்கொண்டு விபரம் தெரிய வேண்டுமானால் என் அலுவலக நண்பர்களைக்கேட்டு விசாரித்துக் கொள்ளுங்கள்" என்றான் வசந்த்.

"தீர விசாரித்து விட்டேன். எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான். உங்களோடு இருக்கும் அந்தப் பையன்?" என்று இழுத்தார்.

"அவன் என் பையன். உங்களுக்கு சம்மதம் இருந்தால் உங்கள் பெண்ணைத் திருமணம் புரிய நான் தயார்" என்றான் வசந்த்.
வசந்த்திடம் விடைபெற்றுக்கொண்ட வசந்தியின் அப்பா தன் இல்லத்திற்கு உடன் விரைந்தார்.

"இதோ பார் வசந்தி. நீ சொன்னபடி இந்த வரனையும் விட்டுவிட்டால் வேறு வரன் அமைய வாய்ப்பில்லை. வசந்த் பார்ப்பதற்கு அழகு. நல்லவன். கை நிறைய சம்பளம். அவனைப் பற்றிய எல்லாத் தகவலும் சரி. விசாரித்து விட்டேன். ஆனால்… வசந்துடன் ஐந்து வயதில் ஒரு பையன் மட்டும் உள்ளான். உறவு என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. வசந்த்திடம் அந்தப் பையனைப் பற்றிய சரியான தகவலை அறிய முடியவில்லை" என்றார் அப்பா.

"பரவாயில்லை அப்பா. நீங்கள் சொன்னால் போதும். உங்கள் திருப்தியே என் திருப்தி. திருமணத்திற்கு சம்மதம்" என்றாள் வசந்தி.
குறித்த நாளில் திருமணம் நடந்தேறியது. வசந்த் சார்பாக அவனது அலுவலக நண்பர்கள் வந்து வாழ்த்தினார்கள்.

முதல் இரவு.

வசந்தி மெதுவாக ஆரம்பித்தாள்.

பையனை பற்றிய சந்தேகம் தீர "வெளியில் படுத்து உறங்கும் உங்கள் பையன்?"..

வசந்த் குறுக்கிட்டு "இதோ பாரு வசந்தி.அனாதை ஆசிரமத்திலிருந்து நான் அவனைத் தத்து எடுத்து வளர்த்து வருகிறேன். நம் கல்யாணத்துக்கு முன் இதனைச் சொன்னால் பையனைப் பிரிந்துவிட நேரிடுமே என்றுதான் பையனைப் பற்றிய தகவலை அப்போது சொல்லாமல் மறைத்தேன். எனக்கு நீ இரண்டாம் தாரமில்லை முதலும் கடைசியும் நீதான் என் மனைவி" என்றான் வசந்த்.

"நம் இருவருக்கும் குழந்தை பிறந்தால் இந்தப் பையன் நமக்கு மூத்தமகன். ஒருவேளை நமக்கு குழந்தையே பிறக்காவிட்டால் இந்தப் பையன்தான் நமக்கு" என்றாள் வசந்தி கண்களில் நீர் ததும்ப.

சற்றே அமைதி.

மேற்கொண்டு என்ன பேசுவதென்றே தெரியாமல் இருவரும் ஒருவரையொருவர் உற்று நோக்கினர். என்றும் மாறாத இன்பத்தின் உச்சத்திற்குச் சென்று விட்டனர் இருவரும்.

About The Author

17 Comments

 1. MANIKANDASUNDARESAN

  இரன்டாம் தாரம் பாசந்தியின் எழுத்து வன்னத்தின்
  முதல் தரம்

 2. K Narasimhan

  அருமையான கருத்து உள்ள கதை. வாழ்துக்கள். உனது இலக்கிய பணி தொடரட்டும்.

 3. chitra

  னல்ல கருத்தான கதை – முதல் தரம்
  தரம் நிறைந்த பற்பல படைப்புகளை எதிர் நோக்குகிறோம்

 4. Karthick

  அருமையான கருதுள்ள கதை! படித்ததில் மிக்க மகிழ்ச்சி…..

 5. chandrasekaran

  உங்கல் பனி தொடரட்டும் வாழ்த்துகல்

 6. ganesan pachappan

  அருமையான கருதுள்ள கதை தொடரட்டும் வாழ்த்துகல்.

 7. ganesan pachappan

  அருமையான கருதுள்ள கதை வாழ்த்துகல்.

Comments are closed.