இரத்தினச்செவ்வி – டி.எஸ்.ஜம்புநாதன்

TSJ

ரயில்வே அமைச்சகம் சார்ந்த நிறுவனத்தில் பல பதவிகள் வகித்து ஓய்வு பெற்ற டி. எஸ்.ஜம்புநாதன் இலக்கியத்திலும் பொது நலத்தொண்டிலும் ஆர்வம் கொண்டவர். ஊனமுற்றவர்கள், ஆதரவற்ற குழந்தைகள், கல்வி ஆகியவற்றுக்காகப் பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு கலந்து பணியாற்றுகிறார். சுனாமி பேரழிவினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் நிவாரணங்களுக்கான ஒரு கையேடு புத்தகமும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைக்கான ‘எங்களுக்கும் உரிமை உண்டு’ என்ற புத்தகமும் சோலை அறக்கட்டளைக்காக எழுதியிருக்கிறார்.

நிலாச்சாரலில் பல்வேறு பிரபலங்களைப் பேட்டி கண்ட அனுபவம் உடையவர். இவருடைய அரசியல் கட்டுரைகளும், கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது கட்டுரைகளும் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. நிலாச்சாரலுக்காக இவர் எழுதிய கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்கவும்.

https://www.nilacharal.com/ocms/log/authorlist.asp?authorid=T_S_Jambunathan
https://www.nilacharal.com/ocms/log/authorlist.asp?authorid=JPR

நிலாச்சாரலின் இரத்தினச்செவ்வியை பேட்டியின் மூலம் சிறப்பித்த டி.எஸ்.ஜம்புநாதன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

1. தாங்களும் தங்கள் சகோதரர்களும் நிலாக்குழுவில் இணையக் காரணம் என்ன?

பல அலுவல் அலைச்சல்களால் பல ஆண்டுகளாக பத்திரிகைகளுக்கு எழுதாமல் இருந்த நான் (இதுதான் நொண்டிச்சாக்கு என்பதோ?!) 2005 ம் ஆண்டிலிருந்து நிலாச்சரலுக்கு எழுதத் துவங்கினேன். "குறையொன்றும் இல்லை" என்ற தலைப்பில் ஒரு மின் அதிர்ச்சி விபத்தில் கை கால்களை இழ்ந்த ஜனார்தனன் என்ற ஒரு சிறுவனின் மன உறுதியையும் சாதனைகளையும் பற்றி எழுதியதிலிருந்து என் நிலாச்சாரல் பயணம் துவங்கியது. இலக்கிய ஆர்வமும் எழுதும் திறமையும் படைத்த என் சகோதரர்கள் வெங்கடரமணி, பத்மநாபன் ஆகியோரும் என்னுடன் நிலாச்சாரல் போன்ற ஒரு தரமான இணைய இதழில் சக பயணம் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் இணைந்து கொண்டனர்.

2. உங்களின் ‘கண்டதும் கேட்டதும்’ படிக்கும் போது சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’ கண்முன் தோன்றுகின்றதே..?

என்னை வச்சு காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணல்லியே!!

3 எதிர்பாராத தேர்தல் கூட்டணிகளைப் பார்க்கும்போது என்ன நினைப்பீர்கள்?

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா, என்றும் அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, விரோதிகளும் கிடையாது என்று நாணமின்றி பேசும் இவர்களைப் பார்க்கும்போது "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்………" என்று ஒரு இயலாத ரவுத்திரம் வருகிறது.

4. பல நேர்முகங்கள் செய்திருக்கிறீர்கள். சுவையான அல்லது சுமையான அனுபவம் உண்டா?

நாம் அண்ணாந்து பார்க்கும் பல பிரபலங்கள் எவ்வளவு எளிமையாக இருக்கிறார்கள் என்று வியத்திருக்கிறேன். பணியுமாம் என்றும் பெருமைதானே? எவ்வளவோ பேர் அவர்களை நேர்முகம் கண்டிருந்தாலும் குழந்தையின் ஆர்வத்துடன் கேள்விகளுக்கு பதில் அளித்த பண்பாளர்கள் பல பேர். உதாரணம் இசைக்கலைஞர் பி.பி.ஸ்ரீனிவாஸ். நாங்கள் (நானும், டி.எஸ்.பியும்) அவரை நேர்முகம் காண வருகிறோம் என்று தொலைபேசியில் சொல்லியபோது உடன் மறுக்காமல் தன் வழக்கமான ஜரிகை தலைப்பாகை மற்றும் அங்கி அணிந்து அவர் பாடிய பாடல்களை சரளமாகப் பாடிக்காட்டினார். கவிஞர் தமிழன்பன் வெகுநாட்கள் பழகியதுபோல குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்வித்த நட்புப் பாங்கு. மன்மத ராசா மாலதி அவர்கள் (நிலாச்சரலுக்காக நான் கண்ட முதல் நேர்முகம்) அந்தப்பாடலையும் பாடிக்காண்பித்து சால்வைகள் அணிவித்து புகைப்படம் எடுத்துகொண்டது என்று எவ்வளவோ கூறிகொண்டே செல்லலாம். சுஜாதா அவர்களை மின்னஞ்சல் நேர்முகம் கண்டபோது பாய்ஸ் படத்திற்கு அவர் எழுதிய சில வசனங்கள் முகம் சுளிக்க வைக்கிறதே என்று (தைரியமாக!) கேட்டபோது "ஏன் இதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டிருகிறீர்கள்?" என்று அவர் வைத்த குட்டு இன்னமும் கூட வலிக்கிறது. இதுதான் மோதிரக் கையினால் வாங்கிய குட்டு என்பதோ! இப்படிப் பல்வேறு துறையினில் புகழ்பெற்றவர்களை நேர்முகம் காணும் வாய்ப்பளித்த நிலாவிற்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

5. உங்கள் படைப்புகளில் உங்களுக்குப் பிடித்தது எது?

நிலாச்சரலைப் பொறுத்தவரை சிந்தனைப் பூக்கள், க.கே.ப.ர ஆகியவை. நிறைய புதுப்புது விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் எத்தனை மகிழ்ச்சி.

6. நிலாச்சாரலுக்கு அப்பால்… நீங்கள் எப்படிப்பட்டவர்?

அமைதியை விரும்புபவன். இசை, இலக்கியம், அரசியல் பற்றி ஒத்த மனதுடைய சிலருடன் உரையாடி மகிழ்பவன். ஆன்மீகக்கட்டுரைகள், பேச்சுக்கள் இவற்றில் நாட்டமுடையவன். நல்ல நூல்களை நண்பர்களாக நினைப்பவன். ஒரு சமூக ஆர்வலன். (சுய புராணம் போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா?!!)

7. தங்கள் நண்பர்களின் வட்டாரங்களில் நிலாச்சாரல் பற்றி என்னவென்று கூறுவீர்கள்?

நான் எங்கு சென்றாலும் நிலாச்சாரலைப்பற்றி ஒரு மன்னிக்கக் கூடிய கர்வத்துடன்தான் பேசுவேன், அதில் பங்கு பெற்றவன் என்ற முறையில். ஒரு முறை அமெரிக்காவில் (லாஸ் ஏஞ்சலீஸ்) ஒரு பிறந்த நாள் விழாவிற்கு என் மகனுடைய நண்பர் வீட்டிற்குச் சென்றபோது நான் வழக்கம்போல் "நிலாச்சாரல் என்று ஒரு மின்னிதழ்………” என்று ஆரம்பித்தவுடனேயே அவர்கள் "எங்களுக்கு முன்பே நன்றாகத் தெரியுமே, அதைப் பார்த்துத்தான் நாங்கள் மடிசார் வைத்துக் கட்டிக் கொள்ளக் கற்றுக்கொண்டோம்" என்றபோது எனக்கு நிஜமாகவே புல்லரித்தது!

8. நிலாச்சாரல் மூலம் நீங்கள் பெற்றவை..?

தூசி படிந்து போயிருந்த என் எழுதும் ஆர்வத்திற்கு மீண்டும் ஒரு தளம் அமைத்துக் கொடுத்தது நிலாச்சாரல். தவிர, நிலாவுடன் எங்களுக்குக் கிடைத்த ஒரு இனிய நட்பு.நிலாக் குடும்பத்தில் ஒருவன் என்ற பெருமை.

9. நிலாச்சாரலில் உங்கள் குடும்பத்தினர் விரும்பிப் படிப்பது..?

நிலாவின் படைப்புகள், (ஆத்மனுடன் நிலா), ரிஷி ராக்ஸ், ச.நாகராஜன் கட்டுரைகள், வெங்கட ரமணியின் நேதாஜி, விவேகானந்தர் வரலாறு

10. உங்கள் பார்வையில் நிலாச்சாரலின் பலம், பலவீனங்கள் பற்றிக் கூற முடியுமா?

உலகின் பல மூலைகளிலிருந்தாலும் – ஒருவரை ஒருவர் பார்த்திராவிட்டாலும் – ஒரே குடும்பமெனப் பழகும் ஒரு தொண்டர் குழாம் – இது பலம்.

ஒரே குடும்பமெனப் பழகுவதால் அதுவே சில சமயம் ஒரு தற்காலிக பலவீனமும்கூட..!

11. நிலாச்சாரல் புதுப்பொலிவுடன் வருவதைக் கண்டு எப்படி உணர்கிறீர்கள்?

மிகவும் மகிழ்கிறேன். மீண்டும் புதுப்பொலிவுடன் கொண்டு வர முயற்சி செய்பவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

12. நிலாச்சாரல் மேலும் வலுப்பெற என்ன செய்யவேண்டும் என்று எண்ணுகிறீர்கள்?

இதுவரை எழுதி வந்த எழுத்தாளர்களை மீண்டும் எழுத வைத்தல், நேர்முகங்களைத் தொடர்தல் (ஹி..ஹி..!), சங்கம் காண்போம் போன்ற இலக்கியக் கட்டுரைகள், புத்தக மதிப்புரைகள், நகைச்சுவை கட்டுரைகள், வரலாற்றுச் சம்பவங்கள் ( முதல் இரண்டாம் உலக யுத்தம் போன்றவை) தலைவர்கள் வரலாறு – இப்படி எத்தனை எத்தனையோ!

13. நிலாக்குடும்பம் என நிலா அடிக்கடி கூறுவாரே, அது இன்னும் இருப்பதாக எண்ணுகிறீர்களா?

இன்றும் என்றும் இருக்கும்.

14. நிலாக்குழுவுக்கும், வாசகர்களுக்கும் தாங்கள் கூற விரும்புவதென்ன?

நிலாக்குழு மீண்டும் முனைப்போடு செயல்பட்டு நிலாச்சாரல் ஒரு புதுப்பொலிவோடு பவனி வர ஒன்றுபடவேண்டும்.

நிலாச்சாரல் வாசகர்களுக்கு – நிலாச்சாரல் உங்கள் இதழ். உங்கள் கருத்துக்களை எங்களுடன் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள் – இது என் வேண்டுகோள்.

About The Author

1 Comment

  1. N V Subbaraman

    நல்ல நேர்முகம்; அருமையான கேள்விகள்;அழகான பதில்கள். தொடர்புடைய அனைவருக்கும் வாழ்த்துகள்

Comments are closed.