இரத்தினச் செவ்வி – திரு.ச.நாகராஜன்

S.Nagarajanதிரு.ச. நாகராஜன் அவர்கள் இது வரை சுமார் 1200க்கும் மேற்பட்ட கதைகள், கவிதைகள்,நாடகங்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.அறிவியல் விண்வெளி விஞ்ஞானம், ஜோதிடம், நட்சத்திரங்கள், வரலாறு, இலக்கியம், சுற்றுலா இடங்கள், புலன் கடந்த உணர்வு, கடல் வளம், மிருக இயல், இசை, மந்திரம், இயந்திரம், சாதனையாளர்கள், ஹாலிவுட் சினிமா, பெண்கள் முன்னேற்றம், சுய முன்னேற்றம், படைப்பாற்றல் உள்ளிட்ட பல பொருள்களிலும் கட்டுரை படைத்திருப்பது இவரது தனிச் சிறப்பு!

இவரது படைப்புகள் பாக்யா, மங்கையர் மலர், தினமணி, தினபூமி, ஆனந்த விகடன், சினேகிதி, ஞான ஆலயம், கோகுலம் கதிர், ஹிந்து, மஞ்சரி, கலைமகள் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் இடம் பெறுகின்றன. இவர் அறிவியல் உலகிற்கு செய்த பல்வேறு பங்களிப்பிற்காக அறிவியல் எழுத்துச் செம்மல் என்ற விருதினைப்பெற்றுள்ளார்.

திரு.ச.நாகராஜன் அவர்கள் நிலாச்சாரலில் பல வருடங்களாக பல்வேறு கட்டுரைளை எழுதி வருகிறார். எந்தக் கட்டுரையையும் எந்த நேரத்திலும் கேட்கலாம் என்ற மனதிடத்தை நிலாக்குழுவினருக்கு அளித்துள்ளவர் இவர். மிக விரைவிலேயே இவருடைய திரையிசை பாடல்களோடு பயணம் பகுதி 2 துவங்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றோம். நிலாச்சாரலில் வெளி வந்த இவருடைய படைப்புகளைக் காண இங்கே சொடுக்கவும்

https://www.nilacharal.com/ocms/log/authorlist.asp?authorid=Nagarajan

பல்வேறு அலுவல்களுக்கிடையே எங்கள் வினாக்களுக்கு விளக்கமாக விடையளித்து இப்பகுதியைச் சிறப்பித்தமைக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி!

1.உங்களின் தசாவதாரம் எப்படி சாத்தியமாயிற்று?

தந்தை பத்திரிகையாளர்-ஆகவே பல் முனைப் படிப்பு. தொழில்- வாகனக் கட்டுமானத் துறையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறை மேலாளர். ஆகவே, எதையும் ஆராய வேண்டிய நிர்பந்தம். நண்பர்கள், பல்துறைச் சான்றோர்களின் பழக்கம்- எல்லாமாகச் சேர வைத்த இறைவனின் கருணை, வேறென்ன?

2.வாழ்வில் வெற்றி பெற எது தேவை..முயற்சி/கடவுள் அருள்?

யத்ன பிரயத்ன மானவ தர்மமு
ஜெய,அபஜயம் தெய்வாதீனமு- தெலுங்கு வரிகள்

சாகும் வரை முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். கடவுள் அருள் தானே உரிய நேரத்தில் நிச்சயம் வரும். மஹாபாரதம் போதிக்கும் அற்புத உண்மை இது!

3. மூடநம்பிக்கைகள் மலிந்து வரும் நம் நாட்டிற்கு பிரமிட் தேவையா?

மூட நம்பிக்கைகள் முற்றிலுமாக ஒழிய வேண்டும். ஆனால் பிரமிட் சக்தி வாய்ந்த யந்திரக் கட்டிடம். அதை ஆராய வேண்டும்; அனுபவத்தால் பயன் பெற வேண்டும்!

4. மெய்ஞானமும் விஞ்ஞானமும் சந்திக்கும் இடம் எது?

துல்லியமான மெல்லிய எல்லைக் கோட்டில்- எங்கு விஞ்ஞானம் முடிகிறதோ அங்கு மெய்ஞானம் ஆரம்பம்- அந்த மெல்லிய எல்லைக் கோட்டில்!
 
5. எழுத்துலக வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி?

ஏராளம்! தமிழர்களின் குடும்ப பத்திரிகையும் பிரபல வாரப் பத்திரிகையுமான பாபுலர் இதழின் ஆசிரியர் எனது பெயர் போடாமல் அட்டைப் படத்தில் நான் எழுதிய செய்தியை வெளியிட்ட போது மனம் வருந்தி நான் எழுதிய கடிதத்திற்கு அவர் எழுதிய நீண்ட பதில்! மனம் குளிர்ந்து திருவள்ளுவர் சால்பு பற்றிய எழுதிய குறளுக்கு நீங்கள் தான் இலக்கணம்; தமிழரின் குடும்பப் பத்திரிகைக்கு எல்லா உரிமையும் உண்டு, என் பெயர் விடுபட்ட வருத்தத்தினால்தான் கடிதம் எழுதினேன் என்று பதில் எழுதினேன்.
 
6. உங்கள் எழுத்துகளில் உயிர்நாடியாக இருப்பது எது?

விஞ்ஞான ஆராய்ச்சியால் மெய்ஞான உண்மைகள் மேம்பட்டு மிளிர்வதை எடுத்துக் காட்டுவதே!
 
7. உங்கள் எழுத்துகள் மக்களிடையே பெற்றிருக்கும் வரவேற்பைக் குறித்து..?

அடடா, அது ஒரு அற்புத அனுபவம்! வீட்டின் பிரதான கதவின் சாவியைத் தேடித் தேடி அலுத்துப் போன குடும்பத் தலைவியும் அவரது மகளும் என் கட்டுரையைப் படித்து அந்த உத்தி மூலம் அது கிடைத்தவுடன் எனக்குத் தொலைபேசியில் பேசியது, ஆங்கிலம் அறிவோமா புத்தகத்தைப் பாராட்டி ஒரு நண்பர் இரண்டரை மணி நேரம் என்னைப் பாராட்டியது (ஐயோ, இப்படி பேசினால் பில் எகிறுமே- நான்! கவலைப்படாதீர்கள், நான் டெலிபோன் எஞ்ஜினியர் எனக்கு ஃப்ரீ – அவர்!) இப்படிப் பல சம்பவங்கள். ஒரு நூலாகவே எழுதக் கூடிய அளவு இன்னும் அற்புதமான சம்பவங்களும் உண்டு!

8. நிலாச்சாரலுடன் நீங்கள் ஒரு வரியில்..

தமிழுக்குத் தேவையான ஒரு நல்ல பத்திரிகை – நிலா கொள்கைத் திறமுடைய நல்ல தமிழ் மங்கை; அவருடன் இணைந்திருப்பவர்களோ முகம் பார்க்காத நிலையிலும் அழகிய எடுத்துக்காட்டிற்கு இலக்கணமான குடும்ப உறுப்பினர்கள்; மொத்தத்தில் நல்ல நிஜமான தமிழ் பல்கலைக் கழகம்!
 
9. நிஜவாழ்க்கையில் விந்தையான மனிதர்களைச் சந்திக்க நேர்ந்தால்..?

சந்தித்திருக்கிறேன்; பிரமித்திருக்கிறேன். தெய்வத்தை நேருக்கு நேர் கண்ட அவர்களின் அருள்சக்தி பிரமிப்பூட்டும் ஒன்று!
 
10. இன்னும் தொடவில்லை என்று நீங்கள் எண்ணும் துறை..?

கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு; படிக்கப் படிக்க ஐயோ இதை இன்னும் எழுதவில்லையே என்று தோன்றுகிறது! இன்னும் ஆயிரக்கணக்கான கட்டுரைகளுக்குக் குறிப்புகள் உள்ளன!

11. தகவல்களை எப்படி சேகரிக்கிறீர்கள்?

புத்தகம், அபூர்வ பத்திரிக்கைகள், இணைய தளம், நண்பர்கள், சுற்றுலா- இவையே மூலம்!
 
12. பறக்கும்தட்டு,பிரமிட்,உலவும் பிணம்,டிராகுலா என்று சராசரிக்கு அப்பாற்பட்டவற்றை எழுத காரணம்?

மேலே கூறியவை என் மூவாயிரம் கட்டுரைகளில் ஒரு சிறிய பகுதியே!அதீத புலனாற்றல் ஆராய்ச்சியில் விளைந்தவை இவை!
 
13. உங்களை எப்படி அடையாளம் காண விரும்புகிறீர்கள்.  ஆன்மீகவாதி/இலக்கியவாதி/அறிவியல்வாதி?

மூன்றும் கலந்த கலவை நான்!
 
14.ஒரு எழுத்தாளரை அடையாளம் காட்டுவது நூல்களின் எண்ணிக்கை/நூல்களின் தரம் ?

சந்தேகம் என்ன, தரம் தரம் தரமே!

15.உங்களை நடமாடும் என்சைக்ளோபீடியா என்று அழைக்கலாமா?

தவறு, கூடவே கூடாது! நூறு விஷயங்களை ஒரே சமயத்தில் கவனிக்கும் சதாவதானிகள் இருக்கும் நாடு, அனைவரையும் உத்வேகமூட்டும் வியாசர் போன்ற விசால புத்தி (ஜெயண்ட் ப்ரெய்ன்!) கொண்டோரின் நூல்கள் உள்ள நாடு இது; ஏழுகடல் மணலை அளவிடின் நான் ஒரே ஒரு சிறிய மணல் துகளினும் துகள்!

**********************

About The Author

2 Comments

  1. ஆ. கோவிந்தன், மதுரை.

    வணக்கம். நாகராஜன். நீங்கள் ஆன்மீகவாதி, இலக்கியவாதி, அறிவியல்வாதி ஆகிய மூன்றும் கலந்த கலவையாக உள்ள உங்களது நிலாச்சாரல் பேட்டி சிறப்பாக உள்ளது. நன்

Comments are closed.