இரத்தினச் செவ்வி – ரிஷபன்

Rishabanசிறுகதை வரலாற்றில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர் திரு ரிஷபன் அவர்கள். நம் தினசரி வாழ்வில் நிகழும் சிறு சிறு நிகழ்வுகளை உயிரோட்டமான உரையாடல்கள் மூலம் எடுத்துச் சென்று சுவாரஸ்யமாக முடிப்பதில் வல்லவர். இவர் ‘துளிர்’, ‘சூர்யா’, ‘பனி விலகிய நேரம்’, ‘பூஞ்சிறகு’ போன்ற சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். திருச்சி மாவட்ட இலக்கியப் போட்டியில் இரண்டு முறை ‘சிந்தனைப் பேரொளி’ என்ற பட்டம் பெற்றுள்ளார். இரண்டு முறை ‘இலக்கியச் சிந்தனை மாதப்பரிசு’ பெற்றுள்ளார். இவருடைய கவிதைகளும் பல பரிசுகளைப் பெற்றுள்ளன. இவர் திருச்சி பாரத மிகு மின்நிலையத்தில் உயர் பதவி வகிக்கின்றார்.

நிலாச்சாரலில் வாசகர்களின் மிகுந்த பாராட்டையும், வரவேற்பையும்பெரும் ரிஷபன் அவர்களின் படைப்புகள் அனைத்தையும் அறிய இங்கே சொடுக்கவும்.:

https://www.nilacharal.com/ocms/log/authorlist.asp?authorid=Rishaban

அலுவலகப்பணி. எழுத்துப்பணி, குடும்பப்பணி என்று பல்வேறு பணிகளுக்கிடையே நிலாச்சாரலுக்காக நேரத்தை ஒதுக்கி இரத்தினச்செவ்வியைச் சிறப்பித்தமைக்கு எங்கள் உள்ளம் நிறைந்த நன்றி.

1. உங்கள் பெயரின் சிறப்புத் தன்மை பற்றி..?

என் ராசி ரிஷபம். அதனால் ரிஷபன் ஆனேன். இயற்பெயர் ஸ்ரீநிவாசன். இது பொதுவான பெயர். ரிஷபன் என்பது தனித்துத் தெரியும் என்பதால்.

2. சிறந்த சிறுகதையின் அடையாளம் என்ன?

ஒரு நல்ல சிறுகதை வாசித்து பல நாட்கள் ஆனாலும், அப்படியே திருப்பி சொல்ல முடியாவிட்டாலும், நினைவு கூர்ந்து பேசப்பட்டால் அதுவே அடையாளம்!

3. எது எழுதுவது கடினம். நாவல்/சிறுகதை?

இரண்டும்தான்! பயிற்சியும், ஈடுபாடும்தான் சிறந்த நாவல்/சிறுகதை எழுத உதவும்.

4. உங்கள் சிறுகதையின் சிறப்பம்சமாக எதைக் கருதுகிறீர்கள்?

என் படைப்புகளை வாசிப்பவர் கதையோடு ஏதேனும் ஒரு வகையில் தன்னை தொடர்பு படுத்திக் கொள்ள முடியும்.

5. உங்கள் கதைகள் நடுத்தர வர்க்கத்தினரின் பிரதிபலிப்பு என்று கூறலாமா?

….லாம். ஏனென்றால் நான் அந்த வர்க்கம்தான்!

6. உங்கள் கதைகளின் முடிவுகள் எதிர்பாராதவைகளாக இருப்பதன் ரகசியம் என்ன?

என் கதைகள் மட்டுமல்ல.. சிறுகதையின் லட்சணமே அதுதான். வாசகர் யூகித்து விட்டால் சுவாரசியம் போய்விடுமே.

7. இணைய இதழ் மூலம் பெற்ற வித்தியாசமான அனுபவம்…?

உலகளாவிய வாசகர்கள்! வார/மாத இதழ்களில் வாசகர் கடிதம் சில நேரங்களில் வராது. இங்கோ எதிர்வினைகள் தெரியும். ஒவ்வொருவர் அவரவர் மனப்போக்கில் கதையை விமர்சிப்பது கூடுதல் சுவாரசியம்.

8. கவிதைகளில் யதார்த்தம் என்பதை மக்கள் எந்த அளவு விரும்புவார்கள்?

நிச்சயம் யதார்த்தக் கவிதைகள்தான் ரசனைக்குரியவை. ஆற்று மணலை ஏற்றிச் செல்லும் லாரியிலிருந்து வழிகிறது நதியின் கண்ணீர்.. (திருவை குமரன்) படிக்கும்போதே என்ன தாக்கம் தருகிறது! புரியாத கவிதைகளை எழுதுவது படைப்பாளிக்கு வேண்டுமானால் பெருமிதமாய் இருக்கலாம். மக்கள் கவனத்திற்கே போகாது.

9. சிறுகதைகளுக்கான சின்னஞ்சிறு சம்பவங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

தேடவேண்டாம். அப்படியே எழுதலாம். கொஞ்சம் கண்ணை.. காதை திறந்து வைத்தால் போதும்.

10. நிலாச்சாரலுடன் உங்கள் அனுபவம் பற்றி…?

சாரல் என் மீதும் அடித்தது.. உற்சாகமாய். எழுத்தாளனுக்கு அங்கீகாரம் கிட்டினால் அதை விட பெரிய மகிழ்ச்சி வேறேதுமில்லை. அந்த மேடையில் என்னையும் நிற்கவைத்து கைதட்டல்களை பெறவைத்த நிலாச்சாரலுக்கு எப்போதும் நன்றி.

11. உங்கள் எழுத்தின் நோக்கம் பற்றி..?

எழுத்து ஒரு திறமை. சாமர்த்தியம். வாசகனைக் கட்டிப் போட முடிகிறது. எதிர்பார்க்க வைக்கிறது. அதன் கரு மனசுக்குள் புகுந்து அதே மாதிரியான சூழல் வரும்போது யோசிக்கவும் வைத்தால் என் எழுத்தின் நோக்கத்திற்கு வெற்றி.

12. உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள்?

எல்லோருமே. ஒவ்வொருவரும் என்னை ஏதேனும் ஒரு வகையில் ஈர்த்திருக்கிறார்கள். அடிப்படையில் நான் முதலில் வாசகனே. லா.ச.ரா., ஜெயகாந்தன், ஆதவன், சுஜாதா, தி.ஜா. என்றால் ஸ்பெஷல் ஆர்வம்.

13. காட்சிகளைக் கண்முன்னே கொண்டு வந்து காட்டும் உங்கள் யதார்த்த நடை பற்றி..?

முதலில் பாராட்டிற்கு நன்றி. என்னைப் பொறுத்தவரை எதுவுமே அவனருள்! கண்ணதாசன் சொன்னதைப் போல.. ‘என்னைக் காட்டிலும் திறமைசாலிகள் இருக்கிறார்கள். ஆனால் எனக்குப் புகழ் கிடைத்தது இறையருளால்’

14. ‘உங்கள் சிறுகதையில் கவித்துவமும், கவிதையில் சிறுகதைத்துவமும் காணப்படுகின்றது’ என்ற விமர்சனம் சரியா?

அட.. அப்படியா! இரண்டும் கைவரப் பெற்றவர்கள் லிஸ்ட்டில் நானுமா? விமர்சனத்திற்கு தலையசைத்து வணக்கம்.

15. உங்கள் சிறுகதையின் பலம் எது? பலவீனம் எது?

இரண்டுமே அதன் பக்க அளவுதான். இன்னும் கொஞ்சம் விவரித்து எழுதி இருக்கலாம் என்று படித்தவர்கள் சொல்வது. ‘கச்சிதமா முடிச்சிட்டீங்க’ என்றும் விமர்சனம். சுஜாதா போல ஒரு வார்த்தை கூட அதிகமாய் வராமல் எழுதுவது என் நோக்கம்.

About The Author

3 Comments

 1. ashraf

  ஒரு நல்ல எழுத்தாழராக இருக்கிரீர்கல் ராசியை நம்புகிரீர்கள்

 2. rishaban

  ராசியை நம்பல.. நான் சொன்னத நீங்க புரிஞ்சுக்கல போல. பெயர்க் குழப்பம் தவிர்க்க.. ஒரு தனி அடையாளமாய் அந்தப் பெயர்.. அது எப்படி வந்தது என்றால்.. ராசியை வைத்து உருவாக்கிக் கொண்டேன் என்று.

 3. மஞ்சுபாஷிணிசம்பத்

  அட பெயரில் தனித்தன்மை….

  எழுதும் கதைகளில் வித்தியாச சிந்தனை….

  கவிதை வரிகளோ மனதை ஆழ்ந்து விடச்செய்யும் அற்புதம்…

  புகழைத்தேடி ஓடாத அருமையான மனசு….

  பதில்களிலும் அதே வித்தியாச சிந்தனை அமைதியான தெளிவான பதில்கள்…

  பிரமிக்கிறேன்… இன்னும் இன்னும்…..

  மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் ரிஷபா….

  உங்களின் தன்னடக்கமும் சிந்தனை தாக்கமும் முத்துகளான தங்கள் படைப்பும் எல்லாமே போற்றக்கூடியதாக இருக்கின்றதுப்பா..

  இறைவனின் கருணை என்றும் உங்களுடன் துணை நிற்கிறது….

  மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் ரிஷபா மீண்டுமொருமுறை.

Comments are closed.