இருவர் எழுதிய கவிதை (2)

பாரிஸ் நகரத்தில் ஒரு பிரபலமான சிலை இருக்கிறதாம், ஒரு சின்னஞ் சிறுவன், ஒயிலாய் இடுப்பில் கை வைத்துக் கொண்டு ஸ்டைலாய் சிறுநீர் பெய்கிற மாதிரி.
அது பெரிய டூரிஸ்ட் அட்ராக்ஷன் என்றும், அந்தப் பக்கமாய்ப் போகிறவர்களெல்லாம், அந்தச் சிறுநீர்ச் செல்வனுக்குப் பக்கத்தில் நின்று ஃபோட்டோ எடுத்துக் கொள்வார்களென்றும் அவன் சொல்லியிருக்கிறான்.

அவனே தான் இன்னொன்றையும் சொன்னான்.

ஏர் இண்டியா மஹாராஜா, அந்த சிலைக்குக் கீழே குடை பிடித்துக் கொண்டு நிற்கிற மாதிரி விமான நிறுவனம் விளம்பரம் வெளியிட, இந்தியப் பண்பாடு களங்கப்பட்டுப் போனதாய் லோக்கலாய்க் கூக்குரல்கள் எழுந்து, ஏர் இண்டியா அந்த விளம்பரத்தை வாபஸ் வாங்கிக் கொண்டதாம்.

இந்தியப் பண்பாட்டோடு, தமிழ்ப்பண்பாடும் களங்கப்படுகிற மாதிரி மதுரை மாநகர வீதியிலே, அந்தப் பாரீஸ் சிலைச் சிறுவனைப்போல, ப்ளாட்ஃபாமில் நின்றிருந்தான் குழந்தை. அருகே, முழங்காலிட்டு இவள், கையில் பாட்டிலோடு, ஷ்ஷ்ஷ் ஷென்று அவனைத் துரிதப்படுத்திக் கொண்டு.

அம்மாவுடைய அவசரமும் சங்கடமும் புரிகிற வயசில்லை குழந்தைக்கு.

இவர்களைக் கடந்து நடந்து போனவர்களில் கிட்டத்தட்ட எல்லாருமே இந்தக் காட்சியைப் பார்த்துப் போனாலும், இவள் யாரையும் ஏறெடுத்துப் பார்க்கிற மனநிலை இல்லாமலிருந்தாள்.

‘பாப்பா, சீக்கிரம் ஆகட்டும் பாப்பா’ என்கிற குரல் கேட்டுத் தலையை நிமிர்த்திப் பார்த்தாள்.

ஒரு வயதான தம்பதி, ரெண்டு ஸெகண்ட் நின்று, குழந்தையையும் இவளையும் பார்த்து இதமாய்ப் புன்னகைத்து விட்டுப் போனார்கள். இவளும் மரியாதைக்குக் கொஞ்சமாய்ப் புன்னகைத்து வைத்தாள்.

இவளுடைய ஷ்ஷ்ஷ்க்கு பலன் கிடைத்தது.

பாட்டிலில் ஈரம் படர ஆரம்பித்த நேரத்தில், முஸல்மான்க்கா பச்சா ரே என்றொரு ஆண்குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தால், தொப்பியணிந்த ரெண்டு இளைஞர்கள், இந்தக் காட்சியை ரசித்துப் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தார்கள்.

வயதான தம்பதிகளைக் குறித்து வராத வெட்கம் இவளுக்கு இப்போது வந்தது.

குழந்தைக்குக் கத்னா செய்ய வேண்டும் என்று அவன் சொன்னபோது இவள் வெறுமனே ‘ம்’ என்றதால், அவன் ஒரு விளக்கம் தர வேண்டியதாயிற்று.

"முஸ்லிம்ஸ் மட்டுமே இப்ப ஸர்க்கம்ஸிஷன் பண்றதில்லம்மா, ஜெனரல் ஹெல்த்க்காக எல்லாருமே இப்ப பண்ணிக்கிறாங்க. சில ஹாஸ்பிடல்ஸ்ல பொறக்கற எல்லாக் கொழைந்தங்களுக்கும் டாக்டர்ஸ் பண்ணியே விட்டுர்றாங்க."

‘நா வேண்டாம்னு சொல்லலியே’ என்று இவள் சிரித்தாள்.

இப்போதும் சிரிப்பு வந்தது, வெட்கத்தையும் மீறி.

ஒரு வழியாய், வேலை முடிந்து விட்டது என்பதும் சிரிப்புக்கு ஒரு காரணம்.

பாட்டிலைப் பெற்றுக் கொண்ட நர்ஸ், ‘எட்டர மணிக்கித்தான் ரிஸல்ட் கெடக்யும்’ என்றாள்.

"எட்டர மணியாகுமா? அதுவரக்யும் இவனயும் வச்சுக்கிட்டு இங்க ஒக்காந்திருக்க முடியாதே, எங்க ஹஸ்பண்ட் ஆஃபீஸ்லயிருந்து வர்ற வழியில கலெக்ட் பண்ணிக்கச் சொல்றேன். இங்கயிருந்து ஃபோன் பண்ணலாமா?"

ஃபோனுக்கு இவள் அனுமதி கேட்டதற்கு நர்ஸ் மறுப்பாய்த் தலையசைத்தாள்.

"பேஷன்ட்ஸ் ஃபோன் பண்றதப் பெரிய டாக்டர் அலவ் பண்ணமாட்டார்ம்மா."

‘நா பேஷன்ட் இல்ல நர்ஸ்’ என்று சூடாய்த் திருப்பியடிக்க வாய் திறந்தவளையொரு தடாலடியடித்து வீழ்த்தினாள் நர்ஸ்.

"இந்தாங்க, என்னோட ஸெல்ஃபோன்ல பேசுங்க."

சங்கோஜத்தோடு நர்ஸிடம் ஸெல்ஃபோன் வாங்கிப் பேசிவிட்டு நன்றியோடு திருப்பித் தந்த போது, ‘மேடமுக்கு இன்னும் எம்மேல கோபந்தான் போலயிருக்கு’ என்று நர்ஸ் சிரித்ததற்கு, ‘சீச்சீ, கோபமெல்லாம் இல்ல’ என்று மறுத்தாள்.

கோபப்படக் காரணங்கள் காலாவதியாகிவிட்டன.

ஃபோன் கொடுத்த புண்ணியவதியாச்சே!

‘அப்ப நா ஏன் ஒங்கள அப்படிக் கேட்டேன்னா’ என்று ஆரம்பித்த நர்ஸ், இவளை நெருங்கி வந்து, குரலைத் தணித்து வாக்கியத்தைப் பூர்த்தி செய்தாள்.

"நானுங்கூட லவ் மாரேஜ்தான். அதாவது, ஒங்களையே மாதிரி, என் ஹஸ்பண்ட் வேற ரிலிஜன், நா வேற ரிலிஜன்."

திடுதிப்பென்று இவளுக்கு அந்த ஸிஸ்டர் மேலே ஒரு சகோதரிப் பாசம் ஏற்பட்டுப் போச்சு.

தொடர்ந்து, அந்த ஸிஸ்டர் இன்னும் ஏதோ சொல்ல வருவது இவளுக்குப் புரிந்தது. ஸிஸ்டர் முகத்தை இவள் பார்த்தாள், மேற்கொண்டு வார்த்தைகளுக்காக.
வார்த்தைகள் வருத்தமாய் வெளிவந்தன.

"ஆனா, கடவுள் எங்களுக்கு ஒரு கொழந்தயக் குடுங்கலம்மா. பத்து வருஷமாச்சு. அம்மாவாகிற பாக்கியம் எனக்கு இருக்கா இல்லியான்னு தெரியல. அதுக்கெல்லாம் குடுத்து வக்யணும். யூ ஆர் லக்கி! யூ ஆர் வெரி லக்கி!"

குழந்தையைத் தூக்கி ஒரு முத்தம் பதித்து ஸிஸ்டர், ‘ஆல் த பெஸ்ட்’ என்று இவளை வழியனுப்பி வைத்தாள்.

ஒன்பது மணி போல அவன் வீட்டுக்கு வந்தான்.

‘ரிப்போர்ட் வாங்கிட்டு வந்தீங்களா’ என்றதற்கு அவன் சொன்னான் :

"ரிப்போர்ட்ல ஒண்ணுமில்ல. யுரினரி இன்ஃபக்ஷன் இல்லியாம். அந்த லேடி டாக்டர் ஒரு ஸிரப் எழுதிக் குடுத்தாங்க. வாங்கிட்டு வந்திருக்கேன். நாளக்கி சரியாப் போகும்னு சொன்னாங்க. அங்கயிருந்த நர்ஸ் நம்மக் குட்டிப் பயலுக்குக் குடுக்கச் சொல்லி இவ்ளோ பெரிய காட்பரீஸ் ஒண்ணு குடுத்தா. அந்த நர்ஸ் ஒனக்கு ஃப்ரண்டாம்ல?"

‘ஃப்ரண்டா? இல்லியே’ என்றாள் இவள்.

"ஃப்ரண்ட் இல்ல. ஸிஸ்டர். எனக்கு அக்கா. இந்தக் குட்டிப்பயலுக்குப் பெரியம்மா. நா இவனுக்கு அம்மா. ஆஹா, அம்மா! நா குடுத்து வச்சவங்க! ஐ’ம் லக்கி! ஐ’ம் வெரி லக்கி! ஐ’ம் வெரி வெரி லக்கி! இல்லியாடா என் செல்லக் கண்ண்ண்ணுக்குட்டி!"

குழந்தையை வாரியெடுத்து முத்தமழை பொழிந்தாள்.

அந்த இளம் அன்னையை அவள் கணவன் ஆர்வத்தோடும் ஆச்சர்யத்தோடும் பார்த்துக் கெண்டிருந்தாள்.

& தினமணி ஞாயிறுமணி (திருநெல்வேலி), 21.12.2008

About The Author