ஈர்ப்பு

இரயிலில் கூட்டம் அதிகமாயிருந்தது. ஆனாலும் முரளிக்கு வசதியாய் நிற்க ஒரு இடம் கிடைத்துவிட்ட நிம்மதியில் வழக்கம் போல் தனக்குள் அமிழத் தயாராகிரான்.

முரளிக்கு வயது 32. மும்பையில் தனியார் நிறுவனமொன்றில் டெஸ்பாட்ச் கிளர்க் ஆகப் பணி. கோடிப் பேர் இருக்கிற கும்பலில் இருந்தாலும் அவனுக்குள் தனியாய் ஒரு ஆர்ப்பாட்டமில்லாத உலகம் இயங்கிக் கொண்டிருக்கும். கற்பனையும் கனவுகளும் நினைவுகளுமாய் ஒரு ரம்யமான உலகம் அது.

கண்மூடி அந்த உலகத்தில் லயித்திருந்தவன் சற்று எட்டத்தில் கேட்ட விசிலொலியில் கண்திறந்தான். விசிலொலி வந்த திக்கில் பார்வை தானாகப் பயணப்பட்டு விசிலைத் தரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த அந்த சிறுவனிடம் நின்றது. விசிலைப் பிடுங்க அவன் அம்மா செய்த முயற்சிகள் அனைத்தும் வீணாக, அருகிலிருந்த ‘அவள்’ நீட்டிய சாக்லேட் பாருக்கு பண்டமாற்று செய்ய தயங்கித் தயங்கித் தயாரானான் அந்தச் சிறுவன்.

சற்று நேரம் அந்தக் காட்சியை ரசித்துக் கொண்டிருந்த முரளி சாக்கலேட் நீட்டிய கைகளுக்குரிய முகத்தை நோட்டமிட்டான். வசீகரமாயிருந்தது அந்த முகம். பளபளக்கும் விழிகள், திருத்திய புருவங்கள், சின்ன கூரான மூக்கு, லேசாகக் குவிந்த உதடுகள்… அந்த முகத்துக்கு ஒரு இருபத்தெட்டு வயதிருக்கலாம். முரளியின் இதயச் சுவர்களில் ‘பச்சக்’ என அழுத்தமாய் ஒட்டிக் கொண்டது அந்த முகம்.

இப்போது அந்த முகம் அந்த சிறுவனிடம் சிரித்துப் பேச ஆரம்பித்தது. புன்னகைக்கும் போது கன்னத்தில் விழுந்த குழியும் லேசாகத் தெரிந்த ஒழுங்கற்ற பல்வரிசையும் அந்த முகத்தின் அழகைப் பல்மடங்காக்கின. வெட்கமற்று அந்த முகத்தையே வெகு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறான் முரளி.

அவன் இப்படிப் பார்ப்பதை யாராவது அறிந்தால் அவனைத் தரக்குறைவாக எடைபோடுவார்கள் என்று அவனுக்குத் தெரிந்தே இருந்தது. ஒரு அழகான பூவைப்பார்க்கும் போது ஏற்படும் பரவசம் போலத்தான் இதுவும் என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டான் முரளி. பூவைப் ரசிக்கும்போது குறை சொல்லாத இச்சமூகம் பூவையைப் பார்க்கும்போது மட்டும் ஏன் குற்றம் சுமத்துகிறது என்று அவனுக்குப் புரியவில்லை.

பார்வை தன்னிச்சையாய் அவள் கழுத்தை நோக்க அவள் திருமதி என்று தெரிந்தது. அதிர்ஷ்டசாலிக் கணவன் – இந்த முகத்தை வாழ்க்கை முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாமே! எப்படி இவ்வளவு அழகாய் இருக்கமுடியும் ஒருவரால்? அவளெதிரிலமர்ந்து அவளை அருகிலிருந்து பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் போன்ற ஒரு தாகம் அவனுக்குள் எழுகிறது. ஏதோ ஒரு நிறுத்தத்தில் இரயில் நிற்க, அவள் இறங்கிப் போய்விடக் கூடாதென்று பிரார்த்தித்தான் முரளி.

அதெப்படி பார்க்கப் பார்க்கத் திகட்டாத அழகாய் இது அமைந்துவிட்டிருக்கிறது? அந்த முகத்தைத் தவிர வேறு எதுவும் கவனத்திலில்லை அவனுக்கு. கிட்டத்தட்ட தியான நிலையிலிருந்தான் முரளி. அப்படியே உலகம் உறைந்துவிட்டால் சுகமாயிருக்குமென்றிருந்தது. இன்னும் எத்தனை நிமிடங்கள் இந்த மோன நிலை நீடிக்குமோ என்ற எண்ணத்தில் கண்ணிமைத்துக் கூட விநாடியை வீணடிக்க விரும்பவில்லை அவன்.

மெல்ல மெல்ல முகத்திலிருந்த கவனம் விரிந்ததில் ஒரு மனுஷியாய் அவள் வியாபித்தாள். தேவதைகள் அவ்வப்போது பூமிக்கு வருவார்கள் என்பது உண்மை போலும். அவளுக்கு ஒரு பெயர் வேண்டுமென்று நினைத்து வசீகரி என்பதுதான் பொருத்தமாய் இருக்குமென்று முடிவு செய்தான். மனதுக்குள் சொல்லிப் பார்த்து சிலிர்த்துக் கொண்டான்.

அந்த மயக்க நிலையிலும் முரளிக்குள் பல கேள்விகள் எழுகின்றன. முன்பின் தெரியாத ஒருத்தியிடம் அத்தனை புலன்களும் கட்டுண்டு கிடக்கிறேன் என்றால் என்ன வித்தை இது? ஒன்றுமே இல்லாத மாயைக்கா இவ்வளவு ஆழமான உணர்வுகள் எழும்? ஆனால் இவ்வளவு கனமான உணர்ச்சிகளுக்கெல்லாம் ஒரு அர்த்தமும் இல்லை என்கிற மாதிரி இன்னும் சில நிமிடங்களில் இந்த தவம் கலையப் போகிறது! எப்போதுமே திரும்பக் கிடைக்கப்போவதில்ல இந்த உணார்ச்சிகளும் இந்த நிமிடங்களும்…

இந்த வாழ்க்கையின் மேலும் சமூகத்தின் மேலும் கோபமாய் வருகிறது முரளிக்கு. சடாரென்று அத்தனை சமூக நியதிகளும் கட்டுப்பாடுகளும் இந்தக் கணம் உடைந்து போனால் நன்றாயிருக்கும் என்று தோன்றியது. அப்படி உடைந்து போகும் பட்சத்தில் என்ன செய்யலாம் என்ற கற்பனையில் ஆழ்ந்தான் முரளி. ‘நேராய் அவள் எதிரில் போயமர்ந்து கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். அப்புறம் அந்தக் கன்னக் குழியிலும் தங்கக் கழுத்திலும் ஆழமாய் முத்தம் பதிப்பேன்.’ சடன் பிரேக் போட்டாற் போல் நின்றது அவன் சிந்தனைக் குதிரை. அவனைப் பொறுத்தவரை கன்னத்தில் முத்தம் பதித்தல் பாசத்துக்கு அடையாளம். கழுத்தில் முத்தமென்றால் அது காமமல்லவா? இத்தனை நேரமும் பூ, பூவை, முகமென்று வியாக்கியானம் பேசியது பாசாங்கா? முரளிக்குத் தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கிறதென்று தெளிவாயிற்று. ஆனாலும் அவன் கவனம் அவள் மேலிருந்து அகலவில்லை

அவள் இன்னும் அந்த சிறுவனிடம் கொஞ்சிக் கொண்டிருந்தாள். கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை தெரிந்திருந்தால் அந்த சிறுவனுக்குள் புகுந்திருப்பான் முரளி…

ரயில் வேகம் குறைய ஆரம்பிக்கவும் அடுத்த நிறுத்தத்தில் தான் இறங்க வேண்டும் என்பது உறைத்தது. இதயம் பிளந்துவிடும் போல் வலித்தது. இவ்வளவு அழகான, ஆச்சர்யமான அனுபவத்துக்கு ஒரு அர்த்தமில்லையா ஆண்டவனே? இப்படியே நித்தியத்துக்கும் பிரிந்து போய் விடுவதா? இந்த முகத்தை மீண்டும் பார்க்கிற பாக்கியம் கிடைக்கவே கிடைக்காதோ?

முரளிக்கு அவளைத் தொடர்ந்து செல்லலாமா என்று கூடத் தோன்றிற்று, ஆனால் நிறுத்தம் வந்ததும் அனிச்சையாய் இறங்கி கடைசித் தரிசனத்துக்காய் ஜன்னல் வழியே பார்வையைச் செலுத்தினான். அவளும் யதேச்சையாய் வெளியில் நோக்க, நிகழ்ந்த அந்த வினாடி நேர பார்வை சங்கமத்தில் ஒரு பரவசப் பிரளயமே நிகழ்ந்தாற் போலிருந்தது முரளிக்கு. கால்கள் அசைய மறுத்து அடம் செய்தாலும் ரயில் மட்டும் தன் போக்கில் நகரத்தான் செய்தது. முரளிக்கு அவன் வாழ்க்கையில் ஒரு பகுதியை அந்த வசீகரி பிய்த்துக் கொண்டு போய்விட்டதாகத் தோன்றியது. அருகிலிருந்த பெஞ்சில் தன்னையறியாமல் அமர்ந்தான். வருகிற இரயில்களின் ஜன்னல்களுக்குள் மீண்டும் மீண்டும் பார்வை சென்று ஏமாற்றமாய்த் திரும்பி வந்தது. நேரம் போனது தெரியாமல் அவன் விசனத்தோடு வெறித்திருக்க, தூறல் வந்து அவனைத் தன்னிலைப்படுத்தியது. இஷ்டமில்லாமல் எழுந்து சோர்வாய் நடந்தான். வாழ்க்கையின் ஒரு மிக முக்கிய அத்தியாயம் சில நிமிடங்களுக்குள் முடிந்து விட்டாற்போல நெஞ்சில் பாரம். இந்த நிகழ்வு ஆயுளுக்கும் உயிரில் தங்கும் என்று நினைத்துக் கொண்டான்.

அபார்ட்மென்ட் வாசலில் அழைப்புமணியை அழுத்துமுன் கதவு திறந்தது.

"என்னங்க இவ்வளவு நேரம்? பயந்தே போயிட்டேன்" மனைவி சித்ராவின் முகத்தில் நிம்மதி தெரிந்தது. கொலுசு கிணுகிணுக்க "அப்பா" என்று ஆசையாய் தொற்றிக் கொண்டாள் இரண்டு வயது மகள் விஷாலி.

"அப்பா பாப்பாக்கு என்ன வாங்கித்து வந்தே?" மழலை மாறாத குரலில் கொஞ்சலாய்க் கேட்டது குழந்தை.

"பாப்பா அப்பாக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால்தான் அப்பா சொல்வேனாக்கும்" என்று சொல்லி முடிக்குமுன் விஷாலி இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தம் கொடுத்துவிட்டுக் கை நீட்டியது.

பையிலிருந்து பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து நீட்டியதும் சந்தோஷமாய் இறங்கி வாசலுக்கு ஓடிப்போனது. சித்ரா அவன் பையிலிருந்து சாப்பாட்டுப் பாத்திரத்தை எடுத்தபடியே, "இன்னைக்கு உங்களுக்குப் பிடிச்ச முருங்கைக்காய் சாம்பார், உருளைக்கிழங்கு பொரியல்" என்றாள். குரலிலிருந்த குழைவும் கண்ணிலிருந்த மையலும் அவனுக்குள் உஷ்ணம் ஏற்றின.

சட்டையைக் கழற்றியவாறே சித்ராவை உற்று நோக்கினான் முரளி. வெளுத்துப்போன காட்டன் நைட்டி, உச்சிக்கு மேல் அசிரத்தையாய்ப் போட்ட கொண்டை. சமையல் செய்ததில் முகத்தில் துளிர்த்திருந்த வியர்வை, பிரசவத்தில் போட்ட லேசான தொப்பை – இத்தனையயும் தாண்டி ஏதோ ஒன்று அவனை அவள்பால் வெகுவாக ஈர்த்தது. அவளை நெருங்கி இடையில் கைபோட்டு அருகே இழுத்து முகத்தை நோக்கிக் குனிய, "ச்சீ… விவஸ்தையே இல்லை உங்களுக்கு. குழந்தை வந்திடப் போறா" என்று பொய்யாய்க் கோபித்து விலகி அவனைக் குளியலறையில் தள்ளினாள்.

"சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க. சாப்பாடு சூடா இருக்கு" கரிசனமாய் சொல்லிவிட்டு அவன் முரட்டுப் பிடியிலிருந்து கையை விடுவித்துச் சென்றாள். அவள் சென்ற பின்னும் அவள் மணம் அங்கு நிலவியது. நுரையீரல்களில் அந்த மணத்தை நிறைத்து சற்று நேரம் ரசித்தான்

நீரைத் தலையில் வாரி ஊற்றிக் கொள்ளும் போது இன்றைய ரயில் சம்பவம் அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஆனால் எவ்வளாவு முயன்றும் அந்த வசீகரியின் முகம் மட்டும் நினைவுக்கு வரவேயில்லை.

(கருவறைக் கடன் -மின்னூலில் இருந்து)

To buy the EBook, Please click here

About The Author