உந்தித் தீ (2)

"அண்ணாவிற்கு எந்த ஊரு… எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே. எங்கே பாத்திருக்க முடியும். அன்ன சத்திரத்தில், சாப்பாடு போடற கோயில் இல்லேண்ணா கல்யாணங்கள்லே… நம்மள மாதிரி ஆசாமிகளின் ஊர் வீடு தேசம் எல்லாம் அங்கேதானே. சாப்பாடு கிடைக்கற ஊர் சொந்த ஊர்…"

எல்லோருக்கும் சொல்லி வைத்தாற்போல் மூணு மாச தாடி மீசை. அழுக்கு வேஷ்டி கிழிசல் துண்டு வெற்று மார்பு… சொத்துக்களை பத்திரப்படுத்த ஒரு பெரிய கிழிசல் பை… அதற்குள் என்ன பொக்கிஷம் இருக்கும்னு தெரியலே. சதா பத்திரமா அணைச்சு காவல் காத்துண்டு…

"ராஜாஜி மாதிரி அரசியல்லே இப்போ ஆர் இருக்கா புத்திசாலி. சொல்லுங்க பார்க்கலாம். சூரன்யா. அப்போ தேசம் எவ்வளவு சுபிட்சமா இருந்துது. கழட்டி விட்டுட்டா. எல்லாம் துவேஷம். நஷ்டம் யாருக்கு. ஜனங்களுக்கு. பாருங்கோ புயல் வெள்ளம் மழைன்னு அல்லாடறது லோகம்."  அடிக்கடி கதவின் மேல் கண். திறந்தவுடன் ஓடனும். போன பந்தியிலே நுழைய முடியலே. ஒரு படுபாவி தள்ளிவிட்டுட்டு ஓடினான். கீழே விழுந்து காலிலே சிராய்ப்பு பாருங்கோ… இந்தப் பந்தியிலே இடம் கிடைச்சாத்தான் சரி. இல்லே பத்து மணியாயிடும்… ஏகப்பட்ட முணுமுணுப்புகள்.

நீர் மதுரை பக்கமோ. வருஷா வருஷம் வரேளா. ஆடி மாசம் கோவிந்தபுரத்திலே போதேந்ராள் ஆராதனை – அஞ்சு நாள். மருதாநல்லூரில் சத்குரு ஸ்வாமிகள் பஜனை. மூணு நாள். அப்புறம் திருவிசநல்லூரில் ஸ்ரீதர அய்யாவாள் உத்சவம்… ஆறு நாள் சர்வமான்ய அக்ரகாரத்தில் சமாராதனை. ஒரு பதினஞ்சு நாள் இப்படி கவலையில்லாம ஓடிடும்…சட்டென்று கதவு திறக்கற சப்தம். எல்லோருக்கும் காது விடைத்துக் கொண்டுவிட்டது. பாய்ந்தோடத் தயாராகும் பரபரப்பு. பாத்துபாத்து… என்ற குரலை யாரும் லட்சியம் செய்யவில்லை. ஒரு யுத்தத்திற்குத் தயாரானதைப்போல – ஆக்ரோஷம். வேஷ்டி நழுவறது தெரியாது. பாத்துப் போகப்படாதாடா கம்மனாட்டி… கால மிதிச்சிண்டு… தள்ளு முள்ளு… "நாயே… என்ன அவசரம்?"

வரிசை வரிசையா பெரிய பெரிய இலைகளில் பரிமாறப்பட்டிருக்கும். கூட்டு பொரியல் அப்பளம் பச்சடி… மலை மாதிரி சாதம்… எந்த இலையில் உட்காருகிறது என்று நிர்ணயிப்பதற்குள் திக்குமுக்காடி அங்குமிங்கும் ஓடி இலைகளை மிதித்துக் கொண்டு கூட்டும் சாதமும் அப்பளமும் அழுக்குப் பாதங்களில் நசுங்கி தரையில் சிதற… அன்னம் ப்ரம்மம்… அன்னம் ப்ரம்ம மயம்… அன்னத்திற்கு தோஷமில்லே. அன்னத்திற்கு அசுத்தமில்லே…

"எலே பிராமணனாடா நீ… பூணூலைக் காட்டு… கிங்கரன் மாதிரி ஒருவர் பிரமாண்ட வயிறோடு வியர்வை வழிய தோளில் சிவப்புத் துண்டு சகிதமாய் பெரிய ஜாரணிக் கரண்டியோடு நோட்டமிட்டுக் கொண்டே வருவார்… பூணூலை எந்தக் கடையிலேடா வாங்கினே… லே… அபிவாதயே சொல்லு…. காயத்ரி சொல்லு…

– திருதிருவென திருட்டு முழியப்பாரு –

கரண்டியாலே அப்படியே மண்டையிலே ஒரு போடு. ஏந்திரிடா… இலயச் சுருட்டு. துண்டை விரி மூட்டை கட்டு… ஓடு… அடுத்த தடவ பாத்தேன்… கொன்னுடுவேன்…" வேர்வை வழிய வழிய வெற்றிப் புன்னகையோடு அடுத்த வரிசைக்கு நகர்வார். அன்னமே ப்ரம்மம்…

"ஸ்வாமி உம்மை முதல் பந்தியிலே பாத்த மாதிரி இருக்கு…"

"இருக்காது. நான் இப்பத்தான் வந்தேன். சாப்பிட முடியுமோ. வயிறா குதிரா… தூரத்தில் காவிரிக்கரை சத்குரு சமாதியில்

யாரோ வித்வான் மெய் மறந்து பாடுவது கேட்கும்… யாருக்கு வேணும் சங்கீதம்…"

தப்பில்லே. எத்தனை மனுஷர்கள் பறக்கிறார்கள். அரசியல் கட்சிக்காரர்கள் முழங்குகிறார்கள். சாமியார்கள் மடங்களில் உட்கார்ந்து கொண்டு உபதேசம் பண்ணுகிறார்கள். எவ்வளவுபேர் பள்ளிக்கூடம் கட்டுகிறார்கள். பெரிய பெரிய தொழிற்சாலைகள் திறக்கிறார்கள். ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு ஜேன்னு பிரவசனம் பண்ணுகிறார்கள். எல்லாமே எதற்கு அன்னத் தேடல் – எல்லாமே அன்னத்தைத் தேடியோடும் மார்க்கம். வேறென்ன?

நல்ல மழை. ஒண்ட இடம் தேட – அந்த வீடு கண்ணில் பட்டது. மின்னலின் வினாடி பளிச்சிடலில் இன்ன ஊர் இன்ன இடம் இன்ன நேரம் என்று கணக்கு போட முடியவில்லை.

அடங்காத பசி… அந்த வீட்டுப் படியில் உட்கார்ந்தபோது வயிறு கபகபவென எரிந்தது.

"யாரு…" என்ற பிசிர்க் குரல். யாரு யாராது… பாத்தா அசலூர் மாதிரி தெரியறது. என்ன வேணும். மழையிலே நனையாதே… உள்ளே வந்து உட்காரு… அந்தம்மாளின் பரிவு இதமாய் இருந்தது. நிச்சயம் சோற்றுக்கு உத்தரவாதம்.

என்னாச்சு உமக்கு. வீட்டிலே கோயிச்சுண்டு வந்துட்டியா. உடம்பு சரியில்லையா எதானாலும் சொல்லு… இந்த அன்னம்மா உபகாரம் பண்ணுவா. எழுவத்தஞ்சு வயசு இப்போ. தானம் பண்ணியே கை நஞ்சு கிடக்கு… ஆனா அசரலே. நிக்கலே நிறுத்தலே.
அன்னம்மாவைப் பிடித்திருந்தது. தலை தும்பைப் பூ வெள்ளை. கைகள் லேசாக நடுங்கின. பார்வையில் மட்டும் கூர்மை. ஒரு சாயலில் அம்மாவைப் போலிருந்தாள்.

முற்றத்துத் தாழ்வாரத்தில் உட்காரச் சொன்னாள். பெரிய இலை போட்டாள். ஒரு பாத்திரம் சாதத்தையும் இலையில் சாய்த்தது சந்தோஷமாக இருந்தது. சாம்பாரை நனைய நனைய ஊற்றினாள். ஒரு துண்டு நார்த்தங்காய்யைக் கிள்ளிப் போட்டாள். நிமிஷ நேரம் – இந்த ஆவேசம். ஆச்சரியப்பட வைத்தது. கூடவே பயம். அதென்ன இப்படியோர் பசி… நாலு தோசை இருக்கு போடட்டுமா. சாப்பிடறயா… நாலு தோசை நாலே வாய். அன்னம்மா லேசாக அதிர்ந்தாள். இவ்வளவு பசியா பாவம். பழைய சாதம் பழங்குழம்பு இருக்கு போடறேன் சாப்பிடு…

‘உம்’ என்றான். ஏழெட்டு முறுக்கு நாலு அதிரசம். என எல்லாவற்றையும் அட்டகாசமாகச் சாப்பிடுவதை அதிசயமாகப் பார்த்தாள்.

(தொடரும்)

About The Author