உருளைக்கிழங்கு சென்னா வறுவல்

தேவையான பொருட்கள்:

உருளைக் கிழங்கு – ¼ கிலோ
கறுப்புக் கொண்டைக்கடலை – ½ கோப்பை
முட்டைக் கோஸ் (சிறிதாக நறுக்கியது) – 100 கிராம்
வெங்காயம் (சிறியதாக நறுக்கியது) – 2
பச்சை மிளகாய் (நறுக்கியது) – 2
தேங்காய்த் துருவல் – 1 கோப்பை
பூண்டு (நறுக்கியது) – 8 பல்
இஞ்சி (நறுக்கியது) – ½ தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – 1 மேசைக் கரண்டி
கரம் மசாலா – ½ தேக்கரண்டி
மிளகுத்தூள் – ½ தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்துமல்லி – சிறிதளவு

தாளிப்பதற்குத் தேவையான பொருட்கள்:

கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு (உடைத்தது) – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகாய் வற்றல் – 3

செய்முறை:

கறுப்பு கொண்டைக்கடலை (சென்னா) உருளைக் கிழங்கு இரண்டையும் வேக வைத்துக் கொள்ளுங்கள். உருளைக் கிழங்கைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகைப் போடுங்கள். கடுகு பொரியத் தொடங்கியதும், உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்க வேண்டும்.

பிறகு, நறுக்கி வைத்த வெங்காயம், முட்டைக்கோஸ், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளறி விடுங்கள். நன்கு வதங்கியதும், சீரகப்பொடி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பொடித்த மிளகுத்தூள், கரம் மசாலா ஆகியவற்றைச் சேருங்கள்.
 
அதனுடன் கறுப்பு கொண்டைக்கடலை , உருளைக் கிழங்கு இரண்டையும்  சேர்த்து  சிறிது வதக்கவும்.

பின்னர், சிறிது நீர் ஊற்றி உப்பு சேர்த்து, பாத்திரத்தை மூடி வைத்து, 10 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். நீர் முழுவதும் வற்றும் வரை  அடிக்கடி நன்கு கிளறி விட வேண்டும். இறக்கியதும், நறுக்கிய கொத்துமல்லித் தழைகளைத் தூவி அலங்கரித்துப் பரிமாறுங்கள்.

சுவையான உருளைக்கிழங்கு சென்னா வறுவல் ரெடி! சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள் !

About The Author