உறவுகள் தொடர்கதை – 12

"நான் உங்க கூட சென்னைக்கு வரலை" என்று சாந்தி சொன்னதைக் கேட்டு அரவிந்தன் அதிர்ச்சி அடைந்தான்.

ஒரு சண்டை வரப்போகும் சூழ்நிலையை உணர்ந்த ரஞ்சனி, பயந்துபோய் மெதுவாக அடுத்த அறைக்குச் சென்றாள். தனக்குள் எழுந்த கோபத்தை மிகவும் சிரமப்பட்டு அரவிந்தன் அடக்கிக்கொண்டான். பொறுமையாக சாந்தியிடம் பேசத்தொடங்கினான்.

"சாந்தி! நீ நிஜமாத்தான் சொல்றியா? நீ எங்க கூட வரப்போறதில்லையா?"

"சும்மா ஒரு தமாஷ் செய்தேன்" என்று சொல்லி, கலகலவென சிரிப்பாள் என்று அரவிந்தன் எதிர்பார்த்தது நடக்கவில்லை. மாறாத முகபாவத்தோடு, முன்பைவிட தீர்மானமாக சாந்தி அதையே மறுபடியும் சொன்னாள்.

"இல்லை, நான் உங்களோடு வர்றதாயில்லை"

"என்ன காரணம் சாந்தி?"

"என்னை எப்படியாவது வேலைக்குப் போகவிடாம செய்யணும்னுதான் நீங்க இந்த மாற்றல் வாங்கி இருக்கீங்க"

"சாந்தி! நீ வேலைக்குப் போகவேண்டாம்னு இப்ப நான் சொன்னேனா?"

"நீங்க சொன்னால்தானா? சென்னையில் எங்க ஆபீசுக்கு கிளை இல்லையே?"

"அதுக்கு நான் என்ன சாந்தி செய்ய முடியும்? நாம அங்க போனபிறகு நீ வேறே வேலை தேடிக்கலாமே"

"இன்னும் ரெண்டு, மூணு மாசத்துல எனக்கு ஒரு பிரமோஷன் வரக்கூடிய வாய்ப்பிருக்கு. இந்த நேரத்துல இருக்கிற வேலையை நான் எதுக்காக விடணும்? நீங்க வேணும்னா இந்த மாற்றல் வேண்டாம்னு எழுதிக் கொடுத்துடுங்க."

"அது முடியாது, சாந்தி. ஏன்னா…" என்று தொடங்கிய அரவிந்தன் சட்டென நிறுத்தினான்.

இப்படிச் சந்தேகப்படும் இவளிடம் நான் எதற்காக நிரூபிக்க வேண்டும்?

"எப்ப உனக்கு என்மேலே இவ்வுளவு சந்தேகம் வந்தாச்சோ, இனிமேல் நான் என்ன சொன்னாலும் உன்னால நம்ப முடியாது. அப்படி உன்னை நம்ப வைக்கணும்கிற அவசியமும் எனக்கில்லை. ஒரு வாரம் உனக்கு டைம் தர்றேன்; பொறுமையா யோசிச்சுப்பார். உனக்கு என்மேலே நம்பிக்கை வந்தா, நம்ம குடும்பம் நல்லா இருக்கணும்னு நினைச்சா, எனக்குச் சாதகமான பதிலைச் சொல்லு. அப்புறம் உன் இஷ்டம்!" சொல்லி முடித்துவிட்டு அரவிந்தன் உள்ளே சென்றான்.

கட்டிலின் ஒரு மூலையில் கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த ரஞ்சனி, மெல்ல வந்து அரவிந்தனைக் கட்டிக்கொண்டாள். வெளியே போய்விட்டு வந்த சந்தோஷம் ஊசி குத்திய பலூனைப் போல வடிந்து போயிருந்தது.

"ஏம்ப்பா அம்மா உன்கூட எப்பவும் சண்டை போடறாங்க?" என்று கவலையுடன் ரஞ்சனி கேட்ட கேள்வி இப்போது கூட அரவிந்தன் முன்னால் இருப்பது போன்ற பிரமை.

அரவிந்தன் தலையை உலுக்கியபடி பழைய நினைவுகளில் இருந்து மீள முயன்றான்; ஆனால் முடியவில்லை.

அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து சாந்தி பிடிவாதமாக வர மறுத்தது மனத்திரையில் காட்சியாக விரிந்தது.

"சாந்தி! நாளைக்குச் சென்னை போக டிக்கெட் ரிசர்வ் பண்ணப்போறேன். உன்னோட முடிவென்ன?"

"என் முடிவில எந்த மாற்றமும் இல்லை"

"எப்ப என்மேலே இருந்த நம்பிக்கை போயிடுச்சோ, இனிமே நாம சேர்ந்து வாழறதிலே அர்த்தமே இல்லை"

அப்போதும் சாந்தி மௌனமாகவே இருந்தாள்.

"நாம டைவர்ஸ் பண்ணிடலாம்னு தோணுது."

அப்போதும் மௌனம். அதற்குமேல் அவள் மௌனத்தைத் தாங்க முடியாமல் அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் அரவிந்தன் சென்னைக்குக் கிளம்பிவிட்டான். ரஞ்சனி, "என்னை விட்டுட்டுப் போறீங்களா அப்பா?" என்று ஏங்கி ஏங்கி அழுதாள்.

ஒரு மாதம் கழித்து விடுமுறையில் மீண்டும் அரவிந்தன் வீட்டுக்குத் திரும்பியபோது, அவனுக்காக விவாகரத்து பத்திரம் காத்திருந்தது. ரஞ்சனி தன்னோடு இருக்கவேண்டும் என்பதில் அவன் முயற்சி தோற்றுப்போனது.

                                                                             ***********

முதல்வேலையாக நாளை சென்று ரஞ்சனியைப் பார்க்கவேண்டும்; அப்போது மனம் நிம்மதி அடையும் என்று தீர்மானித்த பிறகே அரவிந்தனால் தூங்க முடிந்தது.

மலர் ஏற்கனவே ரஞ்சனி படிக்கும் பள்ளியைப் பற்றிச் சொல்லியிருந்ததால், அரவிந்தனுக்கு அதைக் கண்டுபிடிக்க எந்த சிரமமும் இருக்கவில்லை.

பள்ளி முதல்வரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ரஞ்சனியைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னான்.

"எந்த வகுப்பு மாணவி ஸார்?"

"மூன்றாம் வகுப்பு மேடம்!"

"எந்தப் பிரிவு?"

அரவிந்தனிடம் பதில் இல்லை.

"ஸாரி, மேடம், செக்ஷன் தெரியலை. சரியா ஞாபகமில்லை" சமாளிக்க முயன்றான்

"பரவாயில்லை. இனிஷியல் சொல்லுங்க; கண்டுபிடிச்சுடலாம்"

"இனிஷியல் ஏ! ஏ.ரஞ்சனி"

ரஞ்சனி படிக்கும் வகுப்பைக் கண்டுபிடித்து அவளை அழைத்துவர ஆசிரியை பியூனை அனுப்பினார். அரவிந்தன் வெளியே வந்து நாற்காலியில் அமர்ந்து காத்திருக்கத் தொடங்கினான்.

அதோ…! அதோ வருபவள் அவன் மகள் ரஞ்சனியேதான்! இரண்டு வருட இடைவெளியில் கொஞ்சம் உயர்ந்து, மெலிந்து, வாடிய முகத்தோடு வந்த ரஞ்சனி, அரவிந்தனைப் பார்த்து ஒரு நொடி நம்ப முடியாமல் வியப்பில் திகைத்து நின்றாள். மறுநொடி "அப்பா..!" என்று கூவியபடி ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டாள்.

அரவிந்தன் மகளை வாரியணைத்தான்.

"ஏம்ப்பா எங்களை விட்டுட்டுப் போனீங்க? நீங்க இல்லாம எனக்கு எவ்வுளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?"

படபடவெனப் பேசிக்கொண்டே போன ரஞ்சனி, சட்டென்று அழத்தொடங்கினாள்.

"இனிமே நீங்க என்னை விட்டுட்டுப் போனா…நான் அப்புறம்….அப்புறம்….உங்ககூட பேசவே மாட்டேன்."

ரஞ்சனி தேம்பிக்கொண்டே சொல்ல, அரவிந்தன் கண்களில் நீர் நிறைந்து விட்டது.

"இல்லைம்மா..இனிமே உன்னை விட்டு எங்கேயும் போகவேமாட்டேன்."

"காட் பிராமிஸ்?"

ரஞ்சனி தன் கையை நீட்ட, ‘காட் பிராமிஸ்’ என்று அரவிந்தன் சத்தியம் செய்ததும்தான் அவள் முகத்தில் சிரிப்பு வந்தது. அப்போது மணியடித்தது.

ரஞ்சனி உடனே "அப்பா! இப்ப இன்டர்வெல் டைம். எங்க கிளாஸ் ரூம் போகலாம், வாங்க" என்று அரவிந்தனின் கையைப் பற்றி இழுத்தாள்.

"எதுக்கும்மா? அங்கே வந்து நான் என்ன செய்யப்போறேன்? நாம இங்கேயே பேசலாமே!"

"உங்களுக்குத் தெரியாதுப்பா, என் கிளாஸ்மேட்ஸ் எல்லாம் என்ன கேட்டாங்க, தெரியுமா? ஏன் ஸ்கூல் ப்ரொகிராம் எதுக்கும் உங்கப்பா வரலையே, அவருக்கு உன்னைப் பிடிக்காதான்னு கேட்கறாங்க. விக்கின்னு ஒரு பையன்…அவனும், அவன் மம்மியும் கூட தனியா இருக்காங்களாம்…அவன் சொன்னான், நீங்க இனிமே என்னைப் பார்க்க வரவே மாட்டீங்கன்னு. நீங்க வாங்கப்பா…எனக்கு அப்பா இருக்கார்னு என் கிளாஸ்ல எல்லாரும் பார்க்கணும், வாங்கப்பா…!"

எங்கள் பிரிவு இந்தக் குழந்தை மனத்தில் எவ்வுளவு பெரிய காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது???

வருத்தமும் வேதனையும் பொங்க, அரவிந்தன் ரஞ்சனியுடன் நடந்தான்.

"அப்பா! இவன் சுரேஷ், ஹேய் அபர்ணா! அவந்திகா! ராகுல், ப்ரேம்….எல்லாரும் வாங்க! எங்க அப்பா வந்தாச்சு!"

குழந்தைகள் அவனைச் சூழ்ந்து கொள்ள, ரஞ்சனி டக்கென்று விலகி ஓடினாள். வரும்போது ஒரு சிறுவனை அழைத்து வந்தாள்.

"விக்கி! எங்கப்பா வந்தாச்சு, பார்த்தியா? உங்கப்பாவும் சீக்கிரம் வந்துடுவார், கவலைப்படாதே!"

வாடியிருந்த அவன் முகத்தைப் பார்த்து ஆறுதல் சொன்னாள்.

(உறவுகள் தொடரும்…..)

About The Author

2 Comments

  1. Hemamalini sundaram

    உனர்வுபோர்வமன ச்டபிலிட்ய் குழன்தைகல்லுகு ரொம்ப முக்கியம், இல்லையா; தன்க்ச்,மினி

Comments are closed.