உறவுகள் தொடர்கதை – 14

படுப்பதற்கு முன்பு கூட ரஞ்சனி ஒரு முறை, "அம்மா, நாளைலேர்ந்து அப்பாவும் நம்ம கூட தான் இருப்பார், இல்லையா?" என்று கேட்டுவிட்டுத்தான் தூங்கினாள்.

சாந்திக்குத்தான் உறக்கம் வரவில்லை. ரஞ்சனி அரவிந்தனைப் பற்றிச் சொல்லியதில் சாந்திக்கு உண்மையில் சந்தோஷமே. இரண்டு வருடங்களாகத் தொடர்பே இல்லாமல் இருந்தவர், இப்போது குழந்தையைப் பார்க்க வந்திருக்கிறார் என்றால் நிச்சயம் அவர் மனம் மாறியிருக்கும்.ஆனாலும், தான் எப்படி அவர் முகத்தில் விழிப்பது என்ற குற்ற உணர்ச்சி அவளுக்குள் உறுத்தியது.

இத்தனைக்கும் காரணமான கல்பனாவை நினைத்தபோது கோபமும், ஆத்திரமும் வந்தது. கூடவே ‘அவள் பேச்சைக் கேட்டு அப்போது அப்படி நடந்துகொண்டு, இப்போது வருத்தப்படுகிறாயே, முட்டாள்!’ என்று மனசாட்சி சமயம் பார்த்து இடித்துரைத்தது.

கல்பனா சாந்தியின் முந்தைய அலுவலகத்தோழி. எப்போதும் பெண்ணுரிமை பேசுபவள். அவளுடைய அக்கா வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதால், கல்பனாவிற்கு ‘திருமணம் என்பதே முட்டாள்தனம்; ஆண்களுக்கு பெண்கள் எழுதித் தரும் அடிமை சாசனம்’ என்று மாற்ற முடியாத தீர்மானம் இருந்தது. அவளைப் பொறுத்தவரை ஆண்களை விட அரக்கர்கள் மேம்பட்டவர்கள்; கல்யாணம் பெண்ணுக்குத் தேவையில்லை’ என்ற நம்பிக்கையோடு வாழ்ந்து வருபவள்.

அரவிந்தன் தனக்கு சம்பளம் உயர்ந்ததும், சாந்தியை வேலையை விடச் சொன்னதை பேச்சுவாக்கில் சாந்தி கல்பனாவிடம் சொன்னாள். உண்மையில் சாந்தியே முதலில் வேலையை விட்டுவிட்டு, நிம்மதியாக வீட்டோடு இருந்து விடலாம் என்றுதான் முடிவு செய்து வைத்திருந்தாள். ஆனால் கல்பனாவின் பேச்சைக் கேட்டு, அவள் மனம் அடியோடு மாறியது.

"அதெப்படி, சாந்தி, உன் விஷயத்துல அவர் முடிவெடுக்கலாம்? நீ வேலைக்கு வர்றதா, வேணாமான்னு நீதான் தீர்மானிக்கணும். அவரா ‘வேலைக்குப் போகாதே; வீட்டுல இரு’ன்னு எப்படி அதிகாரம் செய்யலாம்?"

"இத்தனை நாள் என் சம்பளமும் குடும்பம் நடத்த அவசியமா இருந்தது கல்பனா! இனிமேல் அவர் சம்பளமே போதும். அதனால….."

"அதான் விஷயமா? இவ்வுளவு நாள் உன் பணம் தேவைப்பட்டதால உன் சொல்லுக்கு வீட்டுல மதிப்பு இருந்திருக்கு. இனிமே அது தேவையில்லை, அதனால உன்னோட மதிப்பும் இறங்கத் தொடங்கிடுச்சு. சாந்தி! நீ வேலைக்கு வந்து போகும் போதே உன் நிலைமை இப்படியிருக்கே, நீ அவர் கையை எதிர்பார்த்து வீட்டோட இருந்தா, உன் மதிப்பு எப்படி இருக்கும்னு நீயே யோசிச்சுப் பார்!"

கல்பனா சொன்ன கோணத்தில் சாந்தி சிந்திக்கத் தொடங்கினாள். அதுவும் சரியாகவே தோன்றியது. திருமணமான இத்தனை வருடங்களில் அரவிந்தன் எதற்காகவும் அவளை வற்புறுத்தியதில்லை. இப்போது வேலையை விடும்படி தன் கருத்தை அவள் மீது திணிக்கிறான். அவள் சம்பாதிக்கும் பணம் குடும்பத்துக்குத் தேவையில்லை என்பதால்தான், அவள் கருத்து அலட்சியப்படுத்தப்படுகிறதா?

சாந்தியின் சிந்தனை பாதை மாறிவிடாமல் கல்பனா அடிக்கடி உபதேசம் செய்தாள்.

"எந்த வீட்டிலாவது மனைவி பெரிய வேலையில் இருக்கான்னு புருஷன் வேலையை விட்டுட்டு பிள்ளைகளை வளர்க்கிறானா? இல்லையே. ஆனா பொம்பளைங்க மட்டும் அவங்க வேலைக்குப் போன்னா போகணும்; வேலையை விட்டுட்டு வீட்டோட இருன்னா இருக்கணும். அவங்களுக்குன்னு சொந்தமா மூளை, சிந்தனை எதுவுமே இருக்கக்கூடாதா, என்ன?"

கல்பனா சொன்னதை சாந்தி சண்டையில் அரவிந்தனிடம் சொல்லப்போக, அதோடு அவர்கள் நடுவில் பெரிய இடைவெளி விழுந்துவிட்டது.

"வேணும்னா நீங்க வீட்டோடு இருந்து ரஞ்சனியைக் கவனிச்சுக்குங்க. என் சம்பளம் நமக்குப் போதும்" என…..

"பேசறது நீ இல்லை சாந்தி, மாசா மாசம் சம்பளம் வாங்கறியே, அந்தப் பணம் கொடுத்த திமிர்! இனிமேல் உன்னோட பணம் ஒரு பைசா கூட எனக்கும் என் பெண்ணுக்கும் வேண்டாம்" என்று அரவிந்தன் அன்றிலிருந்து அவள் பணத்தை வாங்க மறுத்துவிட்டான்.

மறுநாள் சாந்தி நடந்ததை எல்லாம் கல்பனாவிடம் சொல்லி அழுதாள்.

"இப்படிச் சொல்லுவார்னு நான் நினைக்கவே இல்லை, கல்பனா! இந்த வேலையால தானே எங்களுக்குள்ள இப்படி சண்டை? பேசாம ராஜினாமா பண்ணிடட்டுமா?"

கல்பனா கண்களில் நீர் வரும்வரை சிரித்தாள்.

"என்ன கல்பனா, நான் அழுதுக்கிட்டிருக்கேன், நீ இப்படிச் சிரிக்கிறே?"

"உன் புருஷன் நேரடியா வேலையை விடுன்னு சொன்னப்ப, நீ முடியாதுன்னுட்டே. ஆனா இப்ப நீயா வேலையை விடட்டுமான்னு கேட்கற நிலைக்கு அவர் உன்னை கொண்டு வந்துட்டார். இதுதான் ஆண்களோட ராஜதந்திரம். இதைப் புரிஞ்சுக்காம நீ முட்டாள் மாதிரி வந்து அழறே, உன்னுடைய ஏமாளித்தனத்தைப் பார்த்து நான் சிரிக்காம எப்படி இருக்கறது, சொல்லு?"

சாந்தி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

"ஆனாலும் கல்பனா, அவர் இனிமேல் என் பணத்தைத் தொடக்கூட மாட்டேன்னு சொல்லிட்டாரே."

"அதெல்லாம் அந்த நேரத்துல கோபத்துல சொல்றது, சாந்தி! அதுக்கெல்லாம் அர்த்தம் தேடக்கூடாது. இப்ப உன் கணவருக்கே ஏதாவது அவசரமா பணம் தேவைப்பட்டா இல்ல ஒரு வீடு வாங்கணும்னே வைச்சுக்கோ – உன் பணத்தைக் கேட்காம இருந்துடுவாரா? இதுக்கெல்லாம் பயந்துட்டு நீ வேலையை விட்டுடாதே! அவ்வுளவுதான் என்னால சொல்ல முடியும். நாம குனியக் குனியத் தான் ஆம்பளைங்க குட்டறாங்க; ஞாபகம் வைச்சுக்கோ"

கல்பனா சொன்னபடியே நடப்பதென்று சாந்தி தீர்மானித்தாள். தன் சம்பளப் பணத்தை அப்படியே வங்கியில் சேமிக்கத் தொடங்கினாள். தன் தனிப்பட்ட செலவுகளுக்கு மட்டும் அதிலிருந்து உபயோகித்தாள்.

தான் இவ்வுளவு தூரம் சொல்லியும் சாந்தி கேட்காததில் அரவிந்தனின் மனம் உடைந்து போனது. அதை அவன் நடவடிக்கைகளின் மூலமாக சாந்தி புரிந்துகொண்டாள். என்றாலும், ‘இனிமேல் குனியவே கூடாது’ என்று முடிவெடுத்து, தொடர்ந்து வேலைக்குச் சென்றாள்.

கல்பனா சொன்னது போலவே, சாந்தியின் முடிவுக்கு வெற்றி கிடைத்தது. அதற்குப் பிறகு அரவிந்தன் சாந்தியின் வேலை பற்றி ஒரு நாளாவது வாய் திறந்து பேசியதேயில்லை. கல்பனாவும், சாந்தியும் தாம் உரிமைப் போரில் வென்றதாய் மகிழ்ந்தார்கள்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ஒரு நாள் அரவிந்தன் சென்னைக்கு மாற்றல் உத்தரவு வந்திருப்பதாய்ச் சொல்ல, சாந்தியின் மனம் தன் போக்கிலேயே நினைத்தது.

என்னை வேலையை விடச் செய்வதற்காகத் தானே நீங்கள் மாற்றல் வாங்கியிருக்கிறீர்கள் என்று அரவிந்தனைக் குற்றம் சாட்ட, அவன் மறுத்தான்.

"அப்படியென்றால் மாற்றல் வேண்டாம் என்று மறுத்து விடுங்கள்" என்று சாந்தி வற்புறுத்த, என்னவோ காரணம் சொல்ல வந்த அரவிந்தன்,  சட்டென நிறுத்திக் கொண்டான்.

ஒரு வாரம் கெடு கொடுத்து முடிவைச் சொல் என்று கூறிப் போய்விட்டான்.

சாந்தி குழப்பம் அடைந்தாள். அவளுக்கு வர வேண்டிய பிரமோஷன் இரண்டு, மூணு மாதத்தில் வரும் வாய்ப்பு இருக்கிறது. இப்போது போய் வேலையை விடுவதா?

கல்பனாவிடம் ஆலோசனை கேட்க முடிவு செய்தாள்.

(உறவுகள் தொடரும்……)

About The Author