உறவுகள் தொடர்கதை – 5

தியாகராய நகரில் சூர்யாவும், செண்பகமும் பொருள் வாங்கி முடிக்கும் போது, உச்சி வெயில் தலையைச் சுடத் தொடங்கி விட்டது.

செண்பகத்துக்கு ஐம்பது வயது; அவருடைய உறவினர் வீட்டில் சிறிய விசேஷம். வெள்ளியில் பரிசுப்பொருள் வாங்க முடிவெடுத்து, துணைக்கு பக்கத்து வீட்டு சூர்யாவோடு வந்திருந்தார். காலை பத்து மணிக்கு அங்கு வந்துவிட்டார்கள். நிறையக் கடைகள் இறைந்து கிடந்த போதும், சில இடங்களில் டிசைன் பிடிக்கவில்லை; சிலவற்றில் விலை கைக்கு எட்டவில்லை. கடைகடையாக ஏறி இறங்கி இப்போது தான் அன்னம் போல அழகிய குங்குமச்சிமிழ் கையில் வந்தது.

"இங்க வந்தாதாம்மா தெரியுது; இந்தியா எவ்வுளவு பணக்கார நாடுன்னு."

சூர்யா செண்பகத்திடம் முணுமுணுத்தாள்.

அவள் சொல்வது உண்மையோ என்று கூட சிலசமயம் தோன்றும்; ஒவ்வொரு நகைக்கடையும், புடைவைக்கடையும் மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டிருப்பதைப் பார்க்கும் யாருக்கும் அப்படித்தான் தோன்றும். ஆனால், கொஞ்ச தூரம் கடந்து ரங்கநாதன் தெருவுக்குப் போனால், அங்கே எத்தனையோ பேர் அதிலும் சிறு வயதில் ஸேப்டி பின், ஃபிரிஜ் கவர், நாப்தலின் உருண்டைகள் என்று அலைந்து அலைந்து விற்பதைப் பார்க்கும்

போது, "இந்தியா போல ஏழை நாடும் உண்டோ?" என்றாகி விடும்.

"என்னம்மா யோசனை? ஹோட்டல் வந்தாச்சு. உள்ளே போகலாம், வாங்க"

இருவரும் உள்ளே நுழைந்தனர். சூர்யா கைகழுவி வருவதற்காக ‘வாஷ்பேஸின்’ தேடிச் சென்றாள்.

சில மேஜைகளைக் கடந்து சென்ற போது தெரிந்த ஒரு முகம், அவள் சிந்தனைகளைக் கிளப்பியது. கை கழுவும் போது அவள் மனம் மலரைப் பற்றி நினைத்தது.

"மலர், ஆனந்தியைப் பற்றி கவலைப்பட்டது சரிதானா? இப்படிக் கல்லூரி நேரத்தில் இங்கே ஆனந்தி வந்திருப்பது எதற்காக? ஏதோ விடுமுறை, வகுப்பு இல்லை என்று வைத்துக்கொண்டாலும் தோழிகள் யாருமின்றி, இப்படித் தனியாக ஓர் இளைஞனுடன் …..ம்….இதில் ஏதோ ஒரு விஷயம்

இருக்கிறதே…ஒரு வேளை ஆனந்தி அவனைக் காதலிக்கிறாளோ?"

அப்படித்தான் இருக்க வேண்டும் என்று சூர்யா முடிவெடுத்தாள். அதற்கான காரணமும் இருந்தது. சூர்யா தங்களைத் தாண்டிப் போனதைக் கூட ஆனந்தி கவனிக்கவில்லை. அவர்கள் இருவருமே அப்போதைக்கு அந்த ஹோட்டலில் இருப்பதாகவே தெரியவில்லை. சுற்றி நடக்கும் எதுவும் தெரியாமல் ஒரு தனி உலகில் இருப்பது போன்ற எண்ணமே இருந்தது.

சூர்யா கைகழுவி மீண்டும் அவர்கள் மேஜையைத் தாண்டிச் சென்றாள். இப்போதும் ஆனந்தி அவளைக் கவனிக்கவில்லை. செண்பகத்தின் அருகில் சென்ற சூர்யா, ‘என் ஃப்ரெண்டோட தங்கை வந்திருக்கா. நான் போய் பேசிட்டு வந்திடறேன்."

"அதோ…அங்கே அந்த பையனோட தனியா வந்திருக்காளே, மஞ்சள் சுடி, அவ தானே? நானும் பார்த்திட்டுதான் இருக்கேன், உலகமே தெரியாம உட்கார்ந்திருக்கிறதைப் பாரு, இவங்களெல்லாம் காலேஜ் போய் படிக்கிறாங்களோ இல்லையோ நல்லா காதலிக்க கத்துக்கிறாங்க!"

செண்பகம் வெறுப்போடு கூறினார்.

"ஆனந்தியைப் பார்த்தால் காதல் மாதிரி தோணுது. ஆனா, அந்தப் பையன் மேல எனக்கு நம்பிக்கை இல்லை. இப்ப டக்னு போய் நின்னு பார்த்தால் ஓரளவுக்கு கணிச்சுடலாம்; கல்யாணம் செய்துக்கறவனா, கைகழுவிடப் போறவனான்னு. இப்ப விட்டுட்டு விஷயம் முத்தினப் பிறகு புலம்பி என்ன பயன்? எதுக்கும் நான் போய் பேசிட்டு வந்துடறேன்"

அந்த இளைஞனை எடை போட்டுக்கொண்டே சூர்யா ஆனந்தியை நோக்கிச் சென்றாள்.

இந்தக் காலத்தில் பெரும்பான்மையான இளைஞர்கள் வித்தியாசமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு, சராசரிகளாகி விடுபவர்கள். அவர்களில் இவனும் அடக்கம். சாயம் போன ஜீன்ஸ், அழுக்குக் கலரில் டி-ஷர்ட், சென்னையில் கொளுத்தும் இந்த அனலில் ஒரு ஜீன்ஸ் ஜாக்கெட் வேறு.

அவனுடைய பைத்தியக்காரத்தனத்தைக் கண்டு சூர்யாவுக்குச் சிரிப்புத் தான் வந்தது. மேலைநாட்டு நாகரிகத்தைக் காப்பியடிப்பதென்றாலும்,அதற்கென்று இப்படியா? அவர்கள் நாட்டுக்கும், நமது நாட்டுக்கும் உள்ள சீதோஷ்ண நிலை வித்தியாசங்கள் புரியாமல் நடக்கும் இவர்களை யார் காப்பாற்றப் போகிறார்களோ?

அவன் அநேகமாக மோட்டார்பைக் அல்லது ஏதாவது வாகனம் வைத்திருக்கக்கூடும். அதற்கு அடையாளமாக ஒரு விரலில் சாவியை வைத்தபடி சுழற்றிக் கொண்டிருந்தான்.

"ஹலோ ஆனந்தி! என்ன ஆச்சரியமா இந்தப் பக்கம்? எப்படி இருக்கே?"

சூர்யாவின் கேள்வி இருவரையுமே திடுக்கிட வைத்தது.

"வ..வந்துக்கா….காலேஜ் லீவு… அதான்.."

"இவர் யாருன்னு எனக்கு அறிமுகப்படுத்தவே இல்லையே? உன்னோட கிளாஸ்மேட்டா?"

"இல்லைக்கா…வ…வந்து…"

ஆனந்தி மென்று விழுங்க, அவனுக்கு இது போன்ற விஷயங்கள் ஏற்கனவே பழக்கம் போலும். உடனே சமாளித்துக் கொண்டு பேசினான்.

"நான் சரவணன். நண்பர்களுக்கு சரண். ஆனந்தி காலேஜ்ல வேற சப்ஜெக்ட். ஃபைனல் இயர் படிக்கிறேன். வாங்க, உட்காருங்க" என்று அருகில் இருந்த நாற்காலியைக் காட்டினான். சூர்யா நன்றி சொல்லி அமர்ந்து கொண்டாள்.

"நான் ஆனந்திக்கு அக்கா மாதிரி. இன்னொரு விஷயம். நான் காதலுக்கு எதிரி இல்லை. அதனால நீங்க தாராளமா எங்கிட்ட உண்மையைச் சொல்லலாம்."

சரவணன் படபடப்பாய் பேசினான்.

"என்னங்க, நான் தான் சொல்லிட்டேனே? நீங்க அனாவசியமா எங்க மேலே சந்தேகப்படறீங்க."

"மிஸ்டர் சரண்! ப்ளீஸ், நீங்க சும்மாயிருங்க. ஆனந்தியை எனக்குப் பத்து வருஷமாத் தெரியும். அவளோட முகத்தைப் பார்த்தே ‘என்ன விஷயம்’னு சொல்ல முடியும். இருந்தாலும் அவளே சொல்லணும், அது தான் நியாயம்.ம்….ஆனந்தி, நீ சொல்லு. உங்களுக்குள்ள உறவு எந்த மாதிரி?"

சூர்யாவைப் பார்த்ததுமே கைகால் நடுங்கத் தொடங்கி விட்ட ஆனந்தி, அவள் பேசப்பேச முகம் வெளுத்துக் கொண்டே வந்தாள். இப்போது சூர்யா கேட்ட கேள்வி அவள் எதிர்பார்த்ததுதான் என்றாலும், இங்கேயே இப்போதே எதிர்பார்க்கவில்லை. முகத்தில் வியர்வை படர்ந்தது. நாக்கு வறண்டதைப் போலிருந்தது.

"சொல்லு, ஆனந்தி"

சூர்யா அடிக்குரலில் அதட்டினாள்.

"வந்துக்கா…நானும் அவரை விரும்பறேன். அவரும் என்னை விரும்பறார்."

ஆனந்தி அவசரமாய்ச் சொல்லி முடித்தாள்.

"எத்தனை நாளா இந்தப் பழக்கம்?"

"இரண்டு மாசம் பத்து நாள்"

சொல்லி விட்டு, ஆனந்தி தலையைக் குனிந்துகொண்டாள்.

"உனக்கு என்ன வயசு, ஆனந்தி?"

இப்போது எதற்கு இந்தக் கேள்வி என்று புரியாமல் விழித்த ஆனந்தி, "பதினெட்டு முடிஞ்சுது" என்றாள்.

"அதற்குள்ளே கல்யாணத்துக்கு இவ்வுளவு அவசரப்படறே, சரி பரவாயில்லை" என்று பெருமூச்சு விட்டாள் சூர்யா.

ஏதோ உபதேசமோ, திட்டோ விழப்போகிறது என்று காத்திருந்த ஆனந்தி, சூர்யா சொன்னதைக் கேட்டு மனதிற்குள் மகிழ்ந்தாள். கண்களில் சந்தோஷம் மின்னியது. சரணை ஆவலோடு பார்க்க, அவன் எந்த மாற்றமும் இன்றி அப்படியே அமர்ந்திருந்தான்.

"நீங்க அடுத்தபடி ஆனந்தியை பார்க்கப்போறது அவங்க வீட்டுல உங்க பேரெண்ட்ஸ் கூடத்தான். உங்க வீட்டுல பெரியவங்க கிட்ட சொல்லி,அனுமதி வாங்குங்க. ஆனந்தி வீட்டுல அனுமதி வாங்கறது என் பொறுப்பு. என்ன? இரண்டு நாள் போதும்னு நினைக்கிறேன். வர்ற ஞாயிற்றுக்கிழமையே கூட நீங்க முறைப்படி பெண் கேட்டு வரலாம். எதுக்கும் சனிக்கிழமை ஃபோன் பண்ணி, ஆனந்தி கிட்ட கன்ஃபர்ம் பண்ணிடுங்க. வா, ஆனந்தி போகலாம். பை, சரண்!"

ஆனந்திக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. சூர்யா அக்கா சொன்னால், மலர் நிச்சயமாகக் கேட்பாள். தன் காதலை இத்தனை சுலபமாய்க் கல்யாணத்தில் முடிக்க, ஆண்டவனே தான் சூர்யா அக்காவை இன்றைக்கு அனுப்பியிருக்கிறான் என்று எண்ணினாள். ஆனந்தி சரணைக் கடக்கும்போது, அவன் புறங்கையில் லேசாகக் கிள்ளி, கண்களால் விடைபெற்றாள்.

செண்பகத்தின் அருகில் சென்று சூர்யாவும் ஆனந்தியும் அமர்ந்தனர். ஆனந்தி கவனிக்காத போது, சூர்யா செண்பகத்திடம் கண்ஜாடை காட்டிவிட்டு பேசத்தொடங்கினாள்.

"எங்க ஆனந்தியும், அந்தப் பையனும் காதலிக்கிறாங்களாம். எப்படியும் யாரோ ஒருத்தருக்குக் கல்யாணம் செய்து கொடுக்கப் போறாங்க, அதை இந்தப் பையனுக்கே செய்து கொடுக்கலாம்னு மலர் வீட்டுல சொல்லலாம்னு இருக்கேன். கண்ட இடங்கள்லே எல்லாம் சுத்தி பேர் கெட்டுப்போறதைவிட, அவனையே கல்யாணம் செய்துட்டு கௌரவமா வாழ்ந்துடலாமே, என்ன சொல்றீங்க?"

"நீ சொல்றதும் ஒரு விதத்துல சரிதான்" ஆமோதித்தாள் செண்பகம்.

"அதான் ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்க வரச் சொல்லி இருக்கேன், வருவாங்களா ஆனந்தி?" என்று சூர்யா கேட்க,

" நிச்சயம் வருவார்" என்று உறுதியாய்க் கூறினாள் ஆனந்தி.

(உறவுகள் தொடரும்…….)

About The Author