உறவுதான் ராகம் (2)

வீட்டை விட்டுக் கிளம்புகிற அன்று, அம்மா அமைதி காத்ததை நினைக்கிற போது இப்போது கூட எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. மாமியாளைக் கட்டிக்கொண்டு இவள் ஒப்பாரி வைத்த போது கூட அம்மா நிதானம் தவறவில்லை. அம்மாவின் வார்த்தைகள் மருமகளைத் தேற்றுவதாகவே அமைந்திருந்தன. பேரனுக்கு முத்தங் கொடுத்து விடைபெற்ற போது மட்டும் ரெண்டு சொட்டுக் கண்ணீர். பேரக்குழந்தைகளைக் குறித்து எல்லாத் தாத்தா பாட்டிகளுக்கும் இயற்கையாயிருக்கிற பாசவுணர்ச்சி. அம்மா அம்மாதான்.

மகன் என்ன செய்தாலும் நியாயமாய்த்தான் செய்வான் என்று உணர்ந்திருக்கிற உன்னதமான அம்மா.அம்மாவுக்கு பாத்தியப்பட்ட அப்பாவுடைய பாதி பென்ஷனை நான் டச் பண்ணவேயில்லை என்கிற சங்கதி லோகத்தில் எத்தனை பேருக்குத் தெரியும்!

இந்தப் பரந்த மனசையெல்லாம் தண்டோராப் போட்டு விளம்பரப்படுத்துகிற ஈனப் பிறவியா நான்! அந்தத் தொகை அப்படியே முதியோர் இல்லத்தில் வரவு வைக்கப்பட்டு அம்மாவுக்கான செலவுகளுக்கு ஈடு செய்யப்பட ஏற்பாடு செய்தாகிவிட்டது.

பிள்ளைக்குத் தன்மேல் இருக்கிற பாசம் அம்மாவுக்குப் புரியும். அம்மாவுக்குப் புரிந்தால் போதும்.இந்த ஒன்பது மாத இடைவெளியில் ஒருவேளை என்னுடைய பாசம் அம்மாவுக்கு மறந்து போக ஆரம்பித்திருந்தால், நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பமாய் இந்த மதர்ஸ் டே வந்தது. என்னைப் பற்றி நானே உயர்வாய்ச் சொல்லிக் கொள்ளக் கூடாது, ஆனாலும் இந்த உண்மையை உலகுக்கு உணர்த்தித் தானாக வேண்டும்; முதியோர் இல்லங்களில் பெற்றவர்களை சேர்த்துவிட்டதோடு அவர்களைக் கை கழுவிவிட்டு, பீடை தொலைந்தது என்று அந்தப் பக்கமே எட்டிப் பார்க்காத பிள்ளைகள் வாழுகிற கலிகாலத்தில், அன்னையர் தினத்தை நினைவு கூர்ந்து, ஒரு புதுப்புடவையோடும், மனைவி குழந்தையோடும் அக்கறையாய் அம்மாவைப் பார்க்க நேரம் ஒதுக்கியிருக்கிற என்னுடைய பாசமும் பண்பாடும் விசேஷமானதுதானே!

முதியோர் இல்லத்தில், எதிர்பாராத வேளையில் மகனையும் மருமகளையும் பேரனையும் பார்த்த அம்மாவுக்கு ஆச்சர்யமும் ஆனந்தமும். அவர்களுடைய புதிய, முதிய தோழிகளுக்கெல்லாம் எங்களை அறிமுகம் செய்து வைத்து சந்தோஷப்பட்டார்கள். அம்மாவின் மிக நெருங்கிய தோழி இவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டாள்.

“ஒங்க அத்தக்கி எப்பவும் ஒன்னப் பத்தித் தாம்மா பேச்சு. வார்த்தக்கி வார்த்த எம்மருமக எம்மருமக எம்மருமக தான். இப்படியொரு மருமக அமஞ்சதுக்கு நா ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்பாங்க. இப்ப நா சொல்றேன். இப்படியொரு மாமியார் அமஞ்சதுக்கு நீ தாம்மா குடுத்து வச்சிருக்கணும், என்ன சொல்ற!”

அம்மா தன் மருமகளை உயர்த்திப் பேசியிருக்கலாம்தான். அதோடு, பாசமிக்க மகனான என்னைப் பற்றியும் அம்மா உயர்வாய்ப் பேசியிருப்பார்கள்தான். அதையும் வெளியே சொல்வதுதானே ஜனநாயகம்!

இந்தப் பொம்பளை இருட்டடிப்புச் செய்து விட்டாள். வினயம் பிடிச்ச கிழவி! எப்படியிருக்கீங்க அத்தேயென்று இவள் அழுது வடிந்ததற்கு, ரொம்ப சந்தோஷமா இருக்கேம்மா, என்னப் பத்தின கவலையே ஒனக்கு வேண்டாம் என்று இவளுடைய கண்ணீரைத் துடைத்து விட்டார்கள் அம்மா.

போகிற போது முன் ஸீட்டில் என் பக்கத்தில் இருந்தவள், என்ன காரணத்தாலோ திரும்பி வருகிறபோது பின் ஸீட்டில் இருந்து கொண்டாள், தன் மகனோடு. பின்புறமிருந்து என்னுடைய கழுத்தருகில் நெருங்கி மெல்ல ஒரு விண்ணப்பத்தை வைத்தாள்.

“என்னங்க, அத்தையத் திரும்ப வீட்டுக்குக் கூட்டிக்கலாங்க.”

“அம்மா தான் அங்க சந்தோஷமா இருக்கறதாச் சொன்னாங்களே.”

“இங்க நா சந்தோஷமா இல்லியேங்க.”

“ஒன்னோட சுயநலத்துக்காக அம்மாவோட சந்தோஷத்தக் கெடுக்கணுங்கறியா!”

என்னுடைய லாஜிக்கால் அடிவாங்கிப் பின்வாங்கினாள். பிறகு காருக்குள்ளே நிசப்தம். நீளமான நிசப்தத்தை ஓரங்கட்டி ஒலித்தது சன்னமாய் ஒரு சின்னக் குரல். நம்ம குட்டிப் பயல்.

“மம்மி, இன்னிக்கி மதர்ஸ் டேயா மம்மி?”

“ஆமாண்டா கண்ணா, ஒங்க டாடி சொல்லித்தான் எனக்கே தெரியும்.”

“டாடி அவங்க மம்மிக்கி கிஃப்ட் குடுத்த மாதிரி, எங்க மம்மிக்கி நா ஒரு கிஃப்ட் குடுக்க வேண்டாமா மம்மி?”

“நீ தாண்டா ராஜா எனக்குப் பெரீய்ய கிஃப்ட். எப்பவும் நீ மம்மி மம்மின்னுட்டு எனக்குப் பக்கத்திலேயே இருக்கணும்டா ராஜா. நீ பெரியவனானப்பறம் இந்த மம்மிய மறந்துரக்கூடாது ராஜா. மதர்ஸ் டேக்கின்னு காத்திருந்து ஒங்க டாடி அவங்க மம்மியப் பாக்கப் போன மாதிரி நீ என்னப் பாக்க ஒரு ஓல்ட் ஏஜ் ஹோம்க்கு வரக் கூடாதுடா கண்ணா. கடைசி வரைக்கும் என்ன வச்சுக் காப்பாத்துவியாடா கண்ணா.”

மகனைக் கட்டிக் கொண்டு இவள் வசனம் பேசியபடி விசும்புவது கண்ணாடியில் தெரிகிறது.

“கடேசி வரக்யும் ஒங்கள வச்சுக் காப்பாத்துவேன் மம்மி. ஓல்ட் ஏஜ் ஹோம்ல ஒங்கள நா சேக்கவே மாட்டேன் மம்மி” என்று இந்தப் பெரிய மனுஷன் பதில் வசனம் பேசுகிறான். உடனே அம்மா, பிள்ளையின் கன்னங்களில் முத்தழை பொழிகிறாள்.என்ன அசிங்கமாய் ஒரு டிராமா போடுகிறாள்! மறைமுகமாய் என்னை வில்லனாய்ச் சித்தரித்து ஒரு டிராமா! தேவையற்ற ஒரு ஹரணை நீளமாய் ஒலித்து என்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினேன்.

கொஞ்ச நேரங்கழித்துத் திரும்பவும் கேட்கிறது பொடிப்பயலின் குரல். “மதர்ஸ் டே மாதிரி ஃபாதர்ஸ் டேயும் இருக்கா மம்மி?”

“இருக்கும், ஏன் கேக்கறே?”

“நா பெரியவனானப்பறம் மம்மி, ஃபாதர்ஸ் டே அன்னிக்கி, புது டிரஸ்ஸும் ஒரு வாக்கிங் ஸ்டிக்கும் வாங்கிக்கிட்டு, ஓல்ட் ஏஜ் ஹோம்க்குப் போவேன், டாடியப் பாக்க.”

திடீரென்று ஸ்ட்டீரிங் கழண்டு கொண்ட மாதிரி வண்டி தடுமாறியது. வாக்கிங் ஸ்டிக்கின் தடிமனான பூணைக் கொண்டு, உச்சி மண்டையில் இடியிறங்கின மாதிரி ஓங்கி ஓர் அடி.

ஒரு கணம் கண்கள் இருண்டு, பின் சகஜ நிலைக்கு வந்தன. மூளையில் ஒரு மின்னல் வெட்டி மறையவும், எதிரே சிக்னலில், யூ டர்ணுக்கான பச்சைக் கொக்கி பளிச்சிடவும் சரியாயிருந்தது.வண்டியை ஒரு வெட்டு வெட்டி வலப்புறம் ஒதுக்கி தடாலடியாய் ஓர் யூ டர்ண் அடித்தேன்.

பின் ஸீட்டில் ஒரு பரபரப்பு. “என்னங்க வண்டி வந்த வழியே திரும்ப போற மாதிரி இருக்கு?” என்றவளின் குரலில் ஒரு குறுகுறுப்பு.

“ஆமா” என்கிறேன் நான்.

“எங்க?” என்கிறாள் இவள்.

“அம்மாவப் பாக்க.”

“அதான் பாத்தாச்சே?”

“பக்கத்துல வச்சுப் பாத்துட்டே இருக்க.”

“நெஜம்மாவா!” என்று பின்னாலிருந்து என் கழுத்தைக் கட்டி, எட்டி என் பிடறியில் தன் அதரங்களைப் பதிக்கிறாள் இவள்.

பிறகு என்னை விடுவிக்காமலேயே கழுத்தைத் திருப்பித் தன் மகனை நோக்கிக் கூவுகிறாள். “கண்ணா, பாட்டிய வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகப் போறோம்டா கண்ணா, பாட்டி இனிமே நம்ம கூடவே இருக்கப் போறாங்க!”

“ஹை” என்று ஒரு எவ்வு எவ்வி நம்ம பொடிப்பயல் முன் ஸீட்டுக்குத் தாவுகிறான். எட்டி, ஸ்ட்டீரியங்கைப் பற்றி, நீளமாய் ஒரு ஹரன் ஒலித்து, தன்னுடைய குதூகலத்தை வெளிப்படுத்துகிறான்.

“டாடி, இனிமே நோ மதர்ஸ்டே, நோ ஃபாதர்ஸ் டே!”

இடது கையால் என் மகனை இழுத்து என்னோடு இணைத்துக் கொள்கிறேன்.

About The Author

1 Comment

  1. Lathamaheswari

    மிகவும் அருமையான கதை. பெற்றவர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பவர்களுக்கு சரியான சாட்டை அடி.

Comments are closed.