எங்கிருந்தோ வந்தான் (1)

பைத்தியக்காரனைப்போல் அவள் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கிறான். வேலையை முடித்துவிட்டு அவள் அலுவலகம் சென்று காக்க வேண்டியது. அவள் வெளியே வந்ததும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அவள் எங்கே போனாலும் அவள் பின்னாலே செல்ல வேண்டும். கண்முடித்தனமான காதல் என்று தன் நண்பர்களை எப்பொழுதோ கிண்டல் செய்த அவன், அதே போன்ற காரியங்களில் தானும் இறங்கிவிட்டது அவனுக்குப் புரியவில்லை.

இல்லை! இனிமேல் கண்மூடித்தனம் வேண்டாம். இன்றோடு இப்படம் கடைசி. அவளிடம் தன் காதலை சொல்லிவிட வேண்டும். இதோ மெயின் ரோட்டில் சிக்னலை க்ராஸ் செய்யப் போகின்றாள். அவள் பின்னாடியே சென்று, அவளை நிறுத்தி தன்னை இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, தன் காதலையும் சொல்லி விட்டால் அவ்வளவுதான்! மனதில் பாரம் குறைந்து விடும். இதோ சிக்னலை கடக்கின்றாள்.

ஏய்.. அந்தக் கார் பாரு.. என்ன பண்ற … ஏய்.. ஏஏஏஏஏஏஏய் … க்ராஸ் பண்ணாத! ஐயோ! அந்த காரைப் பாரு … ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய் !!

சில வருடங்களுக்குப் பிறகு…

அவன் என்னைப் படுத்தும் பாடு தாள முடியவில்லை. அவனைப் பார்க்கவும் முடியவில்லை, பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகப்போகிறது, அவனைப் பார்த்து. ஒரு வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. சொல்லிக்கொள்ள நண்பர்கள் யாருமில்லை. பெற்றோரை பிரிந்து வந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. அப்படி ஒன்றும் பெரிய தூரம் ஒன்றுமில்லை. இதோ, மதுரையில்தான் இருக்கின்றார்கள். ஒரு லால்பாக், ஒரு பாண்டியனில் சென்றுவிடலாம். இருந்தும் வருடத்திற்கு ஒரு முறைதான் செல்வேன். அந்த பழக்கத்தையும் மாற்றியாகிவிட்டது. கடைசியாக எப்பொழுது சென்றேன் என்று ஞாபகம் இல்லை. ஃபோனிலும் பேசுவது கிடையாது. எப்பொழுது பேச நினைத்தாலும் எல்லோரும் ‘ஓ’வென ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விடுவார்கள். கேட்டுக் கேட்டு சலித்தாகிவிட்டது. அதனால், யாரையும் ஃபோன் செய்யக்கூடாது என்று கட்டளையும் போட்டுவிட்டேன். தங்கை மட்டும் எப்பொழுதாவது பேசுவாள். திடீரென்று, "உனக்குப்போயி இப்படி ஆயிடுத்தேக்கா" என்று ஆரம்பிப்பாள், அதனால் அவளையும் நிறுத்தச் சொல்லி நாளாகின்றது. யாரிடம் சென்று நான் முறையிடுவது?!

எப்பொழுது அவனை முதல் முறை சந்தித்தேன்? எப்பொழுது என்னையே அவனிடம் இழந்தேன்? அவன் மனதிலும் இதே போல் எண்ணங்கள் உள்ளதோ இல்லையோ! என் காதலை அவனிடம் சொல்லப்போக, "ஒரு தோழனாகத்தான் உன்னிடம் நான் பழகினேன்" என்றவன் சொல்லிவிட்டால்! அதெல்லாம் இருக்கட்டும், எனக்கெப்படி காதல் ஆசை வந்தது? சென்ற வருடம் வரையில் இப்படி எதுவும் நிகழ்ந்ததில்லை. மனதை கல்லாக்கிக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருந்தேன். என்னிலும் ஆசைகள் எப்படி புகுந்தது? ஆசை – அப்படி என்றால் என்னவென்று தெரியாமல் தானே வாழ்ந்து கொண்டிருந்தேன்.

படுபாவி, முதன் முறை சந்தித்த பொழுதே என்னை இம்ப்ரெஸ் செய்துவிட்டான். சென்னையில்தான் சந்தித்தோம், அப்போலோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தேன். அங்குள்ள சில வசதிகளை பயன்படுத்திக் கொள்வதற்காக, என்னுடைய டாக்டர் என்னை அழைத்துச் சென்றாள். அவள்தான் என்னை அவனிடம் அறிமுகப்படுத்தி வைத்தாள். அவளுடைய பள்ளித் தோழனாம். "இது என் ஃப்ரெண்ட்" என்று அவன் பெயர் சொல்லி என்னிடம் அறிமுகப்படுத்தி வைத்தாள். வேறு தெரிந்த டாக்டர் ஒருவர் வருகையில், "பேசிண்டுருங்க" என்று எங்கள் இருவரையும் விட்டுவிட்டு சென்றாள்.

எனக்கு ஆடவர்களிடம் பேச இஷ்டம் இல்லை. அவன்தான் பேச ஆரம்பித்தான். என் பெயர் என்னவென்று கூட கேட்கவில்லை, ஒரேடியாக "காஃபி சாப்பிட போகலாமா?" என்று கேட்டான். ஐந்து நிமிடம் நடந்தால் ஒரு காஃபி டே உண்டு. எனக்கும் சாப்பிட வேண்டும் போல இருந்ததால், ஒப்புக்கொண்டேன்.

வழியில் திடீரென்று சொன்னான், "எங்க நடந்துண்டே இருக்கீங்க?"

நான், "ஏன், என்னாச்சு?"

"இங்கயே சாப்பிடலாம், சும்மா ட்ரை பண்ணுங்க! அருமையா இருக்கும்!" என்று சொல்லி ஒரு ரோட்டோர பொட்டிக்கடையில் நின்றான்.

என் பெயரைச் சொன்னேன். பெங்களூரில் வேலை பார்ப்பதாக சொன்னேன். அவனும் பெங்களூரில்தான் வேலை பார்ப்பதாக சொன்னான். பெற்றோரைப் பார்ப்பதற்காக சென்னைக்கு வந்தானாம். கல்யாணத்திற்காக பெண் பார்த்துவிட்டு பெங்களூர் திரும்ப இருப்பதாக சொன்னான். மற்றவருக்கு கல்யாணம் என்ற பேச்செடுத்தால், என் மனங்கலங்கிய காலமது.

(தொடரும்)

About The Author