என் மேல் விழுந்த மழைத்துளியே (3)

"உங்க மாமனார் நம்பர் இருக்காடா" என்றான் ஒரு நாள்.

நானும் யதார்த்தமாய்க் கொடுத்துத் தொலைத்து விட்டேன். புவனி அப்புறம் சொன்னாள்.

"உங்க ஃப்ரெண்ட் சரியில்லீங்க"

"ஏன்.. என்ன ஆச்சு"

"எங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணி விஜயாகிட்டே பேசணும்கிறார்"

"யார் விஜயா"

"அதான் எங்க பக்கத்து வீடு.. அவர் தொந்திரவு தாங்காம அவங்க வீட்டு நம்பரைக் கொடுத்துட்டோம்.. நேரங் கெட்ட நேரத்துல எங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணதால"

தலையில் அடித்த்துக் கொண்டேன்.

"ஏம்மா அப்படி பண்ணே.. "

"நீங்க வேற.. நான் கொடுக்காட்டியும் விஜியே கொடுத்திருப்பா"

அப்புறம் விஜயாவின் கதையைச் சொன்னாள். அவளுக்கு ரெண்டு பெண் குழந்தைகள். இரண்டும் எப்போதும் ஏதாவது உடல் நலக் குறைவால் அவதிப்படும் ஜீவன்கள். விஜயாவின் கணவனுக்கு நல்ல வேலை இல்லை. குடிப் பழக்கம் வேறு. எந்தக் கம்பெனியிலும் பொருந்தி இருக்க மாட்டான். இத்தனைக்கும் விஜயாவும் அவனும் காதலித்துக் கல்யாணம் செய்தவர்கள். விஜயா அவனை இப்போதும் குறை சொல்வதில்லை.

‘அவர் நல்லவர்தான்.. பாரேன்.. ஒருநா இல்லாட்டி ஒருநா எங்க கஷ்டம் விடிஞ்சுரும்’ என்பாளாம் புவனியிடம்.

‘இப்ப கணேசன் அவங்க வாழ்க்கையில நுழைஞ்சிருக்கார்.. என்ன ஆவப் போவுதோ’ என்றாள் புவனி கவலையாய். என்னிடம் பொறுப்பு கட்டினாள்.

"பேசுங்க உங்க ஃப்ரெண்டுகிட்டே.."

கணேசனைப் பிடிப்பதுதான் பெரும்பாடாய் இருந்தது. அலுவலகம் போனால் ஆள் இல்லை. அவன் வேலைப்படி அடிக்கடி வெளியே போகலாம். கஸ்டமர் விசிட், ஃபாலோ அப்.. இத்யாதி. எந்த கஸ்டமரையும் பார்த்த மாதிரி தெரியவில்லை.
புவனி எப்போது பேசினாலும் ‘உங்க ஃப்ரெண்ட் வந்திருந்தார்..பக்கத்து வீட்டுக்கு’ என்பாள்.

ஒரு வழியாய் அவனைப் பிடித்து விட்டேன்.

"உன்னோட பேசணும். ரொம்ப அர்ஜெண்ட்"

"இப்ப எனக்கு நேரம் இல்ல"

"கணேஷ்.. பி சீரியஸ்.. நான் உன்னோட பேசியே ஆகணும்"

அரைமனதாய் சம்மதித்தான். ரெஸ்டாரண்ட் மூலையில் அமர்ந்தோம்.

"கணேஷ் நீ செய்யறது உனக்கே நல்லா இருக்கா"

"எது"

"நடிக்காதே.. விஜயா பத்தி கேட்கறேன். அவங்க வீட்டுக்கு நீ அடிக்கடி போறே.. அவ கல்யாணமானவ.. ரெண்டு பெண் குழந்தை இருக்கு"

கணேசனிடம் எந்த பதற்றமும் இல்லை. சிரித்தான்.

"நீ என்னைத் தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கே.. நான் எப்ப போனாலும் அவங்க புருஷன் இருக்கறப்பதான் போறேன். இன் பாக்ட் இப்ப என்னோட ஃப்ரெண்ட் அவங்க புருஷந்தான்"

விஜயாவை அவன் ‘அவங்க’ என்றே சொன்னது திகைப்பாய் இருந்தது.

"எனக்கு அவங்களைப் பிடிச்சிருக்குன்னு சொன்னேன்.. ஆனா அவங்க வாழ்க்கையில எந்தப் பிரச்னையும் வர அளவு மோசமா நடந்துக்குவேன்னு சொன்னேனா.. அவங்க புருஷன்கிட்டே பேசி இப்ப அவரை டிரீட்மெண்ட்டுக்கு அழைச்சுகிட்டு போறேன். அது மட்டுமில்லே.. அவர் ஓரளவு கண்ட்ரோலுக்கு வந்ததும் நல்ல வேலை பார்த்துத் தரப் போறேன்.. அப்புறம் அவங்க குழந்தைகள் படிப்பு செலவு என்னோடதுன்னு சொல்லிட்டேன்.. வருமானம் இல்லாம நல்ல சாப்பாடு இல்லாம இளைச்சுப் போச்சுங்க.. கடனா வச்சுக்குங்கன்னு வீட்டு சாமான் வாங்கிப் போட்டிருக்கேன்.."

நான் திறந்த வாய் மூடாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன் வியப்புடன்.

"நான் நேசிச்சவ எனக்கே கிடைக்கணும்கிறது நல்ல ஆசைதான். ஆனா அதுக்கு சான்ஸ் இல்லாதப்ப, அவங்க நல்லா வாழணும்னு நினைக்கறேன்.. நிஜமாப் பார்த்தா, இப்ப என்மேல எனக்கே ஒரு மதிப்பு வந்திருக்கு.. என்னால தலை நிமிர்ந்து நிற்க முடியும்.. ஒரு நல்ல மனுஷனா.."

என் கண்களில் நீர் தன்னிச்சையாய் வழிந்தது. நான் கேலி செய்தவன் இன்று என் முன் விசுவரூபம் எடுத்து நிற்கிறான்.
"அவங்க வீட்டுக்கு நான் போகறப்ப அவங்க புருஷன் இல்லேன்னா, அப்புறம் வரேன்னு சொல்லிட்டு வந்திருவேன்.. மறுபடி சொல்றேன்.. எனக்கு உருவமில்லாத அந்த அன்பு பிடிச்சிருக்கு.. வேற எந்த உள்நோக்கமும் இல்ல.. என் மனசுக்குள்ள"
எனக்கு பேச்சு மறந்து போனது. கணேசன் கைகளைப் பற்றி அழுத்தமாய்க் குலுக்கினேன்.

About The Author

7 Comments

 1. madhu

  Excellent story.. diffrent angle of love… a good base for an excellent tamil movie…. Rishaban Sir, Kalakkuringa…. Hats off

 2. கீதா

  அற்புதமான கதை. காதலிக்காக செய்பவர்கள் இருக்கலாம். ஈர்க்கப்பட்டதால் ஒரு பெண்ணின் வாழ்வைச் சரி செய்ய நினைக்கும் கணேசனின் குணம் போற்றுதற்குரியது. ஆனால் அவள் கணவன் அதைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தில் இருக்கவேண்டும். இல்லையெனில் குழப்பம்தான் மிஞ்சும்.

 3. Mannai Pasanthy

  கர தமிழ் புத்தாண்டில் நல்ல தரமான கதையை தந்தமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். மன்னை பாசந்தி

 4. chocks

  ரிஷபன் நல்ல கோனத்தில் யோசித்திருக்கிரார். காதலின் புதிய ருபம். சொக்கலிங்கம்

Comments are closed.