எஸ்.. எம்…எஸ்!” (1)”

கை தவறி மொபைலை எங்காவது வைத்து விடுவதும் பிறகு அதை தேடுவதும் எனக்கு வாடிக்கையாகி விட்டது.
சங்கரன் சிரித்தான்.
"அது எப்படி ஒவ்வொரு தடவையும் கை தவறி வைப்பீங்க? சரி. நம்பரைச் சொல்லுங்க. கால் பண்ணா செல் இருக்கிற இடம் தெரிஞ்சுரும்"
"நம்பர்?"
மறுபடி மூளைப் பிரதேசத்தைத் துழாவினேன். போன மாசம் வரை வைத்திருந்த எண் ஞாபகத்தில் வந்தது. புது கனெக்ஷன் நம்பர்.. அதற்குள் என் செல்லே அழைத்தது. மெசேஜ் ஏதோ வந்திருக்கவேண்டும். ‘பல்லெலக்கா..’ டியூன் கேட்டதும் ஓடிப் போய் •பைலுக்குள் இருந்த செல்லை எடுத்துக் கொண்டேன்.
சங்கரன் மறுபடி சிரித்தான். "இனியாச்சும் பத்திரம்"
இப்போது லஞ்ச் நேரம். இதற்காகத் தனியே மூலையாக பெரிய மேஜை போட்டிருந்தது. ஒருவருக்கொருவர் கொண்டு வந்திருந்த உணவுப் பதார்த்தங்களைப் பரிமாறிக் கொண்டோம். சங்கரன் சினிமாப் பாட்டுப் பிரியன். அதுவும் பழைய பாடல்கள்.
"என்ன.. இன்னிக்கு பாட்டு கிடையாதா?" என்றான்.
"என்ன பாட்டு வேணும்"
"வசந்த கால நதிகளிலே.."
சிரித்துக் கொண்டேன். முதல் தடவை எங்கள் அலுவலக பங்ஷன் ஒன்றில் நான் தான் இறை வணக்கம் பாடினேன். நிகழ்ச்சி முடிந்ததும் சங்கரன் ஓடி வந்து கை கொடுத்தான்.
"ஸ்வீட் வாய்ஸ்"
பக்கத்தில் நின்ற நாராயணசாமி "அவர் ரெண்டு வாய்ஸ்லயும் பாடுவார்.. ஜெண்ட்ஸ்.. லேடீஸ்" என்றதும் திகைப்புடன் பார்த்தான்.
"நிஜம்மாவா"
"ம்"
"ஏதாச்சும் ஒரு லைன் பாடுங்க பிளீஸ்"
வசந்த கால நதிகளிலே தான் பாடினேன். இரு குரல்களிலும். அதிலிருந்து எப்போது பாடச் சொன்னாலும் முதல் சாய்ஸ் வசந்த கால நதிகள்! முழுப் பாட்டையும் பாடினேன் மெல்லிய குரலில். சங்கரனின் கண்கள் மினுமினுத்தன.
சாப்பாட்டு நேரம் முடிந்து என் இருக்கையில் அமர்ந்தேன். கை அனிச்சையாய் செல்லை மேஜை மேல் வைத்தது. இது புனிதாவின் கைபேசி. என்னுடையது இப்போது அவளிடம் இருக்கிறது. அதுவும் ஞாபகமறதிதான். காலையில் கிளம்புகிற அவசரத்தில் அவளுடையதை எடுத்துக் கொண்டு வந்து விட்டேன். வந்ததும் முதல் ரிங்கே அவள் தங்கையிடமிருந்து.
"என் நம்பருக்கு பண்ணும்மா. மறந்து போய் இதை எடுத்துகிட்டு வந்துட்டேன்" என்றேன்.
"சாயங்காலம் மறக்காம நம்ம வீட்டுக்கு வந்திருங்க" என்றாள் பதிலுக்கு.
சிரிக்க முடியவில்லை. கைபேசி இருப்பது பல நேரங்களில் உதவி. இப்படி சில சங்கடங்களும்.
மீண்டும் ‘பல்லேலக்கா..’ ஒலித்தது. அடுத்த மெசேஜ். யாரது.. எடுத்துப் பார்த்தேன். இரண்டாவது மெசெஜ்.. en pathil illai? ‘ஏன் பதில் இல்லை’ தமிழ் + ஆங்கிலக் கலப்பு. எதற்கு பதில்?
முதல் மெசேஜ் பார்த்தால் புரியுமா.. இப்போது என் கை விரல்களில் நடுக்கம். முதல் மெசெஜ் திறந்து கொண்டது.
‘எப்படி இருக்கே.. எனக்கு உன் ஞாபகம்தான். உனக்கு?’

(தொடரும்)

About The Author

1 Comment

  1. Girijamanaalan

    நண்பர் ரிஷபன் அவர்களின் படைப்புகள் தொடர்ந்து நிலாவின் ஒளிக்கு மேன்மேலும் ஒளியூட்டட்டும். வாழ்த்துக்கள்!
    – கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.

Comments are closed.