ஒரு பூனை புலியாகிறது (3.2)

இந்த அத்தியாயத்தின் முன்பாதி: விடாதே, பிடி (3.1)

சேரனின் வேண்டுகோள் விஜயின் வியப்பை விந்தியமாக உயர்த்தியது. அவன் சேரனை நன்றாகப் பார்த்தான். அவனிடம் ஒரு வகைப் பதட்டம் இருந்தது. அவன் உடையில் இன்னும் ஆங்காங்கே மண் ஒட்டிக் கொண்டிருந்தது. கண்களில் ஏதோ ஒரு கலவரம் தெரிந்தது.

"சேரா! உனக்காக நான் எதுவும் செய்வேன். ஆனால் இப்போது மணி ஒன்பதரைக்கு மேலாகி விட்டது. இதற்கு மேல் டிரெய்னும் இல்லை, பஸ்ஸும் இல்லை. இந்த இரவில், இந்தக் குளிரில், கோயமுத்தூருக்குப் போக வேண்டிய அவசரம் என்ன? உன் அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ உடம்பு சுகமில்லையா? ஏதாவது செய்தி வந்ததா?"

‘இல்லை’ என்பதற்கு அறிகுறியாகத் தலையை ஆட்டினான், சேரன்.

"பின் ஏன் இப்பவே கோயமுத்தூர் போகணும்னு சொல்றே? ரெண்டு நாள் கழிச்சு ஊருக்குத் திரும்புவதுதானே நமது திட்டம்?"

"ஆமாம் விஜய். ஆனாலும் நான் இப்போதே கோயமுத்தூர் போகணும். ஏன்-எதற்காக என்று கேட்பதற்கு உனக்கு உரிமை இருக்கு. ஆனால் இப்போ அதை நான் சொல்லக் கூடாது. திரும்பவும் உன்னைக் கோவையில் சந்திக்கும்போது நிச்சயம் சொல்றேன். என்னை எப்படியாவது கோவைக்கு அனுப்பு."

சேரனின் குரலிலும் பதட்டம். அவன் திடீரென்று மாறியிருப்பது தெரிந்தது. சேரன் ஏன் இப்படியிருக்கிறான்? எதற்காகக் கோவைக்குப் போக வேண்டும் என்று விரும்புகிறான்? விஜய் இதை மேலும் கேட்க விரும்பவில்லை.

"சரி, சேரா! நீ இப்போது சொல்ல வேண்டாம். உன் ரகசியத்தை நீ விரும்பும்போது சொல். ஆனால் இந்த இரவில் உன்னை அனுப்ப முடியாது. வெளியே பனி மூட்டம் அதிகம். குளிரும் அதிகம். அதனால் மலைவழியில், கொண்டை ஊசி வளைவுகளில் இந்தச் சூழலில் செல்வது நல்லதில்லை. அதற்கும் மேலே ஒன்று! டிரைவர் காலையிலிருந்து ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டேயிருந்தான். அப்பா அவனிடம், நல்லாத் தூங்கு! காலையிலே பத்து மணிக்கு எழுந்தாலும் போதும்னு சொன்னார். இந்நேரம் அவன் அசந்து தூங்கியிருப்பான். அவனை எழுப்பி வண்டி எடுக்கச் சொல்றதும் சரியில்லே. சேரா! பொழுது விடிந்ததும் உன்னை முதல் பஸ்ஸிலே கோவைக்கு அனுப்பறேன். சரிதானே!"

சேரனால் ‘சரி’ என்று சொல்வதைத் தவிர வேறெதுவும் சொல்ல முடியவில்லை.
விஜய் படுத்து விட்டான். சேரனும் படுத்தான். அவனால் தூங்க முடியவில்லை. படுக்கையில் நெளிந்து கொண்டேயிருந்தான்.

"சேரா! காலையிலே எழுந்திருக்கணும்னா இப்போ நல்லாத் தூங்கணும். மத்த நினைவுகளை ஒதுக்கிவிட்டுத் தூங்கறதிலே கவனம் செலுத்து."

விஜய் குரல் ஒலித்தது.

"நீ சொல்வது உண்மை! சீக்கிரம் தூங்கினால்தான், சீக்கிரமாக எழுந்து கொள்ளமுடியும். குட் நைட் விஜய்."

"குட் நைட்."

சேரன் சீக்கிரமாகத் தூங்கிவிட்டான். மறுநாள் காலை "சேரா!" என்று விஜய் அழைத்தபடி அவன் உடம்பையும் அசைத்தபோதுதான் எழுந்தான்.

எழுந்தபோதே, "மணி என்ன விஜய்! பொழுது விடிஞ்சுட்டுதா?" என்று கேட்டான், சேரன்.

"மணி ஏழாயிட்டுது. ஆனால் பொழுது விடியலே. ஊட்டி சூரியன் கொஞ்சம் சோம்பேறி. தாமதமாத்தான் எழுந்திருப்பான். நீ அவசரமாக போகணுன்னு சொன்னதாலே உன்னை எழுப்பிட்டேன். டிரைவரையும் எழுப்பச் சொல்லிட்"

"நன்றி விஜய்" என்றபடி போர்வையை விலக்கி எழுந்தான் சேரன். அடுத்த அரை மணிக்குள் சுடச்சுட இட்லி சாப்பிட்டு விட்டுத் தயாரானான்.

விஜய் அவனிடம் இருபது ரூபாய் கொடுத்தான்.

"சேரா! இங்கே அப்பாவுக்குக் கார் தேவை. அதனால் நீ பஸ்ஸில் ஊருக்குப் போகணும். டிரைவர் உன்னை பஸ் ஸ்டாண்டில் விடுவான். கோவைக்கு பஸ் கட்டணம் பத்து ரூபாய்க்குள் இருக்கும். அதற்குத்தான் இந்தப் பணம்."

"அப்போ, பத்து ரூபாய் போதுமே! எதுக்கு இருபது ரூபாய்?" என்றபடி, இரண்டு பத்து ரூபாயில் ஒன்றை அவனிடம் நீட்டினான் சேரன்.

"இருக்கட்டும். ஒருவேளை பதினோரு ரூபாயாக இருந்தால் என்ன செய்யறது? எனக்கு பஸ்சார்ஜ் தெரியாது. மீதியை அப்புறம் வாங்கிக்கிறேன்."

சேரன் இருபது ரூபாயைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். இருவரும் பங்களாவின் வெளியே வந்தார்கள்.

கார் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்த டிரைவர், அதை நிறுத்தி, கார் கதவைத் திறந்துவிட்டான். சேரன் பின் சீட்டில் உட்கார்ந்தான். விஜயிடம் விடை பெற்றுக்கொண்டான்.
கார் பங்களாவை விட்டு வெளியே வந்தது. பனி மூட்டம் முற்றிலும் விலகாத சாலையில் சென்றது.
சிறிது நேரம் பொறுத்து சேரன் தற்செயலாகத் திரும்பிப் பார்த்தான். தூரத்தில் ஒரு வெள்ளை நிற அம்பாசிடர் கார் வருவது தெரிந்தது.

சில நிமிடம் பொறுத்து மீண்டும் திரும்பிப் பார்த்தான் சேரன். அதே அம்பாசிடர் கார், அதே இடைவெளியில் வந்தது. காரையே உற்றுப் பார்த்தான். காரின் முன் சீட்டில் டிரைவரும், டிரைவருக்குப் பக்கத்தில் ஒருவனும் இருப்பதைப் பார்த்தான்.

டிரைவர் குறுந்தாடி வைத்திருந்தான். தலையில் ஒரு சென்டி மீட்டர் உயரமுள்ள முடி! அண்மையில் மொட்டையடித்துக் கொண்டான் போலும். அருகே இருந்தவன் தலையில் அடர்த்தியான முடி! சுருள் சுருளான முடி!

‘யார் இவர்கள்?’

‘ஒருவேளை நேற்று என்னை விரட்டிய ஆசாமிகளோ?’

"டிரைவர்! மெதுவாகப் போங்க" என்றான் சேரன்.

டிரைவர் கிளட்சை மாற்றி, ஆக்சிலேட்டரை மிதித்த காலின் அழுத்தத்தைக் குறைத்து, காரின் வேகத்தைக் குறைத்தான்.

சேரன் திரும்பிப் பார்த்தான். வெள்ளை அம்பாசிடரும் தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டதே தவிர, சேரனின் காரைத் தாண்டிப் போகவில்லை.

"டிரைவர், கொஞ்சம் வேகமாகப் போங்க."

கார் வேகமாகச் சீறிப் பாய்ந்தது. பின்னே வந்த அம்பாசிடரும் அதே வேகத்தில் வந்தது. இரண்டுக்கும் இடையே இருந்த தூரம் மாறவில்லை.

அம்பாசிடரில் வருபவர்கள் தன்னைப் பின்தொடர்ந்து வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டான் சேரன்.

‘நேற்றிரவு அவர்களிடமிருந்து தப்பிவிட்டேன். இப்போது எப்படித் தப்புவது?’

சேரன் கவலையடைந்தான். அடிக்கடி பின்னே திரும்பி அம்பாசிடரைப் பார்த்தபடியிருந்தான்.
சேரன் வந்த கார் சேரிங்கிராஸை அடைந்து, திரும்பி சூப்பர் மார்க்கெட்டைக் கடந்து சென்றது. சிறிது தூரத்தில் உதகையின் பிரதான மார்க்கெட். அதற்கு முன்னே சாலை Y போல இரண்டாகப் பிரிந்தது. மார்க்கெட், இரண்டு சாலைகளுக்கு நடுவே இருந்தது.

சேரன் வந்த கார் வலப்புறம் உள்ள சாலையில் செல்ல வேண்டும். அப்போது இடப்புறமிருந்த சாலையிலிருந்து ஒரு பெரிய லாரி வந்து கொண்டிருந்தது. அது நேராகச் செல்வதாகத்தான் தெரிந்தது. அதனால் டிரைவர் தன் வழியே காரைச் செலுத்தினான். வேகத்தைக் குறைக்காமல் செலுத்தினான். அதே நேரத்தில் எதிரே இடப்புறச் சாலையில் வந்த லாரி ஒரு ‘யூ டர்ன்’ போட்டுத் திரும்பி, வலப்புறச் சாலையில் செல்ல முயன்றது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத டிரைவர், காரை நடைபாதையை உரசியபடி ஓட்ட, லாரிக்காரன் திடீர் பிரேக் போட்டான்.

சேரன் வந்த கார் மயிரிழையில் தப்பிச் செல்ல, இடையே புகுந்த லாரி, சாலையின் குறுக்கே நின்றது. அதனால், பின் தொடர்ந்த அம்பாசிடர், லாரிக்கு மறுபுறம் நின்றுவிட்டது.

பின்னே திரும்பிப் பார்த்த சேரன் இதைக் கவனித்தான். உடனே, "டிரைவர், காரை நிறுத்துங்க. சீக்கிரம்" என்றான்.

கார் நின்றது.

சேரன் அவசர அவசரமாகக் காரிலிருந்து இறங்கினான்.

"டிரைவர்! நானே பஸ் ஸ்டாண்டுக்குப் போய் விடறேன். நீங்க இப்படியே எங்காவது கொஞ்சம் சுற்றிவிட்டுத் திரும்பிப் போங்க. பிளீஸ்! காரணம் கேட்காதீங்க! கிளம்புங்க!"

நேற்றிரவே சேரனின் கலவரத்தைப் பார்த்த டிரைவர் இன்று ‘மெதுவாப் போங்க-வேகமாப் போங்க’ என்று சேரன் கூறியதையும் பின்னே அம்பாசிடர் தொடர்ந்து வருவதையும் கவனித்திருந்தான்.

‘சேரனை யாரோ பின் தொடர்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பத் துடிக்கிறான்’ என்பதைப் புரிந்துகொண்டான். அதனால் காரை உடனே கிளப்பினான்.

சேரன் சாலையின் ஓரம் இருந்த ஒரு கடை மறைவில் நின்று கவனித்தான்.

இரண்டு நிமிடத்தில் சாலையின் குறுக்கே நின்ற லாரி, திரும்ப முடியாமல், பின்னே சென்றது. அது கொஞ்சம் நகர்ந்ததும், ஒரு ஆட்டோ ரிக்ஷாவின் சாமர்த்தியத்தோடு அம்பாசிடர் அந்த வழியில் நுழைந்தது. நுழையும்போதே டிரைவர் எதிரே பார்த்தான். தூரத்தில் நீலநிற பியட் போவது தெரிந்தது. உடனே ஆக்சிலேட்டரை அழுத்தினான். அம்பாசிடர் காற்று வேகத்தில் பறந்தது.

கடையின் மறைவில் நின்ற சேரன் அம்பாசிடரை நன்றாகப் பார்த்தான். உள்ளே இருந்த இரண்டு பேரையும் கவனித்தான். அவர்கள் பார்வை அவன் பக்கம் திரும்பவில்லை.

சேரன் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டான்.

விஜயின் டிரைவர் வேகமாகப் போயிருக்கலாம். ஆனாலும் அப்படிப் போகவில்லை. ஓரளவு நிதானமாகச் சென்றான். கொஞ்ச நேரத்தில் அம்பாசிடர் பின்னே வருவது தெரிந்தது. ‘சேரன் பஸ்ஸைப் பிடித்துச் செல்லும் வரை இந்த அம்பாசிடரில் இருப்பவர்களைக் கொஞ்சம் போக்குக் காட்டி அழைத்துச் செல்ல வேண்டும்’ என்று நினைத்தான். அதனால் காரைத் திருப்பி மார்க்கெட்டின் மறுபுறம் இருந்த சாலையில் செலுத்தினான். அம்பாசிடரும் அப்படியே சென்றது. அதைக் கண்டு மகிழ்ந்த டிரைவர் மீண்டும் சேரிங் கிராசைக் கடந்து வலப்பக்கம் திரும்பிப் போனான். அம்பாசிடரும் அப்படியே சென்றது.

இப்படி அரை மணிநேரம் போக்குக் காட்டிய பிறகு விஜயின் பங்களாவுக்குச் சென்றான், டிரைவர். அப்போதும் அம்பாசிடர் அதைப் பின் தொடர்ந்ததைக் கவனித்தான்.

காரை, போர்டிகோவில் நிறுத்திவிட்டு வெளியே வந்து டிரைவர் பார்த்தபோது, அம்பாசிடர் வந்த வழியே திரும்பிச் சென்று கொண்டிருப்பதைக் கண்டான்.

‘சேரனைப் பிடிக்கவா பார்த்தீங்க! அவன் இந்நேரம் குன்னூரைக் கடந்திருப்பான், தெரியுமா?’
டிரைவர் மனத்திலே நினைத்தபோதே அவன் முகத்திலே ஒரு வெற்றிப் புன்னகை படர்ந்தது.
அந்த டிரைவருக்கு, அம்பாசிடரில் வந்தவர்கள் துப்புத் துலக்குவதில் மிகத் திறமையானவர்கள் என்பது தெரியாது.

அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு அதே மனிதர்கள் கோயமுத்தூரில், நெசவாளர் காலனியில், சேரனின் வீட்டின் மூடிய கதவைத் தட்டிக் கொண்டிருந்தார்கள்!

–புலி வளரும்…

About The Author