ஓம் எனும் உயரிய மந்திரம்

"ஓம்" என்னும் ப்ரணவ மந்திரம் அனைத்து ஒலிகளின் மூலாதாரம். இது சமஸ்கிருத மொழியின் எழுத்துக்களான அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியது. இம்மூன்று எழுத்துக்களும் இந்த அகிலத்தைக் குறிப்பவை, மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியவர்களைக் குறிப்பவை, மூன்று வேதங்களைக் குறிப்பவை என்று வேதங்கள் மூலம் அறியப்படுகிறது. ‘அ’ மற்றும் ‘உ’ எழுத்துக்கள் சேர்ந்து ‘ஓ’ என்று ஒலிக்கப்படுகிறது.

முருகப்பெருமான் ப்ரணவத்தின் பொருளை பிரம்மாவிடம் கேட்டபோது, அறியாமல் விழித்தவரை சிறைக்கு அனுப்பி, "என்ன பொருள் என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்ட சிவபெருமானுக்கு குருவாய் அமர்ந்து உபதேசித்தார் என்பது நமக்கெல்லாம் தெரியும்.

இந்த மந்திரமானது ஆன்மாவுக்கு உபதேசிக்கப்படும் மந்திரம். ஆகையால், புற உடலுக்கும் உலகிற்கும் கேட்காதவாறு செவிவழிக் காற்று வழியாக ஆன்மாவிற்கு ஒரு குருவால் உபதேசிக்கப்பட வேண்டும்.

ஒலிகளுக்கு அதிர்வு உண்டு என்று ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஓம்காரம் உச்சரிக்கப்படும் பொழுதும் ஒரு அதிர்வலை உண்டாகிறது. இது மூலமந்திரம். ஆகையால் இந்த அதிர்வலையின் ஆற்றலானது அளப்பரிய ஒரு சக்தியை உச்சரிப்பவர்களுக்கு உண்டாக்குகிறது. இருவர் எதிரெதிரே அமர்ந்து இந்த ஓம்காரத்தை மனது ஒருமித்து பலமுறை ஒரே மாதிரி உச்சரிக்கும் பொழுது, இருவரின் அதிர்வலைகளும் ஒரு நடுப்புள்ளியில் ஒரு அதிர்வுப்புலத்தை உண்டாக்குகிறது. நடுப்புள்ளியில் சந்தித்த அந்த அதிர்வலைகள் திரும்ப உச்சரிப்பவரிடமே வந்து சேரும்பொழுது அவரிடம் ஒரு வித ஆற்றல் வந்து சேருகிறது. அந்த ஆற்றலானது நம்முள்ளிருக்கும் உடலுக்கு மூலாதாரமாக இருக்கக்கூடிய அந்த இயங்கு சக்தியைத்(சூஷ்ம சக்தி) தூண்டிவிடுகிறது. இதுவரை உடலின் சக்தியாக மட்டுமே இயங்கி வந்த அந்த சூஷ்ம சக்தியானது இந்த அதிர்வால் ஆத்மாவுக்கும் உடலுக்கும் ஒரு அளப்பரிய சக்தியை அளிப்பதாக மாறுகிறது. உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஒரே நிலையில் பார்க்கக் கூடிய ஒரு பக்குவத்தையும் அவற்றின்பால் எல்லையற்ற அன்பு செலுத்தும் ஒரு மனதையும் இந்த மந்திரமானது நமக்கு அளிக்கும்.

இந்த உலகமே யாராலும் உணர்ந்து கொள்ளவும் முடியாத , காணவும் இயலாத ஒரு சூஷ்மமான அலைவரிசையில்தான் இயங்கி வருகிறது. இந்த ஓம்காரத்தின் மூலம் பிறக்கும் அதிர்வானது உலகத்தின் அதிர்வோடு ஒரு சூஷ்மமான பிணைப்பினை உருவாக்குகிறது. அதாவது நம்முள் உள்ள ஆத்மாவை உலகம் இயங்குவதற்கு ஆதாரமாக உள்ள சூஷ்மமான இயங்கு சக்தியோடு இணைப்பதற்கு இந்த ஓம்காரம் உதவுகிறது. இது ஒருமுறை இணைக்கப்பட்டுவிட்டால் அந்த பிணைப்பானது பல ஜென்மங்களுக்கும் அந்த ஆத்மாவோடு இணைந்து வரும்.

இதனால் நமக்கு எதன் மூலமாகவும் துன்பம் என்பது நேராது. அல்லது துன்பமானது துன்பமாக நமக்குத் தெரியாது. மிகப் பெரும் துன்பமான மரணம் என்பதையும் நம்மால் வேறு விதமாக எடுத்துக் கொள்ள முடியும். அதாவது மரணம் என்பது உடலுக்கே தவிர ஆத்மாவுக்கல்ல என்பது நமக்குத் தெரிய வரும்.

இந்த ஓம்கார மந்திரத்தை ஒரு குழுவாக பல பேர் ஓரிடத்தில் எதிரெதிரே அமர்ந்தும் இதைச் செய்யலாம். அங்கு ஏற்படும் அதிர்வலைகளானது அவ்விடத்தில் அமர்ந்து உச்சரிக்கும் அனைவருக்கும் திரும்பக் கிடைக்கும். இது ஒரே நாளில் கிடைத்து விடாது. தொடர்ந்து பல நாட்கள் இவ்வாறு செய்து வர, அந்த அதிர்வலைகள் அந்த இடம் முழுதும் நிரம்பியிருப்பதை நம்மால் உணர முடியும்.

இங்ஙனம் அதிர்வலைகள் கிடைக்கப் பெற்ற ஒருவர் அந்தக் குழுவிலிருந்து தனியே வேறு ஒரு இடத்திற்குச் சென்றுவிட்டாலும் (உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும்!) குழுவிலுள்ள மற்றவர்கள் அதை உச்சரிக்கும்பொழுது அந்த அதிர்வலையை அவரால் அங்கு உணர முடியும். நம்முள் உருவான அலைவரிசையானது வேறு ஒரு நபரிடத்திலும் இருந்தால் (அவர் எந்த நாட்டவரானாலும், எந்த மதத்தவரானாலும்!) அவரிடம் ஒருவிதமான ஈடுபாடு உருவாகி விடுகிறது. அதனால் நாம் வெளியில் செல்லும்போது முன்பின் அறியாத யாரோ ஒருவரைக் (ஒரே அலைவரிசை உடையவராக இருந்தால்) காணும் போது அவரை எங்கோ பார்த்தது போலவும் நெடுநாட்கள் நட்பு உள்ளது போலவும் தோன்றும்.

இதை ஒரு குழுவாக அமர்ந்து மனம் ஒருமித்து செய்யும்பொழுது அதுவே பிரார்த்தனை ஆகிறது. இந்தக் கூட்டுப் பிரார்த்தனை சொல்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அங்கிருக்கும் மற்றவர்களுக்கும், சொல்லப்பட்ட இடத்தின் அருகாமையில் இருப்பவர்களுக்கும் பலன் பல தரும் ஆற்றல் உடையது. வள்ளலார் கூறிய ஆன்மநேய ஒருமைப்பாடு வழிக்கும் இதுதான் மூலம்.

கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் இத்தனையும் எதற்காக கட்டப்பட்டிருக்கின்றன? பல பேர் கூடி மனம் ஒருமித்து ஒரு ஒலியை சத்தமாக ஒரே மாதிரி உச்சரிக்கும் பொழுது அந்த இடத்தில் ஒரு அதிர்வு உண்டாகிறது. இவ்வாறு பல காலமாக உச்சரித்து உச்சரித்து அந்த இடம் முழுவதும் நல்ல அதிர்வு நிறைந்திருக்கும். பாரத்தோடு அந்த இடங்களுக்கு வருபவர்களுக்கு அது ஒரு இனம்புரியாத ஆறுதலை அளிக்கக்கூடிய இடமாக மாறி விடுகிறது.

கடவுள் பஞ்ச பூதங்களிலும் இருக்கிறார். பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்ட நம்மிலும் இருக்கிறார். கோயிலுக்குச் சென்றால் சாமி சன்னிதியில் முட்டி மோதாமல் கோவிலின் உள்ளேயே ஓரிடத்தில் தனியே அமர்ந்து இந்த ஓம்காரத்தை ஒலித்து வர எல்லோருக்கும் கிட்டாத ஒரு பேரின்பம் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.

(நன்றி: யோகா குரு திரு. உன்னிகிருஷ்ணன்)

About The Author

6 Comments

 1. suganthe

  நல்ல தகவல் நன்றி. இதனால் தான் என்னவோ எமது நாட்டில் ஆம் என்ற வார்த்தைக்குப் பதிலாக ஓம் என்ற வார்த்தையை எப்போதும் உபயோகிப்பார்கள்.

 2. maayan

  ஓம் காரத்தை ‘அ..உ..ம்’ என்று உச்சரிப்பதே சரி. அதில் அ” உச்சரிப்பு அடிவயிற்றில் இருந்து சப்தமாக வெளிவர வேண்டும், “உ” உச்சரிப்பு சப்தமாக அடிவயிற்றைக் கடந்து நெஞ்சுக்கூட்டுக்கும் அடிவயிற்றிற்கும் இடையில அதிர்வை ஏற்படுத்த வேண்டும், “ம்” சப்தமானது வயிற்றில் ஏற்பட்ட அதிர்வு மூக்கு நுனியில் முடியுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதுவே சரியான ஓம் கார உச்சரிப்புமுறை என்று பல ஆன்மிக குருமார்களும் தெரிவிக்கின்றனர்.”

 3. P.Barathan

  ஓம் என்ற உச்சரிப்பு ஒலிக்கட்டும்
  நிலாச்சாரல் சேவை செழிக்கட்டும்

 4. DeviRajan

  வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி சுகந்தி.

  மாயன் மிகச்சரியான கருத்து. நன்றி!

  வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி பரதன்!!!

 5. p.prithivirajan

  நல்ல தகவல் நன்றி. இதனால் தான் என்னவோ எமது நாட்டில் ஆம் என்ற வார்த்தைக்குப் பதிலாக ஓம் என்ற வார்த்தையை எப்போதும் உபயோகிப்பார்கள்

 6. Venkatachalam

  இதை நாம் உச்சரிப்பதற்க்கு ஒரு குருவின் உபதேசம் தேவை. ஏனென்றால் இதில் மாத்திரைகள் கணக்கு உண்டு. ஸ்வரஸ்தானன்க்ளும் உண்டு. ஸ்வரம் உச்சரிப்பு தவறினால் விபரீத பலன் கிடைக்கும். ஆகயால் இது மூலமந்திரமானதால் குருவின் வழியே கற்க்க வேண்டும். – Achalam

Comments are closed.