கடவுளுடன் ஒரு சுவாரஸ்யமான நேர்காணல்

நம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ விதமான, வித்தியாசமான பல்துறை வித்தகர்களி‎ன் நேர்காணல்களைக் கண்டிருக்கிறோம். மனிதன் – கடவுளின் இடையே அப்படி ஒரு நேர்காணல் நடந்தால் எப்படியிருக்கும்? கடவுளிடம் இதைக் கேட்கவேண்டும், அதைக் கேட்கவேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் உண்டுதானே?

மனித‎ன் : மனிதனின் சிறு சிறு குறைபாடுகள் யாவை?

கடவுள் : எளிதான விஷயங்களை கடினமாக்கிக் கொள்ளுவதே.

மனிதன்: மகிழ்ச்சியாக வாழ்வதெப்படி?

கடவுள்: மிகவும் எளிய வழிகள் – எதையும் எதிர்பார்க்காதீர்கள்; உங்களிடம் உள்ள அன்பை, மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்; குழந்தைகளாக வாழ்ந்திடுங்கள்; உண்மையே பேசிடுங்கள்; உண்மையே பேசுவதால் எதையும் நினைவில் கொள்ளத் தேவையில்லை.

மனிதன்: பிரச்சினைகள் ஏன் ஏற்படுகி‎ன்றன?

கடவுள்: திறமைகளை விட மனிதனின் தேவைகள் அதிகரிப்பதும், அவைகளை நிறைவேற்ற முயல்வதே பிரச்சினைகள் ஏற்படக்காரணம்.

மனிதன்: பிரச்சினைகளில் ஒரு முடிவுக்கு வர முடியாதபோது என்ன செய்ய வேண்டும்?

கடவுள்: காரணங்களை ஆராயாமல், உன்னுடைய உள்ளம் சொல்வதைக்கேட்டு நடந்திடு.

மனிதன்: தோல்வியினால் வெறுப்பு, மனஅழுத்தம் போன்ற உணர்வுகள் ஏற்படும் போது என்ன செய்வது?

கடவுள்: நடக்க இயலாத போது பறக்க இயலும் என்பதை நினைவில் கொள்.

மனிதன்: என்னுள்ளே பல வகையான எண்ணங்கள் தோன்றுகி‎ன்றன. எதனை செய்வது? எதனை விடுவது?

கடவுள்: அனைத்தையும் கேட்கப் பழகு. கேட்பதென்பது நீ எண்ணுவது போல் எளிதல்ல. எதனையும் ஆராயாமல் முடிவு செய்யக் கூடாது. உன்னுடைய காரணங்கள், புரிதலில் இடையிடாமல் பார்த்துக்கொள். நீ முழுமையாக அறியாத எதைப் பற்றியும் விமர்சிக்காதே. உன்னைச் சுற்றி ஏற்பட்டுள்ள தடைகளை உடைத்தெறிந்து வெளியே வா. உன் மூளைக்கு ஓய்வு கொடு. தோன்றும் எண்ணங்களை அமைதியாக கேட்கப் பழகு. விளக்கங்கள் தோன்றும். ஆழ்ந்த உண்மையை அறிவாய்.

மனிதன்: மற்றவர்களிடம் நிலையான அன்பு கொள்வதெளிதா?

கடவுள்: உண்மையை அடித்தளமாகக் கொண்டு மற்றவர்களிடம் அன்பு கொள். பொய், ஏமாற்று வேலை உறவுகளை உடைத்தெறிந்துவிடும். உண்மை வெளிவரும்போது உறவுகள் காற்றில் கரைந்து காணாமல் போய்விடும். செய்யும் தவறை ஒப்புக் கொள்வதன் மூலம் நிச்சயமாக மன்னிப்பைப் பெற முடியும். உறவுகளும் உறுதி பெறுவதைக் காண்பாய்.

மனிதன்: அன்பு கொள்வதில் விதிகள் தேவையா?

கடவுள்: அனைவரிடமும் உள்ள குணாதிசயம் இது. உதாரணமாக குழந்தைகள் வளரும்போது அவர்களிடம் சில விஷயங்களை எதிர்பார்க்கிறீர்கள். நன்றாக படிக்க வேண்டும், நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் இப்படிப் பல எதிர்பார்ப்புகள் உள்ளன. அவைகளை அவர்கள் பூர்த்தி செய்யும்போது பாராட்டுகிறீர்கள். செய்யாத போது கண்டிக்கிறீர்கள். அன்பை மறுக்கிறீர்கள். ஆசிரியர்களிடமும் இதனையே காணலாம். மேலதிகாரிகள், வாழ்க்கைத் துணைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. நிராகரிப்பு, வெறுப்பு போன்றவைகளே மிஞ்சுகின்றன, விதிகள் மீறப்படும்போது.

ஆனால் விதிமுறைகள் நிறைந்த அன்பின் வாழ்நாளின் நீளம் குறைவு. ஏற்படும் அனுபவங்கள் மூலம் இதை உணர்கிறீர்கள் அல்லவா? பெற்றோர்கள், நண்பர்கள், குழந்தைகள், வாழ்க்கைத் துணைகள் போன்ற அனைவரிடமும் அளவற்ற, நிபந்தனையில்லா அன்பு கொள். அதுவே அமைதியான வாழ்விற்கு வழிவகுக்கும்.

About The Author