கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

(சுவாமி சிவானந்தரின் ஒழுக்க நெறிக் கல்வி என்ற நூலிலிருந்து..)

நம்பிக்கையும் தன்னம்பிக்கையும்

நம்பிக்கை, ஆரோக்கியம் மற்றும் ஆற்றலைத் தருகிறது. நம்பிக்கை மிக அதிகமான மகிழ்ச்சியைத் தருகிறது. நம்பிக்கை நீங்கள் உங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ள ஊக்குவிக்கிறது. ஆகவே, நீங்கள் மேற்கொண்டுள்ள அனைத்துப் பணிகளிலும் கடுமையாக முயன்று பணி செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெறுவது உறுதி.

தன்னம்பிக்கை வெற்றியின் துணைவன். ஆகவே உங்களிடத்தில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையே மகா சக்தி! நம்பிக்கையை விடப் பெரிதான சக்தி இல்லை. நம்பிக்கை உடையவன் அடைய முடியாதது என்று எதுவுமே இல்லை. நம்பிக்கை மற்றும் சுயமுயற்சியின் மூலம் நீங்கள் தியானம் செய்வதிலும் ஆத்மஞானம் பெறுவதிலும் மற்றும் உங்கள் அனைத்து முயற்சியிலும் மகத்தான வெற்றி பெறுவீர்கள். ஆகவே எப்போதும் நம்பிக்கையுடன் செயல்படுங்கள். நண்பர்களே! ஒரு போதும் நம்பிக்கையை இழக்காதீர்கள்.

வெறும் நம்பிக்கை மட்டும் போதாது. அலுப்புறாத சுய முயற்சியும் தேவை. நம்பிக்கை நடைமுறையில் சாத்தியமாகக் கூடியதாக இருக்க வேண்டும். பயனற்ற நம்பிக்கைகள் உங்களைத் தற்காலிகமாக மகிழ்விக்கும். ஆனால், நாளடைவில் அவை உங்களுக்குக் கவலையையும் மனத் தளர்ச்சியையும் தரும். ஆகவே, சூழ்நிலையின் தன்மைக்கேற்ப நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நம்பிக்கை வாழ்க்கையின் நிலையான சக்தி. மனம் தளர்ந்திருக்கும் அன்பர்களுக்கு நல்ல மருந்து. சாதகமற்ற சூழ்நிலைகளைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றலை நம்பிக்கை தருகிறது. ஆன்மிக சாதகன் இறைஞானம் பெறுவதில் மட்டும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.

தோற்றப் பொலிவு

ஒரு மனிதனின் ஒழுக்கம், புத்தி, உயர் பண்புகள், ஒழுக்க நெறிகள், அறிவாற்றல் மூலம் நிகழ்த்தப்படும் சாதனைகள், விசேஷமான சாமர்த்தியம், சரியான பார்வை, முகக் குறி, குரல் ஆகிய அனைத்தும் ஒரு மனிதனின் தோற்றப் பொலிவை உருவாக்குகின்றன. உடலமைப்பு மட்டும் இதை உருவாக்குவதில்லை.

நன்னடத்தை ஒரு மனிதனுக்கு உறுதி மிக்க தோற்றப் பொலிவைத் தருகிறது. நல்ல ஒழுக்கம் உடைய மனிதனை மக்கள் மதிக்கிறார்கள். உண்மை பேசி, பிரம்மசரியத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவர் சக்தி மிக்க தோற்றப் பொலிவு கொண்டிருக்கிறார். அவர் சில வார்த்தைகள் பேசினாலும் அவை சக்தி மிக்க சொற்களாக ஆகின்றன. அவை மக்களைக் காந்தம் போல் இழுக்கின்றன. ஒரு மனிதன் தன் தோற்றப் பொலிவை வளர்த்துக் கொள்ள விரும்பினால் தன்னுடைய ஒழுக்கத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

தோற்றப் பொலிவை வளர்த்துக் கொள்ள முடியும். இதற்கு நற்பண்புகளை வளர்த்துக் கொள்வது இன்றியமையாதது ஆகும். எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும். நீங்கள் பிறருடன் எப்படிப் பழகுவது, அவர்களுடன் இணக்கமாக இருப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இனிமையாக, கனிவாகப் பேச வேண்டும். பணிவு, மரியாதை, வினயம் ஆகிய பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும். பிறரை மதிக்க வேண்டும். அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். அடக்கம் பிறர் இதயத்தை வெல்கிறது. சக்தி மிக்க இனிய குரல், இசை ஞானம், கலை மற்றும் அறிவியல் ஞானம் ஆகியவை மனிதனின் தோற்றப் பொலிவை அதிகரிக்கின்றன.

மக்களை அணுகும் முறையை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். கர்வமும் பிடிவாதமும் உடைய மனிதன் ஒருபோதும் உறுதிமிக்க தோற்றம் உடையவனாக இருக்க முடியாது. உங்கள் பேச்சில் படபடப்பு வேண்டாம். பயந்து நடுங்காதீர்கள். ஒருவரை வணங்கும்போது பணிந்து வணங்குங்கள்.

உறுதியான தோற்றம் உங்களுக்கு வாழ்வில் கிடைத்துள்ள விலை மதிக்க முடியாத சொத்து. உங்களுடைய செயல் துடிப்பு மிக்க தோற்றப் பொலிவை அதிகரித்துக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

About The Author

1 Comment

  1. latha

    மிக்க நன்றி மிகவும் கவலையான நேரகளில் இத்தகைய நம்பிக்கை தரும் சொற்கள் மிகவும் ஆறுதலாக உள்ளது

Comments are closed.