கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

நாறுகின்ற வளர்ச்சி

பொதுவுடைமைக்கும், முதலாளித்துவத்துக்கும் மாற்றான ஒரு மூன்றாவது வழியைப் பற்றி நாம் நம் சிந்தையைச் செலுத்திக் கொண்டிருக்கிற வேளையில், மாற்று வழியைப் பற்றி மற்றொரு கோணத்தில் சிந்திக்கும் ஒரு புத்தகம் நம் பார்வைக்கு வந்தது.
‘அறிவியல் வளர்ச்சி – வன்முறை – நவீனமயமாக்கலுக்கு எதிரான எழுச்சி’ என்ற தலைப்பில் கிளாட் ஆல்வரஸ் ஆங்கிலத்தில் எழுதிய நூலின் தமிழாக்கம். மொழி பெயர்ப்பாளர் இரா.நடராசன். பயணி பதிப்பகம் வெளியிட்டுள்ளது..

‘வளர்ச்சி’ நிலை பெற்றுவிட்ட இந்தக் காலத்தில், ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்கள் எல்லாம் சர்வசாதாரணமாகி விட்டன. மேற்கு வங்கம் பீஹார் ஒரிசா எனப் பல மாநிலங்களிலிருந்து ஏழை எளியவர்கள் நாடெல்லாம் முற்றுகை இடுகின்றனர். பிழைக்க வழியின்றி பிச்சையும் எடுக்கின்றனர். சிமெண்ட் சாலையும் ஓலைக் குடிசையுமாக வாழும் உயிரினம் தண்ணீர் எடுக்க மைல் கணக்காய் நடையாய் நடக்கிறது .விவசாயிகளின் தற்கொலை உலக சாதனையை எட்டிவிட்டது. பெரு நிறுவனங்கள் தங்களுக்குள்ளே உடைந்து உடைந்து விழுகின்றன. உலகையே தன் கைக்குள் வைத்துக் கொள்ள உலக நிதி நிறுவனம் கடன் காரட்டைக் காட்டி முயல்கிறது.

கம்யூனிச உலகம் ஏ.கே 47-ஐ பாஸிஸ்டுகளுக்கும், இஸ்ரேல் எம்-16-ஐ அரபு நாடுகளுக்கும் பரிசளிக்கின்றன. ஜனநாயக அமெரிக்காவோ மூன்றாம் உலக நாடுகளில் ராணுவ அதிகாரிகளை அரியணை ஏற்றி வைக்கிறது என்று பதிப்பாளர், ‘வளர்ச்சி’ பற்றிய சொற்சித்திரத்தை முன்னோட்டமாய் வைக்கிறார்.

இந்த நூல் சொல்வதன் சாரம், "வளர்ச்சி என்பது கொள்ளைக்கும் சுரண்டலுக்கும் வைக்கப்பட்டுள்ள மாற்றுப் பெயர். பெரிய வன்முறை அழிவை நோக்கி நம்மைச் செலுத்தும் கருவி." சுருங்கச் சொன்னால் ‘வளர்ச்சி நாறுகிறது.’

‘வளர்ச்சி’யினால் ஏற்பட்டுள்ள கேடுகளை ஆதாரத்துடனும், திடுக்கிடும் செய்திகளுடனும் பட்டியல் இடுகிறார் ஆசிரியர். போபால் விஷ வாயு கசிவு போன்ற பயங்கரங்கள் ஆண்டுக்கு ஐந்து லட்சம் பேருக்கு மேல் பூச்சிக் கொல்லி மருந்துகளால் பாதிப்பு, கிராமப்புற தொழிலமைப்புகளில் 40 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பு 2 சதவிகிதமாகக் குறைந்தது. ஏகாதிபத்தியத்தின் வடிவங்களான உற்பத்திப் புரட்சிகள், மற்றும் பெரிய அணைக்கட்டுகள், ஆலைகள், தொழிற்பேட்டைகளின் அசுரப் பசிக்கு கிராமங்களின் இயற்கை வளங்கள் பலியாவது, நச்சுப்புகை கழிவுகளால், மனிதர்கள் நீர் நிலைகள், கால்நடைகளின் கோரமான பாதிப்புகள், ஆதிவாசிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நீதிமன்றத்துக்கு செல்லும் உரிமைகூட இன்றி விரட்டி அடிக்கப்படுதல், இயற்கைக் காடுகளை அழித்தல், நிலங்களை பெரு முதலாளிகளுக்கு தாரைவார்த்தல், சமூகக் காடுகள் என்ற பெயரில் வளத்தை உறிஞ்சும் யூகலிப்டஸ் மரங்களை மானாவாரியாக வளர்த்தல், மரபு வழித் தாவரங்களைக்கூட மரபணு மாற்றம் செய்து பேடண்ட் வழங்கி, வனவாசிகள், விவசாயிகளின் வயிற்றில் அடித்தல்.. இன்ன பிற..

இந்தச் சீர்கேடுகள் தவறிப் போய் ஏற்பட்டு விட்டவையல்ல. பொதுநலக் கொள்கையைக் கொடுங்கோன்மைப்படுத்தியவை. பொருளாதார வளர்ச்சியின் மேல் இருக்கும் வெறி. தொடர்விளைவுகள் பற்றிக் கவலை கொள்ளாத மெத்தனம். தங்கள் சொந்த மண்ணின் மைந்தர்களின் உயிரைக் குடிக்க தெற்கத்திய அரசாங்கங்கள் பன்னாட்டு நிறுவனங்களுடன் அமைத்துள்ள கூட்டணி.
எல்லாம் சரி. இதற்கெல்லாம் மாற்று வழி என்ன? நாம் மத்திய காலத்துக்கோ, கட்டை வண்டி வாழ்க்கைக்கோ திரும்ப முடியுமா என்ன?

அவர் சொல்வது முதலில் வளர்ச்சியை இந்த அளவோடு நிறுத்திக் கொள்வோம். இதனால் மில்லியன்கணக்கான மக்கள் மேலும் அதன் விரும்பத்தகாத தீய விளைவுகளில் சிக்காமல், தங்களது கொடிய ஏற்றத்தாழ்வுகளிலிருந்து மீண்டு வர வழி வகுக்கும்.
மற்றபடி மாற்றுவழி என்பதே தேவையற்றது. ‘வளர்ச்சி’ என்பது இயல்பற்றது. இருப்பதை மேலும் கெடுக்கக்கூடியது. மக்களுக்கு தேவையான ஓய்வையும், நல்ல சத்தான உணவையும் வழங்குவதோடு அது தொடர்புபடுத்திப் பேசப்படுகிறது.. ஆனால் நமது பழங்கால கலாசாரங்கள் இவ்விஷயங்களில் ஏற்கெனவே தலைசிறந்தவையாக இருந்தன!

மாறாது இருத்தல் என்று நாம் குறிப்பிடுவது சராசரி செல்.(இயல்பான வளர்ச்சி இல்லாமலா இருக்கிறது?) ‘வளர்ச்சி’ என்று இவர்கள் குறிப்பிடுவது புற்று நோயால் அதீத வேகத்தில் பெருக்கமடையும் செல் வளர்ச்சி.! வளர்ச்சியை விட்டுவிட்டு ஆதார வாழ்வுக்கு இயற்கையான வழுவமைதிக்கு திரும்புவது என்பது மாற்றமின்றி வாழ்வது அல்ல. மேலும் மேலும் மாற்றங்கள் புதிய சூழ்நிலைக்குத் தகுந்தவாறாகத் தன்னை மாற்றிக் கொள்ளுதல். இயல்பாக நடப்பதையே இயற்கை வழி ஆதரிக்கிறது. இறந்த கால மரபுகளில் சிலவற்றை நாம் இருபதாம் நூற்றாண்டில் கடைப்பிடிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் அதை யாரோ ஒருவரல்ல, மக்கள் தாங்களாகவே முடிவு செய்து கொள்ள வேண்டும்.

மாற்று வழி பற்றிய சிந்தனைகள் பரவலாகி வருவதை நல்ல சூசகமாகக் கருதும் ஆசிரியர் இவ்வாறு முடிக்கிறார்: "மனித வரலாற்றில் மனித நாகரிகம் நவீன அறிவியலின் பார்வைக்கு வெளியே தனது கலை இலக்கியத்தைப் படைக்கக் கூடிய மரபைக் கொண்டுள்ளது. மேலும் நவீன அறிவியல் மற்றும் வளர்ச்சி ஆகிய இரு ஒடுக்குமுறை சிந்தனைகளும் சில நூற்றாண்டுகள் வயதே ஆனவை. நாம் முன்மொழியும் திசைமாற்றம் தவிர்க்க முடியாதது. பண்பாடற்ற மூலதனத்தின் பிடியில் உள்ள உலகை மீட்க நாகரிக சிந்தனைகள் தேவை என்பதால், இந்த புத்தகம் வெளி வருவதன் நோக்கமே கலாச்சாரத்தை ஒரு சத்தியாக்கிரகமாக்கும் அரசியலை வலுப்படுத்துவதாகும்."

எல்லாம் இருக்கட்டும், ‘சுதேசிகள்’ என்ற பெயரில் மீண்டும் மதபோதகர்களிடம் தஞ்சம் அடையும் ஆபத்து இருப்பதாக மொழிபெயர்ப்பாளர் ஏன் கவலைப்படுகிறார் என்பதுதான் புரியவில்லை..

‘பூவுலகின் நண்பர்கள்’ அத்தனை பேரும் வாங்கிப் படித்து சிந்திக்க வேண்டிய நல்ல புத்தகம்.

About The Author