கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 28

அடுத்த நாள் கல்லூரிக்குக் கிளம்பும்போதே, "நான் அப்படியே வீட்டுக்குப் போறேண்டி" என்று பையை எடுத்துக் கொண்டு கிளம்பிய யமுனாவை விஜி தடுக்க முற்படவில்லை.

வீட்டுக்குப் போகுமுன் நேரே விக்ரமின் விடுதிக்கு வண்டியை விட்டாள். விபரங்களை வைத்து அவன் விடுதியை அடையாளம் காண்பது ஒன்றும் கடினமாக இல்லை. ஆனால் முன்பின் இப்படித் தனியாக ஆண்கள் விடுதிக்குப் போயிராததில் இதயம் லேசாய் அதிர்ந்து கொண்டுதானிருந்தது.

வாசலில் நின்றிருந்த மாணவன் ஒருவனிடம் விக்ரமைப் பார்க்க வந்திருப்பதாய்த் தெரியப்படுத்த அவன் அதரங்களில் நெளிந்த குறுநகையோடு, "இப்பதான் ஜென்னியோட கிரிக்கெட் க்ரௌண்ட் பக்கம் போனான்" என்றான்.

சுருக்கென்றிருந்தாலும் இம்முறை ஊகங்களுக்கு இடம் தராமல் அவனிடம் நேரடியாய்ப் பேசிவிடுவதென்ற முடிவோடு கிரிக்கெட் மைதானத்துக்குப் போகும் வழியைக் கேட்டுக் கொண்டு நடந்தாள். என்னதான் துணிச்சலாய் நேர்கொள்வது எனக் கிளம்பி வந்துவிட்டாலும் அவனிடம் என்ன பேசுவதென்று அவளுக்குள் பெரிய பட்டிமன்றமே நடந்து கொண்டிருந்தது. மைதானத்தை நெருங்க நெருங்க கால்கள் பின்னிக் கொண்டன. இது வடிகட்டின முட்டாள்தானம் என்றும் திரும்பிப் போய்விடலாம் என்றும் அவளின் ஒரு பகுதி அவளைத் தூண்டிவிட்டது. அவன் மைதானத்தில் இல்லையென்றால் அதனை சாக்காக வைத்துத் திரும்பிவிடலாம் என மற்றொரு பகுதி வேண்டிக் கொண்டது.

மைதானத்தைச் சுற்றியிருந்த ஒவ்வொரு மரத்தினடியிலும் ஜோடியாய் அல்லது குழுவாய் அரட்டை நடந்து கொண்டிருந்தது. அதில் ஒவ்வொருவராய் உற்றுப் பார்த்து விக்ரமைத் தேட யமுனாவுக்குக் கூச்சமாய் இருந்தது. திரும்பிப் போக அது ஒரு காரணமாகக் கூடத் தோன்றியது. எனினும் எப்படியும் விக்ரம் அந்த வழியாய்த்தான் திரும்ப வேண்டும் என்பதால் மைதானத்தின் எதிரிலிருந்த ஒரு கட்டிடத்தின் படியில் அமர்ந்து கொண்டாள்.

அரைமணி நேரக் காத்திருத்தலுக்கு பலனில்லாமல் போக, யமுனா பொறுமையிழந்து வீட்டுக்குத் திரும்பலாம் என எழுந்தபோது மைதானத்திலிருந்து அந்தக் கட்டிடத்தை நோக்கி விக்ரம் மற்றொரு பெண்ணுடன் நடந்து வருவதைக் கண்டாள். ‘ஜென்னியாய் இருக்க வேண்டும். இவளும் அன்றைக்குப் பார்த்தவளும் ஒன்றா?’

நெஞ்சம் படபடக்க மெல்லப் பின்வாங்கி கைப்பிடிச் சுவருடனிருந்த வராண்டாவில் பதுங்கினாள். அவனைப் பார்த்துப் பேசவென்று வந்துவிட்டு அவனைக் கண்டதும் பதுங்கும் கோழைத்தனத்தின் மீது வெறுப்பேற்பட்டது. துணிச்சலைப் பிடித்திழுத்துக்கொண்டு எழுமுன் கைப்பிடிச்சுவரின் குட்டித் தூண்களினூடே அவள் கண்ட காட்சி அவளை வெகுவாய் பாதித்தது. விக்ரமின் கைகளைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு கண்மூடி விக்ரமின் தோளின் மீது சாய்ந்திருந்தாள் ஜென்னி. அவள் முகத்தில் சாந்தமும், நம்பிக்கையும், சந்தோஷமும் தாண்டவமாடின. பிரயத்தனப்பட்டுத் தேடிய ஏதோ ஒன்று கிடைத்துவிட்டாற்போல, தன் வாழ்க்கையின் ஒளியைப் பற்றிக் கொண்டுவிட்டாற்போல அத்தனை நிம்மதி அவள் முகத்தில். விக்ரம் ஏதோ அவளிடம் பேசிக் கொண்டே யமுனா அமர்ந்திருந்த அதே படியில் வந்தமர, யமுனா பூனைபோல நடந்து கட்டிடத்தின் மறுபகுதியிலிருந்த வாயில் வழியாக வெளியேறினாள்.

தன்னால் ஏற்கெனவே மூன்று பேரின் நிம்மதி கெட்டுப் போய்க் கிடப்பது போதாதென்று இன்னும் இருவரின் வாழ்க்கையிலும் குழப்பம் விளைவிக்க வேண்டாமென விரைந்து நடந்து வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் பறந்தாள். மனம் ஏதோ மரத்துவிட்டிருந்தாற் போலிருந்தது. இனி என்ன நடந்தாலென்னவென்ற விரக்தி வந்துவிட்டிருந்தது.

வழக்கம் போல வீட்டில் யாருமில்லை. உடை மாற்றிக் கொண்டு அஞ்சலி தந்திருந்த விசிட்டிங் கார்டைத் தேடி எடுத்து அவளை அழைத்தாள். தன் பெற்றோரிடம் பேசுவதை விட அவளிடம் பேசுவது இலகுவாயிருக்கும் விசித்திரத்தை எண்ணியபோது இதழ்களில் வறண்ட நகையொன்று ஓடியது.

***

அஞ்சலியிடம் பேசிய சில மணி நேரங்களுக்குள்ளாக இப்படி அவர்கள் மூவரின் கேள்விக் கணைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என யமுனா எதிர்பார்த்திருக்கவில்லை. அப்பா, அம்மா இருவரும் உடனே கிளம்பி வந்தது பெரிய அதிசயமென்றால் அஞ்சலி வீட்டுக்கு வந்தது இன்னும் ஆச்சரியம்

"யாரையாவது லவ் பண்றியா, யமுனா?" அஞ்சலிதான் முதலில் கேட்டாள்

துக்கத்தோடு இல்லையெனத் தலையசைத்தாள் யமுனா.

"அப்புறம் ஏன் இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சிடுங்கங்கறே? எங்களுக்காகவா?"

அதற்கும் இல்லையெனத் தலையசைத்தவள் பின், "எப்போ என்ன நடக்கும்னே தெரிய மாட்டேங்குது. அதனால எனக்கும் செட்டிலாகணும்னு தோணிடுச்சு. செக்யூரிடி இருக்குமில்ல?" என்றாள்.

"இதுக்குத்தான் நான் சொன்னேன். இவ்வளவு சின்ன வயசிலே, எப்படி ஃபீல் பண்றா பாருங்க" கங்கா பொதுவாகக் குற்றம் சுமத்தினாள்.

ரகு, "ஸாரிடா, யமுனா. உனக்கு இவ்வளவு கஷ்டமா இருந்ததுன்னா நானும் அஞ்சலியும் பிரிஞ்சிடறோம்" அவருக்கே நம்பிக்கை இல்லாத தொனியில் சொன்னார். அஞ்சலி இதனை எதிர்பார்த்தது போல சலனமில்லாமலிருந்தாள்.

"குழந்தைகிட்டே கேட்டுத்தான் செய்வாங்களா இதெல்லாம்? செய்யணும்னு இருந்தா தானா செய்யணும். எத்தனை நல்ல வாய்ப்புகளை நான் யமுனவுக்காக விட்டுக் கொடுத்திருக்கேன். ஏன் இப்போ கூட யு.எஸ்ல ஒரு நல்ல பொஸிஷன் கிடைச்சிருக்கு. வாழ்க்கையில நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அதிர்ஷ்டம்தான். ஆனா யமுனாவுக்காக அதை வேண்டாம்னுதான் சொல்லப் போறேன். அவளுக்கு என்னை விட்டா வேற யாரு இருக்காங்க" கங்கா படபடவெனப் பொரிந்தாள். அவளிடமிருந்து வெளிப்பட்ட ஆதங்கமும் இயலாமையும் யமுனாவை குத்திக் கிழித்தன.

"ஏன் எனக்காக நீங்க விட்டுக் கொடுக்கணும்? உங்க பொறுப்பில இருக்கற வரைக்கும்தானே எனக்காக எனக்காகன்னு தியாகம் செய்யணும்? நான் ஹாஸ்டல்ல இருந்துக்கறேன், என் வாழ்க்கையை நானே பாத்துக்கறேன்னா கூட உங்களுக்கு நம்பிக்கை கிடையாது. யாராவது ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுத்துட்டா பொறுப்பு தீர்ந்திடுமில்லை?" சற்று ஆத்திரத்துடனே கேட்டாள் யமுனா.

"நீ குழந்தை, யமுனா. உனக்கு எங்க வேதனை புரியாது" கங்கா கழிவிரக்கத்துடன் சொன்னாள்.

"உங்களுக்கு ஏன் என் வேதனை புரிய மாட்டேங்குது? எனக்கு முள் மேல இருக்கறமாதிரி இருக்கு. ஏதோ உங்க மூணு பேரோட சந்தோஷமும் என்னால பறி போறமாதிரி. பேசாம நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா எல்லாரும் நிம்மதியா இருக்கலாமே?"

"நீ சின்னப் பொண்ணு, யமுனா. உனக்கு விபரம் பத்தாதுடா, தங்கம்" தாயின் கரிசனம்

"நீங்க இப்படி என்னைக் குழந்தை போல நடத்தினா நாப்பது வயசிலயும் நான் இப்படித்தானிருப்பேன். நல்ல பையனா பார்த்து கட்டி வைங்க. நான் சமாளிக்கறேன்" தீர்மானமாய்ச் சொன்னாள்.

"அப்போ படிக்கப் போறதில்லையா?" ரகு பதற்றமாயக் கேட்டார்

"கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கிறேன். இதே காலேஜ்லதான் படிக்கணும்னு அவசியம் ஒண்ணும் இல்லையே"

கனத்த மௌனம் அவர்களோடு கலந்து கொண்டது. அதனை உடைத்தவள் கங்காதான்

"என் ஆஃபீஸ்ல பிரபாகர்னு ஒரு பையன் இருக்கான். ரொம்ப ப்ரில்லியன்ட். ரொம்ப ஒழுங்கு. இன்னும் ஒரு வாரத்தில H1 விசாவில யு.எஸ். போகப் போறான். என் மேல ரொம்ப மரியாதை. அவங்க வீட்ல பேசிப் பார்க்கலாம்" என இழுத்தாள்.

தன் தாய் தனக்குத் திருமணம் செய்து வைப்பதில் ஆர்வமாய்த்தானிருக்கிறாள் என்று யமுனாவுக்கு விளங்கிற்று.

"என் ஃப்ரண்ட் பையன் ஆனந்த் கூட பொருத்தமாய்த்தானிருப்பான்" என்று ரகு ஆரம்பித்தார்.

"நீங்களே பேசி முடிவுக்கு வாங்க. யாரா இருந்தாலும் நான் ஒரு தடவை தனியா பேசணும்" கண்டிப்பாய்ச் சொல்லியபடி அந்த இடத்தை விட்டகன்றாள் யமுனா. மனதிலிருந்தது விரக்தியா விடுதலை உணர்வாவென ஆராய அவளுக்கு விருப்பமுமில்லை, சக்தியுமில்லை.

About The Author