கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 32

விக்ரம் கங்காவுக்காக லண்டன் ப்ளாக் ஃப்ரையர்ஸ் ஸ்டேஷனில் காத்திருந்தான். சந்திப்பதாய்ச் சொன்ன நேரம் தாண்டி 15 நிமிடம் கடந்திருந்தது. விக்ரம் அலைபேசியில் வீடியோ கேம் ஆடிச் சலித்து பின் யமுனாவை அழைத்தான்.

"என்னடி பண்றே?"

"ஹே மாமூ… அம்மாவைப் பாத்தியா?"

"இன்னும் வரலை. வெயிட் பண்ணிக்கிட்டிருக்கேன். கான்ஃபரன்ஸ் முடிய லேட்டாச்சோ என்னவோ"

யாரோ அருகில் வந்து நிற்பது போல் தோன்ற நகர்ந்து அமர இடம் அளித்துவிட்டு சுவாரஸ்யமாய்ப் பேச்சைத் தொடர்ந்தான்.

"இன்டெர்னல்ஸ் எப்படி எழுதிருக்கே?"

"ச்சே… அவ்ளோ தூரத்திலருந்து இதுக்கா கூப்பிட்டே? உனக்கு லவ் பண்ணவே தெரியலை"

"இருக்கட்டும்… இருக்கட்டும். கல்யாணத்துக்கப்புறம் சேர்த்து வச்சு பண்ணிக்கலாம்"

"இன்னும் ஒரு வருஷம் 9 மாசம் இருந்து தொலைக்குதே இடையிலே?"

"அலையாதேடி" என்றான் சிரித்துக் கொண்டே.

அதற்கு மேல் அவனைப் பேசவிடுவது சரியெனத் தோன்றாத கங்கா, தொண்டையைச் செருமினாள். சட்டெனத் திரும்பிப் பார்த்த விக்ரம், "ஏய், உங்கம்மா. பேசு" என்று அலைபேசியைத் தந்தான்.

சம்பிரதாயமான இரு நிமிடப் பேச்சுக்குப் பின், "அவகிட்ட இன்னைக்குக் காலைலதான் பேசினேன்" என்று அவனிடம் திரும்பத் தந்தாள் கங்கா.

அலைபேசியை அணைத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டே, "எப்போ வந்தீங்க ஆன்டி? ஸாரி… உங்களை புடவையில எதிர்பார்த்தேன். அதான் தெரியலை" என்றான் அவளின் மேல் நாட்டு உடையைச் சுட்டி.

கங்கா சங்கோஜமாய் சிரித்தாள்.

"எங்காவது போலாமா?" ஆர்வமாய்க் கேட்டாள்.

"ஷ்யூர். தேம்ஸ் வழியா நடக்கலாம். அப்புறம் இலண்டன் ஐயை லைட் போட்டப்பறம் பார்க்கலாம். அதுக்காகத்தான் உங்களை இங்கே வரச் சொன்னேன். உங்களுக்கு நடக்கத் தெம்பும் நேரமும் இருக்கா?" என்றான்.

"ஓ… " என்று ஒரு குழந்தையின் உற்சாகத்தோடு சொன்ன கங்கா விக்ரமின் கண்ணுக்கு வித்தியாசமாய்த் தெரிந்தாள்.

சற்று நேரம் அமைதியாய் இருவரும் நடக்க, "என்னை உங்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லை, இல்லையா? அதான் என்ன பேசறதுன்னு தெரியலையோ?" என்று பேச்சை ஆரம்பித்தான் விக்ரம்.

"வெல், நல்லாத்தான் எடை போடறீங்க. சைக்யாட்ரிஸ்ட் ஆச்சே. என்னைப் பற்றி வேறென்ன எடை போட்ருக்கீங்க" எனக் கேட்டாள் கங்கா.

"ஐயோ, நீங்க வேறே. அது சரி, யு.எஸ்ல லைஃப் எப்படி இருக்கு. சுதந்திரப் பறவையா சந்தோஷமா சுத்தறீங்களா?" என்றான்.

உதட்டைப் பிதுக்கினாள். "சுதந்திரமெல்லாம் இருக்கு… " என இழுத்தவள் மருமகனாகப் போகிறவனிடம் புலம்புவானேன் என நிறுத்திக் கொண்டாள்.

"மருமகனாகப் போறவன்கிட்ட போய் ஏன் இதெல்லாம் சொல்லணும்னு நிறுத்திட்டீங்களோ?" என்று விக்ரம் கேட்கவும் ஆச்சரியத்தில் அவள் கண்கள் அகல விரிந்தன.

"யு மஸ்ட் பி சைக்கிக். நான் நினைச்சதை அப்படியே சொல்லிட்டீங்க"

அவன் கடகடவென்று சிரித்தான். "இதுக்கு ஆறாம் புலனெல்லாம் தேவையில்லை. காமன் சென்ஸ் போதும்." என்றவன், "ஃபார்மாலிடியெல்லாம் பார்க்காம பேசுங்க. நீங்க என்ன சொன்னாலும் யமுனாவை நான் கைவிடமாட்டேன். நான் விட நினைச்சாலும் உங்க மக பெரிய தாதா. விடமாட்டா" என்றான் மனம் கொள்ளாச் சிரிப்புடன்

தன் மகளைப் பற்றிப் பேசுகையில் அவன் கண்கள் மலர்வதை மகிழ்ச்சியாய்ப் பார்த்தாள் கங்கா.

"ம்ம்… நீங்க சொல்லுங்க" அவன் அவளை ஊக்கப் படுத்தினான்.

சில நிமிடங்கள் தன் சிந்தனையை மனதுக்குள் ஒழுங்குபடுத்திக் கொண்டவள், நிதானமாய் சிக்கனமான வார்த்தைகளில் சொன்னாள்: "லோன்லியா இருக்கு, விக்ரம்"

அவள் தனிமை விரும்பி என்றல்லவா நினைத்திருந்தான்?

"ம்ம்… " தன் கருத்தைச் சொல்லி அவளின் எண்ண ஓட்டத்தைக் கலைக்க விரும்பாமல் அவளின் ஒவ்வொரு வார்த்தையையும் ஊன்றி கவனித்தான்

"யாருமே இல்லாதது போலத் தோணுது"

"ஏன்?"

"ப்ச்…"

"பரவாயில்லை… சொல்லுங்க. தப்பா நினைச்சுக்க மாட்டேன்"

"யமுனா என்னை விட்டு தூரமா போயிட்ட மாதிரி இருக்கு"

"ம்ம்… கொஞ்சம் சீக்கிரமே நான் இழுத்துக்கிட்டேனோ?"

"ஸாரி… நான் அப்படிச் சொல்லலை" என தடுமாறினாள்.

"சொன்னாலும் தப்பில்லை" என்றான் யதார்த்தம் உணர்ந்தவன் போல.

"ஆனா என்னைக்கிருந்தாலும் யமுனா கல்யாணம் ஆகிப் போக வேண்டிய பெண்தானே?"

"அப்படின்னா உங்க தனிமைக்கு யமுனா காரணமில்லையா?" என்றான் அவளைக் கூர்ந்து பார்த்து.

"தெரியலை… விக்ரம்"

அவளுக்குத் தெரியும். பேசத் தயங்குகிறாள். பேச வைப்பதுதானே அவனுக்கு சவால்!

தேம்ஸ் நதியோரமாய் ஒரு பெஞ்சில் அமர்ந்தார்கள். படகுகளில் சவாரி போனவர்களையும் உடலெல்லாம் வண்ணம் பூசிக் கொண்டு சிலை போல நின்றவர்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் கங்கா.

"உங்க டைவர்ஸ் அப்ரூவ் ஆயிருச்சு இல்லை?"

"ம்ம்"

"அப்போ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாமே, ஆன்டி?"

"சீச்சீ" வெடுக்கென்று சொன்னாள்.

"ஏன், ரெண்டாவது கல்யாணம் அவ்வளவு தப்பா?"

"நோ… நோ… என்னால நினைச்சுக் கூடப் பார்க்க முடியலை"

"ஏன்?"

‘இவன் அதிகம் யோசிக்க வைக்கிறான்.’ என்று நினைத்துக் கொண்டே, "பயமாயிருக்கு, விக்ரம்" என்று மனதில் பட்டதைச் சட்டெனச் சொன்னாள்.

நிறைய சூடு பட்டிருப்பாள் போலும்.

"ஏன்?" அவளின் மனதுக்குள் அடக்கி வைத்திருக்கும் உணர்ச்சிகள் வெளிவரட்டும் என்ற எண்ணத்தில் விடாமல் கேட்டான்.

அவள் தெறித்து வரும் வார்த்தைகளை அடக்குவது போல அடி உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

"மருமகன் மகன் போலத்தானே… யோசிக்காமல் சொல்லுங்க, ஆன்டி" அவன் கனிவுடன் சொன்னான் அவள் தோளில் ஆதரவாய்க் கை வைத்தபடி.

கங்கா நெகிழ்ந்தாள். இத்தனை பாசமாய், ஆதரவாய் யாரும் அவளிடம் பேசி பல வருடங்களாகியிருந்தன. ஏனோ அவனிடம் மனதைக் கொட்டவேண்டும் போலத் தோன்றிற்று

"எனக்கு ஒரு நல்ல சிநேகிதன் போதும், விக்ரம். கணவன் தேவையில்லை"

"ஏதோ ஒரு சிநேகிதன் போதுமான்னா இன்டெர்நெட்லேயே எத்தனையோ ஃப்ரண்ட்ஸ் கிடைப்பாங்களே, ஆன்டி? நான் கூடத்தான் உங்களுக்கு ஃப்ரண்டா இருக்கலாம்"

அவள் மௌனமானாள். இன்னும் அவள் தனிமைக்கான மூல காரணம் வெளிவரவில்லை எனப் புரிந்து கொண்டான் விக்ரம்.

"உங்க சிநேகிதர் யாரை மாதிரி இருக்கணும்?"

கங்கா அவனை ஏறெடுத்துப் பார்த்தாள். பெருமூச்சென்று விட்டாள். பின் தயக்கத்தோடு, "ரகு போல" என்றாள் தலையைக் குனிந்து கொண்டு.

விக்ரம் தன் வியப்பை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. அவளே தோடர்ந்து, "அஞ்சலி ரொம்ப லக்கி" என்றாள். குரல் தேய்ந்திருந்தது.

விக்ரம் ‘புரிகிறது’ என்பது போல அவள் தோளை மெதுவாய் அழுத்தினான்.

"எனக்கு அப்போ புரியலை, விக்ரம். அவருக்கு ஏன் என்னைப் பிடிக்கலைங்கற கோபத்தை வெறுப்புன்னு தப்பா புரிஞ்சிக்கிட்டேன்னு நினைக்கிறேன். அவர் வாழ்க்கையில இன்னொரு பொண்ணு இருக்கான்னு தெரிஞ்சப்பறம்தான் நாம இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருக்கலாமோன்னு தோணுது. இங்கே பாருங்க, ஏதோ ஒரு கம்பெனிக்காக சூட் போட்டிருக்கேன். இந்த வேஷம் போடத் தயாரா இருக்கறப்போ, இன்னும் கொஞ்சம் நேர்த்தியா நளினமா இருக்க அவருக்காகக் கத்துக்கிட்டிருந்திருக்கலாமோன்னு வருத்தமா இருக்கு. ஒண்ணும் இல்லை, அவர்கிட்டே உட்கார்ந்து எனக்கு நீங்க என்னை விரட்றது தாளலைன்னு மனசு விட்டுச் சொல்லியிருந்தா கூட புரிஞ்சிக்கிட்டிருப்பாரோ என்னவோ? பாருங்க, காதலி வதங்கிப் போய்க் கிடக்கிறப்ப மாஞ்சு மாஞ்சு பாத்துக்கறாரே, அவரெப்படி கொடுமைக்காரரா இருக்க முடியும்? ஏதோ, எங்கேயோ லேசா பிசிகினதை பிளவுன்னு முடிவு செஞ்சு என்னை ஒரு கூண்டுக்குள்ள அடைச்சிக்கிட்டேன். அதனால அந்தப் பிளவு நெஜமாவே உண்டாயிருச்சுன்னு நெனைக்கிறேன்"

மாலைச் சூரியனின் ஒளியில் அவள் இமைகளில் கோத்து நின்ற கண்ணீர் பளிச்சிட்டது. விக்ரம் பையிலிருந்து டிஷ்யூ எடுத்துத் தந்தான். வாங்கி கண்களையும் முகத்தையும் துடைத்துக் கொண்டவள், "ஸாரி, ரொம்பப் புலம்பறேனா, விக்ரம்?" என்று பரிதாபமாய்க் கேட்டாள்.

"சேச்சே… என்ன ஆன்டி" என்றவன், "இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலையே ஆன்டி, ரகு அங்கிளை சிநேகிதனா ஆக்கிக்க வேண்டியதுதானே?" என்றான்.

"நோ… நோ… அவருக்கு என்னன எப்பவுமே பிடிக்காது, விக்ரம்" என்றாள் சுயபச்சாதாபத்தோடு.

"உங்களுக்கு அங்கிள் மேலே இருக்கிறது வெறுப்பில்லைன்னு இத்தனை நாள்ல புரிஞ்சது போல அவருக்கும் ஏதாவது தோணிருக்கலாமே?"

"ம்ஹும்… அவருக்கு அஞ்சலிதான் சரி"

"அவருடைய ஃப்ரண்ட்ஸ் எல்லாருமா அஞ்சலிம்மா போல இருக்காங்க? உங்களுக்கு அவர் ஃப்ரண்டாத்தானே வேணும்?" விட்டுக் கொடுக்காமல் கேட்டான்.

‘இவன் புத்திசாலி. எப்படியும் மடக்கிவிடுகிறான்’

அவள் யோசித்ததைப் பார்த்தவன் வாய்ப்பைப் பயன்படுத்தி, "முதல்ல சும்மா ஹாய்னு ஒரு மெயில் எழுதுங்க… பின்ன அப்படியே பத்திக்கும் பாருங்க" என்றான் பரிகாசச் சிரிப்போடு.

இரவு ரெஸ்டாரன்டில் சாப்பிட்டுவிட்டு அவளை ஹோட்டலில் விட்ட போது, "இன்னிக்குப் பேசினதெல்லாம்… " என அவள் இழுக்க, "ஷ்ஷ்ஷ்… பரம ரகசியம்" என்றான் விக்ரம் தன் உதட்டின் குறுக்கே விரல் வைத்து.

(தொடரும்)

About The Author