கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 19

மூன்று நாட்களாய் விஜியோடு ஊர் சுற்றியதில் மனம் லேசானதாகத்தான் பட்டது யமுனாவுக்கு. முந்தைய இரு தினங்களும் கல்லூரி விட்டபின் ஷாப்பிங், சினிமா என்று திரிந்து விட்டு அன்று வெள்ளிக்கிழமையானதால் நீலாங்கரை ஷீர்டி சாய் கோவிலுக்குச் சென்றுவிட்டு வந்தார்கள். அந்தக் கோவில் மிகுந்த மன அமைதியைத் தந்தது யமுனாவுக்கு. வாழ்க்கையில் திடீரென்று ஒரு நம்பிக்கை வந்தாற்போலிருந்தது.

வீட்டுக்குத் திரும்பிய போது புதிதாய் ஒரு இனோவா நிற்க, புருவத்தை உயர்த்தியவாறே வீட்டுக்குள் நுழைந்தனர் தோழியர் இருவரும்.

"இதோ விஜி வந்தாச்சே" என்றபடியே விஜியை அருகில் வருமாறு கையசைத்தார் அவளின் தந்தை டாக்டர் சந்தானம்.

"உனக்கு இவங்களை அடையாளம் தெரியுதா விஜி?" என்று வந்திருந்தவர்களைக் காட்டிக் கேட்க, விஜி விழித்தாள்.

"அவளுக்கு ஞாபகம் இருக்காது. அவ அப்ப ரொம்பச் சின்னக் குழந்தை" என்று அவளுக்கு ஆதரவாக வந்த நடுத்தர வயதுப் பெண்ணை எங்கோ பாத்தது போலத்தான் இருந்தது விஜிக்கும்.

"குமரன் அங்கிள், வாணி ஆன்டி நம்ம பக்கத்து வீட்லதான் இருந்தாங்க. இப்போ யு.எஸ்ல இருக்காங்க. இது அவங்க பசங்க ஷங்கர், மாயா, நிர்மல்" என்று அறிமுகப்படுத்தினார் சந்தானம்.

ஷங்கர் உயரமாயிருந்தான். விக்ரமின் வயதிருக்கும் போலிருந்தது. காலர் இல்லாத டிஷர்ட், ஜீன்ஸ், மெல்லிய கண்ணாடியும் அணிந்திருந்தான். மாயா அவனைவிடக் கொஞ்சம் சின்னவளாய் இருந்தாள். சுரிதார் அணிந்திருந்தாள். புன்னகை பூத்த வட்டமுகம். நிர்மலுக்குப் பத்து வயதுதானிருக்கும். சோடா புட்டி கண்ணாடிக்குப் பின் துறுதுறுவென்ற கண்கள் தெரிந்தன.

"ஹலோ" என்றாள் விஜி அனைவரையும் பார்த்து சிநேகமாய் சிரித்து.

தனியே நின்று கொண்டிருந்த யமுனா மெல்ல நழுவி மாடிப் படியை நோக்கி நடக்க, அவளையும் அழைத்து அறிமுகப்படுத்திய சந்தானத்தின் பண்பு யமுனாவைக் கவர்ந்தது.

"விஜி, பசங்களையெல்லாம் மேலே கூட்டிட்டுப் போயேம்மா… பெரியவங்க பேச்சு உங்களுக்கு போரடிக்கும்" என்று குமரன் சொல்லவும், "ஷ்யூர் அங்கிள்…" என்று பவ்யமாய்ச் சொன்னவள் "வாங்க" என்றாள் மாயாவைப் பார்த்து.

நேரே விக்ரமின் அறைக்கு அழைத்துச் சென்று அவர்களை அமர வைத்தபின், "ஏதாவது சாப்பிடறதுக்கு எடுத்துட்டு வரேன்" என்று கிளம்பினாள் விஜி.

"நோ நோ. உங்கம்மா வந்தவுடனே நல்லா கவனிச்சிட்டாங்க" என்றான் ஷங்கர் வயிற்றைத் தடவியபடியே.

ஷங்கர் பயோ டெக்னாலஜியில் எம்.எஸ் பண்ணுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டான்.

"அவன் சொல்றதை வைச்சு என்னையும் அவனை மாதிரின்னு நினைச்சிடாதீங்க. நான் இப்போதான் ஜாலியா ஹிஸ்டரி முடிச்சேன். மேலே என்ன செய்யறதுன்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்" என்றாள் மாயா எளிமையாக.

"கம்ப்யூட்டர் இருக்கா?" என்று கேட்ட நிர்மலிடம், "ஓ இருக்கே. கேம்ஸ் கூட இருக்கு. ஆனா அமெரிக்கா லெவலுக்கு இருக்குமா தெரியலை" என்றாள் விஜி.

"வா, நிர்மல். நாம போய் விளையாடலாம்" என்று அவனை அழைத்துக் கொண்டு விஜியின் அறையை நோக்கிச் சென்றாள் யமுனா.

ஷங்கரும் மாயாவும் இவ்வளவு எளிமையாய் இருப்பார்களென விஜி எதிர்பார்த்திருக்கவில்லை. அமெரிக்காவில் பதினைந்து வருடமாக வாழ்ந்திருந்தாலும் நன்றாகத் தமிழ் பேசினார்கள். தமிழ் சினிமா பற்றிய லேட்டஸ்ட் விபரங்களைத் தெரிந்து வைத்திருந்தார்கள். கலகலவென்று அலட்டலில்லாமல் பழகினார்கள்.

மாயா விக்ரமின் ஃபோட்டோவைக் காட்டி, "அது உங்கண்ணா விக்ரமா?" என்று கேட்க, "ஆமா… சரியான வாலு" என்றாள் விஜி.

மாடியில் பிள்ளைகள் இப்படி சகஜமாய்ப் பேசிக்கொண்டிருக்க, கீழே பெரியவர்களின் பேச்சு சீரியஸாய்ப் போய்க் கொண்டிருந்தது.

"பிள்ளைகளை நல்லா வளர்த்திருக்கீங்க. எவ்வளவு அடக்கம், எவ்வளவு மரியாதை! நல்லா தமிழ் பேசறாங்க. பெரிய ஆச்சரியமாயிருக்கு" என்று வியந்தார் மங்கை.

ஷங்கர் தமிழில் கவிதை கூட எழுதுவான் என பெருமிதத்தோடு கூறினார் வாணி.

"பெரிய விஷயம். ரொம்பப் பெருமையா இருக்கு" சந்தானமும் பாராட்டில் இணைந்து கொண்டார்.

சூழ்நிலை கனிந்து வந்ததைக் கணித்த குமரன், "அப்ப எங்க பிள்ளைங்களை உங்களுக்குப் பிடிச்சிருக்குங்கறீங்க?" என்றார் அர்த்தமுள்ள பார்வையோடு.

அதனைக் கவனிக்காத சந்தானம், "அஃப் கோர்ஸ். ரொம்ப நல்ல பசங்க" என்று சான்றிதழ் வாசித்தார்.

"அப்போ சம்பந்தியாக சம்மதிப்பீங்களா?" அவர் சுற்றி வளைக்காமல் கேட்டதும் சந்தானமும் மங்கையும் ஒருவரையொருவர் பார்த்தபடி திகைப்புற்றிருந்தனர்.

"என்ன, கல்யாணம் பேசலாமான்னுதானே கேட்டேன். இப்படி ஸ்டன் ஆயிட்டீங்க?" குமரன் அவர்களை சகஜ நிலைக்கு அழைத்து வர முயற்சித்தார்.

"நாங்க இன்னும் எங்க பசங்க கல்யாணத்தைப் பத்தி யோசிக்கவே ஆரம்பிக்கலை. அதான் நீங்க கேட்டதும் ஒண்ணும் புரியலை" மங்கைதான் முதலில் சுதாரித்து பதிலளித்தார்.

"ஒண்ணும் அவசரமில்லை. நிதானமா யோசிச்சுச் சொல்லுங்க" என்றார் வாணி.

"இதெல்லாம் பணத்தை வச்சுப் பேசற காரியம் இல்லைதான். இருந்தாலும் எங்களைப் பற்றி நீங்க முழுசா தெரிஞ்சுக்கணும்கறதுக்காகச் சொல்றேன். இன்னைய தேதிக்கு என்னோட சொத்து ஒரு நூறு மில்லியன் இருக்கும். சொந்தக் கம்பெனி நல்லாப் போறது. மாயாவுக்கும் ஷங்கருக்கும் தனித்தனி வீடிருக்கு. ரெண்டு பேருக்குமே நம்ம வேல்யூஸ் மேல ரொம்ப மரியாதை இருக்கு. ரொம்ப ஒழுக்கமான பசங்க. வாழ்க்கை அமெரிக்கவில இருந்தாலும் இந்தியாவிலதான் கல்யாணம் நடக்கணும்னு நாங்க எல்லாருமே ஆசைப்படறோம்," என்றார் குமரன்.

"மாயாவுக்கு இருபது வயசாகுது. புக் எழுதறதுல ரொம்ப ஆர்வமா இருக்கா. இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷத்தில கல்யாணம் செஞ்சு வைக்கலாம்னு நெனைக்கிறோம். விக்ரம் சரியா இருப்பான்னு தோணிச்சு…" என்று இழுத்தார் வாணி.

"இப்போ விஜியைப் பார்த்ததும் அவளை ஷங்கருக்குப் பார்க்கலாம்னு எனக்குத் தோணிச்சு. அவனுக்கு ஒண்ணும் அவசரமில்லை. விஜி படிச்சு முடிக்கவும் பண்ணலாம்" என்று தன் திட்டத்தையும் சொன்னார் குமரன்.

"எங்க மேல நீங்க வச்சிருக்கற மரியாதையை நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு… உங்க பசங்களுக்குத் தெரியுமா?" மங்கைதான் இதையும் கேட்டார்.

"ம்ம்ம்… விக்ரமைப் பற்றி மாயாவுக்கும் ஷங்கருக்கும் சொல்லிதான் கூட்டி வந்தோம்"

"நீங்க முதல்லயே சொல்லிருந்தா விக்ரமை வரச் சொல்லிருப்போமே! மாயா விக்ரமைப் பார்த்ததில்லையே"

"எல்லோரும் ஃபோட்டோவிலேயே பார்த்தாச்சு" என்றபடி ஒரு கொத்து புகைப்படங்களை அவர்களிடம் கொடுத்தார் குமரன்.

"உங்களுக்குத் தெரியாம உங்கள் பிள்ளையைப் பற்றி விசாரிச்சது வருத்தமா இருந்தால் மன்னிச்சிருங்க. ஆனா பொண்ணோட தகப்பனா நான் இதைச் செய்ய வேண்டி இருந்தது" என்றார்.

புகைப்படங்கள் சமீபத்தில் எடுக்கப்பட்டவையாக இருந்தன. அவனுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டிருந்தன பல கோணங்களில் பல இடங்களில்.

"எதுக்கும் விக்ரம்கிட்டே… " என்று இழுத்தார் மங்கை.

"தாராளமா கேளுங்க… உங்க பசங்களுக்கு சம்மதம்னா ரெண்டு நிச்சயதார்த்தத்தையும் சேர்த்தே வச்சிடலாம். என் பசங்க நான் சொன்ன பேச்சைக் கேப்பாங்க" அவர் கபடமில்லாமல் சொன்னாலும் சந்தானத்தின் தன்மானம் விழித்துக் கொண்டது.

"என் பசங்களும் அப்படித்தான், குமரன். எப்பவுமே பெரியவங்க சொன்னா நல்லதுக்குன்னு எடுத்துப்பாங்க. நீங்க தேதியைப் பார்க்க ஆரம்பிங்க" என்று அவசரமாய்ச் சொன்னார் சந்தானம். மங்கைக்கு அது சரியாய்ப் படவில்லை.

(தொடரும்)

About The Author

1 Comment

  1. Anonymous

    இந்த கதைக்கு என்ன ஆயிட்டு? தொடருமா தொடராதா? 19ஆவது அதித்யதோடு முடிந்து விட்டதா?

Comments are closed.