கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 22

யமுனாவிடம் சற்று கடுமை காட்டிவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி எழுந்தது விஜிக்கு. தான் எதிர்பார்த்தது போலவே தன் சகோதரன் யமுனாவின் மனதைக் காயப்படுத்தியிருக்கிறான் என்று தெரிந்ததும் அவன் மேல் கோபம் எழுந்தாலும் அவனின் நடத்தை பற்றி யமுனா குறை கூறியபோது ஏனோ பொறுத்துக் கொள்ள இயலவில்லை. முழு விபரமும் தெரியாமல் விக்ரமிடம் நேரடியாகக் கேட்கவும் தயக்கமாக இருந்தது என்றாலும் அவனிடம் பேசியே ஆக வேண்டுமென்று முடிவு செய்து அலைபேசியில் அவனை அழைத்தாள்.

"எதுக்கு யமுனா வீட்டுக்குப் போனே?" எடுத்த எடுப்பில் உஷ்ணம் தெறிக்கத் தங்கை கேட்டதும் அவன் வழக்கம் போல அமர்த்தலாக,

"பர்ஸனலா பேச வேண்டி இருந்தது" என்றான்.

"நான்தான் அவகிட்ட வச்சுக்காதேன்னு சொன்னேனில்லை? திரும்பத் திரும்ப ஏன் வம்பு பண்றே?"

"நீ என்ன பேட்டை தாதாவா?"

"வேண்டாம்… இது நல்லா இல்லை"

"பாத்துப் பேசறது அவ்வளவு பெரிய தப்பா?"

"அவளுக்கு இஷ்டமில்லைன்னா விட்ற வேண்டியதுதானே?"

விக்ரம் தரப்பு மௌனமானதை அலட்சியப்படுத்தி இணைப்பைத் துண்டித்தாள். ஆனாலும் மனம் சங்கடப்பட்டது. இவர்கள் இரண்டு பேருக்குள்ளும் என்ன நடந்தது, இல்லை என்ன நடக்கிறது என்று முழுசாய்த் தெரிந்து கொள்ளும் வரை இனி இதில் தலையிடக் கூடாதென்று தோன்றிற்று.

மறு நாள் கல்லூரியில் யமுனாவைப் பார்த்தபோது தான் கடிந்து கொண்டதற்காய் மன்னிப்புக் கேட்டுவிட்டு, "நேத்திக்கு அவனுக்கு நல்லா டோஸ் விட்டேண்டி. இனிமே உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டான்" என்று விஜி சொன்னபோது யமுனாவின் இதழ்களில் வறண்ட புன்னகை ஒன்று ஓடிற்று.

அடுத்த இரு வாரங்கள் இன்டெர்னல்ஸ், அஸைன்மென்ட் என்று பிஸியாய் ஓடினதில் பிரச்சினைகள் சற்றுப் பின் தள்ளப் பட்டிருந்தன.

ஒரு சனிக்கிழமை காலை விஜியின் மகிழ்ச்சி ஆரவாரத்தில் அதிரடியாய் விடிந்தது யமுனாவுக்கு.

"என்னடி இன்னும் தூக்கம்? மணி எட்டரை ஆகுது. நான் சொல்லப் போற நியூஸைக் கேட்டா இங்கே பறந்து வருவே நீ" என்று தொலைபேசியில் எழுப்பினாள் விஜி.

தூக்கக் கலக்கத்திலும், "எனக்கு ஷங்கரோட நாளைக்கு நிச்சயதார்த்தம்" என்ற விஜியின் வார்த்தைகள் தெளிவாய்க் காதில் விழ,

"என்னடி சொல்ற?" பட்டென்று எழுந்தமர்ந்தாள் யமுனா.

"யெஸ்… இப்போதான் எங்க வீட்ல சொன்னாங்க. ஷங்கர்கிட்ட கூட நான் இன்னும் பேசலை. முதல்ல உனக்குத்தான் ந்யூஸ்" அவள் குரலில் மகிழ்ச்சி பொங்கியது.

"ய்யே… கங்கிராட்ஸ்…" என்றவள் அடக்க முடியாமல், "உங்கண்ணனுக்குமா?" என்றும் வினவினாள்.

"இல்லைடி… எனக்கு மட்டும்தான் நாளைக்கு எங்கேஜ்மென்ட். திரைமறைவில என்ன நடந்துதோ எனக்குத் தெரியாது. ஐ ஜஸ்ட் டோண்ட் கேர்" என்று விஜி சொன்னபோது தனக்கு ஏன் இத்தனை நிம்மதி எழுகிறதென்று யமுனாவுக்குப் புரியவில்லை.

"வானத்தில யாரோ மிதக்கிற மாதிரி தெரியுதே… அது நீதானாடி?" என்று தோழியை கேலி செய்தாள் யமுனா.

"ஆமாடி… ஆமா… உன் கண்ணுக்குத் தெரிஞ்ச மாதிரி என் ஷங்கீ கண்ணுக்கும் தெரிஞ்சா நல்லாதானிருக்கும்" என்றவள்,

"ஷாப்பிங் போணும், ப்யூட்டி பார்லர் போணும். இப்பவே கிளம்பி நீ இங்கே வா" என்று அவசரப்படுத்தினாள்.

நிச்சயதார்த்தம் விமரிசையாய் நடந்தது. அந்தக் கூட்டத்தில் விக்ரமைத் தேடி அனிச்சையாய்த் தன் பார்வை நீந்துவதை உணர்ந்து தன்னையே கடிந்து கொள்கிறாள் யமுனா. விக்ரம் மூன்றாம் மனிதன் போல சற்று ஒதுங்கியே இருந்ததாய்ப் பட்டது. மாயா சகஜமாய் வளைய வந்து கொண்டிருந்தாலும் யமுனாவுக்கு அவளைக் காணும் போதெல்லாம் அவள் வாழ்க்கையை ஒரு வேளை தான் குழப்பிவிட்டிருப்போமோ என்ற குறுகுறுப்பு எழாமலில்லை. ஆனால் விக்ரமை வேறொரு பெண்ணுடன் பார்த்த பின்னும் அவனின் மறுப்புக்குத் தான்தான் காரணம் என்று நினைப்பது கொஞ்சம் ஓவர் என்று தன்னை குட்டிக் கொண்டாள்.

விஜியின் டிஜிடல் கேமராவில் அதுவரை எடுத்திருந்த படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அருகில் வந்த மங்கை, "விக்கியைக் கண்லயே காணும், யமுனா. அவன்கிட்டேதான் கார் சாவி இருக்கு. இங்கிருந்தே காலேஜ் போறேன்னான். மறந்து போய்க் கொண்டு போயிடப் போறான். கொஞ்சம் பார்த்து வாங்கி வச்சிடேன்" என்றார்.

யமுனா தயக்கத்தோடு தலையாட்டிவிட்டு பார்வையால் ஹாலைத் துளாவினாள். ஒரு மூலையில் கையைக் கட்டிக் கொண்டு சுவரில் சாய்ந்து நின்று கொண்டவனைக் கண்டு கொண்டதும் அவனை நெருங்கி மெல்லிய குரலில், "ஆன்டி கார் கீ வாங்கி வரச் சொன்னாங்க" என்றாள் சற்று எட்டி நின்றபடியே.

அவன் முகபாவத்தை மாற்றிக் கொள்ளாமல் திரும்பச் சொல்லும்படி சைகை காட்டினான். அவன் ஸ்பீக்கருக்கு அருகில் நின்றிருந்ததால் இசையின் சத்தத்தில் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்று அவள் திரும்பவும் சொல்ல, கேட்கவில்லை எனத் திரும்பவும் பாவனை செய்தான். அவள் வேறு வழியில்லாமல் அவனருகில் நகர்ந்து காதருகில் குனிந்து மீண்டும் சாவி கேட்க, அவன் அதையே சாக்காக வைத்து, "நீ புடவைல ரொம்ப அழகா இருக்கே" என்று கிசுகிசுத்தபடியே சாவியைத் தந்தான்.

யமுனாவுக்கு சிலிர்ப்பாயிருந்தாலும் எத்தனை முறை இவனிடம் ஏமாறுவது என சபித்துக் கொண்டே சாவியைக் கிட்டத்தட்ட பிடுங்கிக் கொண்டு நகர்ந்தாள்.

அடுத்த ஒரு வாரம் விஜி ஷங்கரோடு நேரம் செலவளிக்கவென்று வகுப்புக்கு மட்டம் போட்டுவிட, யமுனா தன் பெற்றோரை இணைத்துவைக்கும் முயற்சியில் தன் அடுத்த காயை நகர்த்தினாள்.

***

"அஞ்சலி, இன்னைக்கு யமுனா ஆஃபீஸ் வந்திருந்தா. புத்திசாலித்தனமா கேள்வியெல்லாம் கேட்டா. படிச்சு முடிச்சதும் என் கூட பிஸினஸ்ல இறங்கப் போறாளாம்" பெருமிதத்துடன் ரகு சொல்லிக் கொண்டிருந்ததை ஆர்வமாய்க் கேட்டுக்கொண்டிருந்த அஞ்சலி,

"ஆமா, நான் உன் பால்ய சிநேகிதிதானே? ஏன் என்னை உன் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகவே மாட்டேங்கறே?" என்று கேட்டாள். அவளது குரலில் ஏக்கமிருந்ததைக் கவனித்த ரகு, சற்றுத் தடுமாறி விட்டு, "போலாமே… ஆனா நான்தான் சொன்னேனே எங்கவீடு ஒரு தீவுக்கூட்டம் போல. எல்லாருக்கும் தனித்தனி வாழ்க்கை. அதனால…" என்று இழுக்க,

"உன் பொண்ணுக்குக் கூடவா அப்பாவோட ஃப்ரண்டைப் பார்க்கறதுல இஷ்ட மிருக்காது?" என்று விடாமல் நெருக்கினாள் அஞ்சலி.

"இது அமெரிக்கா இல்லை, அஞ்சலி. எல்லாராலயும் நம் ஃப்ரண்ட்ஷிப்பை ஏத்துக்க முடியாது" என்றார் ரகு தலை குனிந்தவாறே. அவள் தங்கவிடாமல் அன்று விரட்டியடித்ததிலிருந்தே ரகு மிகவும் கவனமாகத்தானிருக்கிறார். அவள் காதலுக்காக ஆசைப்பட்டு அவளின் நட்பையும் இழந்துவிட அவர் தயாராக இல்லை. அவருடைய நீண்ட பாலைவழிப் பயணத்தில் அரிதாய்க் கிடைத்திருக்கும் ஒரு சின்னஞ்சிறு இளைப்பாறலையும் அவர் துறந்துவிடத் துணியவில்லை.

"உன் பொண்ணு கூடவா தப்பா நினைப்பா?" அஞ்சலியின் குரலில் வருத்தமிருந்தது. அவளே தொடர்ந்து, "இப்படி ரகசியமா வச்சிட்டிருந்தாதான் ரகு, என்னென்னவோ கற்பனை பண்ணத் தோணும். எனக்கு என்னவோ இது பிடிக்கலை. ஒரு நாள் நானே உன் வீட்ல வந்து உன் வொய்ஃபையும் பொண்ணையும் பார்த்து ஹலோ சொல்லப் போறேன்" என்றாள் உறுதியான குரலில்.

அவர்களுக்குள்ளிருக்கும் நேசம் இறுகிக் கொண்டு வருவதை அஞ்சலிக்கும் உணரவே முடிந்தது. இந்த உறவில் பரஸ்பரம் ஆறுதல் கிடைத்தாலும் எல்லை மீறிப் போவதற்கான வாய்ப்புகளும் பெருகிக் கொண்டே போவதை எண்ணி அவளுக்குக் கரிசனம் எழுந்தது. ரகுவுடைய குடும்பத்தினரிடம் சகஜமாய்ப் பழகிவிடும் பட்சத்தில் ரகுவின் ரகசிய சிநேகிதியாய் அல்லாமல் அவர்கள் குடும்ப நண்பியாய் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் சுதந்திரமாய் வளைய வரலாம் என்பதுதான் அவளுக்குத் தோன்றிய யோசனை.

ஆனால் நினைப்பதெல்லாம் நடந்தா விடுகிறது?

(தொடரும்)

About The Author

2 Comments

 1. shanthi

  Nila madam,

  We didnt get 20 and 21 episodes of Kannil theriyuthor thoram”. We directly get 22 episode afer 19th episode. Please post the missing episodes in Nilacharal.
  thanking you
  shanthi.”

 2. venimathi

  Hi Nila,
  We did not get 23 episode of Kannil Theriyuthu Thorttrum” belongs to this week.
  Can you please post it .
  Thanks and Regards,
  veni”

Comments are closed.