கண்ணில் தெரியுதொரு தோற்றம் -15

நீண்ட சிந்தனைக்குப் பின், பிரச்சினையின் ஆழமும் மூலமும் தெரியாமல் தான் செயல்படுத்தும் எந்தத் திட்டமும் வெற்றி பெறமுடியாது என்பது தெளிவானதால் மறு நாள் அதற்கான முயற்சியில் இறங்குவதென முடிவு செய்து கொண்டு படுக்கையில் விழுந்தாள் யமுனா.

லேசாகக் கண்ணயரத் துவங்கியபோது கதவுக்கு வெளியே கங்கா அழைப்பது கேட்டது.

“கதவு திறந்துதாம்மா இருக்கு” என்றாள் தூக்கக் கலக்கத்தோடு.

“ஸாரி, தங்கம். எழுப்பிட்டேனா?” என்றபடி படுக்கையில் வந்தமர்ந்தாள் கங்கா.

“பரவாயில்லைம்மா… சொல்லுங்க”

“ஒரு வாரம் டெல்லி போக வேண்டிய வேலை இருக்குடா. தனியா மேனேஜ் பண்ணிடுவியா?”

யமுனா துணுக்குற்றாள். இதுவரை அவள் தன் தாயைப் பிரிந்ததே இல்லை. தாய் மகளுக்குள் நெருக்கமான பிணைப்பு இல்லாவிட்டாலும் ஒரு வாரப் பிரிவு புதிதுதான்.

“ம்” என்றாள் அரைகுறையாய்.

மகளின் முகத்தில் விழுந்திருந்த முடிக்கற்றையை விலக்கியபடியே, “கோபமா, யமுனா?”

“ம்ஹும்”

“ஒரு வாரம் வேணா சித்தி வீட்டுக்குப் போயிடறியா?”

“வேணாம்மா. அங்கேர்ந்து காலேஜ் போயிட்டு வர்றது கஷ்டம்”

“இங்கே சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவே?”

“அப்பா ஏதாவது ஏற்பாடு பண்ண மாட்டாராம்மா?” என்று கேட்ட தன் புதல்வியின் குழந்தைத்தனம் கங்காவுக்கு சிரிப்பை உண்டு பண்ணிற்று.

“இத்தனை வயசாச்சு. நீ சமைக்கக் கத்துக்க வேண்டாமா? பாட்டிக்கு உன் வயசில நான் பொறந்திட்டேன். நீ இன்னும் குழந்தை போல உங்கப்பாவை சாப்பாட்டுக்கு நம்பிக்கிட்டிருக்கே”

தந்தையின் பேச்சு வந்ததும், “அப்பா இன்னும் வரலையாம்மா?” என்று கரிசனமாய்க் கேட்டாள்.

தோளைக் குலுக்கிய கங்கா, “இப்போல்லாம் வீட்ல இருக்கறதே அபூர்வம்” என்றாள் உணர்ச்சியற்ற குரலில். யமுனாவும் அப்பாவைப் பார்ப்பதே அரிதாய் இருக்கிறதென்று எண்ணிக் கொண்டுதானிருந்தாள்.

“அவரை நம்பி உன்னை எப்படி விட்டுட்டுப் போறது நான், சொல்லு”

தன் அன்னையின் கவலையிலும் அர்த்தமிருப்பதாகவே பட்டது யமுனாவுக்கு.
“ஒரு வாரம் லீவு போட்டுட்டு எங்கூட வர்றியா? டெல்லி சுத்திப்பாத்த மாதிரியும் இருக்கும்” என்று அன்னை கேட்டதும் வெடித்துச் சிரித்த யமுனா,

“இப்போதானே சொன்னீங்க எனக்கு வயசாச்சுன்னு. இன்னும் எத்தனை நாள் என்னை கங்காரு மாதிரி தூக்கிட்டே அலைவீங்க?” என்று கேலி செய்தாள்.

“நாளைக்கு எங்க காலேஜ் ஹாஸ்டல்ல விசாரிச்சிட்டு வர்றேன். கெஸ்டா ஸ்டே பண்ண வசதி இருக்கும்னுதான் நினைக்கிறேன்” என்று உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் யமுனா.

“குட் நைட், செல்லம்” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அகன்றாள் கங்கா

***

மறுநாள் மதிய உணவு இடைவேளையில், “வெளில தங்க இடம் பாக்கணும்டி” என்று யோசனையாய்ச் சொன்ன யமுனாவிடம், “அடிப்பாவி, யாரை நம்பி வீட்டைவிட்டு ஓடி வந்தே?” என்றாள் விஜி மிகையான வியப்போடு.

“அடச்சீ… “ என்று அவளை அடக்கியவள் சூழ்நிலையைச் சொல்ல, “இதுக்கு எதுக்கு ஹாஸ்டல்? எங்க வீட்டுக்கு வா” என்று அழைப்பு விடுத்தாள் விஜி.

யமுனாவுக்கு அவள் வீட்டை நினைத்ததும் விக்ரமின் இறுக்கமான பிடியும் அதன் பின்னான கனத்த மௌனமும் நினைவுக்கு வர சிந்தனை வயப்பட்டாள்.

“என்ன யோசிக்கறே? அன்னைக்கு என் ரூம் இருந்த கோலத்தை நினைச்சு பயந்திட்டியா? தனியா கெஸ்ட் ரூம் இருக்குப்பா. அம்மாவும் உன்னை ரொம்ப நாளா பார்க்கணும்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க” என்று பேசிக் கொண்டிருந்தாலும் பின்புலத்தில் விஜியும் விக்ரம் குறித்து சிந்தித்துக் கொண்டுதானிருந்தாள். அன்றைய சந்திப்புக்குப் பின் விக்ரம் யமுனா குறித்து விசாரித்திராததும் யமுனாவும் விக்ரம் பற்றிப் பேச்செடுத்தால் கூட சற்றும் ஆர்வம் காட்டாததும் ஆறுதலாக இருக்கவே, இனி அவனால் யமுனாவுக்கு எந்தத் தொந்தரவும் வராதென்று தன்னை சமாதானப் படுத்திக் கொண்டாள் விஜி.

“எதுக்குடி வீணா தொந்தரவு பண்ணிட்டு. உங்கப்பாவும் அம்மாவும் ஏற்கெனவே ரொம்ப பிஸி. இதுல நான் வேறயா?”

“ஆமாடி, பாப்பாவை குளிக்க வைச்சு, டிரஸ் மாத்தி, சாப்பாடு ஊட்டி பாத்துக்கணும். ரொம்ப்ப்ப்ப்ப கஷ்டம்” என்றாள் கிண்டலாக.

யமுனா முடிவுக்கு வர முடியாமல் திணறினாள்.

“நான் எங்க வீட்ல பேசிட்டு, உங்கம்மா கிட்டே பேசறேன். டன் டீல்” என்றாள் விஜி.

ஒரு பிரச்சினையை விஜியிடம் கையளித்துவிட்டாலும் தன் பெரும்பிரச்சினைக்கான தீர்வைத் தேடி அன்று மாலை வளசரவாக்கத்துக்கு வண்டியை விரட்டினாள் யமுனா.

“அடேடேடேடே… வராதவங்க எல்லாம் வந்திருக்காங்களே” முகத்தைவிட அகலமான புன்னகையோடு வரவேற்றாள் கங்காவின் தங்கை காவேரி.

“சும்மாதான், சித்தி. பாத்து ரொம்ப நாளாச்சில்ல” என்றவளை நம்பாமல் பார்த்த காவேரி, “காலேஜ்லருந்து நேர வர்றியாடி?” என்றாள் பாசமாய்.

“ஆமா, சித்தி. நீங்க இன்னிக்கு கோர்ட்டுக்குப் போகல்லே?”

“இன்னிக்கு ப்ரேக். இரு, சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வர்றேன்” என்று சமையலறைக்குள் புகுந்தாள் காவேரி.

“குட்டீஸ்லாம் எங்கே, சித்தி?” என்று கேட்டபடியே அவள் பின்னால் நடந்தாள் யமுனா.

“ட்யூஷன் போயிருக்கு ரெண்டும். உன்னை மாதிரி படிச்சா பரவாயில்லையே. அது ரெண்டும் என்னை மாதிரி மக்கா இருக்குதே” என்றாள் காவேரி சிரித்தபடியே.

“உனக்குப் பிடிச்ச அதிரசம் இருக்குடி. நேத்தைக்கு ஆனந்த பவன்ல வாங்கும்போது உன்னைத்தான் நெனைச்சிக்கிட்டேன்” என்றபடியே தட்டில் இரு அதிரசங்களையும் கொஞ்சம் மிக்ஸரையும் வைத்து அவள் கையில் கொடுத்துவிட்டு ஃபிரிஜிலிருந்து கட்டித் தயிர் எடுத்து, “வழக்கம் போல ஸ்வீட் லஸ்ஸிதானே?” என்றபடியே மிக்ஸியிலிட்டாள்.

“என் செல்ல சித்தி” என்று தன் தோளைக் கட்டிக் கொண்ட தன் அக்கா பெண்ணின் தலையில் செல்லமாய் முட்டிவிட்டு, “என்ன, வீட்ல ஒரே தகராறா?” என்றாள் சித்தி.

“அம்மா சொன்னாங்களா?”

“நல்லாக் கேட்டே போ… உங்கம்மா எங்கிட்ட பேசியே ரெண்டு மாசமாகுது. அவளாவும் ஃபோன் பண்றதில்லை. நான் எப்போ பண்ணினாலும் பிஸி பிஸின்னு பெரிசா அலட்டிப்பா” என்றாள் காவேரி சற்று வருத்தத்துடன்.

சமையலறையிலிருந்து வெளியேறி ஹாலிலிருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு அதை ஆட்டி விட்டாள் யமுனா.

“எனக்கு உங்க வீட்லயே ரொம்பப் பிடிச்சது இந்த ஊஞ்சல்தான், சித்தி” என்று குழந்தைத்தனமான குதூகலத்துடன் சொன்னாள்.

பின், “சித்தி எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணுங்க.”

“நீ இங்கே வந்ததை அம்மா கிட்ட சொல்லக் கூடாது, அவ்வளவுதானே?”

“போதாது. நான் இப்போ பேசப்போறதைப் பற்றி மூச்சுவிடக்கூடாது”

‘ம்… ரொம்ப கனமான விஷயமோ?” என்றபடியே தலைசாய்த்து யோசித்தாள் காவேரி.

“ஆமா… ப்ராமிஸ்தானே?” என்று கையை நீட்டினாள்

“ப்ராமிஸ்… சொல்லு” காவேரிக்கு மனதில் கவலை தோகை விரித்து ஆட ஆரம்பித்திருந்தது.
(தொடரும்)

About The Author

1 Comment

 1. Divya Praba

  Hai nila,
  i like ur storys very much
  ethanai nallay engeunthai( E N E)” is a fantastic story, i like that story very much.
  and this story also nice
  i want one information pls tell me, which date the “kannil theriyuthur thotram” will published in Rani Muthu Pls i want that story book pls…..
  and your last story(E N E) was published in any book? pls tell me…….
  i like ur way of writting………

  -G.Divya Praba”

Comments are closed.