கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 16

"அம்மா அப்பாவுக்குள்ள என்ன சித்தி பிரச்சினை?"

இந்தக் கேள்வியை அவளிடம் எதிர்பார்த்திராத காவேரி சற்று திடுக்கிட்டாள். ‘பிள்ளை வளர்ந்துவிட்டது. பெற்றவர்கள்தான் வளரவில்லை’ என்ற ஆயாசம் அவளைச் சூழ்ந்து கொண்டது.

"என்னடி பெண்ணே, இப்படி திடீர்னு பெரிய பெரிய கேள்வி எல்லாம் கேக்கறே?"

"சும்மா தெரிஞ்சிக்கத்தான்" என்று யமுனா பொதுப்படையாய்ச் சொன்னாலும் இந்தக் கேள்வி காரணமில்லாமல் எழுந்திருக்க வாய்ப்பில்லை என்றே நம்பினாள் காவேரி.

சித்தி மௌனமாய் இருந்ததைக் கண்டு, "நான் தெரிஞ்சிக்கக் கூடாத காரணமா, சித்தி?" என வினவினாள் யமுனா மெல்லிய பயத்தோடு.

அவளின் கற்பனை விபரீதமாய்ப் போவதைப் பொறுக்கமாட்டாத காவேரி, "அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா. ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிக்கலை. அவ்வளவுதான்" என்றாள்.

இருட்டில் விளைக்கைத் தேடிக் கொண்டிருந்தவளுக்கு சுவரில் முட்டிக் கொண்டாற்போலிருந்தது. குறிப்பிட்ட பிரச்சினை ஏதாவதிருந்தால் தீர்த்து வைக்கலாம். பிடிக்கவில்லை என்றால் தீர்வு கண்டுபிடிக்கமுடியுமா?

மகள் திகைத்துவிட்டதைக் கண்ட காவேரி மேலும் விளக்கினாள்:

"உங்கப்பாவுக்குத் தன் கனவு தேவதை போல மனைவி இல்லையேன்னு வருத்தம். உங்கம்மாவுக்கு அவர் தன்னை அப்படியே ஏத்துக்கலைன்னு கோபம்"

"ஏன் சித்தி, அம்மாவுக்கு என்ன குறைச்சல்?" தன் கேள்வியில் யமுனாவுக்கே உடன்பாடில்லை. அம்மாவிடம் குறைகள் இல்லாமலில்லை. களையக் கூடிய குறைகள்தானென்றாலும் தன் தாய் அவற்றை உதாசீனப் படுத்துவதைப் பலமுறை கண்டிருக்கிறாள் அவள்.

"அதென்னமோம்மா… உங்கப்பாவுக்குத் தலைகொள்ளாக் குறை" தன் சகோதரியைக் குறைத்து மதிப்பிட்டவர் மேல் காவேரிக்குக் கோபமிருப்பது அப்பட்டமாய்த் தெரிந்தது.

தொடர்ந்து, "நல்லா உடுத்தத் தெரியலை, பேசத் தெரியலை, பழகத் தெரியலை, வேலை சுத்தமா இல்லை, சமையல் சரியில்லை… இப்படி எல்லாத்லேயும் எதைச் செய்தாலும் குறை. அவளை ரொம்பப் பாடாத்தான் படுத்திட்டார். எங்க வீட்ல மூத்த பொண்ணு. பாட்டி அவளை எந்த வேலையும் செய்ய விட்டதில்லை. கல்யாணமாகி திடீர்னு பொறுப்பைச் சுமக்கணும்னா அவளுக்குக் கஷ்டம்னு அவர் புரிஞ்சிக்கலை. அவர் குறை சொல்லிச் சொல்லி அவளுக்குத் தன்னம்பிக்கை சுத்தமா போயிடுச்சி. ஒரு தண்ணி கொண்டு வரச் சொன்னா கூட அவளுக்கு ஆயிரம் சந்தேகம் வரும் – டம்ளர்லயா, மக்லயா, ஐஸ் வாட்டரா, வார்ம் வாட்டரான்னு குழம்பிப் போவா. நீ பொறந்திருந்தப்ப எங்க வீட்ல இருந்தப்பதான் நாங்க கவனிச்சோம். உங்கப்பாவும் உன்னக் கொஞ்சுவாரே தவிர உங்கம்மாவை ஒரு பார்வை கூட பார்க்கமாட்டார். பாட்டி சந்தேகப்பட்டு கேட்டபிறகுதான் அழுதுகிட்டே காரணத்தைச் சொன்னா உங்கம்மா"

"அப்பாகிட்டே கேட்டீங்களா?"

"கேக்காம இருப்பாங்களா பாட்டி? ‘வெளிய கூப்பிட்டா வரமாட்டேங்கறா. வந்தாலும் நல்லா டிரஸ் பண்ணிக்க மாட்டேங்கறா. எப்பப் பாத்தாலும் கதைப் புத்தகம் படிக்கறா. வீடு குப்பையா இருந்தா எனக்குப் பிடிக்கலை; வேலைக்காரி வச்சுக்கலாம்னா சண்டைக்கு வர்றா’ன்னு உங்கப்பா குற்றப்பத்திரிகை வாசிச்சதும் அவர் பக்கமும் கொஞ்சம் நியாயம் இருக்குன்னு பாட்டிக்குத் தோணிடுச்சி.

கொஞ்சம் கொஞ்சமா அவளை மாத்தலாம்னு என்கிட்ட அவளை ப்யூட்டி பார்லர் கூட்டிட்டுப் போகச் சொன்னாங்க. அதுக்கு நான் அவகிட்ட நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டேன். நானும் விடாம அப்போதைய ஃபேஷனுக்குத் தகுந்த மாதிரி நல்லதா நாலு சேலை வாங்கிட்டு வந்தேன். எல்லாத்தையும் விசிறியடிச்சிட்டா. உங்கப்பா மேல இருந்த கோபம் எல்லாத்தையும் நாங்கதான் தாங்கினோம். பிறகுதான் ‘எனக்கு யாருமே இல்லை. எல்லாரும் என்னை வேற யாரோவா மாத்தப் பாக்கறீங்க. உங்க யாருக்கும் என்னைப் பிடிக்கலை’ன்னு கோவிச்சிக்கிட்டு படிக்க ஆரம்பிச்சா. வேலைக்குப் போனா. வேலைல நல்ல பேர் வாங்கினப்பறம்தான் அவ ஆத்திரம் கொஞ்சம் தணிஞ்சது. ஆனா யார்கிட்டேயும் ஒட்டாம தாமரை இலைத் தண்ணி போல ஆயிட்டா. என்னத்தை யாருக்கு நிரூபிக்கணும்னு ட்ரை பண்ணினான்னு தெரியலை. நிரூபிச்சிட்டாளான்னும் புரியலை" நீளமாய்ப் பேசி நிறுத்திய போது காவேரியின் முகத்தில் விசனம் பரவி இருந்தது.

"இவ்வளவுதானா சித்தி? வேற எதுவும் பெரிசா காரணம் இல்லையா?" ஏமாற்றமா கவலையா எனப் பிரித்தறிய முடியாத உணர்வு இருந்ததது யமுனாவிடம்.

"ரொம்ப சில்லியா தெரியுதுல்ல, யமுனா? எங்களுக்கும் அப்படித்தான் இருந்தது. நான் அப்போ காலேஜ் படிச்சிக்கிட்டிருந்ததுனால என்னை இதுல அவ்வளவா இன்வால்வ் பண்ண மாட்டாங்க. ஆனா உங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கு அந்தக் காலத்தில அட்வைஸ் செய்யாத சொந்தக்காரங்களே கிடையாது. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ரெண்டு பேரும் அவங்க நிலையிலேயேதான் நின்னாங்க. ஓரு கட்டதுல இனி இது அவ்வளவுதான்னு எல்லாரும் விட்டாச்சு. உன்னாலதான் ரெண்டு பேரும் ஒரே வீட்ல இருக்காங்க. இல்லைன்னா எப்பவோ டைவர்ஸ் ஆகியிருக்கும்"

சித்தியிடம் பேசியதில் உருப்படியாய் ஒன்றும் தேறவில்லை என்பது யமுனாவை சோர்வடையச் செய்தது.

"இவங்களை மாத்த வழியே இல்லையா, சித்தி?" பரிதாபமாய்க் கேட்ட பிள்ளையைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள் காவேரி.

"பிஞ்சிலையே வளையலைடி அவங்க…" என்று அவநம்பிக்கையாய் சொன்னாள்.

தொங்கிப் போன முகத்தோடு கிளம்பியவளைப் பார்த்து மனது உருகிய காவேரி, " நாங்கல்லாம் இருக்கோம்டா, செல்லம். கவலைப் படாதே" என்று பாசமாய்ச் சொன்னாள்.

சென்னையின் மாசு யமுனாவை ரொம்பவே படுத்தியது. சிக்னலில் நிற்கையில் துப்பட்டாவை மூக்கின் மேல் சுற்றிகொண்டு மேலே ஹெல்மெட்டைப் போட்டுக் கொண்டாள்.

விக்ரமின் கல்லூரி அருகிலிருக்கவே வழக்கம் போல பார்வை பரபரத்தது. ‘இன்றாவது கண்ணில் படமாட்டானா?’

தற்செயலாய் ரியர் வ்யூ மிரரில் பார்த்தவள், இரண்டு வரிசைகளுக்குப் பின்னால் நின்ற விக்ரமின் பிம்பம் தெரிய ஆர்வமாய்த் திரும்பினாள். அதற்குள் சிக்னல் விழுந்துவிட்டதில் பின்னாலிருந்தவர்களின் பொறுமையைற்ற ஹார்ன் ஒலி எழும்பியதும் அவசரமாய் வண்டியைக் கிளப்பினாள். அவனுக்குக் கையசைக்கும் நோக்கில் வேகத்தைக் குறைத்தவள் அருகில் வந்ததும்தான் கவனித்தாள் அவன் பில்லியனில் ஒரு பெண் இருந்ததை. திடுக்கிட்டுத் தடுமாற, "வீட்ல சொல்லிட்டு வந்திட்டியா?" என்ற வழக்கமான கண்டனத்தை உதிர்த்துவிட்டுப் போனான் ஒரு டூவீலர்க்காரன்.

அதற்குள் விக்ரமின் வண்டி அவளைக் கடந்தது. கால்களை இருபுறமும் போட்டுக் கொண்டு அவன் தோளில் முகத்தைப் பதித்து காதில் அந்தப் பெண் பேசிக் கொண்டு போக விக்ரம் சுவாரஸ்யமாய்ச் சிரித்து தலையை ஆட்டிக் கொண்டே வண்டியோட்டிப் போனான்.

அவர்களிடமிருந்த அன்னியோன்யம் யமுனாவைச் சுரீரென்று தாக்கியது. அந்தப் பெண் முக்காடிட்டுக் கொண்டிருந்தது திருட்டுத்தனத்தின் அறிகுறியாய்ப் பட்டது.

யமுனா உணர்ச்சிகளின் மேலீட்டில் துவண்டாள். வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். அருகிலிருந்த கடையில் மினரல் வாட்டர் வாங்கிக் குடித்துவிட்டு முகத்தையும் கழுவிக் கொண்டபோது உணர்ச்சிகளின் வேகம் சற்று மட்டுப்பட்டது. ஆனாலும் கோபமும் ஆத்திரமும் அவமானமும் வருத்தமும் மனதை முற்றுமாய் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.

அலைபேசி அழைத்தது. "யமுனா, எங்கேடா இருக்கே? மணி ஏழாகப் போகுது" கங்கா சற்றுக் கவலையோடு கேட்டாள்.

"லேப்ல கொஞ்சம் லேட் ஆயிடுச்சிம்மா. கிட்டேதான் இருக்கேன். வந்திடறேன்" சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினாள்.

(தொடரும்)

About The Author