கதை எழுதப் போறேன்

‘ஏற்காடு அய்யாசாமி’ என்கிற பெயரில்தான் முதலில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். ஏற்காடு தாத்தாவின் சொந்த ஊர். அய்யாசாமிதான் தாத்தாவின் பெயர்.

‘பொழுது காட்டும் கருவி பழுது பார்க்கும் இடம்’ – கடிகார ரிப்பேர் ஷாப்பில் பார்த்த வரியை ஏ.அ. பெயரில் எழுதிப் போட பிரசுர இதழும் சன்மானமும் வந்தன. அப்புறம் ரெண்டு வரிக் கவிதைகள். தபால் கார்டு கதை, நாலு பக்க கதை என்று வளர்ந்து இப்போது வலைத்தளம் வரை வந்தாச்சு.
எஞ்சினீயரிங் முடித்த அண்ணன் விட்டுப் போன கம்ப்யூட்டரில் நேரடியாய் கதை தட்டும் அளவு வளர்ச்சி. எழுதி அடித்துத் திருத்தி படி எடுத்த காலம் மலையேறி கணினி உதவியில் என்ன வேண்டுமானாலும் திருத்தி, இடைச் சொருகி, ஒரே நேரத்தில் ரெண்டு தீம் வந்தால் கூட அது ஒரு பக்கம், இது ஒரு பக்கம் என்று எழுதும் ‘இஷ்டாவதான’த் திறமை.. முதல் (மகாபாரத) எழுத்தாளரின் (கணேஷ்!) வாகன (மெளஸ்) புண்ணியத்தில். கூடவே திமிரும், சோம்பேறித்தனமும்.

‘என்ன ரொம்ப நாளாச்சு.. உன் கதையையே காணோமே..’ என்று தொலைபேசி அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் வர ஆரம்பித்தன. மிசஸிடம் சொல்லி பெருமையடித்துக் கொண்டது தப்பாகிப் போனது. ‘நம்ம செல்லுக்கு நாமளே மெசேஜ் அனுப்பலாமா’ என்று என் மிசஸ் தெரியாத மாதிரி என் மகனிடம் கேட்டாள்.

‘மேல் மாடி காலியாம்மா..’ என்று மாடிப்படியைக் காட்டி மகன் கேட்டதும் இருவரும் அந்த அரதப் பழசு ஜோக்கிற்கு விழாமலே சிரித்தார்கள்.

வயிற்றெரிச்சலின் உச்சம் சக எழுத்தாள நண்பனின் ஃபோன்.

‘இந்த வார ஜிகினா பார்த்தியா.. என்னோட கதை வந்திருக்கு’

நம்ம கதை வர சந்தோஷத்தை விட அடுத்தவன் கதை பிரசுரம் பார்த்து வரும் போட்டி உணர்வுதான் நிஜ ஃபீலிங்!

எனக்குள் இருந்த லிட்டில் ஜான் முழமாகி எழுந்தான்.

‘இப்ப பார் என் திறமையை’ கணினியை உயிர்ப்பித்து எதிரில் அமர்ந்தேன்.

முதல் வரி.. அல்லது முதல் வார்த்தை வந்து விட்டால் போதும். கதை தானாகவே வளர்ந்து விடும்.
கை பரபரத்தது. ஐம்புலன்களும் குவிந்து தியான நிலை. ‘வா.. வா..’ ஜபம் ஓடிய அதே நேரம்.. பவர் கட்! அடக் கடவுளே..

"கார்த்தாலதான் ஒரு மணி நேரம் கட் பண்ணிட்டாங்களே.. அப்புறம் என்ன" மனைவியின் குரல் கேட்டது ஹாலில். அரை மணி.. ஒரு மணி.. நேரம் ஓடியதுதான் மிச்சம். ஒன்றரை மணி நேரம்.. ஊஹூம்.. வரும் வழியாய்த் தெரியவில்லை. குறுக்கும் நெடுக்கும் நடந்து கால் ரேகை தேய்ந்ததுதான் மிச்சம். தலைக்கு மேல் மின்விசிறி ஓட ஆரம்பித்து விட்டதா என்று அடிக்கடி பார்த்து கழுத்து வலி.

‘ஏம்பா கரண்ட் வந்தா தெரிஞ்சுராதா.. எதுக்கு மேல பார்க்கறீங்க. நம்ம வீட்டுக்கு மட்டும் தனியா வருமா என்ன’

இதற்கும் மனைவியின் அழகான சிரிப்பு! குடும்பத்தில் நகைச்சுவை உணர்வு குறையாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை மறைமுகமாய் நான் தான் வைத்திருக்கிறேன்.

‘என்னவாம் அவனுக்கு..குட்டி போட்ட பூனை மாதிரி அலையறான்’

அம்மாவின் கரிசனம் பிளஸ் எரிச்சலூட்டும் விமர்சனம் கேட்டது.

மூன்று மணி நேரமாய் கட்டிக் காத்த பொறுமை பறி போனது. வள்ளென்று விழுந்தேன்.
‘கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா.. அவனவன் நிம்மதியா கதை எழுதறான்.. உக்கார்ந்து எழுத முடியாம தவிக்கறதைப் பார்த்து ஆறுதல் சொல்லாட்டியும் தொலையுது.. இங்கே நம்ம வீட்டுல ஆளுக்காளு குத்திக் காட்டத்தான் தெரியுது..’

அத்தனை பேர் முகமும் சுண்டிப் போனது. சைகை செய்து ஆளுக்கொரு பக்கம் நகர முற்பட்ட அதே நிமிடம் மின்விசிறி வேகமாய் சுழலத் தொடங்கியது. இறுக்கம் விலக எனக்குள்ளும் உறுத்தல்.
ஏன் இப்படி கத்தினேன்..

‘ஸாரி’ மனைவியின் தோளைப் பற்றித் திருப்ப கை நீட்டியபோது மகன் கேட்டான்.

‘ஏம்பா.. கரண்ட் இல்லே.. சரி. கம்ப்யுட்டர் யூஸ் பண்ண முடியலே.. உங்க கை இருக்கே.. மாடியில போய் இந்த மூணு மணி நேரம் நிம்மதியா எழுதியிருக்கலாமே.. எழுதணும்னு தீவிரமா நினைச்சிருந்தா’ நீட்டிய கை அப்படியே நின்று விட்டது அதிர்ச்சியில்!

About The Author