காணாமல் போனவன் (4)

எழுத்தாளர் ‘சிகரன்’, ரமேஷின் வீட்டிற்குள் நுழைந்தபோது புயலடித்து ஓய்ந்த அமைதி.

மஞ்சரியின் முகத்தில் வழக்கமான புன்னகை இல்லை. ராகவியும் பாபுவும் கூட ‘அங்கிள்’ என்று பிரியமாக ஓடிவருபவர்கள், இன்று அமைதியாய்.

"என்னம்மா ஆச்சு? உடனே கிளம்பி வாங்கண்ணான்னு சொன்னதும் எனக்கு எதுவும் புரியல."

"உங்க நண்பர் அடிச்ச கூத்தை நீங்களே கேளுங்க!"
மஞ்சரியின் முகத்தில் கோப அலை.

"என்னடா பண்ணித் தொலைச்ச?"
சிகரன் கேட்டதும் ரமேஷின் முகம் இறுக்கமாய்.

"சொல்லித் தொலைடா!"
நட்பின் உரிமையில் சிகரன் அதட்டலாய்க் கேட்டான்.

"எப்படி சொல்லுவார்… மனசாட்சியே இல்லாம ஒரு காரியத்தைப் பண்ணிட்டு?"
மஞ்சரி குமுறினாள்.

"ஒண்ணு நீயாச்சும் சொல்லும்மா… இல்ல, அவனை சொல்ல விடு!"
சிகரனுக்கு என்ன நடந்ததென்று புரியாத குழப்பம்.

மஞ்சரியே சொல்லிவிட்டாள். அவளால் கோபத்தை அடக்க முடியவில்லை. அவள் சொல்லிக் கொண்டே போக, கேட்டுக் கொண்டிருந்த சிகரனுக்கும் அவள் கோபம் நியாயமாய்த்தான் பட்டது.

"என்னடா?… ஏண்டா இப்படிப் பண்ண?"
ரமேஷ் அருகில் அமர்ந்து நிதானமாய்த்தான் கேட்டான்.

"நான் செஞ்ச முறை வேணா அதிரடியா இருக்கலாம். ஆனா, நான் செஞ்சது ஒரு காரணத்தோட…"

ரமேஷ் முதல் முறையாய்ப் பதில் சொல்ல ஆரம்பித்தான்.

"என்ன காரணமாம் அண்ணா… இப்படி நடுக்காட்டுல தவிக்க விட்டுப் போனதுக்கு?"

"அதுக்கு முன்னால நான் சொல்றதக் கொஞ்சம் கேளு! போன வாரம் எங்க ஆபீஸுக்கு ரெண்டு பேர் வந்தாங்க. அவங்க கூடவே எங்க அட்மினிஸ்ட்ரேஷன் மேனேஜரும் செக்யுரிட்டியும்."

அவன் என்ன சொல்ல வருகிறான்?… புரியாமல் பார்த்தார்கள்.

"வந்தவங்க ரெண்டு பெரும் வேற யாரும் இல்ல… எங்க ஆபீசுல வேலை பார்த்து… போன மாசம் ஹார்ட் அட்டாக்ல காலமாயிட்ட சங்கர்ராமனோட மனைவியும் மகனும்தான்."

"அதுக்கு?…"

"நான் சொல்ல வரதை முழுசாக் கேளுங்க! அவன் மனைவிக்கு அவனைப் பத்தி எதுவுமே தெரியல. அவனோட சேமிப்பு… சம்பளம்… வங்கிக் கணக்கு… டிபாசிட்ஸ்… இப்படி எதுவுமே தெரியல. எங்களுக்கெல்லாம் ஆச்சர்யம்! ரெண்டு பேர் அப்போ, சங்கர்ராமன் அவங்ககிட்ட கடன் வாங்கினதா சொல்லவும்… அதுவும் பெரிய தொகை… அவன் மனைவி அழ ஆரம்பிச்சுட்டாங்க. அவனுக்கு பைனல் செட்டில்மெண்ட் வர பணமே இந்த மாதிரி கடன் செட்டில் பண்ண சரியாப் போயிடுமோன்னு."

ராகவியும் பாபுவும் கூட வந்து அமர்ந்து விட்டார்கள்.

"எங்க ஆபீஸ்ல அப்புறம் நாங்க பேசும்போது, எங்க வீட்டுலயும் எங்களைப் பத்தி எவ்வளவு தூரம் தெரியும்னு சந்தேகம். மஞ்சரிகிட்ட இதைப் பத்தி நான் பேச ஆரம்பிச்சப்ப அவ சரியா காதுல வாங்கல. வாயை மூடிட்டுப் போங்க… நீங்க எல்லாம் பார்த்துக்குவீங்கன்னு சொல்லிட்டுப் போயிட்டா. எனக்கு அப்பதான் இந்த ஐடியா வந்திச்சு. திடீர்னு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தா என்ன பண்றான்னு பார்க்கலாம்னு…"

"என்னடா இது?…"

"இப்பவும் சொல்றேன்… நான் செஞ்சது உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம். ஆனா, எனக்கு வேற வழி தெரியல. மஞ்சரி கொஞ்சமாச்சும் அவளைச் சுத்தி போட்டிருக்கிற வட்டத்தை விட்டு வெளியே வந்து… இந்த விவரமும் தெரிஞ்சுக்கணும்னு எனக்கு ஆசை. காரை விட்டு இறங்கி காணாம போன மாதிரி நடிச்சேனே தவிர, பின்னாலேயே இன்னொரு கார்ல வந்தேன். கோவிலுக்கும் போனேன். மாமா வீட்டுக்கும் போய் சமாளிச்சு, ஒரு கதை சொல்லி அவங்களையும் கன்வின்ஸ் பண்ணிட்டேன். பின்னாலேயே வந்து அதே இடத்துல ஜாயின் பண்ணிட்டேன்."

சிகரன் அவனையே வெறித்தான். என்ன வேடிக்கை இது!…

"மஞ்சரி! இப்போ சொல்லு… இந்த மாதிரி திடீர்னு எதுவும் நடந்தா அப்போ உனக்கு என்ன செய்யணும்னு ஒரு தெளிவு வந்திருக்கா? இல்லே, அழுகைதான் உன்னால முடியுமா?"

மஞ்சரி திணறினாள்.

"எப்படியும், அந்த மாதிரி ஒரு நிலைமை ஏற்பட்டா யாரா இருந்தாலும் சமாளிச்சு வந்திருவாங்கன்னு நீங்க சொல்லலாம். அதுக்குள்ள அவங்க எவ்வளவு நஷ்டப்படுவாங்கன்னு உங்களால சொல்ல முடியுமா? வீடு… சமையல்… டி.வி-ன்னு ஒரு குறுகிய வட்டத்துல இல்லாம கொஞ்சம் இப்படியும் கவனம் திருப்பினா, இடிஞ்சு போகாம எழுந்து நிற்கிற தைரியம் வரும்னு எனக்குத் தோணிச்சு. நான் செஞ்சது தப்புன்னா ஸாரி! என் நோக்கம் நாம எப்பவும் நல்லா இருக்கணும்! வாழ்க்கைங்கிறது என்னோட… இல்லாட்டி உன்னோட முடியப் போகறதில்ல. நம்ம குழந்தைகளும் நல்லா இருக்கணும்!"

சிகரன் ரமேஷையே பார்த்தான்.

"நீ செஞ்சது சரியா தப்பான்னு நான் தீர்ப்பு சொல்லப் போறதில்ல. மஞ்சரிக்கு ஒரு விஷயம் சொல்ல ஆசைப்பட்ட. அதை உன் பாணில சொல்லிட்ட. கதை எழுதற எனக்கு இது ஒரு சுவாரசியமான தீம். மஞ்சரிக்கு சமாதானம் சொல்ல வேண்டியது நீதான். ஒரு சின்ன அட்வைஸ்… இந்த மாதிரி அடுத்த தடவை மடத்தனம் பண்ணாத! பாவம் மஞ்சரி, புள்ளைங்க!"

சிகரன் எழுந்து நின்று கை குலுக்கி விடைபெற்றுப் போனான். தற்செயலாய்த் திரும்பிப் பார்த்தபோது மஞ்சரியை ரமேஷ் கெஞ்சிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது!

(முடிந்தது)

About The Author

2 Comments

  1. nisa

    இது உன்மையில் என் வால்வில் நடந்தது. என் கனவரை திடேரென்ரு பிரிந்து இந்த கதையில் பொலவெ நான் எதுவும் தெரியாமல் மிகவும் துன்ப பட்டென். கதை முலம் சிரந்த அரிவுரை

  2. ரிஷபன்

    நிஸா.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. ரிஷபன்.

Comments are closed.