காதலுடன் ஒரு கண்ணாம்பூச்சி

நல்ல சிவப்பாய் சிம்ரன் மாதிரி இருக்கும் பெண்ணும், கவுண்டமணி மாதிரியான பையனும் காதலிப்பதைப் பார்த்திருப்பீர்கள். காதலுக்குக் கண்ணில்லை, அதனால்தான் இப்படியெல்லாம் மடத்தனமாய் நடக்கிறது என்ற டயலாகை பலமுறை கேட்டு இருப்பீர்கள். காதலுக்கும், மடமைக்கும் என்ன மயக்கமெனக் காண்போமா?

முன்னொரு காலத்தில் இறைவன் உலகைப் படைக்கும் முன், மனிதனுக்குரிய பொய், புரட்டு, மடமை, கவர்ச்சி, காதல் ஆகிய குணங்களைப் படைத்து, ஒரு அறையில் அளாவளாவ விட்டிருந்தான். சும்மாவே இருப்பது போரடிக்கவே குணங்கள் அனைத்தும் கண்ணாம்பூச்சி விளையாட முடிவெடுத்தன.

பொறுமையில்லா மடமையோ “நான்தான் ஒன்று.. இரண்டு எண்ணுவேன்” என அடம்பிடிக்கவே, அதன் குணம் அறிந்து பொய்யும், புரட்டும், காதலும், கவர்ச்சியும் “சரி” என்றன.

மகிழ்ச்சி பொங்க மரத்தினருகே மறைந்து மடமை எண்ணத் தொடங்கியது. ஒவ்வொரு குணமும் அதன் உடற்கூறுகளுக்கு ஏற்ப மறைவதற்கு இடங்களைத் தேர்ந்தெடுத்தன. புரட்டு குப்பைத் தொட்டிக்கு பின்புறம் ஒளிந்து கொண்டது. பொய்யோ கற்களுக்கு அடியில் மறைய நினைத்து, பின் ஏரியின் அடியில் மறைந்து கொண்டது. மடமை “எண்பது.. எண்பத்தொன்று” என எண்ணும்போது கூட, காதல் எங்கே ஒளிவது எனத் தெரியாமல் யோசித்துக் கொண்டே இருந்தது. வழி அறியாமல் தடுமாறியது.

மடமை “95, 96…100” என எண்ணுகையில், காதல் அருகிலிருந்த ரோஜாச் செடியினில் மறைந்து கொண்டது.

எண்ணி முடித்ததும் மறைந்தவர்களைக் கண்டறிய பாடலுடன் பயணப்பட்டது மடமை.

கள்ளிச் செடியில் மறைந்தவனைக் கசங்காமல் பிடிப்பேன்,
அரளிச் செடியில் மறைந்தவனை அள்ளி அணைப்பேன்,
தாமரைப் பூவில் தங்கியவனைத் தாவிப் பிடிப்பேன்,
ஓரிடமும் விடாமல் ஓடி வந்து ஒளிந்தவர்களை பிடிக்க வருகிறேன்.. வருகிறேன்..

எனக் கூவியவாறு மடமை தேடத் தொடங்கியது.

சோம்பல் அதன் குணத்திற்கேற்ப, ஓடி ஒளிய சோம்பல் பட்டு மடமையின் கால்களுக்கிடையே மறைந்திருந்ததனால் சோம்பலை முதலில் கண்டறிந்தது. பொய், புரட்டு என ஒவ்வொரு குணங்களையும் கண்டுபிடித்தாலும் கடைசி வரை காதலை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. கவர்ச்சி களிப்புடன் மடத்தனத்தை பார்த்துக் கத்தியது, காதல் ரோஜாச் செடியில் ஒளிந்திருப்பதாக. மடமை மின்னலெனப் பாய்ந்து பார்க்கையில், காதலின் கண்களை ரோஜாவின் முட்கள் குத்தியிருக்க, கண்ணீருடன் காதல் நின்றது. அதன் பார்வையும் பறி போனது.

‘காச்..மூச்’ என்ற இந்த சத்தத்தில் கடவுள், குணங்கள் இருந்த அறைக்குள் வந்து நடந்ததை அறிந்து கொண்டார். காதலின் கண்பார்வை போக மடமையே காரணம், அதனால் காதலுடன் மடமை எப்போதும் இருக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

அப்போதிலிருந்து இப்போதுவரை காதலுக்குக் கண் இல்லை, மடமையைப் பிடித்த கைகளை விடுவதுமில்லை.

Source: Web resources

About The Author

9 Comments

  1. jeno

    இது உங்கல் சொந்த கதையா இல்லை வேரு எங்காவது படித்ததா? உஙலுடைஅது என்டால் உங்க கர்பனை சூப்பர். வாட் ட க்ரியடிவிட்டி

  2. s.krish

    ஏற்கெனவே படித்ததுதான் ….மறுபடியும் படிப்பதற்கு சலிப்பு தட்டவில்லை.

  3. Dr. S. Subramanian

    Kavitha mentioned the source of the story as the web. I have read this story before. Good one!

Comments are closed.