குருடனின் நுண்ணறிவு

அமைச்சர் அரசவைக்கு ஒரு குருடனை அழைத்து வந்து, “மன்னா! இந்தக் குருடன் தரும் ஆலோசனைகள் ஆச்சரியம் அளிப்பவை. நீங்களே சோதித்துப் பார்த்து விரும்பினால் பின் இவனை ஆலோசகனாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார். மன்னன் அந்தக் குருடனுக்கு அரண்மனையில் தனி அறை கொடுத்து எல்லா சௌகரியங்களையும் அளித்தான்.

ஒரு நாள் குருடனின் திறமையைச் சோதிப்பதற்காக அரசன், ஒரு குதிரையை தேர்வு செய்யச் சொன்னான். குருடனும் பல குதிரைகளைச் சோதித்து ஒரு குதிரையைத் தேர்வு செய்தான். குதிரையும் நன்றாக ஓடி மன்னனின் பாராட்டைப் பெற்றது. இதற்குக் கைமாறாக அரசன் குருடனுக்கு ஒரு உருண்டை தயிர் சாதமும், ஒரு வாழைப் பழமும் தினசரி அளிக்கச் செய்தான்.

நாட்கள் கடந்தன. மன்னன் திருமணம் செய்து கொள்ள வேண்டி குருடனை ஒரு பெண்ணைத் தேர்வு செய்யச் சொன்னான். குருடனும் சில பெண்களுடன் பேசிப் பார்த்து ஒரு பெண்ணை சிபாரிசு செய்தான். அரசனும் திருமணம் செய்து கொண்டு ஆனந்தமாக வாழ்வைக் கடத்தி வந்தான். குருடனுக்கு தினசரி 2 உருண்டை தயிர் சாதமும், 2 வாழைப் பழமும் அளிக்க ஆணையிட்டான்.

நாட்கள் கடந்தன. அரசன் குருடனிடம் தன்னைப் பற்றிக் கூறச் சொன்னான். குருடனும் “தாங்கள் ஒரு சமையல்காரரின் மகன். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லை” என்று கூறினான். அரசன் குருடனிடம், “சரியாகச் சொல்! தவறாக இருந்தால் உனக்குத் தண்டனை கிடைக்கும்” என்றான். ஆனால் குருடனோ தன் பதிலை மாற்றிக் கொள்ளாமல், “தங்கள் தாயாரிடம் கேட்டுப் பாருங்கள்” என்றான்.

தாயாரிடம் அரசன் இது பற்றி விசாரித்தான். அதற்குத் தாய், “நாட்டின் மன்னன் திடீரென்று இறந்த போது வாரிசு இல்லாததால் அரசாங்க சமையல்காரராக இருந்த உன் தந்தை அரசரானார்” என்றார்.

அரசன் ஆச்சரியத்துடன் குருடனிடம், “இந்த சமாச்சாரம் உனக்கு எப்படித் தெரிந்தது?” என்று கேட்டான். அதற்குக் குருடன், “அரசே! உலகில் எந்த மன்னனும் வெகுமதியாக ஒரு ஊரையோ, வீட்டையோ, தோப்பையோதான் அளிப்பார்கள். நீங்கள் சமையல்காரரின் மகன் ஆனதால் உங்கள் அறிவு உணவினைத்தான் எண்ணியது” என்று கூறினான்.

“மேலை தவத்தளவே ஆகுமாம் நுண்ணறிவு”
என்பது திருவள்ளுவரின் வாக்கல்லவா – பொய்க்காதல்லவா!

About The Author

4 Comments

 1. Dr. S. Subramanian

  அது அவ்வையாரின் வாக்கல்லவோ?
  அவ்வையாரின் மூதுரையைப் பார்க்கவும்

  நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
  நு¡லளவே ஆகுமாம் நுண்ணறிவு – மேலைத்
  தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
  குலத்தளவே ஆகுமாம் குணம்.

  #8.

 2. P.Balakrishnan

  குலத்தளவே ஆகுமாம் குணம் என்னும் பொருளில் குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினில் அடைத்து வைத்து
  மிக்கதொரு மஞ்சள் பூசி மிகுமணம் செய்தாலும்
  குக்கலே குக்கலல்லால் குணத்தினில் வேறாமோ
  அக்குலம் வேறாமோ வேறாமோ அதனிடம் புனுகு உண்டாமோ?
  என்று விவேகசிந்தாமணியும்
  வங்காளம் ஏறுகினும் வாருகோல் ஒருகாசு மட்டன்றி வேறாகுமோ
  வானேறி உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி வண்ணப் பருந்தாகுமோ
  கங்காசலம் தன்னில் மூழ்கினும் பேய்ச்சுரைக் காய் நல்ல சுரையாகுமோ
  ……….
  ……….
  என்று குமரேச சதகமும் கூறும்.

Comments are closed.