குறும்புக் குட்டிகள்

எல்லாச் செல்வங்களிலும் சிறந்த செல்வமாகக் கருதப்படுவது குழந்தைச் செல்வமாகும். ஆனால் இந்த விலை மதிப்பில்லாத செல்வத்தைப் பராமரிக்க நாம் எவ்வித முறையான பயிற்சியும் எடுத்துக் கொள்வதில்லை. ‘மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்’ என்ற மனப்பாங்கில் நாம் ஊறிவிட்டோம். குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. அதற்குப் பயிற்சி அவசியம்.

‘குழந்தை வளர்ப்பு’ என்பது, கிட்டத்தட்ட குழந்தைகளின் மூன்று வயது வரை சற்றுக் கடினமாக இருக்கும். காரணம், இந்த வயது குழந்தைகளால் தங்கள் தேவைகளைத் தெளிவாக வெளியிட முடியாது. எனவே, இந்த வயது வரையுள்ள குழந்தைகளை வளர்க்கின்றவர்களின் பொறுப்பு மிக மிக முக்கியமாகும்.

சரி.. குழந்தைகள் எப்படி தன் தேவைகளை வெளியிடும்? அழுகைதான்! குழந்தைகளின் ஒரே ஆயுதம் இதுதான்! குறும்பு செய்யும் போது கண்டித்தாலோ, தனக்கு ஏதாவது வேண்டும் என்று நினைத்தாலோ குழந்தை பிரயோகிப்பது இந்த ஆயுதத்தைதான்! குழந்தையை ஆசையாகப் பராமரிப்பவர்களுக்குக் கூட கோபத்தை ஏற்படுத்துவதும் இந்த அழுகைதான்! எனவேதான் பெரும்பாலான பெற்றோர்கள் தம் அன்பையும் மீறி, குழந்தையை அடித்து அல்லது பயமுறுத்தி அல்லது மிரட்டிச் சமாதானம் செய்கின்றனர்! இந்த அணுகுமுறை சரியா?

குறும்பு செய்யும் குழந்தைகளை எப்படிக் கையாள்வது?

குழந்தைகள் எல்லா விஷயங்களிலும் உங்களைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இதுதான் பெற்றோர்களின் பிரம்மாஸ்திரம்! இதை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். எப்படி? மிக எளிது! குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்! இதன் மூலம் குழந்தைகளை நல்ல முறையில் புரிந்து கொள்ளலாம். குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் வரை பிரச்சினை இருக்காது. ஆனால் குழந்தைகள் தவழ்ந்து, நடக்க ஆரம்பிக்கும் போது, அவர்களின் தேவைகளும், விளையாட்டுகளும் அதிகமாகின்றன. இந்த விளையாட்டு அல்லது தேவைகள் அதிகமாக உள்ள குழந்தைகளை ‘நாட்டி’ (naughty) அல்லது ‘குறும்புக் குழந்தை’ என்கிறோம்!

குழந்தைகள் செய்யும் குறும்புகளைப் பட்டியலிடுவோமா?

* சாப்பிடாமல் படுத்திக் கொண்டே இருப்பது
* தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல் விளையாடிக் கொண்டிருப்பது
* இயற்கை உபாதைகளைப் போக்க பயிற்சியளிக்கும் போது ஒத்துழைக்காமல் இருப்பது
* ‘வேண்டாம்’, ‘மாட்டேன்’ என்று எதிர்மறையாகச் சொல்லிக்கொண்டிருப்பது
* பெற்றோர்கள் தனியே விட்டு விட்டுச் சென்றால் அழுவது, கடிப்பது, அடிப்பது…இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால், உளவியல் அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? இவையெல்லாம் குழந்தைகளின் வாடிக்கையான நடவடிக்கைகள்தான் என்கின்றனர். ஆனால் நிச்சயமாக பெற்றோர்களைப் பைத்தியமாக்கி விடும்!

சரி! இந்தக் குழந்தைகள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? இதைப் புரிந்து கொண்டால் பெற்றோர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்தானே! இந்த இடத்தில் நீங்கள் உணர வேண்டியது என்னவென்றால், எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரி குறும்பு செய்வதில்லை. சில குழந்தைகள் சமர்த்தாக இருக்கலாம்; சில, இன்னும் அதிகமாகப் படுத்தலாம். எப்படி இருந்தாலும் உங்கள் குழந்தைகளை நீங்கள் நன்றாகப் புரிந்து கொண்டால் அதற்கேற்ப அணுகுமுறையிலும் சிற்சில மாற்றங்களைச் செய்து கொள்ள முடியும்!

பெற்றோர்களின் முகத்தை மட்டுமே பார்த்துப் பழகிய குழந்தைகள், கொஞ்சம் கொஞ்சமாக, இந்த அகன்ற உலகத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். புதுப்புது பொருள்களைப் பார்த்து, புதுப்புது ஒலிகளைக் கேட்டு, புதுப்புது அர்த்தங்களைப் பெறுகின்றனர். இப்படித் தம்முடைய உலகத்தை அவர்கள் விரிவுபடுத்த எண்ணும் போது, யாருடைய குறுக்கீட்டையும் அவர்கள் விரும்புவதில்லை! எந்தக் குழந்தையும் குறும்புகளை வேண்டுமென்று செய்வதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Child

உதாரணமாக ஒன்றைப் பார்க்கலாமா? ஒன்றரை வயதுக் குழந்தை பாலைக் கீழே கொட்டுகின்றது என்று வைத்துக் கொள்வோம். நாம் உடனே குழந்தையிடம் ‘அப்படி செய்யாதே’ என்போம். குழந்தை நாம் சொல்வதைக் கேட்குமா? நிச்சயமாக இல்லை! என்ன செய்யும் தெரியுமா? மீண்டும் மீண்டும் கொட்டிக் கொண்டே இருக்கும். நமக்குத்தான் டென்ஷன் அதிகமாகும்!

குழந்தை இப்படிச் செய்ய என்ன காரணம்? கீழே சிதறும் பாலின் ஓசையும், சிந்திய பால் உண்டாக்கும் வடிவமும் குழந்தைக்குப் புதிது. புது உலகைக் கண்டுபிடிக்க எண்ணும் குழந்தைக்கு, இது மற்றொரு கண்டுபிடிப்பு! எனவே நீங்கள் குழந்தையைக் கண்டித்தால் அல்லது அடித்தால் குழந்தைக்கு அது குழப்பத்தை ஏற்படுத்தும். ஏனெனில் உங்களுடைய கோபம், அதன் செயலுக்காகத்தான் என்று குழந்தையால் தொடர்புபடுத்திக் கொள்ளத் தெரியாது. அதேபோல் குழந்தைகள் வீட்டில் ஸ்விட்சுகளுடன் விளையாடுவதைப் பார்த்திருக்கலாம். நீங்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அந்த மாதிரியான நேரங்களில் உங்கள் கோபத்தை அடக்கிக் கொண்டு குழந்தைகளை அணுக வேண்டும்.

எப்படி? குழந்தைகளைக் கட்டித் தழுவியோ, வாயால் ஒலி எழுப்பியோ குழந்தை செய்யும் அந்தக் குறும்பை மாற்றுங்கள். அல்லது குழந்தைக்கு வேறு சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள். அல்லது குழந்தையைக் கண்டிப்பதை விட்டு விட்டு, குழந்தையின் போக்கை திசை திருப்பி விடுங்கள். குழந்தை புதியதை ரசிக்கத் தொடங்கிவிடும்.

உங்கள் வீட்டில் மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் இரண்டு இருந்தால், கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு ‘என்னுடைய’ அல்லது ‘உன்னுடைய’ என்பதற்குச் சரியான பொருள் தெரியாது. அதனால் அவர்களுக்குப் ‘பங்கிடுதல்’ என்பது பற்றி அவ்வளவாகத் தெரியாது. அதனால் இரண்டு குழந்தைகளுள், எந்தக் குழந்தையையும் தண்டிக்கக்கூடாது. எது வாங்குவதாயினும், இரு குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி வாங்குங்கள்! இரண்டு குழந்தைகளும், பெற்றோர்கள் தன்னிடம்தான் அன்பு கொள்ள வேண்டும், தன்னைத்தான் பாராட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். அதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்!

குழந்தைகளின் குறும்புகள் சில நேரங்களில் உங்களுக்கு மன அழுத்தைத் தரலாம். குழந்தைகள் வேண்டுமென்று குறும்பு செய்வதில்லை என்பதை மனதார ஏற்றுக் கொள்ளுங்கள்! குழந்தைகளின் குறும்பு என்பது ‘ஓடும் மேகம்’ போன்றது. சில வருடங்களில் மறைந்து விடும். ஆனால் இக்குறும்புகளின் மூலம் உங்கள் குழந்தைகள் வளர்கின்றன; முன்னேறுகின்றன; புதியவற்றைக் கண்டுபிடித்துக் கொள்கின்றன. குழந்தைகளின் இந்த வளர்ச்சி நமக்கு மகிழ்ச்சிதானே!

(Disclaimer : The images in this article are collected from various resource on the web. If there is any copyright violation, please inform the administration. Corrective actions will be taken.)

About The Author

3 Comments

 1. P.Balakrishnan

  பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா
  பேணி வளர்க்கவேண்டும் தெரியுமா
  அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா -குழந்தை
  அழுவதைக் கேட்டு மனசு கெஞ்சுமா….
  -என்ற திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகிறது.
  -அரிமா இளங்கண்ணன்

Comments are closed.