கொடூரம் (2)

இவள் எப்படி இங்கு? ஏன் என்றெல்லாம் குழம்பியது. பத்து லட்ச ரூபாய் வியாபாரத்தை வெற்றிகரமாக முடித்துவிட்ட உற்சாகம், உடனே அடையாறில் கடற்காற்று வாங்கிக் கொண்டிருந்த ஷாவிடம் சொல்லிப் பாராட்டு பெறப் போகிறோம் என்கிற எதிர்பார்ப்பு, அங்கே ப்ரீதி இருப்பாள் என்கிற குதூகலம் எல்லாம் ஒரு கணத்தில் மல்லிகாவைப் பார்த்த மாத்திரத்தில் சுருங்கிப் போய்விட்டன.

"ஹாய் மல்லிகா…"

மல்லிகா அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

"எங்க இவ்வளவு தூரம்?"

"உன்னைப் பார்க்கத்தான்."

"என்னையா…"

"ஆமா… உங்ககூடக் கொஞ்சம் பேசனும்…"

"இப்படியே உட்காரலாமா…"

"வேணாம். டிரைவரை அனுப்பிடு. நாம் போய்க்கிட்டே பேசலாம்…"

பஸ் செலவுக்குப் பணம் கொடுத்து டிரைவரை அனுப்பி விட்டு, கணேசன் காரை ஸ்டார்ட் செய்தான். மல்லிகா அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

கார் தார்ச் சாலையில் ஓடத் தொடங்கியதும் அவன் கேட்டான்.

"சொல்லு…"

"உன் லெட்டரைப் படிச்சேன்…"

"ஐ ஆம் சாரி மல்லிகா…"

"பரவாயில்லே… எனக்கு ஒரு விஷயம்தான் புரியல்லே…"

"என்ன?"

"உனக்கு என்மேலே விருப்பம் இல்லேன்னு எழுதியிருந்தே பாரு அது."

கணேசன் மெளனமாகச் சாலையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்னை நீ புரிஞ்சுக்கனும் மல்லிகா."

"ஓ.. எஸ். கட்டாயம். முதல்லே எனக்குப் புரியாததைச் சொல்லு. நீ என்னை விரும்பினதே கிடையாதா?"

கணேசன் மவுனம் சாதித்தான்.

"ஏன் பேச மாட்டேங்கறே?"

"இல்லே மல்லிகா. உன் மேல எனக்கு எந்தவிதமான ஆசையும் இல்லே…"

"அப்படீன்னா, எனக்கு சங்கடமா இருக்கு கணேஷ். சித்தப்பா சீரியஸா இருக்கிறதா தந்தி வந்து அப்பாவும் அம்மாவும் தஞ்சாவூர் போனாங்களே… அப்போ!"

கணேசன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

"என் மேலே ஆசையில்லாமதான் அப்படி நடந்துகிட்டியா? ஓரமா வண்டியை நிறுத்தேன்…"

நிறுத்தினான்.

"ப்ரீதி ரொம்பப் பணக்காரியோ?"

"ஊம்"

"ப்ரீதியைக் காட்டிலும் பணக்காரி இன்னொருத்தி கிடைச்சா, ப்ரீதியை உட்டுட்டுப் புதுசா வந்தவ பின்னால போயிடுவியா? ப்ரீதி, உன் மேல எனக்கு ஆசை இல்லேன்னு சொல்லுவியா?"

அடிப்பட்ட உணர்வோடு தலையைக் கவிழ்த்திருந்தான் கணேசன். லேசாகத் தலை திருப்பி அவளைப் பார்த்தான். அந்த இருட்டிலும் அவள் கண்டள் பளபளத்தன.

"போகலாமா?" என்றான் கணேசன்.

"எங்கே?"

"உன் வீட்டுக்குத்தான். உன்னை வீட்டுல விட்டுட்டு…"

"எனக்கு நீ வழி காட்டறயா கணேஷ்?"

"…"

"இப்ப நான் என்ன செய்யப் போறேன் தெரியுமா?"

"சொல்லு."

"இந்த பையில ரெண்டு பாட்டில் திராவகம் இருக்கு."

"திராவகமா! எதுக்கு?"

"உன் மூஞ்சியில் ஊத்துறதுக்கு."

"…"

"பயமா?"

"நீ ஜோக் பண்றே… உன்னால அதெல்லாம் செய்ய முடியாது."

"ஏன் முடியாது? நான் பெண். அதனாலயா…?"

"எங்கே? பாட்டிலைக் காட்டு."

கணேசன் கை பாட்டிலை நோக்கி நீண்டது. மல்லிகா பையைத் தன் இடது கையால் பிடித்துக் கொண்டாள்.

ஏதேனும் விபரீதம் நடந்து விடுமோ என அஞ்சுகிறான் கணேசன். சில நிமிஷங்கள் கழித்து.

"சரி போகலாம்—" என்றாள் மல்லிகா.

"எங்கே?"

"என்னைச் சைதாப்பேட்டையில விட்டுடு."

சைதாப்பேட்டை பஸ் ஸ்டாண்டில் இறங்கிக் கொண்டாள் மல்லிகா.

"என்னை மன்னிச்சுடு மல்லிகா…" என்றான் கணேசன்.

"இட்ஸ் ஆல் ரைட்… நீ புறப்படு. குட் நைட்" என்று கை அசைத்தாள்.

வீடு சேர்ந்து, வெறும் பாலை மட்டும் குடித்து முகம் கழுவிக் கொண்டு படுக்கையில் வந்து படுத்தவனை டெலிபோன் கூப்பிட்டது.

எடுத்தான். மறுபக்கத்தில் செளத்திரி. பதற்றத்துடன் சொன்னார். "யாரோ ப்ரீதியின் முகத்தில் திராவகத்தை ஊற்றிவிட்டார்கள். ஊற்றியவள் ஒரு பெண்."

ரிசீவர் கணேசனின் கையிலிருந்து நழுவியது.

*****

About The Author

2 Comments

Comments are closed.