கோபம் கொள்ளலாகாது பாப்பா!

கணேஷ் நல்ல பையன். நன்றாகப் படிப்பான். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவான். பள்ளியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பல பெறுவான்.

இப்படிப் பல நல்ல குணங்கள் இருந்துபோல, முன்கோபம் என்ற கெட்ட குணமும் அவனிடம் இருந்தது. எந்தவொரு சின்ன விஷயத்திற்கும் எளிதில் கோபம் அடைந்து விடுவான். யார் மேல் கோபம் கொள்கிறானோ அவர்களுடன் சண்டை இடுவான். சில சமயம் கோபம் வரும்போது கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் உடைத்துவிடுவான்.

அவனுடைய பெற்றோர் அறிவுரைகள் சொல்லி அவனைத் திருத்த முயன்றனர். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. அவனுடைய இந்த குணத்தால் அவனுடைய எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த அவனுடைய தந்தை முன்கோபத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளை அவனுக்கு உணர்த்த எண்ணினார்.

ஒரு நாள் கணேஷுடைய தந்தை அவனை அழைத்து ஆணிகள் நிறைந்த அட்டைப் பெட்டியை அவனிடம் கொடுத்தார். அவனிடம், எப்பொழுதெல்லாம் கோபம் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் இந்த ஆணிகளில் ஒன்றை எடுத்து நம் வீட்டைச் சுற்றியமைந்துள்ள மர வேலியில் அறைந்துவிடு. இதன்மூலம் உன்னுடைய கோபம் தணியும் என்று கூறினார். கணேஷும் இதற்கு ஒப்புக் கெண்டான்.

அடுத்த முறை கோபம் ஏற்பட்ட போது, ஒரு ஆணியை சுத்தியல் கொண்டு அறைந்தான். ஒவ்வொரு முறை கோபம் கொள்ளும்போதும் இதேபோல செய்தான். வேலியில் உள்ள ஆணிகளைக் காணும் போது தான், தான் அதிக அளவு கோபம் கொள்வதை உணர்ந்தான். நாளடைவில் அவன் அறையும் ஆணிகளின் எண்ணிக்கை குறைந்தது. சிறிது காலத்திற்குப் பிறகு அவனுடைய முன்கோபம் முழுமையாக மறைந்தது.

கணேஷ் தந்தையிடம் சென்று தன்னுள்ளே ஏற்பட்டுள்ள மாற்றத்தைத் தெரிவித்தான். அவனைப் பாராட்டிய தந்தை, வேலியில் அவன் அறைந்துள்ள ஆணிகளை எடுத்து விடும்படிக் கூறினார். கணேஷும் அவ்வாறே செய்தான்.

வேலியினருகே வந்த தந்தை கணேஷிடம், “வேலியிலிருந்து ஆணிகளை எடுத்து விட்ட போதிலும் அவைகள் ஏற்படுத்தியுள்ள வடுக்களைப் பார். இதன் மூலம் நீ தெரிந்து கொள்ள வேண்டியது, உன்னுடைய கோபம் மறைந்தாலும் அது ஏற்படுத்திய வலிகளோ, வடுக்களோ மறைவதில்லை. கோபம் கொள்ளுதல் கேடு விளைவிக்கும். ஆதலால் கோபம் கொள்ளக்கூடாது” என்றார்.

என்ன குழந்தைகளே.. நாமும் கோபத்தைக் குறைப்போமா?

About The Author

1 Comment

Comments are closed.