சங்கீத சங்கமம்

இது மார்கழி சீசன். அந்தக் காலத்தில் மார்கழி மாதத்தை நினைத்துப் பார்க்கிறேன். உஷத் காலத்தில் நடுங்கும் குளிரில் எழுந்து (குளித்து?) தலையைச் சுற்றி ஒரு மஃப்ளரைச் சுற்றிக்கொண்டு கோவில் கோவிலாகச் செல்லும் காலம். கோவிலில் பெருமாளைச் சேவித்துவிட்டு, நெய் ஒழுக குருக்கள் தரும் பொங்கலை வாங்கிச் சாப்பிடும்போது இருக்கும் அந்த ஆனந்தத்தை அளவிட்டுச் சொல்ல முடியாது. நான் பொங்கலுக்காகவே கோவிலுக்குச் சென்று, அப்படியே எதற்கும் இருக்கட்டும் என்று பெருமாளை தரிசிக்கும் ரகம்!

விடிந்தும் விடியாத அந்தக் காலை வேலையில் ஜால்ராக்கள் சப்திக்க வீதி ஊர்வலமாக நாம சங்கீர்த்தனம் வரும்போது பிட்சையுடன் மாமிகள் காத்திருப்பார்கள். திருப்பாவையும், திருவெம்பாவையும் காற்றில் மிதந்து வரும். அந்த ரம்மியமான சூழலை இந்தக் கால அவசர வாழ்வு ஏதோ நிஷா புயல் போல அடித்துக் கொண்டு போய் விட்டது!

இப்போது மார்கழி மாதம் என்றாலே சங்கீத சீசன். ஏதோ மார்கழி மதத்திற்குள் கச்சேரிகளை வைக்காவிட்டால் உலகமே இருண்டு விடும் போல சென்னையில் இருக்கும் ஆயிரத்தி சொச்சம் சபாக்களும் விழா நடத்திப் பாடகர்களுக்குப் பட்டம் கொடுத்து கவுரவிக்கும் வருடாந்திரச் சடங்கு. இந்த ஒரு மாதத்திற்குள் பெரிய பெரிய வித்வான்களுக்கு முப்பது அல்லது நாற்பது கச்சேரிகளாவது இருக்கும். இந்த சமயத்தில் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளாவிட்டால் அப்புறம் அடுத்த மார்கழிதான். இளம் வித்வான்கள் தங்களுக்கு ஏதாவது சான்ஸ் கிடைக்காதா என சபா சபாவாக ஏறி இறங்கி காலை ஒன்பது மணி ஸ்லாட் கிடைத்தால் கூடப் பொங்கிப் பூரிக்கும் நேரம்.

கச்சேரி நடக்கும் சபாக்கள்தான் பெண்களுக்கு ஒருவரை ஒருவர் சந்திக்க கிடைக்கும் இடம். தங்களுடைய பீரோவில் இத்தனை காலம் தூங்கிக் கிடந்த பட்டுப் புடவைகளுக்கு அப்போதுதான் விடியல் ஏற்படும்! வைரத் தோடு, பட்டுப் புடவைகள் சகிதமாக இந்த மகளிரணி கச்சேரிக்குள் நுழையும்போதுதான் கச்சேரியே களை கட்டும்.

எந்த சபாக்களில் யார் கச்சேரி நடக்கிறது என்பதைவிட எந்த சபாவில் கேண்டீன் நன்றாக இருக்கும் என்பதுதான் அனேகரின் பிரச்சினை! ‘நேத்து நாரதகான சபா கேண்டீன்ல ரவா தோசையும் கொத்தமல்லி சட்னியும் போட்டான் பாரும், இன்னிக்கெல்லாம் சாப்பிட்டுண்டே இருக்கலாம்’ என்று சம்பாஷணை தொடரும்.. யார் எப்படிப் பாடினார் என்பது இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்படும்.

எனக்கும் கர்நாடக சங்கீதத்திற்கும் காத தூரம். எனக்கு இசைக்காதுகள் உண்டு என்றாலும் பிரபல வித்வான்களைப் பற்றியோ ராகங்களைப் பற்றியோ ஒன்றும் தெரியாது. சாவேரிக்கும் சுத்தசாவேரிக்கும் உள்ள வித்தியாசத்தைக் கேட்டால் குளிக்காமல் வந்தால் சாவேரி, குளித்துவிட்டு வந்தால் சுத்த சாவேரி என்று சொல்லும் அளவிற்கு ஞானஸ்தன்! ஆனாலும் எல்லாரும் போற்றிப் புகழும் இந்த சங்கீதக் கச்சேரிக்கு ஒருநாளாவது போய்ப் பார்க்க (கேட்க)வேண்டும் என்ற ஆவல் உந்த ‘எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்’ என்பது போல நானும் போனேன்.

அரங்கு நிறைந்திருந்தது. கிட்டத்தட்ட ஒரு மூத்த குடிமகன்கள் மகாநாடு போன்று இருந்தது. மாமிகள் தங்கள் புடவை நகை அணிவகுப்பை நடத்த, ஆண்கள் வரிசையில் காண்டீனிலிருந்து ஒவ்வொருவராக நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு நுழைந்தார்கள். பாடகர் பாட ஆரம்பித்தார். என்னவோ வேதனையில் முனகுவது போல் இருந்தது. கைகளை இந்தப் பக்கமும் அந்தப் பக்கம் ஆட்டிய வேகத்தில் எங்கே மிருதங்கக்காரர் மற்றும் வயலின்காரரின் கண்களுக்கு சேதாரம் ஏற்பட்டுவிடுமோ என்று பயமாயிருந்தது. ஏதோ சிடுக்கு விழுந்த பூணலை அவிழ்ப்பதைப்போல கைகளை கீழும் மேலும் கொண்டுபோய் உச்ச ஸ்தாயியில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார் பாகவதர். ‘அவர் பாட்டுக்குப் பாடட்டும். நமக்கென்ன’ என்பதுபோல பெண்கள் வரிசையில் தனியாக ஒரு அரட்டைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. சரி இவர்கள் பேச்சாவது சுவாரஸ்யமாக இருக்கிறதா என்று பார்க்க அவர்கள் பக்கம் காதைச் சாய்த்தேன்.

கச்சேரி விட்டு வந்தபோது எனக்குப் புரிந்த விஷயங்கள் சில இதோ..

காமாட்சி மாட்டுப்பெண்ணுக்கு டெலிவரி நேரம். வடபழனியில்தான் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்திருக்கிறார்கள். (நாளைக்குக் கச்சேரிக்குப் போனால் என்ன குழந்தை என்று தெரிந்து விடும்!).

செண்பகத்தோட பெண் யாரையோ கூட்டிண்டு ஓடிட்டாளாம் (கலி முத்தியிருக்கு!).

ஜெயராம ஐயருக்கு ஹார்ட் அட்டாக்.. இன்னிக்கோ நாளைக்கோன்னு இழுத்துண்டு இருக்கு.

ராமசேஷனுக்கு அடுத்த மாதம் சஷ்டியப்தபூர்த்தி.

இது போன்ற உலக முக்கியமான செய்திகள்தான்!

About The Author

1 Comment

Comments are closed.