சத்குரு

மூன்று மாதமாகத்தான் இப்படி. அதற்கு முன்னால் எல்லாம் கும்பகர்ணன் என்பதுதான் என் பட்டப் பெயர். படுக்கையில் சாய வேண்டியதுதான். உடனே கொர்.. (மற்றவர்கள் சொல்லக் கேட்டதுதான்!!) பின் எப்படி இப்படி திடும் என்று நேர்ந்தது?

குஷன் மெத்தைதான். சொகுசுத் தலையணைதான். இருந்தும் தூக்கம் மட்டும் வர மாட்டேன் என்கிறது.

இரவு படுப்பதற்கு முன் டி.வி. பார்க்காதீர்கள். பார்க்கவில்லை. 1,2,3, எண்ணுங்கள். ஒரு கோடி நாற்பத்து லட்சத்து முப்பத்து மூன்றாயிரத்து இருபத்து ஏழு வரை எண்ணியாயிற்று. அதெல்லாம் போதாது. கண்ணை மூடிக்கொண்டு, ஆட்டு மந்தை போவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு ஆடாக எண்ணுங்கள். எண்ணுகிறேன். ஒவ்வொரு ஆடும் மே..மே.. என்று கத்தித் தொந்தரவுதான் செய்கிறது.

மந்திரவாதியிலிருந்து மருத்துவ நிபுணர் வரை எல்லாரையும் கன்சல்ட் செய்தாகி விட்டது. கூகிளிலிருந்து அத்தனை சர்ச் எஞ்சினையும் அலசி எடுத்தாய் விட்டது. 37, 632 பதிவுகள் பார்த்தாயிற்று. பலன், ஊஹூம்.

பத்திரிகைகளில் ஆலோசனைப் பகுதிகளையும் விட்டு வைக்கவில்லை. அன்புள்ள டாக்டர், மூன்று மாதமாகிறது. கண்ணிமைக்கும் நேரத் தூக்கம் கூட இல்லை. நீங்கள்தான் ஆலோசனை சொல்ல வேண்டும்.

"இரவு உணவுக்கு மூன்று மணி நேரம் கழித்தே தூங்கப் போகவும். படுக்குமுன் சூடான பால் சாப்பிடவும். தூங்குவதற்கு முன் கோபம் போன்ற உணர்ச்சிகளைத் தவிர்க்கவும். இடது புறமாக ஒருக்களித்துப் படுக்கவும். அடிக்கடி திசை மாற்றித் தலை வைத்துப் படுக்கவும். அப்படியும் பலன் இல்லையென்றால், தக்க மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்."

நான் (மனதுக்குள்), "அதற்கு நீங்கள் என்ன அண்ணாவி?"

என் நண்பர் ஒருவர். இலக்கியவியாதி, மன்னிக்கவும், இலக்கியவாதி. கட்டு சிறு பத்திரிகைகளைக் கொண்டு வந்து போட்டார். "எனக்குக் கூட இப்படித்தான் இருந்தது. இந்தப் பத்திரிகைகளைப் படிக்க ஆரம்பித்ததுமே தூக்கம் வர ஆரம்பித்து விட்டது. இதைப் படியுங்கள், பின் நவீனத்துவத்தை பற்றி என்னமாய்ப் பின்னியெடுத்திருக்கிறான் பாருங்கள்."

அத்தனை கட்டுப் புத்தகங்களையும் படித்து முடித்து விட்டேன். சிவாஜியில் கவிதை எழுதி திருலோக சீதாராமிடம் பாராட்டு பெற்றதுடன் சரி. அதற்குப் பிறகு ஒன்றும் எழுதவே இல்லை. இலக்கிய உலகில் இவ்வளவு விஷயங்களா?

டாஸ்டாய்வ்ஸ்கி, யான் பால் ழாத்த்ரே இன்னும் என்னென்னவோ பேர் சொல்கிறார்களே, ஜெயமோகன், கல்யாண்ஜி, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன். வண்ண நிலவன், வண்ணதாசன் க்ருஷாங்கினி, மாலதி மைத்ரி இப்படி என்னென்னவோ பேர் அடுக்குகிறார்களே, ஒன்றுமே தெரியாமல் நிரட்சர குட்சியாக இருந்து விட்டேனே, என்று கழிவிரக்கம். தூக்கமின்மையோடு, அனாவசிய மனக்குடைச்சல் வேறு சேர்ந்து கொண்டதுதான் மிச்சம்.

இப்படிப்பட்ட வேதனையின் உச்ச கட்டத்தில் நான் இருந்த தருணத்தில் தான் தயங்கித் தயங்கி என் மனைவி உள்ளே வந்தாள்.

"ஏங்க தூக்கத்துக்கு நான் ஒண்ணு சொல்லட்டுமா?"

"என்ன?" அலட்சியமாகத்தான் கேட்டேன். இவள் என்ன சொல்லி விடப் போகிறாள் பெரிதாக? ஆணாதிக்கம், ஆணவ மனப்பான்மை என்பீர்கள். சொல்லிக் கொள்ளுங்கள்.

"மூன்று மாதமாகத்தானே இந்தத் தூக்கமின்மை?"

"ஆமாம். அதற்கென்ன இப்போ?"

"தேதி ஞாபகம் இருக்கா?"

"இருக்கு. டிசம்பர் 24ம் தேதி. ஏன் அன்னிக்குத்தான் சனி கும்பத்தில் பிரவேசித்தானா?"

"இல்லை. அன்னிக்குத்தான் நீங்க பாண்டிச்சேரி டூரிலேருந்து திரும்பி வந்தீங்க. வரும்போது என்ன கொண்டு வந்தீங்க?"

"என்ன கொண்டு வந்தேன்? உனக்கு புது சாரி. பாண்டிச்சேரி ஸ்பெஷல் பாதாம் ஸ்வீட்."

"அதைத் தவிர?"

"அதைத் தவிர ஒண்னுமில்லையே?"

"நன்னா யோசித்துப் பாருங்கள். சத்குரு ஹோட்டலிலேருந்து தலகாணியை எடுத்துப் பெட்டியில் அடைத்துக் கொண்டு வரலை?"

நினைவுக்கு வந்தது. "ஆமாம்"

நான் ஒன்றும் கெட்டவன், திருடன் இல்லை. நண்பர்களுடன் பந்தயம் கட்டிக் கொண்டு ஒரு வேடிக்கைக்காக ஹோட்டல் தலையணையை சுட்டு பெட்டிக்குள் போட்டுக் கொண்டு வந்து விட்டேன். அவ்வளவுதான்.

"அதைக் கடாசித் தூக்கி எறிந்து விட்டுப் படுத்துத் தூங்கிப் பாருங்கள். தூக்கம் என்னமா வருதுன்னு தெரியும். சுத்தமான மனசாட்சியைப் போல சொகுசான தலையணை வேற எதுவுமே இல்லேங்க!"

அவள் சொன்னபடியே செய்தேன். முழங்கையைத் தலைக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு படுத்தேன். நிச்சிந்தையான நிம்மதியான தூக்கம். சொர்க்கலோக வாசம்.

நன்றி, என் பிரியத்துக்குரிய மனைவியே! நீயே என் சத்குரு!

About The Author

1 Comment

  1. srinivasan

    அருமை. நகைச்சுவை இழையோட விவரித்ததில் கூடவே நல்ல கருத்தும். பாராட்டுக்கள்.

Comments are closed.