சாக்லேட் காதல்

"நான் உன்னோட இனிமே பேசப் போறதில்லை."

சொல்லிவிட்டு அனு போக யத்தனித்தாள்.

"ஏன்" சரவணக்குமாரிடம் திகைப்பு.

"அதைச் சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்ல."

"சொல்லணும். கட்டாயம்தான்!"

"உங்கிட்ட பேச ஆரம்பிச்சப்ப காரணம் கேட்டியா?"

"கேட்கல… ஆனா நீயே சொன்ன. இத்தனை பேர் மத்தில என்னைப் பார்த்தா மட்டும் உனக்குள்ர ஒரு புறாவின் சிறகடிப்பு தெரிஞ்சிதுன்னு சொன்னியே… இப்ப அந்தப் புறாவை வறுத்து தின்னுட்டியா?"

"ஏய்… என்ன பேசற?"

குரல் சற்று உயர்த்தியதில் ஒருத்தன் திரும்பிப் பார்த்தான். ஒரு பெண் கண் சிமிட்டியது. இன்று சனிக்கிழமை. அவசர வேலைக்கு வந்தவர்கள் மட்டுமே. இன்றும் நாளையும் அலுவலகம் வரத் தேவை இல்லை. ‘வா! இளநி குடிக்கலாம்’ என்று வெளியில் அழைத்து வந்தபோதுதான் ஒப்பந்த முறிவுப் பத்திர வாசிப்பு.

எந்த நிமிடமும் தொலைதூர அழைப்பு வரக்கூடும். தஸ் புஸ்ஸென்று அன்னிய மொழியில் திட்டக் கூடும். மனசு பிராஜக்டில் இல்லை. எதிரில் அடம் பிடிக்கிற பெண்ணிடம் முடங்கிக் கிடக்கிறது. அலுவலக எல்லைக்கு வெளியில் என்றால், ‘அடங்க மாட்டியா’ என்று மிரட்டலாம். அல்லது கால் மடக்கிப் பூங்கொத்து நீட்டலாம்.

பெண்கள் ரட்சகிகள் என்று கை கோக்கப் போனால் ராட்சசிகளாய் மாறி மிரட்டத் துவங்கி விடுகிறார்கள். ஆரம்ப நாட்களில் சிரிப்பும் கண் சிமிட்டலும் ஏதோ ஒரு வாசனையின் தாக்கமும் மட்டுமே தெரிகிறது. சகல ஆயுதங்களையும் பட்டியலிட்டுக் காட்டி விட்டால், ‘நீ இவ்வளவுதானா’ என்கிற அலட்சியம் வந்து விடுகிறது. ஒன்றிரண்டை ஒளித்து வைக்கும் சாமர்த்தியசாலிகள் மட்டுமே கடைசி வரை தாக்குப் பிடிக்கிறார்கள்.

இளநீர்க்காரி கூட அவளுக்குத்தான் சப்போர்ட். சர்சர்ரென்று வீச்சரிவாளால் இளநீரின் தலையைச் சீவும்போது இளநீர்க்காரியை பிரமிப்புடன் பார்த்தான்.

"கையைச் சீவிராது?"

"சீவாது" என்று அனுதான் சொன்னாள்.

இளநீர்க்காரி இவளைப் பார்த்தாலே சிரிக்கிறாள். இத்தனைக்கும் அனு அவளிடம் பேரம் பேசித்தான் வாங்குகிறாள். இவன் எப்போதும் அவள் சொன்ன தொகையைக் கொடுத்து விடுவான்.

"என்ன… லலிதா… இந்த ஆம்பளைங்கள இளநி சீவற மாதிரி சீவணும்."

ஓ… இளநீர்க்காரியின் பேர் கூடத் தெரியுமா!

"அப்படி என்ன பண்ணிட்டோம்?"

"என்ன பண்ணல?"

"நான் என்ன பண்ணேன்?"

"லலிதாக்கு ரெண்டு பசங்க. ரெண்டும் பொண்ணு. அவ புருஷன் குடிச்சிட்டு அலையறான்… இவ ஆம்பள மாதிரி வேலை பார்க்கறா."

"ஐ பிட்டி ஹர்."

"உன் அனுதாபம் தேவை இல்லை."

"இங்க பாரு… உலகத்துல கஷ்டப்படாதவங்க யாருமே இல்ல. எல்லாருக்கும் கஷ்டம்தான். ஊழல் பண்ற அரசியல்வாதி கூட மாட்டிகிட்டு அவஸ்தைப்படறான்."

"அவனும் உழைச்சுப் புழைக்கறவங்களும் ஒண்ணா?"

"அப்படி நான் சொல்லல… கஷ்டம் பொது."

ஸ்ட்ரா வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தவளை கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தான்.
"என்ன பார்க்கற?"

"ஆக்சுவலா இளநிய அப்படியே தூக்கிக் குடிக்கணும்… அதான் டேஸ்ட். ஸ்ட்ரா உதவாது."

"உன் டேஸ்ட் இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிக்குது."

அவள் குரலில் தெரிந்த அதிருப்தி இப்போதுதான் புரிய ஆரம்பித்தது அவனுக்கு.

"ஏய்… என்ன பிரச்னை உனக்கு?"

"என்னைப் பத்தி என்ன சொல்லிகிட்டு இருந்த அஷோக்கிட்ட?"

அவள் குரலில் தெரிந்த கடுமை விஷயம் சீரியஸ் என்று உணர்த்தியது.

"என்னப்பா சொல்ற?"

"இந்த பில்டப்லாம் வேணாம். கம் அவுட் வித் த ட்ரூத்!"

"நான் எதுவும் சொல்லல!"

"பொய் சொல்லாத!"

"நீயே சொல்லு… நான் என்ன சொன்னேனாம்?"

அவனை முறைத்து விட்டு முன்னால் நகர்ந்தாள். சற்று வேகமாய் நகர்ந்து வழி மறித்தான்.

"நான் பிராமிஸா எதுவும் சொல்லல. நீ சொல்றத வச்சுதான் அடுத்த ஸ்டெப் என்ன பண்ணணும்னு யோசிக்கணும்."

"உங்கிட்ட பேசினா என்னை பத்தி என்ன வேணா கமெண்ட் அடிப்பியா?"

"அனு… ஒண்ணு முழுசா சொல்லு. இல்ல… நான் சொல்றத நம்பு!"

"மிஸ்டர் சரவணக்குமார்! நீங்க இனிமே எல்லார்கிட்டயும் சிரிச்சு பேசற, யார் கூப்பிட்டாலும் வரத் தயாரா இருக்கற அனுவோட பேச வேணாம். ஓக்கேவா?"

அடப்பாவி… அஷோக்! இது உன் வேலையா? அதான் சவால் விட்டானா.. உன்னையும் அவளையும் பிரிச்சுக் காட்டறேன்னு?

"இதை நீ நம்பிட்டியா?"

அனு பதில் சொல்லாமல் நகர்ந்து போனாள்.

இவ்வளவுதானா… நான் உன் மேல் வைத்திருந்த அபரிமிதமான பிரியம் உனக்குப் புரியவில்லையா?
மற்றவர்களுடன் பேசும்போது அனு வந்துவிட்டால் உடனே அப்படியே அந்தப் பேச்சை நிறுத்திவிட்டு அவள் பின்னே போனது…

"அவங்க ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?"

"எனக்கு நீ முக்கியம்பா. ரெண்டாவது, இப்ப அவங்க கூட நான் அரட்டைதான் அடிச்சுக்கிட்டிருந்தேன். அது முக்கியமான மேட்டரா இருந்தா உங்கிட்ட அப்புறம் பேசலாம்னு சொல்லியிருப்பேன்."

அவன் வீட்டு சமாச்சாரங்களைக் கூட அவளிடம்தான் சொல்வான்.

"தங்கை கேட்டுகிட்டே இருக்கா… உன்னை எப்ப அவ கண்ணுல காட்டப் போறேன்னு."

நேரம் போனதே தெரியவில்லை. எல்லோரும் போயிருக்க வேண்டும். எல்லாம் மறந்து வேலையில் மூழ்கி… மணி ஒன்பதரை. முடித்து விட்டான்.

செக்யூரிட்டிக்கு இரவு வணக்கம் சொல்லி பைக்கை உதைத்தபோது பசித்தது. சைட் பாக்சில் அனுவுக்காகக் கொண்டு வந்திருந்த அவளுக்குப் பிடித்த சாக்லேட் பட்டை நிச்சயம் உருகியிருக்கும்.
செக்யூரிட்டி பின்னால் ஓடிவந்தார்.

"ஒரு நிமிஷம்!"

"என்ன?"

"அனு மேடம் மட்டும் இருக்காங்க…"

"ஓ!"

"அவங்களும் கிளம்பிட்டாங்க…"

பைக்கை நிறுத்தினான். அலுவலகம் விட்டு மெயின் ரோட்டிற்கு மூன்று கி.மீ. ஆளரவமற்ற சாலை. அவளும் டூ வீலரில்தான் வருகிறாள்.

அனு இவனைப் பார்த்ததும் நின்று விட்டாள். ‘நீயா!’

"மேடம்… நான்தான் அவரை நிக்கச் சொன்னேன்."

அனுவின் வண்டி கிளம்ப மறுத்தது.

"அவர் கூடவே போயிருங்க."

செக்யூரிட்டி யதார்த்தமாய்ச் சொன்னார்.

என்ன நினைத்தாளோ… பின்னால் ஏறிக் கொண்டாள்.

3 கி.மீ தூரமும் அவள் எதுவும் பேசவில்லை. மெயின் ரோடு வந்ததும் நிறுத்தினான்.

"வீட்டுல கொண்டு வந்து விட்டுரவாப்பா?"

அவனையும் மீறி வழக்கமான குரலில்… கேட்டுவிட்டான்.

அனு இறங்கி நின்றாள். ஆனால் நகரவில்லை.

சரவணக்குமார் சைட் பாக்ஸைத் திறந்து சாக்லேட் பட்டையை எடுத்தான். உள்ளே உருகி இருந்தது.
அவளிடம் நீட்டினான்.

சர்ரென்று நெடுஞ்சாலையில் ஒரு வாகனம் விரைந்தது. அவர்கள் மேல் வெளிச்சம் பாய்ச்சி ஹார்ன் சத்தம் எழுப்பி அது போனதும் அவர்கள் மட்டும் மீண்டும் தனியே.

வாங்கிக் கொண்டாள். பிரித்து விளம்பரத்தில் வருவது போலச் சப்பி விட்டு அவனிடம் நீட்டினாள்.
"ஏய்… என் மேல கோபம் இல்லியா?"

"அசோக் மெசேஜ் பண்ணான்… ஏதோ விளையாட்டுக்கு அப்படி பண்ணிட்டானாம்… 100 டைம்ஸ் ஸாரி அப்படின்னு."

ஓ… அதனால்தான் எந்த மறுப்பும் சொல்லாமல் அவனுடன் பைக்கில் வந்தாளா?…

"வீட்டுக்குப் போலாம்டா!"

உருகிப் போன சாக்லேட் கூட இவ்வளவு தித்திக்குமா!…

About The Author

1 Comment

Comments are closed.