சாத்தமங்கலம் சாஸ்தா

சிதம்பரம் நடராஜரை தரிசிக்க நாள்தோறும் பலர் வருகின்றனர். எப்போதுமே அங்கு கூட்டம்தான். ஆனால், அவ்வளவு தூரம் செலவு செய்து செல்பவர்கள் அங்கிருந்து பத்து மைல் தொலைவிலேயே இருக்கும் ‘சாத்தமங்கலம்’ போவதில்லை.

அங்கு என்ன விசேஷம் எனக் கேட்கிறீர்களா? அங்குதான் கலியுகவரதனான சாஸ்தா பூரண – புஷ்கலையுடன் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். இதனால் அந்த ஊரின் பெயர் ‘சாஸ்தாமங்கலம்’ என்று இருந்தது. அதுவே காலம் மாற, சாத்தமங்கலம் என மருவியது. இங்கு இருக்கும் பலரிடம் சாஸ்தா கோயில் எங்கு இருக்கிறது என்று கேட்டால் "ஓ! ஆண்டவர் கோயிலா?" என்று கேட்டபடி வழி காட்டுகிறார்கள். அங்கிருக்கும் பலருக்கும் சாஸ்தா ஆண்டவராக விளங்குகிறார். தமிழ்நாட்டில் இங்கு சாஸ்தாவுக்குக் கொடியேற்றிப் பத்து நாட்கள் உற்சவம், திருக்கல்யாண வைபவம் நடப்பது போல் மற்ற எந்த சாஸ்தா கோயிலிலும் நடப்பது இல்லை என நினைக்கிறேன்.

கோயில் மிகப் பழமையானது. இங்கு கோயில் கொண்டுள்ள கடவுள்களும் மிக சக்தி வாய்ந்தவை. ஒரு சமயம், திருடர்கள் இந்தக் கோயிலில் நுழைந்து பூரணை, புஷ்கலை, சாஸ்தா மூவரின் ஐம்பொன் சிலைகளையும் திருடிக்கொண்டு போனார்கள். ஆனால் ஒரு சில மாதங்களில், அதன் சக்தியைத் தாங்க முடியாமலோ என்னவோ திரும்பவும் கொண்டு வந்து இந்தக் கிராமத்திலேயே வைத்துவிட்டனர். அவர்கள் மனது வைத்திருந்தால் அச்சிலைகளை நல்ல விலைக்கு விற்றிருக்கலாம். வெளிநாட்டினர் இப்படிப்பட்ட சிலைகளை விரும்பிப் பல லட்சங்கள் கொடுத்து வாங்குவர். ஆனால், திருடர்கள் எடுத்துச் சென்றது போலவே சிலைகளைத் திரும்பவும் கொண்டு வைத்தது வியப்புக்குரிய விஷயமே!

இதன் பிறகு இந்தக் கோயிலின் மகத்துவம் கூடியது. ஹரிஹரபுத்திரன், பூரண புஷ்கலை ஆகியோரின் சக்தியை உணர்ந்து பக்தர்கள் பலர் இங்கு வந்து வேண்டிக் கொள்கிறார்கள்.

கோயிலின் கருவறைக்குச் சென்றால் சாஸ்தா தன் இருபுறமும் இரு மனைவியருடன் அமர்ந்திருக்கிறார். சிலைகள் கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. மூன்று தனித்தனிச் சிலைகள், தனித்தனிப் பீடங்கள், ஆனால் எல்லாமே ஒரே கல்லால் செய்யப்பட்டவை என்பது வியப்பாக இருக்கிறது!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தூண் போல் இங்கும் கல்லைத் தட்டினால் ஒலி வரும். அர்த்த மண்டபத்தில் பல சித்திரங்களைக் காணமுடிகிறது. பலி பீடத்தின் அருகில் சாஸ்தாவின் வாகனமான யானை உள்ளது. செம்புக் கவசம் கொண்ட கொடி மரமும் உள்ளது. சாஸ்தாவுக்கு நேர் எதிரே, கொடி மரத்திலிருந்து சிறிது தொலைவில் பெரிய நந்தி உள்ளது. இது சுதையால் செய்யப்பட்டது. நந்தீஸ்வரர் தனி மண்டபத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். சாதாரணமாக, சிவன் கோயிலில் நந்தி இருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு சாஸ்தா கோயிலிலும் பெரிய நந்தி இருப்பது அபூர்வமான ஒன்று! இதன் அருகில் ஆண்டவர் கோயிலில் இருப்பது போல் சுதையால் செய்த நான்கு குதிரைகள் நல்ல வாட்டசாட்டமாய்ப் பத்தடி உயரம் கொண்டு காணப்படுகின்றன.

இங்கு நடக்கும் உற்சவத்திற்கு நாதஸ்வரக் கலைஞர்கள் பலர் வந்து பங்கு பெறுவார்கள். இவர்களின் இசையால் புஷ்பாஞ்சலி போல் இசையாஞ்சலி பரவி எல்லோர் உள்ளத்திலும் பக்திப் பரவசத்தை நிரப்பும்.

கையில் சாட்டையுடன் வீற்றிருக்கும் சாஸ்தாவை வணங்க, மனதில் தைரியம் பிறக்கும். எதிரிகள் ஓடிவிடுவார்கள். இங்கு பூரண – புஷ்களாம்பாளுடன் சாஸ்தா கல்யாணக்கோலத்தில் அருள்புரிவதால், இவரை வணங்குவோர்க்குத் திருமணம் கைகூடும். திருமணத் தடைகள் இருந்தால் விலகும்.

இங்கு வைகாசி மாதம் பிரம்மோற்சவம் மிகப் பிரமாதமாக நடைபெறும். சுவாமி அலங்காரத்துடன் காலையும், மாலையும் பவனி வருவார். பத்து நாட்கள் உற்சவத்தில் ஒன்பதாம் நாள் தேர்த் திருவிழா நடக்கும். பத்தாம் நாள் அருகில் ஓடும் வெள்ளாற்றில் தீர்த்தவாரி நடந்து முடிந்தவுடன் இரவில் பூரணை – புஷ்கலையுடன் சுவாமிக்குத் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடக்கும். அதற்கு மறுநாள் நடக்கும் புஷ்பப் பல்லாக்கைக் காணக் கோடிக் கண்கள் வேண்டும்.

கோயிலுக்குப் போகும் வழி:

சிதம்பரத்திலிருந்து சேத்தியாதோப்பு பேருந்துத் தடத்தில் சுமார் 20 கி.மீ தொலைவு சென்றால் சாத்தமங்கலம் வந்துவிடும். சேத்தியாதோப்பின் அருகே சுமார் 2 கி.மீ தூரத்தில் இந்த இடம் உள்ளது. சபரி மலைக்குப் போகும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுவதைக் காணலாம்.

நீங்களும் தவறாமல் சென்று வாருங்கள்! சாஸ்தாவின் அருளைப் பாருங்கள்!

About The Author