சாவுச்சேதி!

பெரியவூட்டு ஆத்தா
உசிரு போன சேதி
ஊர்முழுசும் சொல்லி
டமாரம் அடிச்சதுல
பார்த்துப்புடுவான்
முழுசா பத்துரூபா.

நாலு ஊருக்கும்
சேதி சொல்ல
வரிசைகட்டி வந்து
நிப்பானுக ஊர்
இளம்வட்டங்க-டவுனப்
பார்த்துப்புடணும்னு.

நாள் முழுசும் பச்சத்
தண்ணிய பல்லுல
காட்டாம பாடை
கட்டித் தப்பு அடிச்சா
நாலுகாசு கிடைக்கும்
வாரமொன்னு வீட்டுல
பொங்கலாம்.

சனிக்கிழமையில
செத்த பெரிசு
தனியாப் போகாம
சுதந்திரமா சுத்தித்
திரிஞ்ச கோழிக்குஞ்ச
காவுவாங்கி கூடக்
கூட்டிக்கிட்டுப் போகும்.

அண்ணாக்கவுறு
கொடித்துணி
நெத்திக்காசு
காவு வாங்கின குஞ்சு
பெரிசோடப்
பழசுபட்டன்னு
பாவத்தையெல்லாம்
போட்டுப் புதைப்பான்
வெட்டியான்.

About The Author