சித்திரை நன்னாளே வருக! வருக!

நற்செய்தி தரும் நன்னாள்!

சித்திரை நன்னாளன்று கர வருடம் பிறக்கிறது. கர வருடத்தின் வெண்பா கூறும் செய்தி இதுதான்:-

கர வருட மாரி பெய்யும் காசனிமுய்யும்
உரமிகுத்து வெள்ளமெங்கும் ஓடும் -நிறை மிகுந்து
நாலுகாற் சீவனலியு நோயான் மடியும்
பாலும் நெய்யுமே சுரக்கும் பார்

மழை வரும் என்கின்ற நல்ல செய்தியுடன் பிறக்கிறது புது வருடம்.

தமிழ்ப் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன் என விளக்கி பின்வரும் கட்டுரையில் எழுதி இருந்தோம்.
https://www.nilacharal.com/ocms/log/04130911.asp

பகுத்தறிவின் அடிப்படையிலும் வானவியலின் அடிப்படையிலும் பழந்தமிழன் நிர்ணயித்த ஆண்டின் பிறப்பை மாற்றியது தவறான முடிவுகளுக்கான உதாரணம் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்.

மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வாரி வழங்க வரும் கர வருடத்தை வருக வருக, வாழி வாழி என்று வாழ்த்தி வரவேற்கிறோம்.

சித்திரைப் புனித நாட்கள்!

சித்திரையில் ஏராளமான புனித நாட்கள் மலர்கின்றன!

மதுரையம்பதியில் உறையும் தமிழரசியான அன்னை மீனாட்சி, காதல் கொண்டு சுந்தரேஸ்வரரை மணம் புரிந்த நன்னாள் சித்திரை பௌர்ணமியிலேயே நிகழ்ந்தது. ஆண்டு தோறும் இதை தமிழ் மக்கள் மதுரையிலும் இதர இடங்களிலும் மகிழ்ந்து கொண்டாடுவது இன்றும் நடக்கும் பெரும் திருவிழாவாக அமைகிறது. திருமணஞ்சேரியிலும் அன்னையும் அப்பனும் மணம் புரியும் நாள் இதே சித்திரையில்தான்!

மகாவிஷ்ணு மச்சாவதாரம் எடுத்தது சித்திரைத் திங்களில்தான்! மஹாலக்ஷ்மி பூமிக்கும் வந்ததும் சித்திரையில்தான்! அம்பிகையின் அவதாரம் சித்திரை அஷ்டமி என்பதும் சங்கரர் சித்திரை அமாவாசை கழிந்த பஞ்சமியில் உதித்தார் என்பதும் ராமானுஜரும் இதே சித்திரையிலேயே அவதரித்தார் என்பது சித்திரையின் மகத்துவத்தை இன்னும் அதிகம் கூட்டும் பெரும் புனித நிகழ்வுகளாகும். இன்னும் சித்திரையின் பெருமைகளைச் சொல்ல இக்கட்டுரை போதாது.

அனைத்துத் தமிழரும் வாழ்க; வளம் பெறுக!

அப்படிப்பட்ட அருமையான தமிழ்ச் சித்திரை "மாரி பெய்ய" மலர்கிறது என்பதை எண்ணும் போதே உள்ளமெலாம் மகிழ்ச்சியால் பூரிக்கிறது..

இந்தப் புத்தாண்டு நன்னாளில் நிலாச்சாரல் குழுவினர் மற்றும் வாசகக் குடும்பத்தினர் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வாழ்வில் நலம் பெருகட்டும் வளம் ஓங்கட்டும் என்று வாழ்த்தி அதற்கு ஆலவாய் அண்ணலும் அம்மையும் ஆசீர்வதிக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம்!

About The Author

1 Comment

  1. R.Panneer selvam

    கர வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Comments are closed.