சிபி (10)

பெருந்தலைவர் காமராஜருக்குத் தோன்றியது. மூதறிஞர் ராஜாஜிக்குத் தோன்றியது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குத் தோன்றியது. துக்ளக் ஆசிரியர் சோவுக்குத் தோன்றியது. தமிழ்நாட்டுப் பத்திரிக்கைகளுக்குத் தோன்றியது., தமிழ் நாட்டு வாக்காளர்களில் முக்கால்வாசிப் பேருக்குத் தோன்றியது.

அன்றைக்கு நான் அறிந்திராத, இன்றைய நம்ம மாநிலத்  தலைவருக்குக் கூடத் தோன்றியிருக்கும்.

ஆனால், இந்த ஒட்டு மொத்த தீர்க்கதரிசனமும் பொய்த்துப்போனது மஹாப் பெரிய துயரம். மத்தியில் ஆட்சியிலிருந்த இந்திராக் காங்கிரசும் மாநிலத்தை ஆண்டுகொண்டிருந்த தி. மு. க- வும் அமைத்திருந்த அதிகார வர்க்கக் கூட்டணி, பெருந்தலைவர் காமராஜருடைய ஸ்தாபனக் காங்கிரசும் மூதறிஞர் ராஜாஜியுடைய சுதந்திராக் கட்சியும் இணைந்திருந்த அற்புதமான கூட்டணியை அநியாயமாய்த் தோற்கடித்து விட்டது.

ஆல்கஹால் வாடையையே அறியாமலிருந்த ஒரு தலைமுறையையே பாழ்படுத்திய ஒரு அரசாங்கத்தைத் திரும்பவும் இந்த மக்கள் எப்படி ஆட்சியில் அமர்த்தினார்கள் என்று ஆச்சர்யமாயும் அருவெறுப் பாயுமிருந்தது.

அருவெறுப்பும் இன்று வரை தமிழ் நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கிற அவலம் போன வருஷம் நம்மக் கட்சியின் மாநாட்டுக்காகத் திருச்சிக்குப் போயிருந்த போது அடித்துப் போட்டது என்னை.

கட்சி மாநாடு நிறைவடைந்த பிறகு, கட்சித் தோழர்கள் யாரும் அறியாதபடி நைசாய் நழுவி, நம்ம சிநேகிதி வாழ்ந்திருந்த வீதியிலெல்லாம் காலாரற நடந்து முறைப்படி அளந்து விட்டு, அவளோடு நான் ‘"உத்தரவின்றி உள்ளே வா’’ பார்த்த வெலிங்டன் தியேட்டர் தகர்க்கப்பட்டுத் தரிசாய்க் கிடப்பதைக் கண்டு சோகங் கொண்டாடி விட்டு, இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் வருகிற காதல் ஸ்தலங்களையும் புனித ஸ்தலங்களையும் ஒரு நோஸ்டால்ஜியாவோடு தரிசித்து முடிக்கிற போது தான் நினைவு வந்தது, ராத்திரி ராக்ஃபோட்டில் நம்ம டிக்கட் வெய்ட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறதே, உடனடியாய்ப் போய், ஸ்டேஷனை அடுத்திருக்கிற ரயில்வே அலுவலகத்தில் கியூ கொடுக்க வேண்டுமே என்று.

திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நடந்து கொண்டிருந்த போது, ஸ்டேஷனுக்கு முந்தின சாலையின் வலது பக்க நடைமேடையில், வறுமைக் கோட்டுக்கு ரொம்ப ரொம்பக் கீழே, அதால பாதாளத்தில் கிடக்கிற ஒரு பத்துப் பதினஞ்சு மக்கள் உட்கார்ந்திருந்ததைப் பார்க்கப் பாவமாயிருந்தது. வசிக்க ஒரு வீடு இல்லாதவர்கள். அடுத்த வேளைச் சோத்துக்கு வழியில்லாதவர்கள். இந்த அப்பாவி மக்களுக்கு ஒருவேளை உணவுக்காவது நான் உதவமுடியுமானால் எவ்வளவு புண்ணியமாயிருக்கும் இறைவனே என்று நான் வருந்திக் கொண்டிருந்த போதே என்னை உரசிக் கொண்டு வந்து நின்றது ஓர் ஆட்டோ. ஆட்டோவில் உணவுப் பொட்டலங்கள். நடைபாதை ஏழைகளுக்கு ஆளுக்கொரு பொட்டலத்தை வழங்கினார் ஆட்டோவிலிருந்த பெரியவர். பதிவாய் வந்து இவர்களுக்கு உணவு விநியோகம் செய்கிற புண்ணியவானா யிருக்கலாம். வாழ்க!.

மானசிசீகமாய் அந்த மனிதரை வாழ்த்திவிட்டு ரயில்வே அலுவலகத்துக்கு மன நிறைவோடு நடந்தேன். ஈ.கி க்யூ கொடுத்த பிறகும் டிக்கட் கன்ஃபம் ஆகவில்லையென்றாலுங்கூட அதற்காக விசனப்பட நியாமில்லை இனி. ரயில்வே ஆஃபீஸிலிருந்து நான் திரும்பி நடந்து வருகிறபோது இந்த ஏழைகளெல்லாம் பொட்டலங்களைப் பிரித்து வயிறார உண்டு கொண்டிருப் பார்கள். என்னுடைய மன நிறைவு, உச்சத்துக்கு எகிறிவிடும்.

திரும்பி நடந்து வந்தேன். பிப்ளாட்ஃபாம் வாசிகளெல்லாம் வட்டமாய் உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொருவர் முன்னாலும் பிரிக்கப்பட்ட பார்சஸல்கள், ஒவ்வொருவர் கைகளிலும் ஒரு யூஸ் ன் த்ரோ ப்லாஸ்ட்டிக் டம்ளர். அது தண்ணி குடிக்க என்று நான் நினைத்தது தப்பாப் போச்சு. வட்டத்துக்கு நடுவில் நின்றிருந்தாள் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி. அவளுடைய கையில் ஒரு பாட்டில். வண்ணத் திரவம் நிரம்பியிருக்கிற பாட்டில். மில்லி என்றும் குக்வாட்டர் என்றும் ஹாஃப் என்றும் ஃபுல் என்றும் ஆங்கிலச் சொற்களை அவமானப் படுத்துகிற திரவம் நிரம்பியிருக்கிற பாட்டில். ஒவ்வொரு ப்லாஸ்டிக் டம்ளரிலும் அந்தப் பெண் வரிசையாய்ச் சரக்கை ஊற்றிக்  கொண்டு வந்தாள். அந்த டம்ளர்கள் தண்ணி குடிப்பதற்கல்ல, தண்ணியடிப்பதற்கு என்பதை உணர்ந்த போது, மன நிறைவெல்லாம் ஆவியாய்ப் போய் உடலிலும் உள்ளத்திலும் உஷ்ணமேறியது.

சாப்பாட்டுக்கு வழியில்லாத வர்க்கத்துக்குக் கூட மதுவின்  மேலே ஒரு தாகத்தையும் மோகத்தையும் ஏற்படுத்திக் கொடுத்து,
அப்பாவிகளையெல்லாம் பாவிகளாய் மாற்றி வைத்திருக்கிற இந்தச் சண்டாளர்களை என்ன செய்யலாம்? என்ன செய்யலாம், இப்போதைக்கு வயிறெரிறிந்து ஒரு சாபத்தை அவர்கள் மேல் இறக்கி வைக்கலாம்.அடப் படு பாவிகளா!

*****

வெள்ளிக் கிழமை ஜும்மாத் தொழுகையில் பேஷ் இமாம் பிரசங்கம் செய்த போது ஒரு வரலாற்றுச் சம்பவத்தைச் சொன்னார்.

முஹம்மது நபியுடைய தோழர்களான, மக்காவைச் சேர்ந்த முஹாஜிர்களுக்கும் மதினாவைச் சேர்ந்த அன்ஸôரிகளுக் குமிடையே ஒரு சச்சரவு. அந்த சச்சரவின் வெப்பத்தில் குளிர் காய்வதற்கு வருகிறார்கள், இஸ்லாமின் எதிரிகளான முனாஃபிக்குகள். முனாஃபிக்குகள் அன்ஸாரிகளிடம் இப்படிக் கோள் மூட்டி விடுகிறார்கள்:

"பாருங்கள் இந்த முஹாஜிர்க் கூட்டத்தை. உங்களிடம் எப்படி நன்றி கெட்டத்தனமாய் இவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்று பாருங்கள். வெறுங்கையோடு மக்காவிலிருந்து மதினாவுக்கு வந்த இவர்களுக்கு நீங்கள் எப்படியெல்லாம் உதவினீர்கள், எப்படியெல்லாம் தியாகம் புரிந்தீர்கள்! உங்களிடம் ரெண்டு ஒட்டகங்கள் இருந்தால், ஒரு ஒட்டகத்தை அவர்களுக்குக் கொடுத்தீர்கள். ரெண்டு வீடுகள் இருந்தால் ஒரு வீட்டை அவர்களுக்கு அன்பளிப்பாய்த் தந்தீர்கள், ரெண்டு மனைவிகள் இருந்தால் ஒரு மனைவியைத் தலாக் விட்டு விட்டு அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தீர்கள்…."

அதற்கு மேலே பேஷ் இமாம் சொற்பெருக்காற்றியது.எதையும் உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை.

ரெண்டு மனைவிகள் இருந்தால் அதில் ஒருத்தியை விவாகரத்து செய்து விட்டு எவனோ ஒருவனுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதா! எங்கேயோ இடி இடியென்று இடிக்கிறதே!

அடுத்த நாள், குழந்தைகளுக்கு அரபி ஓதிக் கொடுப்பதற்காக நம்ம வீட்டுக்கு வந்த, கொஞ்சம் முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட ஹஜ்ரத்திடம் என்னுடைய இடியை இறக்கி வைத்தேன்.

"ரெண்டு ஒட்டகம் இருந்தா ஒண்ணக் குடுத்தாங்க, சரி. ரெண்டு வீடு இருந்தா ஒண்ணக் குடுத்தாங்க, அதுவும் சரி. ரெண்டு பொண்டாட்டி இருந்தா ஒரு பொண்டாட்டியக் குடுத்தாங்கங்கறது என்னங்க ஞாயம்! என்னமோ காஃபி குடிச்சாங்க, காலைக்கடனுக்குப் போனாங்கற மாதிரி அந்தப் பேஷ் இமாம் சர்வ சாதாரணமா சொல்லிட்டுப் போறார்! இஷ்டம் போல இவன் தானம் குடுக்கறதுக்கு அந்தப் பொண்ணு என்ன அஃறிணையா, இல்ல ஜடப் பொருளா?"

"அப்டியில்லிங்க. அந்தப் பொண்ணோட விருப்பம் இல்லாம இவன் செஞ்சிருக்க மாட்டான். மனைவிகிட்ட சம்மதம் வாங்கிட்டுத்தான் தலாக் விடுவான். மனைவிகிட்ட சம்மதம் வாங்கிட்டுத்தான் வேறொருத்தனுக்கு நிக்காஹ் பண்ணி வைப்பான்."

"எந்த மனைவி ஹஜ்ரத் மனசார அப்டி சம்மதம் சொல்லுவா? ஒரு ஆம்பளய கணவனா வரிச்சவ, காலமெல்லாம் அவனோட வாழ வந்தவ, அவனோட சுகதுக்கங்கள்ள பங்கு கொள்ள வந்தவ, தன்னை அவனுக்கு முழுமையா அர்ப்பணிச்சிக்கிட்டவ, இன்னொருத்தனோட கட்டிலப் பகிர்ந்துக்கப் போறியாடின்னு கேட்டா சந்தோஷமா சம்மதிப்பாளா? அப்டி சம்மதிச்சான்னா அவ பொம்பளையா? அப்டியே அவ சம்மதிச்சிட்டான்னே ஒரு பேச்சுக்கு வச்சிக்குவோம். ஒடனே நம்ம மாப்ள என்ன செய்வான்? “இன்னொருத்தங்கூடப் படுக்கப் போறியான்னு கேட்ட வொடனே சரின்னுட்டாளேய்யா சண்டாளி. சபல புத்தியோட தான் இத்தினி நாள் இருந்திருக்கா. இத்தினி நாள் நம்ம கூட வாழ்ந்தாளே, நமக்கு விஸ்வாசமா இருந்திருப்பாளா இவொ’ ன்னு தானே நெனப்பான்? ஒரு பொண்டாட்டி போதும்னா இவன் எதுக்கு ரெண்டு கட்றான்?"

"இஸ்லாத்ல நாலு மனைவிகள் கட்டிக்கிறதுக்கு அனுமதி இருக்கு."

"இருக்கு. எந்த சூழ்நிலைல? “நான்கு மனைவிமார்களிடமும் பாரபட்சமில்லாமல் நீதமாக நடந்து கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை இருந்தால் மட்டுமே கட்டுங்கள். அல்லது ஒன்றோடு நிறுத்திக் கொள்ளுங்கள்’ னு தானே நபிகள் நாயகம் சொல்லியிருக்காங்க. காமத்துக்காக கட்டிக்கிறது காமம் அடங்கினவொடன கழட்டி விட்டிர்றது தான் நியாயமா?"

"நீங்க கேக்றது அறிவு பூர்வமான கேள்வி தான்…."

"கேள்வி இன்னும் முடியல ஹஜ்ரத். அல்லாவால அனுமதிக்கப்பட்ட செயல்கள்ளயே அவன் வெறுக்கிற செயல் விவாகரத்து ன்னு ஒரு ஹதீஸ் இருக்கு. அல்லா வெறுக்கிற ஒரு செயல, நபித் தோழர்கள் எப்டி சங்கடமேப் படாம செஞ்சாங்க? ஒரு மனைவிய ஒருத்தன் தலாக் விடறான்னா, அவ நடத்தை சரியில்லாம இருக்கணும், இல்லாட்டி அவ ஒரு அடங்காப் பிடாரியா இருக்கணும், கடவுளுக்கு மாறு செய்றவளாயிரு க்கணும், கணவனை மதிக்காதவளாயிருக்கணும். இந்த மாதிரி வலுவான குற்றச்சாட்டுக்கள் எதுவுமில்லாம, ஒரேயொரு பொண்டாட்டி கூட இல்லாமக் காஞ்சு போய்க் கெடக்கற எவனோ ஒருத்தனுக்கு டொனேஷன் குடுக்கறதுக்காக ஒரு அப்பாவிப் பொண்ணைக் காவு குடுக்கறதை எப்டி ஹஜ்ரத் நடைமுறைல வச்சிருந்தாங்க நபியோட சீடர்கள்? கல்யாணம்ங்கறது ஆயிரங்காலத்துப் பயிரில்லியா? அந்த ஆயிரங்காலத்துப் பயிர ஆஸிட் ஊத்தி அழிக்கறத அல்லா எப்டி ஹஜ்ரத் ஏத்துக்குவான்?"

"ஆணித்தரமான வாதம். ஒங்கக் கேள்வில இருக்கிற ஞாயம் எனக்குப் புரியுது. கேள்விக்கி பதில் என்னோட கைவசம் இல்ல. பெரிய மார்க்க அறிஞர்கள்ட்ட விளக்கம் கேட்டு நா ஒங்களுக்குச் சொல்றேன்." இந்த நாவல் அச்சுக்குப் போகுமுன்னால் அவர் விளக்கம் தந்தாரென்றால், பின்னொரு அத்தியாயத்தில் அதைச் சேர்த்து விடலாம். விளக்கம் கிடைக்கவில்லையென்றால் விட்டு விடலாம். வேறே என்ன செய்வது!

–தொடர்வேன்…

About The Author